Tag Archives: Morality

மூத்தாள் பதிவிரதை; அப்படியானால் இளையா?

கூலிக்கு மாரடிப்பதற்காக இருவரை அலுவலுக்கு எடுத்திருந்தோம். இருவரும் இந்தியர்கள். எச்1பி-யில் இருப்பதால் பச்சை அட்டைக்காக பன்னெடுங்காலமாக காத்திருப்பவர்கள். நிறைய அனுபவமும் சூட்சும அறிவும் பரந்த தொழில்நுட்ப பட்டயங்களும் பெற்றவர்கள்.

முதலாமவருக்கு திறமை இருந்தாலும் சிரத்தை கிடையாது. உடன் வேலை பார்ப்பவர்களை விட டாட்.நெட்டிலும் சீக்வலிலும் நுணுக்கமான விஷயங்கள் தெரியும். ஆனாலும், காரியத்தை இண்டு இடுக்கு விடாமல் செய்து முடிக்க, இன்னொரு ஆள் கூடவே மல்லுக் கட்ட வேண்டும்.

இரண்டாமவர் படு சமர்த்து. சொன்ன வேலையை புரிந்து கொண்டு செயலாற்றுவார். நிரலியுடன் கொசுறாக ஆவணமாக்குதல், சோதனைகளை தானியங்கியாக இயக்குதல், எழுதிய நிரலியை வேகமாக ஓடவைத்தல், நிரலி ஓடுவதற்கு அத்தாட்சியாக ஊடுபாவாக ஏட்டில் பதித்தல் போன்ற உப காரியங்களை உபகாரமாக கேட்காமலே போட்டு வைப்பவர்.

இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே சம்பளம். தனியாக சோம்பேறியை அழைத்து, “உங்களுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எதையும் ஆராய்ந்து செய்வதை அணுகுமுறையில் வையுங்கள். ஏன் நிரலி ஓடவில்லை, பயனருக்கு எப்படிக் கொடுத்தால் நிஜமாகவே உருப்படும் போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுங்கள்.” என்று கண்டிப்பு கலந்த ஆலோசனை கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

மனம் பொருந்தி வேலை செய்யும் இரண்டாமவர் போல் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க நேரம் வாய்க்கவில்லை. அவரை நீக்கினாலும், அந்த வேலைச்சுமையும் இருப்பவர்களாகிய எங்களின் தலை மீது விழும் என்பதால் நீக்கவும் இயலவில்லை. கடந்த வாரம் இந்த சமாச்சாரம் முடிவுக்கு வந்தது. காண்டிராகடர்கள் இனி வேண்டாம் என மேலிடம் அறிவித்தது.

இருவருக்குமே ஒப்பந்தம் முடிய, இருவருமே வேலையை விட்டுப் போய்விட்டார்கள். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே!