Tag Archives: குறிப்பு

What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words

ப்ராம்ப்ட் எஞ்ஜினியரிங்-கில் தோற்றவர் யார்?

அ) கும்பகர்ணன் – நித்தியத்துவம்

ஆ) பஸ்மாசுரன்

இ) பலராமன்

ஈ) ஹிரண்யகசிபு

எல்லாமே சரி.

என்னையும் சேர்க்கலாம்.

நண்பர்களை சந்திக்கும் எவருமே கணி-அரட்டை பொறியியலில் இருந்து தப்பித்தவர்கள்.

சென்ற வாரம் தோழர்களை அழைக்கும் காலம்.

நல்விருந்துகளில் பிராம்ப்ட் என்பதை எவ்வாறு தமிழில் வார்த்தையாக்கலாம் என்னும் வினா எழுந்தது.

Prompt Engineering எனப்படுவது

1. வல்லே வார்த்தை

(நாலடியார்: நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்

தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.)

2. வீச்சுக்குறிப்பு (பரோட்டா அல்ல; சொல்லும் பொருளும் ஒலியும் ஒளியும்)

3. நெருக்கனல் (நெருப்புடா… நெருங்குடா பார்ப்பம்)

4. கிண்டு (கிண்டக் கிண்டக் கிடைக்கும்)

5. ஒல்லைப்பாடம் (விரைவில் ஒப்பிக்கும் பாடம்)

போஸ்டர்தான் நட்பும் கொண்டாட்டமும்.

உங்கள் ஆதரவு என்றும் தேவை!

அசோசியேஷன் தேர்தல்

பழம் நழுவி பாலில் விழுந்து நான் பார்த்தது இல்லை. ஆனால், தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கும் வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.

முள்கிரீடம், அம்பு படுக்கை, பாம்பு புற்று மேல் அரியாசனம் – இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்தப் பதவி அப்படிப்பட்ட பதவி.

சனி வக்கிரமாகி குரு நீசமாகி கஷ்டதசையில் அமெரிக்கா வலம் வந்த காலம். கடந்த தடவை பொருளாளராக பதவி வகித்தவர், அவருடைய வீட்டிற்கு செய்த சிசுருஷைகள் கண்டு சுற்றுப்புறத்தாரும் அண்டைவீட்டாரும் பொங்கி எழுந்த காலம். பசும்புல்லின் வளர்ச்சி ஆறரை இன்ச் அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறுபது டாலர் அதிகம் தர விரும்பாத காலம்.

நிதிப் பற்றாக்குறை, கூட்டுக் களவாணி ராஜ்ஜியம், கொள்ளையடிக்கும் நிர்வாகம் எல்லாவற்றையும் தனி மனிதனாக தட்டிக் கேட்க புறப்பட்டேன். குலதெய்வங்களான இண்டெர்னெட் போராளி வினவு, சிறுபத்திரிகை தீவிரவாதி செயமோகன், சினிமா தளபதி விஜய் எல்லோரையும் வணங்கி வீராவேசமாக உள்ளே புகுந்தேன்.

சினிமாவை விமர்சிப்பது சுலபம். எடுப்பது கஷ்டம் என்பது போல் வரவு செலவு கணக்கை லகானுக்குள் அடக்குவது பெரிதினும் பெரிய கஷ்டம்.

ஒரு பக்கம் எங்கள் வீட்டில் கூரை ரிப்பேர். வாசலில் பூசணிப்பூ முளைக்கவில்லை. அண்ணந்து உயர்ந்த மரம் எங்கள் தலையில் விழுவதற்கு முன் நீக்கு. சிறார்கள் விளையாட பூங்கா அமை. சூப்பர் ஃபாஸ்டாக ஓட்டுபவர்களை மிதவாதியாக்க வேகத்தடை வை என்று விண்ணப்ப மயம்.

