கான்ஸ்பிரசி தியரி என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன?
- சூழ்ச்சிக் கொள்கை
- சதியோசனை
- பந்துக்கட்டு
- பிதூரி
- உட்பகை
- சுற்றிக்கட்டுதல்
- கொடுமுடிச்சு
- கூட்டுமூட்டு
- நெஞ்சாங்கட்டை
- மாற்றுக்கருத்து
- எதிர்மறைக் கொள்கை
- அடிப்படையற்ற எதிர்கொள்கை
- குற்றச்சாட்டு கோட்பாடு
உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
இனி செய்தியைத் தேர்ந்தெடுக்கும் நேரம்.
‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, ரஜினி உடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததால் புகழ் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு ஸ்ரேயா சென்றிருந்தார்.
அதிகாலையில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது சிலர் அவரை அடையாளம் கண்டனர். உடனே ஸ்ரேயாவை நெருங்கி `ஆட்டோகிராப்’ கேட்டனர். கையை பிடித்து குலுக்கவும் முயற்சித்தனர். அப்போது ஒரு ரசிகரை ஸ்ரேயா ஓங்கி அறைந்தார். அவருடைய உதவியாளர்களும் அந்த ரசிகரை அடித்து உதைத்தனர்.
ஸ்ரேயாவின் இடுப்பை அந்த ரசிகர் கிள்ளியதால் அவர் கோபமடைந்து அடித்ததாக கூறப்பட்டது. ஸ்ரேயாவிடம் அடி வாங்கியவர் பெயர் ஹரி என்பது, பின்னர் தெரிய வந்தது. திருமலையில் உள்ள ஒரு மடத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரேயா கூறியதாவது:-
கோவிலில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த நான், பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒருவன் எனது இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் இப்படி நடந்து கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
முதலில் கண்ணில் படுவது ‘புத்தாண்டை முன்னிட்டு’.
தற்போது ஒகெனக்கல் தமிழ்நாட்டில் இருக்கிறதா/சத்யராஜ் தேர்தலில் நிற்பாரா என்னும் சூழல் நிலவுவதை கணக்கில் எடுக்கவும். கன்னட வருடம் பிறந்ததைக் கொண்டாட ‘முன்னாள் தமிழ்நாடு’ (சென்னை மாகாணத்தில்) இருந்து துண்டாடப்பட்ட தெலுங்கு தேசத்தில் உள்ள கோவிலுக்கு ஷ்ரேயா சென்றிருப்பதன் அவசியம் என்ன? அன்று திருப்பதி தாரை வார்க்கப்பட்டது; இன்று ஹொகேனக்கல் சென்று விடக் கூடுமா?
இவ்வாறு சிந்திப்பது ‘ சுற்றிக்கட்டு’ காட்டினாலும், ஷ்ரேயாவை முடிச்சுப் போடாமல் பாதியில் அனாதரவாகத் தொங்கி நிற்கிறது. இந்த மாதிரி எழுதுவது ‘தொலைநோக்கு பார்வை‘ எனப்படும்.
அடுத்ததாக ஹரி ‘இந்து சமயம்’ சார்ந்த மடத்தில் வேலை பார்க்கும் சமாச்சாரம் கிடைக்கும். இது முற்போக்கு பார்வைக்கு மட்டுமே உதவும். பார்ப்பனியம், ஆரியம், மடத்தலைவன் என்று முடிந்த அளவு தட்டையாக சித்தாந்தப் பார்வை ஆக்கி விடலாம்.
மதம் எல்லாம் ‘கதம் கதம்’ என்று பாபா ரஜினி வழியா உங்களுக்கு? பரவாயில்லை! அடிபட்டவர் துப்புரவு பணியாளர் என்பதால், கவிஞர் வாலியைப் போல் ‘சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு; நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு’ என்று இலக்கியப் பார்வை வடிக்கலாம்.
‘ஷ்ரேயாவுக்கு நேர்ந்தது எனக்கும் அன்றாடம் நேர்கிறதே’ என்று பாலாஜி பக்தையின் கதியை எடுத்துவைத்தால் பெண்ணியப் பார்வை என்று முடக்கப்படலாம்.
