Tag Archives: Answers

தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்

அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.

தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.

இந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:


முதலில் டிஸ்கி;

(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல! தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்!!

1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? எந்த அம்சங்கள் கவர்ந்தது?

இப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.

‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….

  • வருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.
  • $80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு
  • 10% Morgage interest வரி விலக்கு
  • கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு
  • ராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்
  • எல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்

… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…

மெக்யன் தரப்பிலிருந்து

  • வேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்
  • Single Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்
  • இணையதளத்திற்கான வரி விலக்கு
  • புது கைத்தொலைபேசிக்கான வரிவிலக்கு
  • கோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு

இதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…?!!

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:

1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.

2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?

1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.

2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.

3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.

4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.

6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா?

ஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.

இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.

4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை?

இவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம்? இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்?

5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வடிவேலு.

ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.

பத்ரி

வாரயிறுதி வி.ஐ.பி.: வாசன்

தமிழ்ப்பதிவர்களினூடே மிக அதிக காலம் அமெரிக்காவில் வசித்தவர் யார் என்றால் அது வாசனாகத்தான் இருக்கவேண்டும்.

வாசன் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மெக்சிகோவின் அருகில் உள்ள நியு மெக்சிக்கொவில் வசிப்பதால் அமெரிக்காவினுள் அத்துமீறி குடிபுகுபவர்களால் ஏற்படும் சிக்கல்களையும் நேரடியாக உணரமுடியும் நிலையில் இருப்பவர்.

இனி அவர்:

1. உங்க ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது? உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும்? ஏன்?

கருத்து கணிப்பு:

40% மெக்கெய்னுக்கும், 45% ஒபாமாவுக்கும் வாக்களிப்பார்கள் என்கிறது.

14% இன்னும் முடிவு செய்யவில்லை

இதே கணிப்பு தங்களுடைய (வாக்காளர்கள்) கொள்கைகளுடன் ஒத்து போகிற வேட்பாளர் யார் என கணித்ததில்:

  • 48% ஒபாமாவையும்,
  • 41% மெக்கெய்னையும் சொல்கின்றனர்.
  • 7% க்கு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை
  • 4% க்கு இரண்டு பேர்களுமே இல்லை!

2. மிக முக்கியமான ஊராச்சே… எத்தனை தடவை இது வரை ஒபாமாவும் மகயினும் வந்து போயிருப்பார்கள்! என்ன சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்? எதை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்?

😉

அல்புகர்க்கி அல்லது மாநிலத்திற்கு எத்தனை தடவைகள் என்பது உடன் ஞாபகத்திற்கு வரவில்லை. 2 அல்லது 3 தடவைகள் இருக்கலாம்.

மெக்கெய்னும் சேரா பெலினும் down town Albuquerque யில் கூட்டம் நடத்திய போது நிறைய மக்கள் வந்திருந்தார்கள்; பலர் சேராவை நேரில் பார்க்கணும் என்பதற்காக வந்திருப்பார்கள் என்றன உள்ளூர் நாளிதழ் மற்றும் திறனலை (am) வானொலி. நாளிதழில் படித்தவரை கூட்டத்தில் வேட்பாளர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை.

ஒபாமா 3 வாரங்களுக்கு முன்பு கடைசியாக வந்து சென்றிருக்கலாம். மொத்தம் 4 தடவையோ..?

வட நியு மெக்ஸிக்கோ ஊர்களான எஸ்பய்னோலா மற்றும் பெர்னலியோ ஆகிய ஊர்களில் ஒபாமா கூட்டங்களுக்கு உற்சாகமான மக்கள் கூட்டம் வந்திருந்ததென சொன்ன ஊடகங்கள். இவரும் அடித்தள மக்களுக்கு காக்காய் பிடிக்கிற மாதிரி சொன்னதையே சொல்லியதாக ஞாபகம்.

‘வட நியு மெக்ஸிக்கோ’ வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாக இருந்து வருவது – (தலைநகரம் சேந்த ஃபே தவிர்த்து) – 65% க்கு 35 % விழுக்காடு என்பதாக ‘வாக்களிக்க பதிவு செய்தவர்கள்’ ஜனநாயக கட்சியினராக உள்ள பகுதி.