இன்னொரு பக்கம் எதிர் வீட்டு நாய் என்னைக் கடிக்க வருகிறது. பச்சை கேட் மாமி என் வீட்டை எட்டிப் பார்க்கிறாள். அவர்கள் சமையலில் இந்திய மசாலா என்னை குமட்ட வைக்கிறது என்று புகார் மயம்.

‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வந்து இரு பக்கமும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம். விசுவை அழைத்து வந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று நாடகம் போட வைக்கலாம். குறைந்த பட்சம் மணி ரத்னம் வந்தால் ‘அஞ்சலி’யாவது எடுப்பார்.

எங்களுக்கு எடுபிடியாக வேலை செய்யும் ப்ராபெர்டி மேனேஜரும் லேசுப்பட்டவர் இல்லை. எலெக்ட்ரிசீயன் பல்ப் மாற்றினதற்கு ஐநூறு டாலர். புல் பிடுங்கியதற்கு ஆயிரம் டாலர் என்று செமையாக கணக்கு காட்டிக் கொண்டிருந்தார்.

தட்டிக் கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மனாக, ‘எங்களுடன் வயலுக்கு வந்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா? அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா?’ என வக்கணையாக பேசினார்.

எனக்கு சின்ன வயதில் இருந்தே ஔவை வாக்கின்படி

சிக்கனமும் கைப்பழக்கம் டூத்பேஸ்ட் பிதுக்கலும் நாப்பழக்கம் எச்சில்கையால் காகம் ஓட்டாத மனப்பழக்கம் – நித்தம் நடக்கும்போது சில்லரைப் பொறுக்கும் பழக்கம் நெஞ்சழுத்தமும் பொறுமையும் கஞ்சம் பிறவிக் குணம்

அவ்வாறே கேட்டதெற்கெல்லாம் இல்லை, முடியாது, இயலாது, இப்பொழுது நேரம் சரியில்லை, அப்புறம் பார்க்கலாம், ஆகட்டும் யோசிக்கலாம் என்று மன்மோகனாமிக்ஸ் கடைபிடித்து மௌனம் சாதித்தேன்.

அப்படியும் ஏதாவது கூடி வரும் போல் தெரிந்தால், ஷரத்து போட்டாச்சா, அந்த வேலை செய்வேன் என்றாரே… அது காண்டிராக்டில் இல்லையே என்று ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடித்தேன்.

இப்படியாக ஈராண்டுகள் இனிதே கழிந்தன.

சுத்தமான கை. கறாரான நடவடிக்கை. கண்கட்டி பாம்பான இறுக்கிப்பிடி பட்ஜெட். இம்மியளவும் இடம் கொடுக்காத மேற்பார்வை. எனக்கே மூச்சு முட்டுமளவு மைக்ரோ…அல்ல… நேனோ மேனேஜ்மெண்ட்.

நல்ல வேளை. என் கீழே பணியாளர்கள் யாரும் அலுவலில் வேலை பார்க்கவில்லை. ஒரே வாரத்திலோ, ஒரே நாளிலோ ஓடியே போயிருப்பார்கள்.

ஆனால், இடை விடாத கேள்விகளும், அந்த கேள்விகளுக்கான விடைகளிலும் சில விஷயங்கள் புரிந்தன.

முக்கியமான மூன்றை மட்டும் பட்டியலிடலாம்.

முதலாவதாக, ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு லட்சியம்தான். தங்கள் வீடும், தங்கள் வீட்டின் சுற்றுப் புற பசுமைகளும் சிறப்பாக கவனிக்கப் பட வேண்டும்.

கூடவே காசும் பார்க்க வேண்டும். மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா, தேவாலயத்தில் கூட தொழும் தோழர் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை பிடித்து தரவேண்டும்.

கடைசியாக தெரிந்து கொண்டது: நியாயமாகவும், நிதானமாகவும், துளி நகைச்சுவை உணர்வுடனும் செயல்பட்டால், சங்கடமான வினாக்களையும் இயல்பான பட்டிக்காட்டான் போன்ற அக்கறையுடன் எழுப்பினால், அனைவரையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினரையாவது தன்மயமாக்கலாம்.

