Tag Archives: அவசரம்

மைக்ரோவேவ் அடுப்பினால் ஆபத்தா?

இணையம் விநோதமான இடம். புரிகின்ற ஆங்கிலத்தில் புரியாத நடையில் கரடுமுரடான ஆராய்ச்சிகள் இருக்கிறது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களும் புத்தகங்களும் திருட்டுத்தனமாக இலவசமாகக் கிடைக்கிறது. அரை லூசு அறிவியலும் கிடைக்கிறது. ஆனால், எது முழு கிறுக்கு, எது முக்கால் கிறுக்கு, என்று தெளிவதற்குள் நாமே எழுத ஆரம்பித்துவிடக் கூடாது என்பதுதான் விதி.

அப்படி பார்த்த ஒரு கபர்தார் செய்தி: ‘நுண்ணலை அடுப்பினால் விளையும் 12 ஆபத்துகள்!’

மேற்குலகில் எங்கு பார்த்தாலும் மைக்ரோவேவ் ஓவன். பால் சுட வைப்பது முதல் பால்கோவா காய்ச்சுவது வரை நுண்ணலை அட்டுப்பில்தான் நடக்கிறது. அதனால் ஆண்மை பறிபோகிறது. புரதச் சத்து இழந்த உணவை உண்கிறோம். நல்ல சாப்பாட்டை நச்சு சாப்பாடு ஆக்குகிறோம். கதிரியக்க வீச்சு பாய்ந்த பொருளைக் குடலுக்குள் தள்ளுகிறோம். விட்டமின் சத்தை இழக்கிறோம். புற்றுநோய் உருவாகும்.

இந்தப் பதிவை நீங்கள் லைக் செய்யாவிட்டால், வேதியியல் பட்டப்படிப்புக்கு உள்ளாவீர்கள். இந்தப் பதிவை நாற்பது பேரிடம் பகிராவிட்டால், கியாஸ் அடுப்பு கிடைக்காமல் கெரஸீன் தேடி தெருதெருவாய் அலைவீர்கள்! ஜாக்கிரதை.

விரைவு நகரம்: அவசர உணவும் தனிமை வாழ்க்கையும்

மலிவு விலை சிற்றுண்டி கடைகள் சிலப்பதிகார காலத்திலேயே கோலோச்சியதை சாலமன் பாப்பையா முதல் சாரு நிவேதிதா வரை பதவுரை கொடுப்பார்கள். மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கும் சாப்பாட்டு கடைகளை ஜெயலலிதா இன்று திறந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிரபலம் ஏன்?

* தினக்கூலிக்கு ஓடும் மக்கள் அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவார்கள். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட சம்பளப் பிடிப்பு நிறைந்த வாழ்க்கை. அவதி அவதியென ஏதாவது உண்டு கொண்டே உழைப்பதற்கு ஏற்ற உணவு

* அன்றாடங்காய்ச்சி வீட்டில் அரிசி ஸ்டாக் இருக்காது. காய்கறி, பருப்பு எல்லாம் தினந்தோறும் வாங்கி அறுசுவையாக சமைக்க முடியாது. எனவே, சம்பளம் வந்தால் சோறு

* உடைந்த குடும்பங்கள் நிறைந்த அமெரிக்காவில், இல்லத்தரசி இல்லாத சூழலில், மெக்டொனால்ட்சும் சிபோட்லேவும் சுடச்சுட பரிமாறும்.

* சுவையை விட வயிறு ரொம்புதல் முக்கியம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும், அடுத்த வேளை வரை பசி எடுக்கக் கூடாது. நடு நடுவே நொறுக்குத் தீனிக்கு எல்லாம் பிரேக் கிடைக்காது. ஃபிரென்சு ஃப்ரைசும் கோழிக்காலும் கொழுப்பு நிறைந்த திருப்தி தரும்.

இந்தியாவில் கே.எஃப்.சி. என்பது நண்பர்கள் கூடும் தலமாகவும், சப்வே என்பது பத்தியக் கட்டுப்பாட்டுக்காரர்களின் விருப்ப உணவகமாகவும் இருப்பதுதான் பாரதீய கலாச்சாரமோ?