Tag Archives: construction

முடிபொருட்டொடர்நிலை

ராணி: ட்விட்டர்ல் ஒண்ணு பார்த்தேன்.

ராஜா: தப்பு… தப்பு! முதல்ல அது டிவிட்டர் கிடையாது ஆக்கும் — எக்ஸ் என்பார் எலான். இரண்டாவது என்னிக்காவது ட்விட்டரில் ஒண்ணேயொண்னை மட்டும் பார்க்க முடியுமா என்ன!?

ராணி: மிடில… நான் படிச்சது, ‘மனித இனம் ஏன் மற்ற மிருகங்களை முன்னேற்றவில்லை?’ – என்னும் வினா.

ராஜா: ஆட்டுக்குட்டியை இன்னும் சதைப் பற்றொடு வளர்ப்பது எப்படி? பூனையும் நாயும் பிறந்தவுடனேயே சொன்னபடி கேட்டு நடக்கும் செல்லப்பிராணி ஆக ஆக்குவதெப்படி? கசாப்புக் கடைக்கு மிச்சம் மீதி இல்லாமல் முழு ஊனையும் தருவதெப்படி… இப்படியா?

ராணி: முருகா! அதைவிட மனுஷன் மனசு வச்சா எந்த உயிரினத்தையும் புத்திசாலியாக மாற்றி இருக்கலாம்.

ராஜா: கணினிக்கு அறிவுத் திறன் ஊட்டுவதற்கு பதிலாக விலங்குகளுக்கு மதி நுட்பம் புகுத்தியிருக்கலாம் என்கிறாய். இத்தனை ஆண்டுகளாக நாகரிகமாக வாழும் நாமே இன்னும் மந்தையாகத்தான் செயல்படுகிறோம். அதெல்லாம் நடக்கிற காரியமா?

ராணி: Payton E. Pearson III எழுதிய “Artificially Selecting for Intelligence in Dogs to Produce Human-level IQ Within 100 Generations” தேடிப் பார் என்பது ட்விட். அதை வச்சு, ‘ஏன் எவளும் அறிபுனை கதை ஒன்று எழுதவில்லை?’ என்பது சங்கிலிக் கேள்வி.

ராஜா: நல்ல கேள்வி. இதைக் கேட்டவுடன், எனக்குத் தோணுது… ‘கும்பகர்ணன் என்பது AGI குறியீடு. தூங்கிட்டிருக்கிற AI சிங்கம். சாமா-னு செல்லமாக அழைக்கப்படுகிற சாம் ஆல்ட்மேன் தான் இராவணன்!’ – இப்படி ஒரு அறிவியல் புனைவை ராமகாவியமாக எழுதப் போறேன்.

ராணி: ராவணன் திராவிடர் ஆச்சே?

ராஜா: ராவணன் மணி ரத்தினம் எடுத்த படம்.

ராணி: உசிரே போகுதே!

ராஜா: அப்ப மணியும் இல்லுமினாட்டிங்கிற!!

நகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை

பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.

தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.

வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.