கரிசல் » பொதுவுடைமை என்பது போல் “சாமானியர்களும் ஏழைகளும் தொடக்கூடாதா என்ன?” என்று ஆணியப் பார்வைக்கு தாவலாம்.
இதெல்லாம் ‘குற்றச்சாட்டு கோட்பாட்டை’ நெருங்கவில்லை.
- கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரெஸின் ஏசி வகுப்பு போல் அலுக்காத சினேகா இன்னமும் சந்தையில் காலந்தள்ளுகிறார்.
- பதிவுசெய்யப்படாத வகுப்பு போல் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கும் நமீதா;
- நிதிநிலை அறிக்கையில் தள்ளுபடியான விலை போல குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் சிம்ரன்;
- ராஜதானி போல் தலைநகரை நோக்கினாலும் சென்னையிலும் கால் வைத்திருக்கும் அசின்;
- எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும் என்று கிசுகிசுக்கப்பட்டாலும் பாஸெஞ்சரின் வாஞ்சையான நடிகையர் திலகம் மீரா ஜாஸ்மின்;
- கிராமம், நகரம் என்று வித்தியாசம் பாராட்டாமல் பயணிக்கும் இருவுள் போல் இரண்டுவிதமான நடிப்பிலும் அசத்தும் ப்ரியாமணி;
- ரயில்வே சாப்பாடாக சென்நை பிரியாணி பரிமாறிய பூஜா;
- பொறிக்கு தக்கவாறு, ஒரே தடத்தில் வேகமாக செல்லும் வண்டியும், நின்று நிதானித்து செல்லும் வண்டியும் செல்வது போல் இயக்குநருக்கு ஏற்ப மிளிரும் பாவ்னா;
- புதிய விமானங்களாக வந்திறங்கும் பாரதி, விஜயலஷ்மிகள்;
- ஏர் இந்தியாவாகப் பறந்து கொன்டிருக்கும் த்ரிசா;
- ‘தவமாய் தவமிருந்து’ என்று எக்ஸ்பிரெசாக அறிமுகம் ஆகி ‘பட்டியல்’ சூப்பர் ஃபாஸ்ட் என்று பதவி உயர்வு அடையும் பத்மப்ரியா;
தடம் மாறக் கூடாது. மீண்டும் சதியாலோசனைக்குத் திரும்பவும்.
சொர்ணமால்யா குறித்த கிசுகிசு வந்தால் எவராவது சீந்துகிறார்களா? இல்லையே! புகழுக்கும் புதருக்கும் மோனை மட்டும் ஒற்றுமை அல்ல. இன்று புகழோடு இருப்பவர் நாளை கோப்புகளாக்கி மூலையில் புதைக்கப்படுகின்றனர்.
கொண்டாட்ட மேடையில் நடிகர்களின் பேச்சு மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. நடிகைகளுக்கு கனவுப்பாடல் தரப்படவில்லை. பின்னணிக்குரல் நாயகி சவீதாவும் வரவில்லை. இப்படிபட்ட சமயத்தில் செய்தியில் எப்படி இடம்பிடிப்பது?
பிடித்தார் துணை நடிகரை; கொடுத்தார் ரியாலிடி டிவியை!
‘நடிக்கிற மாதிரி நடி; அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்’ என்று சொல்லி வைத்ததை அரங்கேற்ற, அகில லோக செய்திகளிலும் தலைப்புகளில் அடிபடல் ஆனார்.
மெரீனாவில் பெருமாளின் திருக்கல்யாண சேவை பார்த்த மக்களிடம் தன் கடவுள் பக்தியை பறைசாற்றினார். புலியை முறத்தால் விரட்டிய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி விளைந்த வீர பரம்பரை சங்கச் சித்திரத்தை செயலில் காட்டி இலக்கிய தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்தார் என்று அடுக்கினால் கான்ஸ்பிரசி கொள்கை எனப்படும் என்றறிக!