பல உள்ளூர் தேர்தல்களில் குடியரசு கட்சியினருக்கு வேட்பாளர் கிடைப்பது அரிது.

3. உங்க வோட்டு யாருக்கு? எதனால்…

இக்கணத்தில் எனது வாக்கு யாருக்கும் இல்லை.

எனது கணிப்பில் இரு வேட்பாளர்களும் கிட்டதட்ட பல விடயங்களில் ஒத்து போகிறார்கள். (தேவை இருந்தால் இது பற்றி விவரித்து எழுதலாம், nfl முடிந்த பின்!! ).

கருத்துத் தெளிவு என்பது இதுவரை கானல் நீராகத்தான் உள்ளது – இந்த தேர்தல் கூத்தாட்டத்தில்.

4. சென்ற தேர்தல்களில் வாக்களித்தவர்களில் எவர் உங்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்தார்கள்? எங்கு ஏமாற்றினார்கள்?

அதிபர் தேர்தலில் ஜான் கெர்ரிக்கு துளியும் விருப்பமில்லாமல் வாக்களித்தேன். 2000 ல் டூப்யா வுக்கு வாக்களித்த போது இருந்த ஆர்வம் போலில்லை என்பதாக அர்த்தம் கொள்ளவும்.

மாநில தேர்தல்களில், congress க்கு குடியரசு கட்சியின் ஹெதர் (உ)வில்சனுக்கு வாக்களித்தேன். ஏனோ தானோ உள்ளது அவரது தற்போதைய இந்த ஆட்சி காலம்(?). மறு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. காலியான செனெட் க்கு அவரது கட்சியின் சார்பாக போட்டியிட, கட்சியின் முன் தெரிவு தேர்தலில் வாய்ப்பினை இழந்தார்.

ஆளுநர் போட்டியில் பில் ரிசற்ட்சனுக்கு வாக்களித்தேன். எதிர்த்து நின்ற குடியரசு கட்சிக்காரருக்கு அவருடைய கட்சி வாக்குகளில் 58% தான் கிடைத்தது. “ஸால்ஸா கிடைக்காத ஊருக்கு கிடைத்த உறைப்புச் சட்னி” மாதிரிதான் பில்லுக்கு போட்ட வாக்கு.

கடந்த தேர்தலில் செனெட்டுக்கு தேர்தல் இல்லை. தற்போது உண்டு. 36 வருடங்களாக செனெட்டராக இருந்த பீற் டொமினிச்சி இடத்தை காலி பண்ணுகிறார்.

5. பில் ரிச்சர்ட்சன் எப்படி இருக்கிறார்? 2012 /16இல் தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு கிட்டுமா? ஒபாமாவுடன் ஒப்பிட்டால் எவ்வாறு இவர் வேறுபடுகிறார்?

2012-16 ல் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்..?

இவர் இங்கு ஆளுநராக இருந்த காலத்தில் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், “மக்கள்” அரசாங்கத்தை நம்பியே வாழும் போக்கினை மாற்றிட ரிசற்ட்சன் ஏதும் செய்துவிடவில்லை.

ஒபாமாவின் பெரிய நம்பிக்கையாளர்களில் ஒருவர் ரிசற்ட்சன். வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை, துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளை தவிர்த்து.

NRA ரிசற்ட்சனை நண்பனாக கருதுகிறது.

வாசன்

சத்யாவுடன் சந்திப்பு: இறுதிப்பகுதி

7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். ;-))

அமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.

8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பைடன், பேலின், மகயின், ஒபாமா – எவருக்கு ஃபோட்டோஜெனிக் முகம்?

முதல் சுற்றிலேயே ஒபாமாவும் மக்கெயினும் காலி.

படத்துக்கு ஏற்ற முகம் மட்டும் என்றால் ஒபாவும் சுமார் ரகம். இருந்தாலும் இருவருமே அரசியலில் அதிகமாக ஊறிப்போயோ என்னவோ ஒரு வித இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பைடன் தன் மனம்போன போக்கில் பேசக்கூடுவதால் அவர் முகத்தில் நவரசங்களையும் காண முடிகிறது. அவர் நல்ல தேர்வாக இருப்பார்.

