Tag Archives: Contractors

மூத்தாள் பதிவிரதை; அப்படியானால் இளையா?

கூலிக்கு மாரடிப்பதற்காக இருவரை அலுவலுக்கு எடுத்திருந்தோம். இருவரும் இந்தியர்கள். எச்1பி-யில் இருப்பதால் பச்சை அட்டைக்காக பன்னெடுங்காலமாக காத்திருப்பவர்கள். நிறைய அனுபவமும் சூட்சும அறிவும் பரந்த தொழில்நுட்ப பட்டயங்களும் பெற்றவர்கள்.

முதலாமவருக்கு திறமை இருந்தாலும் சிரத்தை கிடையாது. உடன் வேலை பார்ப்பவர்களை விட டாட்.நெட்டிலும் சீக்வலிலும் நுணுக்கமான விஷயங்கள் தெரியும். ஆனாலும், காரியத்தை இண்டு இடுக்கு விடாமல் செய்து முடிக்க, இன்னொரு ஆள் கூடவே மல்லுக் கட்ட வேண்டும்.

இரண்டாமவர் படு சமர்த்து. சொன்ன வேலையை புரிந்து கொண்டு செயலாற்றுவார். நிரலியுடன் கொசுறாக ஆவணமாக்குதல், சோதனைகளை தானியங்கியாக இயக்குதல், எழுதிய நிரலியை வேகமாக ஓடவைத்தல், நிரலி ஓடுவதற்கு அத்தாட்சியாக ஊடுபாவாக ஏட்டில் பதித்தல் போன்ற உப காரியங்களை உபகாரமாக கேட்காமலே போட்டு வைப்பவர்.

இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே சம்பளம். தனியாக சோம்பேறியை அழைத்து, “உங்களுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எதையும் ஆராய்ந்து செய்வதை அணுகுமுறையில் வையுங்கள். ஏன் நிரலி ஓடவில்லை, பயனருக்கு எப்படிக் கொடுத்தால் நிஜமாகவே உருப்படும் போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுங்கள்.” என்று கண்டிப்பு கலந்த ஆலோசனை கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

மனம் பொருந்தி வேலை செய்யும் இரண்டாமவர் போல் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க நேரம் வாய்க்கவில்லை. அவரை நீக்கினாலும், அந்த வேலைச்சுமையும் இருப்பவர்களாகிய எங்களின் தலை மீது விழும் என்பதால் நீக்கவும் இயலவில்லை. கடந்த வாரம் இந்த சமாச்சாரம் முடிவுக்கு வந்தது. காண்டிராகடர்கள் இனி வேண்டாம் என மேலிடம் அறிவித்தது.

இருவருக்குமே ஒப்பந்தம் முடிய, இருவருமே வேலையை விட்டுப் போய்விட்டார்கள். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே!

வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

Jobs-Employment-recession-life-alternate-IT-Info-Techரிச்சர்டை எனக்கு பத்து வருஷமாகத் தெரியும். அமெரிக்காகாரன். என்னுடன் ஆறு வருடம் கூட வேலை பார்த்தவன். செய்ய சொன்னதை மட்டும் செய்து முடிக்காமல், சொல்லாததையும் சூட்சுமமாக செய்து தருபவன். சாமர்த்தியம் இருக்கிறது என்னும் தன்னம்பிக்கை நிறைந்தவன்.

கடந்த ஒன்பது மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான்.

என்னுடைய உலகம் எனப்படுவது தமிழ்ப் பதிவுகள், பதிவு அரசியல் என்று முடங்கியதாக கருதப்பட்டால், அவனுடையதில் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ, லீனக்ஸ், வீட்டிலேயே பியர் தயாரிப்பது என்று பிறிதொரு திரிசங்கு சொர்க்கம். ஃபேஸ்புக், லிங்ட் இன், ப்ளாக்ஸோ எதிலும் எப்போதும் காணக் கிடைக்க மாட்டான். ஏதோ நினைப்பு வர, எப்படியோ தொடர்பு கொண்டால், வேலை போன விஷயத்தை சொன்னான்.

வாயுள்ள புள்ள பொழச்சுக்கும் என்பது தமிழ் பழமொழியாக இருந்தாலும், அந்தக் காலத்திலேயே டவுன்லோட் எழுத்தாளர் எவராவது அதை அமெரிக்காவில் இருந்து இடம் பெயர்த்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சம்சயம்.

