Tag Archives: உண்ணாவிரதம்

அறம் – ஆகாரம் – ஆகாத்தியம்

கல்ப காலம் கழித்து நேற்று அன்னா ஹசாரேவாக இருந்தேன்.

இதுதான் காரணம் என்றில்லை. கடையில் வாங்கும் பொறை போன்ற தானியக் கலவைகளின் மேல் கோபம் ஒரு காரணம். அதே அதே காலை உணவா என்னும் அலுப்பா என்பது இன்னொரு காரணம். காலை உணவைத் தவறவிடுவது மாபாதகம் இன்னொன்றில்லை என்று அறிந்தது மற்றொரு காரணம். அரசன் போல் பிரேக்ஃபாஸ்ட் உண்ணாவிட்டால், மதிய உணவு புசித்து உடல்நலத்தை கெடுக்க வேண்டாம் என்பது அடுத்த காரணம். உடம்பில் இருக்கும் கொழுப்பு கவனித்துக் கொள்ளும் என்பது முக்கிய காரணம்.

நேற்றைய தினம் அமாவாஸ்யை. பெற்றோரில் எவரையேனும் இழந்தவர்கள் இரவு சாப்பிடக் கூடாது. இரமலான் கூட வரப் போகிறது. ரம்ஜானுக்கு ஐந்து மாதம் இருக்கிறது என்றாலும், தேர்தல் வரும்போதா வேட்பாளர் களத்தில் இறங்குவார்? திங்களன்றுதான் ஏகாதசி கழிந்திருக்கிறது. உண்ணாவிரதத்திற்கு பெயர் பெற்ற அண்ணல் அரிச்சுவட்டில் உபவாசம் இருக்க உகந்த நாள்.

அம்பரீஷன் போல் துர்வாசர் யாரும் இங்கு வீட்டிற்கு அதிதியாக வரப் போவதில்லை. அவரவர்களின் இரயில் நிலையங்களிலும் பொதுச்சோலைகளிலும் வீடற்றோர் இன்னொரு பட்டினியை முடித்து எழுந்திருப்பர். அவர்கள் நிலைத்தகவல் இடும் காலம் வரும் முன் சோம வார விரதமும் இருந்துவிட வேண்டும்.

அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி – 1.8.5)
உட்பொருள்
அயல் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் கிடைத்ததை அளைந்து, கைகளில் அகப்பட்டதை மகிழ்ச்சியுடன் உண்ட அமெரிக்கா, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று நம்மில் கலந்தான்.
அராபியர் கடைந்த எண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு உலகின் அணுகலன்களும் அமெரிக்காவிற்கு விருப்பமானதாயிற்று என்பது உரை.

அமெரிக்காவிற்கு மூன்று கவலைகள்:

1. தங்களை விட பராக்கிரமத்துடன் இன்னொரு இடம் வளர்ந்துவிட்டதாக உலகம் நினைக்கத் துவங்கிவிடுமோ?

2. தங்களுக்கான காரியங்களை சாதிக்கக் கூடிய குறைவான செலவில் நிறைவான லாபம் தரும் ஸ்தலங்கள் குறைந்துவிடுமோ!

3. தங்களின் முதல் மரியாதையான இந்திர பதவி போன்ற ஸ்திரதன்மைக்கு இந்தியா போன்ற குடியரசு வல்லரசு கோருமோ?

இந்த அச்சங்களை நீக்க அமெரிக்கா பல உபாயங்களைக் கையாளுகிறது. அதில் ஒரு அஸ்திரம் திரு உதயக்குமார்.

உலகெங்கும் உள்ள அணு உலைகள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது. முன்னும் ஒரு காலத்தில் இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே அணு உலை வைத்திருந்தது. ஒன்று அமெரிக்கா; இன்னொன்று ருசியா.

கொஞ்ச நாள்போக்கில் நட்பு நாடுகளான இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் அமெரிக்கா அணுப் பொருட்களைக் கொடுத்தது. சீனாவும் அணுகுண்டு வெடிக்கும் நாடாக வளர்ந்தது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்தியா அணு சோதனை செய்து பறைசாற்ற, இராவோடு ராவாக பாகிஸ்தானும் இந்த ஐவரோடு இணைந்து எழுவரானது.

இன்றைய அளவில் இஸ்ரேல் – நம்பர் எட்டு.

வட கொரியாவால் தம்மாத்துண்டு வெடியாவது போட முடியும் – ஒன்பது.

இரான் கடும் பிரயத்தனத்தில் இருப்பதால் – #10.

இப்படியே போனால், சங்கரன்கோவில் வாக்காளர் எல்லோருக்கும் யுரேனியம் தருவதாக ஜெயலலிதா அறிவிக்கும் நாள் தூரத்தில் இல்லை.