பேலின் பெண்ணுக்கே உரிய அழுகுடனும் நளினங்களுடனும்,அடிக்கடி கண்ண்டிக்கிறார். சந்தேகமே இல்லாமல் பேலினே நல்ல படங்களுக்கான மாடலாக இருப்பார்.

சத்யா

முதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா

முதல் பகுதி

3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.

இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே

பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?

சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது? (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)

பே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.

பேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)

பே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.

பேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.

எங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.

பே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.

பேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.

பே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.

பேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.

பே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க?

பேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?

சத்யா

வாரயிறுதி விருந்தினர் – 'உருப்படாதது நாராயண்'

‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்

1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்?

மெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி!

2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: எந்த மெக்கயின் உங்களைக் கவர்கிறார்?

ப்ளாக்பெரி ஜான் மெகயின் தான்.பொண்டாட்டிகளின் தொல்லைகள் இல்லாமல் கில்மா மேட்டர்களின் மெயில் படிப்பதையே வேலை என சொல்லி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

3. சிண்டி மெகயின் & மிஷேல் ஒபாமா: யார் நல்ல பேச்சாளர்?

பேச்சாளரை விட்டு தள்ளுங்கள். சாரா பேலினின் நீச்சலுடை வீடியோ யூ ட்ப்யூல் இருக்கிறதா ?

4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா? சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா? (கேள்வி உபயம்: ஸ்ரீதர் நாராயணன்)

இல்லை அமெரிக்காவிலும் இசங்கள் உண்டு.

வால் மார்டிச, மெக்டோன்லாடிச, கூகிளச, ஆப்பிளச அரசியல் பின்நவீனத்துவ சண்டைகளும், அதன் தெரிபுகளுன் ஊடே ஜார்ஜ் வாஷிங்கடன் கண்ட கனவு வில் சும்தின் இடது தோள்பட்டையிலும், 50 செ ன் டின் நா உச்சரிப்பிலும், இன்ன பிற ஜனங்களின் கண்டுக்கொள்ளாத இடத்தில் குத்தப்பட்ட டாட்டூவுமாக கன ஜோராக தான் இருக்கிறது.

5. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் திடீரென்று அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

கேள்வி பாஸ் ஆன் டூ இட்லிவடை 🙂

நாய்களும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களும்: Nature இதழின் அரசியல்?

முதலில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:

Rat race என்பார்கள். குதிரை பேரம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆமையும் முயலும் போட்டி போடும்.

அதன் தொடர்ச்சியாக இந்த மாத நேச்சர் இதழின் அட்டைப்படம் இது.

முதல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமாவும் ஜான் மகயினும். அதே இதழின் பின்புற அட்டை விளம்பரத்தில் கறுப்பு நாயும் தங்க நிறத்திலான நாயும் அலங்கரிக்கின்றன.

அகஸ்மாத்தாக நடந்த ஒற்றுமை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

செய்தி: Going to the dogs: How Nature magazine featured Obama and McCain … with an unfortunate ad on the back | Mail Online

பதிவு: Alterdestiny: Science, Obama and McCain

நேச்சர் இதழின் கவர் ஸ்டோரிக்காக அதிபர் வேட்பாளர்களிடம் அறிவியல் தொடர்பான 18 கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஒபாமா கர்மசிரத்தையாக பதில் அனுப்ப, ஜான் மகயின் விடையளிக்க மறுத்துவிட்டார்.

Dyno Buoyயிடம் சில கேள்விகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பதிவர்களிடம் கேள்வி கேட்டு எனக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க எண்ணம். முதலில் மாட்டியவர் பதிவர் டைனோ.

நீங்களும் பதிலளிக்க ரெடி என்றால், உங்கள் மின்னஞ்சலை எனக்கு அஞ்சல் செய்ய வேண்டுகிறேன். கூடவே கேள்விகளையும் கேட்டுக் கொண்டுவிட்டால், பதிலளிக்க தோதுப்படும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

இனி டைனோவுடன் குறுக்கு விசாரணை:

1. ட்விட்டரில் கொடுக்கும் ஸ்டேட்டகளைப் பார்த்தால் நீங்க குடியரசுக் கட்சி ஆதரவாளர் போல் தெரிகிறீர்? ஏன் ரிபப்ளிகன்ஸ்?