ரிச்சர்ட் அக்மார்க் கீக். இந்த மாதிரி ISTJ பசங்களுக்கு வேலை போனால் ரொம்ப துர்லபம் என்று சொல்லி இருக்கிறார்கள்

வாசிக்க: Why Layoffs Hit IT Professionals So Hard | CIO – Blogs and Discussion: “Sure, IT jobs are difficult to find. But making matters worse, many IT professionals lack the personality traits that make career change easier, even exciting, for others.”

Introverted Sensing Thinking and Judging – அகமுக ஆய்வு உணர்வு சிந்தனைத் தீர்ப்பாளர் – ஆளுக்கு காற்றில் வாய்ப்பந்தல் போட வராது. எத்தனாந் தேதிக்குள் எவை வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும். டைடானிக் கப்பல் நிறைய தகவல் கொடுத்தாலும், வகுந்தெடுத்து, முத்துக் குளிப்பார்கள். அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்.

Statue-of-liberty-suicide-finance-USA-America-Suicideஇளைய தளபதி விஜய் சொல்வது போல் இதயத்தில் யோசிக்கும் க்ரூப் அல்ல. மூளையை உபயோகித்து முடிவை எடுப்பவர். ‘ஏதோ… பட்சி சொல்லுது!’ என்றால், எந்தப் பட்சி, எவ்வாறு தோற்றம் இருந்தது என்று கனவைக் குதறி, நினைவுலகத்திற்கு மீட்பவர்.

ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் உண்பது போல் செய்யும் INTPs (Introverted Intuitive Thinking Perceiving – அகமுக ஆய்வு இயலுணர்வு சிந்தனை உணர்வாளர்) & ENFPs (Extroverted Intuitive Feeling Perceiving) தரப்பினரின் தாரக மந்திரம் ‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’. நொடிக்கொரு புது சாஃப்ட்வேர் பிறக்கும் ISTJ மக்களுக்கோ மாற்றமே அலர்ஜி.

ரிச்சர்ட் அனேகமாக ISTJ ஆகத்தான் இருப்பார். ஐ.டி துறையில் வேலை பார்ப்பவரில் மிகப் பெரும்பான்மையானோர் ISTJ என்கிறது ஆய்வு.

இந்தியர்கள் Introverted; சாதாரணமாக தனக்குள்ளேயே யோசித்துக் கொள்பவர்கள். ஏதாவது பார்ட்டி நடந்தால் கூட ஒதுக்குப்புறமாக தனியாகப் போய் தெரிந்தவர்களோடு அரட்டை அடிப்பதை விரும்புவர்கள். Judgingம் கூட வந்து சேர்ந்து கொள்ளும். சட்டு சட்டென்று ஆளை எடை போடுவதில் இருந்து, தக்காளியை பொறுக்குவது வரை தீர்ப்பு எழுதித் தருபவர். ‘அவரவருக்கு அதது’ என்று Perceiving ஆக விட்டுத் தள்ளாத சமூக அமைப்பு. ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று கதையின் முடிவில் ஈசாப் நீதி சொன்னால்தான் சமாதானம் ஆகும் குமுகம்.

ஆனால், கணினித் துறையில் நிறைய இந்தியர்கள் நுழைந்ததற்கு காரணம் வேளாவேளைக்கு வேலை என்பதனால்தானேயொழிய இந்த ISTJ காரணம் அல்ல. எனவே, தெற்காசியர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஸ்னான ப்ராப்தி வாய்த்ததற்கு ISTJஐ மட்டும் கை காட்டக் கூடாது.

ரிச்சர்டின் பாஸ் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருக்கும் வேலை போய் விட்டது தெரியவந்தது. நாலு ஈமெயில், ஏழு போன் வாயிஸ் மெயில் தாண்டியவுடன் என்னுடைய பழைய பாஸ் குரல், லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவாக கேட்க கிடைத்தது.

Dilbert-Outsourcing-Employment-Obama-Rich-Bangalore‘என்ன செய்யறீங்க இப்போ?’

‘டிரக் ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். உன்னோட முதலாளியா இருந்தப்ப கிடச்சத விட அதிகமா கொடுக்கிறாங்க. அலாஸ்கா முழுக்க சுத்தியாச்சு. இந்த அனுபவத்த வச்சு பெஸ்ட்செல்லர் எழுடிண்டு இருக்கேன்.’

எவனாவது முட்டை வீசினால், அதை கேட்ச் பிடித்து ஆம்லெட் போட்டுக்க என்பார்கள். அது போல், வீசப்பட்ட தக்காளியை சேர்த்து, ரசம் ஆக்கி குடித்துக் கொண்டிருக்கிறார். மாற்றத்தை சப்புக் கொட்டி சாப்பிடுகிறார்.