பதவிக்காலம் போன வாரத்தோடு முடிவிற்கு வந்தது. ஆசை என்னை விடவில்லை. மறுபடியும் நிற்கத் தூண்டியது. ஜெயிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.

இருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகினால், ஆடுகளத்திற்கு போகாத சேவலாக கருதப்படுவேன் என்னும் சுய அபிமானம் கலந்த பெருமிதம் வேறு நெய் ஊற்றி வளர்ந்தது.

ஐந்து பேர் குழுவிற்கு எட்டு பேர் போட்டி. எதிர்த்து நின்றவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். எனக்கோ, ‘இல்லை… இல்லை’ என்று சொன்னவர்களிடம் போய் நிற்பதா என்னும் நம்பிக்கையான அச்சம், படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரை துணைக்கு அழைத்தது.

அப்பொழுதுதான் ஒபாமாவை நினைத்தால் பெருமையாக இருந்தது. சுற்றிவர அவரை கெக்கலி இடும் ரிபப்ளிகன் காங்கிரஸ். ஒரு காரியத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடும் குடியரசு கட்சி எம்.பி.க்கள். அப்படி இருந்தும் மீண்டும் வாக்கு கேட்கிறார்.

‘ஒன்றுமே செய்யவில்லை’ என்று சொல்வோரிடம் செய்ததையும் செய்யாமல் விட்ட போர்களையும் விளக்குகிறார். அதற்கு தன்னம்பிக்கையும் வேண்டும். செயலூக்கமும் வேண்டும். போயும் போயும் உள்ளூர் சங்கத் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது ரொம்பவே அதிகம்தான். எனவே, நான் ஒபாமா போல் திண்ணக்கமாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

தேர்தல் நாளில் பதற்றமாக இருந்தது. தோற்றவுடன் முகத்தை எவ்வாறு புன்முறுவலுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகினேன். கூட உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றியுரையை தயாரித்தேன்.

எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு நிஜமாகவே துடிப்புடன் கூடிய ஆர்வம் மிகுந்தது. இனி முழு வேகத்துடன் தட்டிக் கேட்கலாம். கடுமையாக புழுதி பறக்க தொடை தட்டி முழங்கலாம். உள்ளே நடந்த குழாயடித் தகராறுகளையும் தகிடு தத்தங்களையும் வெட்ட வெளிச்சமாக்கலாம். எல்லோரின் சங்கதியும் அம்பலம் ஏறும். என் கை மட்டுமே சுத்தமான கை என்று அன்னா ஹசாரேயாக அலம்பல் செய்யலாம்.

நான் மீண்டும் ஜெயித்தவுடன், ‘என்னை அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே’ என சொல்லவில்லை. ஆனால், அடுத்த எலெக்சனுக்குள் தனி வளை பார்த்து போய் சேரவேண்டும்.

வலைப்பதிவு – அட்டென்ஷத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/141619381816930304
http://twitter.com/#!/snapjudge/status/140436275458097153
http://twitter.com/#!/snapjudge/status/123018866732441600
http://twitter.com/#!/snapjudge/status/103529450133655552
http://twitter.com/#!/snapjudge/status/103528244782964736
http://twitter.com/#!/snapjudge/status/101139542572146688
http://twitter.com/#!/snapjudge/status/100651828630392832
http://twitter.com/#!/snapjudge/status/100646130811011072
http://twitter.com/#!/snapjudge/status/98222539733602304
http://twitter.com/#!/snapjudge/status/93645662238932993
http://twitter.com/#!/snapjudge/status/43503445143072768
http://twitter.com/#!/snapjudge/status/22776648986271745
http://twitter.com/#!/snapjudge/status/22325506649104384
http://twitter.com/#!/snapjudge/status/17626958103842816