நான் குடியரசுக்கட்சி ஆதரவாளன். கட்சிகளைக்களைக் கடந்து, நல்ல நவரச பேச்சாளர் என்பதால் பில் க்ளிண்ட்டன் பால் கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உண்டு.

ஏன் ரிபப்ளிக்கன் – கொஞ்சம் எனக்கு தெரிந்தளவில் விரிவாக பதிலளிக்க முயல்கிறேன்:

அவர்களின் கொள்கை மேல் கொண்ட ஈர்ப்புத்தான் முதல் காரணம். குடியரசுக்கட்சியின் கருக்கலைப்பு, ஒருபால் சேர்க்கை ஆகிய சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவர்களின் மற்ற கொள்கைகளில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஜனாதிபதி ரீகன் அவர்களின் “Lesser Government Intervention” அதாவது அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாத ஒரு நாடு/பொருளாதாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.

காப்பிடலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்று இதை நான் கூறுவேன். கம்யூனிசம் சம்பாதிப்பது அனைத்தையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு அரசாங்கத்திடமே கையேந்தச்செய்யும் ஒரு வறட்டு சித்தாந்தம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இறைந்து பெறவேண்டிய நிலை வந்தால் தனி மனித முன்னேற்றத்தை தடை செய்வது போல உள்ளது. வாசிப்பிற்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் எழுதத்ப்பட்ட ஒரு நடைமுறை சாத்தியமில்லாத மனிதகுல வளர்ச்சியை தடைசெய்யும் புதினம்தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் வீழ்ச்சி மனித பரிணாமத்தின் அவசியம் என்பதை உலக மக்களைப்போல நானும் உணரத்துவங்கியிருக்கிறேன்.

சுதந்திரக்கட்சி சமத்துவம், சமதர்மம் போன்ற ஏட்டு சுரைக்காய்களை இன்னும் தாங்கிப்பிடிப்பதால் அவர்களை வெறுக்கிறேன். அரசாங்க மருத்துவக் காப்பீடு, அரசாங்கத்தின் தயவிலான கல்வி போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ‘நம்மை’ விட சிறந்தவர் யாருமில்லை என்பது ரிபப்ளிக்கன்கள் கருத்து. நமக்கு ‘அரசாங்கமே’ சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என்பது ஜனநாயக கட்சியின் வாதம்.

இப்போதைய அமெரிக்காவில் என் குழந்தையை நான் தனியார் பள்ளிக்கு அனுப்ப விரும்பினாலும் அரசாங்கத்திற்கு பள்ளிக்கான வரியை செலுத்தியே ஆகவேண்டும். ஒரு வகையில் என் பிள்ளைகள் எந்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்கிறது. (ஏன் நல்ல பள்ளியிருக்கும் மாவட்டத்திற்கு மாறி விட வேண்டியதுதானே என்று விதண்டாவாதம் செய்யலாம் – அதைப்பற்றி விரிவாக பிரிதொருநாளில்).

நாளை அதே முறையைத்தான் ஜனநாயகக்கட்சி மருத்துவத்திற்கும் அறிமுகம் செய்யவிருக்கிறது. வருடத்திற்கு 10,000 டாலர் மருத்துவ சேவை வரி கட்டும் நானும், வேலை செய்யாமல் அரசாங்க உதவி பெரும் ஒருவரும் ஒரே வரிசையில் தரமில்லாத ஒரு மருத்துவமனை வரிசையில் காத்திருக்ககும் நிலை வரும். இதில் ஹில்லாரி/ஓபாமா கொண்டுவருவதாக சொல்லப்படும் மருத்துவக் காப்பீட்டில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நான் வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுவேன், இப்போது பள்ளிகளுக்கு வரி கட்டுவதைப்போல! Rob the rich and distribute to poor என்பது ராபின்ஹுட்டிற்கும் எம்ஜியார் திரைப்படங்களுக்கு மட்டுமே உரிதானவை. அவரே தன் கடைசி காலத்தில் அமேரிக்கா வந்துதான் மருத்துவச்சிகிச்சை பெற்றார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏன் எல்லோரும் சமமாக இருக்கலாமே என்று இந்திய கம்யூனிஸ்டுகளைப்போல கேட்கலாம். அதற்கு லிங்கன் அவர்களின் கூற்றே பதில் – “The government that can do everything for us will take everything from us”. அரசாங்கம் சீரமைப்பு சட்டங்களை ஏற்படுத்திவிட்டு அதை வழிநடத்துவதை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவதே காப்பிடலிஸத்தின் அடித்தளம்.