இந்த வேலைதான் செய்வேன். இதுதான் எனக்குப் பிடித்தமானது. வெள்ளை சொக்கா உத்தியோகம் கிடைத்தால் மட்டுமே உழைப்பேன் என்று இராமல், கிடைத்ததை வைத்து கொண்டாடுகிறார்.

ரிச்சர்ட் மாதிரி வேலை இழந்த பல நண்பர்கள் சொந்த நிறுவனம் தொடங்குவதைத்தான் முதலில் விரும்புகிறார்கள். நிறைய பயணம். புதிய சந்திப்பு. நிலையில்லா இருப்பிடம். தினம் ஒரு க்லையன்ட் என்று வழக்கப்படுத்துவது ISTJ மக்களுக்கு சிரமமானது. நல்ல நாளிலேயே இந்தியனுக்கு இடர்நிறைந்த பாதையை தேர்ந்தெடுப்பது பயங்கொடுப்பது. ஆனால், வியாபாரத்தில் சோதனை செய்துதானே ஆக வேண்டும்?

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிப் பழக்கப்பட்ட நெஞ்சத்திற்கு Comfort zoneஐ விட்டு வெளியே வர வேண்டும். ஆனானப்பட்ட, மணிரத்னமும் ஷங்கரும் சூப்பர் ஸ்டாரும் கூட ஃபார்முலாவை விட்டு இம்மி நகருவதில்லை. நம்ம பாடு எப்படியோ!

Pratap Chatterjee on “Halliburtons Army”

  • page14_halliburton__s_armyடிக் சேனிக்கு மட்டும் ‘ஹாலிபர்டனி’ன் எல்லா புகழும் சென்றடையக் கூடாது. இரண்டாம் உலகப்போரில் இருந்து வாடகைக்கு போர் வீரர்களை குத்தகை விடும் நிறுவனமாக ஹாலிபர்டன் திகழ்கிறது.
  • இராக் போரை ஹாலிபர்டனுக்கு ஏலம் கொடுத்தவர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஆவார். அதே ரம்ஸ்ஃபீல்ட் லின்டன் பி. ஜான்ஸன் காலத்தில் ஹாலிபர்டனை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
  • டிக் சீனி தலைமைப் பொறுப்பை எடுத்தவுடன் வெறும் 100 மில்லியன் பண்ணிக் கொண்டிருந்த ஹாலிபர்டன் 2.3 பில்லியன் பணக்கார நிறுவனமாக மாறியது.
  • டிக் செனி துணை ஜனாதிபதி ஆகியவுடன் வாஷிங்டனில் ஹாலிபர்டன் லாபி செய்வதற்கான நிதியை சரி பாதியாக குறைத்துக்கொன்டது.
  • இராக் போர் முடிந்தாலும் ஹாலிபர்டனின் லாபத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. போஸ்னியாவில் ஆகட்டும் அல்லது பிறிதொரு போர்க்களத்தில் ஆகட்டும்; அங்கே, அவுட்சோர்சிங் முறையில் ஹாலிபர்டனுக்குத்தான் கான்ட்ராக்ட் விடப்படும்; விடப்படுகிறது.
  • பராக் ஒபாமாவினால் ஹாலிபர்ட்டன் குத்தகையை ரத்து செய்ய இயலாது. ஆனால், கொடுக்கும் பணம் எவ்வாறு, எதற்காக, எப்படி செலவாகிறது என்பதற்கு கணக்கு கேட்க முடியும்.
  • தெற்காசியர்களும் இந்தியர்களும் கொத்தடிமையாக மலம் அள்ளுவதற்கும் ஆபத்தான வேலைக்கும் வைக்கப்பட்டு ஹாலிபர்ட்டனுக்கு கிடைக்கும் கொள்ளை லாபம் குறைந்து, இந்த தகிடுதத்தங்கள் அம்பலம் ஏறுமாறு வெளிப்படையான செயல்பாடுகள் அரங்கேறக் கூடும்.
  • Labor exploitation and an unofficial “caste system” perpetrated by Halliburton/KBR and its subcontractors, with sliding pay scales based on workers’ nationalities.

தொடர்புள்ள சில சுட்டி:

1. நேர்காணல்: Pratap Chatterjee: Texas Monthly February 2009: “An extended interview with the author of Halliburton’s Army: How a Well-Connected Texas Oil Company Revolutionized the Way America Makes War.”

2. ப்ரதாப் சாடர்ஜியின் வலைப்பதிவு: Pratap Chatterjee's blog | The War Comes Home, A Project of KPFA Radio