Tag Archives: Literati

Happy Birthday – Nambi Krishnan

G.O.A.T என்றால் ஆடு
அப்புறம் ஃபெடரரா? நடாலா??

எனக்கு நம்பி கிருஷ்ணன்.
எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர்.
பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர்.
பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர்.
சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.

கோட் என்றால் ?

—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.

—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.

நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.

அவருக்கு பிறந்த நாள்.
’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.

அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?

க.நா.சு.தான் வென்றார் – தமிழவன்

திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்

நான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.

அதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.

இன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.

க.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.

இந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார்கள் என்பது என் கருத்து.

இந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.

ஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.

Thamizahvan_Books_Dravidam_Tamil_Desam+Kadhai_Aadal

நன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு
எழுதியவர் தமிழவன்
முதல் பதிப்பு: 2014
வெளியீடு: அடையாளம்
விலை: ₹ 180
பக்கங்கள்: 237