The government should regulate by creating and amending laws not own institutes and run them. அரசாங்க சேவை என்றுமே தரத்துடன் இருக்காது என்பது கண்கூடு! அரசாங்கம் எப்போதுமே ஊழல் நிறைந்தது. அதன் தாக்கத்தை குறைப்பதே ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் அடைய தற்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே தீர்வு! இந்தியாவில் அரசாங்கம் நடத்தும் பள்ளிகள்,மருத்துவமனைகள் எந்த தரத்துடன் இருக்கிறதோ அதே தரத்துக்கு அமெரிக்கவிலும் வந்து விட ஜனநாயகக்கட்சி துணை போவதாலும் அவர்களைப்பிடிக்காது.

நான் மேலே குறிப்பிட்டதைப்போல அரசாங்கமே பல துறைகளை நடத்த வேண்டும் என்று டெமக்ரட்ஸ் விரும்புவதால் அவர்கள் வரிகளை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். வரி அதிகம் கட்டுவது எனக்கு உவப்பில்லாததால் வரி குறைப்பை ஆதரிக்கும் குடியரசுக்கட்சியை எனக்குப் பிடிக்கும். பதில் மிகவும் நீண்டு விட்டது. விளக்கம் தேவைப்பட்டால் மீண்டும் தொடர்கிறேன்!

2. ஜான் மெகயின் – சாரா பேலின் அல்லது பராக் ஒபாமா – ஜோ பைடன்: எவருக்கு உங்க ஆதரவு? அடுத்த ஆட்சிக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆகிறார்கள்.

இதற்கான பதிலை என் சென்ற பதிலில் இருந்தே ஊகித்திருக்கலாம். மெக்கெய்ன்னுக்குத்தான் என் ஆதரவு!

பராக் சிறந்த பேச்சாளர். அமெரிக்கத் தேர்தலில் இந்த நிலையை எட்டியிருக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற வகையில் அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அதே சமயம் அவருக்கு பின்னால் இருக்கும் கட்சி இறந்த சித்தாந்தங்களை தூக்கிப்பிடிக்கும் வயதானவர்களும் புதிய சிந்தனைகளை ஏற்காத ஒரு கட்சி. சென்ற இரு தேர்தலின் போது பத்திரிக்கைகளில் வந்த பல கட்டுரைகள் டெமக்ரட் கட்சியின் அடிவேரை அம்பலப்படுத்தி அந்த கட்சிக்கு ஒரு நல்ல தலைமை இல்லாத குறையை சுட்டியிருக்கிறார்கள். அந்த ஒரு பெரிய இடைவெளியை ராஜ தந்திரத்துடன், இனபற்றையும் மாற்றம் என்ற வரையறுக்காத கொள்கையையும் முன்னிறுத்தி சொகுசாக அமர்ந்து கொண்டவர்தான் பராக். குடியரசுக் கட்சி அவ்வாறல்ல. இப்போதே Fiorina, Bobby Jindal, Palin போன்ற இள ரத்தங்களை பாய்ச்சி தன் கொள்கைகளை உயிர்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி. என்னைப்பொருத்தமட்டில் பராக் இந்த ஆண்டு பொறுத்து அடுத்த தேர்தலாண்டில் போட்டியிட்டிருக்கலாம். அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடும்படி இல்லை. அனுபவமின்மை, தலைமை ஏற்று நடத்தகுடிய முதிர்ச்சியின்மை ஆகியவை பெரிய கெடுதல்களை உருவாக்கலாம்.

மெக்கெய்னின் அனுபவம், நாடாளும் திறமை, நாட்டுக்கு ஆற்றிய சேவை, பல்லாண்டு கால செனட்டில் இருகட்சிகளை பல திட்டங்களில் ஒருங்கிணைத்த பாங்கு, பொறுமை, எதிர்த்து போட்டியிட்ட தன் கட்சி மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்களை கையாண்ட முதிர்ச்சி ஆகிய பல பண்புகளுக்கு டெமக்ராட்ஸிடம் எந்த சரியான பதிலுமில்லை!

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பாக்கி விடைகள் நாளை…