Tag Archives: Nationalism

The Death of the Ball Turret Gunner by Randall Jarrell

அந்தரத்தில் அநாதரவாக கொடூரமாக சாகடிக்கப்படுவதை எப்படி சொல்லமுடியும்?

From my mother’s sleep I fell into the State,
And I hunched in its belly till my wet fur froze.
Six miles from earth, loosed from the dream of life,
I woke to black flak and the nightmare fighters.
When I died they washed me out of the turret with a hose.

போர் விமானங்களின் அடிப்பகுதியில் இருந்து குண்டுமழை பொழிபவர்கள் ‘Ball Turret Gunner’கள். எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தினால்தான் தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம்.

இரண்டாம் உலகப்போரின் பனிப்பொழியும் கடுங்குளிரில் அடைந்துகிடப்பவன் இக்கவிதையின் பாடுபொருள்.

விமானிக்கு தப்பித்துப் போக வான்குடை உண்டு. இங்கே தன்னந்தனியே அமர்ந்து இருப்பவனுக்கு ஒன்றும் கிடையாது. பத்து மணி நேரம் முடங்கிக் கிடக்க வேண்டும். கை, கால்களை சாஸ்திரோப்தமாக நீட்டலாகாது.

விமானத்தின் எண்ணெய்க்குளத்திற்கு வெகு அருகிலே வாசம்.வயிற்றுப்பகுதியில் சுட்டால், முதலில் கருகுவது இவன். போருக்கு செல்பவனுக்கு இவ்வளவு துர்லபமான, பாதுகாப்பு சற்றும் இல்லாத இடம் வேறேதும் கிடையாது.

இந்தக் கவிதையில் அந்த இயலாமை வெளிப்படும். ஒளிய முடியாது; போரை விட்டு ஒதுங்க இயலாது. சண்டையின் உக்கிரம் அவன் முன்னிலையில் நடக்கும். துவக்கமோ முடிவோ அவன் கையில் இல்லை. எந்திரத்துடன் எந்திரகதியில் சாவை எதிர்நோக்கும் வானூர்தி பயணம்.

Six miles from earth, loosed from the dream of life
தொட்டுவிடும் தூரத்தில் தரை; ஜீவன் சொப்பனமாகி சறுக்கல்

தாயின் வயிற்றில் சேய் போன்ற வாழ்வின் தொடக்கப்புள்ளி போன்ற சித்தரிப்பில், விமானத்தில் இறுதி ஊர்வலத்தில் அமர்ந்திருக்கும் கோலம். கர்ப்பத்தின் உள்ளே உள்ளே இருக்கும் குழந்தை பேசுமா? இறந்தவன் இங்கு பேச முடியுமா? பேசுகிறான்.

கொலைக்கள விவரிப்பாக ‘When I died they washed me out of the turret with a hose’: தொப்புள் கொடியாக கொண்ட கொள்கை, குழாய்வழியாக அமுதூட்டிய உடல்; பிணமானதும் இங்கே அகற்றுவதற்கு அதே குழாயைக் கொண்டு அலம்பிவிட்டு அடுத்த பலிகடாவிற்கு தயார் செய்யப்படுகிறது.

உயிர் பயனற்றது. இவர்களுக்குத் தேவை உடல்; தற்கொலைப் படை.

கிட்டத்தட்ட தமிழாக்கம்:
தாயின் துயிலில் இருந்தவனை தாய்நாடு தனதாக்க,
கருப்பை கதகதப்பு குளிர் மஞ்சத்தண்ணி ஆடாகிறது.
தொட்டுவிடும் தூரத்தில் தரை; ஜீவன் சொப்பனமாகி சறுக்கல்,
கருங்குந்தாணி குறுக்கிட்டவுடன் கண்ணைக் கசக்க கொள்கைக் கோளாறாளர்கள் பிரசன்னம்.
நான் நொறுங்கியதில் சிக்கியதையும், சவமாகக் கழுவித் தூர எறிகிறார்கள்.

முந்தைய இடுகை: Dulce et Decorum Est :: Wilfred Owenதமிழ்ச் செல்வனின் மரணம்