இந்த மாதிரி உலகெங்கும் அதிகாரமும் அணுவும் சிதறி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இருப்பதை எல்லாம் தன்னிடம் கொண்டு வரவேண்டும். இனிமேல் எவருக்கும் தாரை வார்க்கக் கூடாது என்பது ஒபாமா சித்தாந்தம்.

இதில் பையன் ஜார்ஜ் புஷ் வேறு ரகம். நல்ல நாடாக இருந்தால் அவர்களிடமும் கொஞ்சம் கொடுத்து வைப்பதில் தவறில்லை என்று பார்ப்பது ரிபப்ளிகன் கட்சி. உற்ற தோழனாக இருந்தாலும், நாம் படியளந்தால் மட்டுமே பாக்கெட் மணி என்று கெட்டியாக இருப்பது டெமொக்ரடிக் கட்சி.

அமெரிக்க அரசியல் நினைவுக்கு வந்தது.

அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குழுவை அமெரிக்காவில் டெமொக்ரட்ஸ் என்கிறார்கள். ஒபாமா கட்சி. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது என்று எண்ணுபவர்கள் இவர்கள் பக்கம். மக்களிடமே நல்லது கெட்டதை விட்டுவிட்டால், சுயநலமாக இருப்பார்கள்; எனவே, அதிகாரம்தான் பொதுவுடைமையாக இயங்க வேண்டும் என்று கருதுபவர்களும் இவர்கள் பக்கம்.

பொறுப்பைக் கையில் எடுக்கும் குழுவை ரிபப்ளிகன் கட்சி என்கிறார்கள். மிட் ராம்னியின் கட்சி. இன்னொருத்தருக்கு என்னுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் இவர்கள் பக்கம். தூண்டி விட வேண்டிய திரியாக இருப்பதை விட மெழுகுவர்த்தியாக எரிய விரும்புபவர்கள்.

இந்தியாவில் தன்னிறைவு வரக்கூடாது. மின் உற்பத்தி இடைஞ்சல் செய்ய வேண்டும். இதனால் அயல் முதலீட்டாளர்களுக்கும் கவலை பிறக்கும். எவனோ, எவளோ…. எப்போது பார்த்தாலும் எதற்காவது செங்கொடி தூக்கி வேலை நிறுத்த போராட்டம் செய்யும் நாடு என்னும் பிம்பம் எழும்…

இது பங்குச்சந்தையைக் கவிழ்ப்பதற்கு நல்லது.

அணு மின்சாரம் என்றால் ஏதோ நாக பாணம் போல் சயனைட் குப்பி பயம் எழுப்புவதால் உள் கட்டுமானங்களில் சுணக்கம் விழும். நம்பகமான நாடு அல்ல என்னும் பிம்பத்தை சுமத்தலாம்.

டாலர் கீழே படுத்திருக்கும் இந்த நிலையில் இது பேஷ்.

கிடைத்தார் உதயகுமார். குருஷேத்திரமாகிறது கூடங்குளம்.

Situation Hopeless… But Not Serious

தொடர்புள்ள சுட்டிகள்:

1. NNSA HEU removal featured on The Rachel Maddow Show | National Nuclear Security Administration

2. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar

3. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

4. பத்ரி சேஷாத்ரி: எந்த மின்சாரம் ‘நல்லது’?

5. பத்ரி சேஷாத்ரி: கூடங்குளம் போராட்டம்

6. கூடங்குளமும் தி.நகரும் « நேசமுடன்

7. கூடு :: இலக்கியம் :: குறும்படம்: “குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல் – சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.”

8. தமிழ்ஹிந்து – கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1 & விஸ்வாமித்ரா

9. அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை | ஆர்.பாலாஜி

10. எஸ்.குருமூர்த்தி  » கூடங்குளம் போராட்டம்- திரைக்குப் பின்னால் யார்?

அன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்

வேலாயுதம் துணை ! ஓம் தத் குவாடரோச்சி !!

காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.

அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.

அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி

இந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.

கிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.

உரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

சாட் பெட்டியில் இருந்து…

1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்?’

2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’

3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’

4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’

5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’

6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’

7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்?!’

8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’

9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’

10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’

இவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.

பாதை சரியா? இறுதி முடிவு நல்ல விஷயமா? என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.


Noted Research Writer and Cultural Anthropologist Jeyamohan‘s view

’இன்றைய காந்தி’: கிராமசுயராஜ்யம்

ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்

ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது

மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.

அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.

தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது

விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.

ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!

இந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

மேலும்:

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1


ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே

விகடன்.காம்

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்!

ஏப்ரல் 2011…

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்!

ஆகஸ்ட் 2011..

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.

 


செய்திகள்

சிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.

”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


நிகழ்வுகள் / டைம் லைன்

2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

மார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.

மார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.

மார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.

மார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.

ஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.

ஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

ஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.