திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு

நேற்று நடந்த கூட்டணிக் கூட்டத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முடிவுகள்: (தினமணி)

1. கூட்டணிக் கட்சிகள் தத்தம் வேண்டுதல்களை பிப்ரவரி 15க்குள் திமுகவிடம் சமர்ப்பிப்பார்கள்.

2. அதன்பின்னர் மார்ச் 2 வரை திமுக பிரதிநிதிகள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். Informal-ஆக.

3. மார்ச் 2க்குள் முடிவு எடுக்கப்படும். மார்ச் 3-5 திருச்சியில் திமுக மாநில மாநாடு நடக்கும். அங்கு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றி பொதுமேடையில் அறிவிக்கப்படும்.

ஆக மார்ச் 5ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று தெரிகிறது. இன்னமும் 20 நாள்கள்தான் பாக்கி!

அதிமுக பக்கம் இப்பொழுதைக்கு யாரும் வெளிப்படையாகச் சாய்வதாகத் தெரிவதில்லை!

வைகோ பற்றி கருணாநிதி

நேற்று நிருபர்களிடம் பேசியதிலிருந்து (உபயம்: தினமணி)

* திமுக அணியிலிருந்து மதிமுக வெளியேறி அதிமுகவுக்கு வர வேண்டும் என சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா. காளிமுத்து கூறியிருக்கிறார். கிடைக்கிற ஆதாயத்துக்கு ஏற்ப அணிமாறும் சபல குணம் படைத்தவர்கள் யாரும் எங்கள் கூட்டணியில் இல்லை.

* மதிமுக பற்றி தொடர்ந்து செய்திகள் வந்தபோதிலும், அதன் தலைமை விளக்கம் தரவில்லையே என்ற கேள்வி எழவில்லை. அந்தக் கட்சியின் தலைமைக்கும் எனக்கும் நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் இருக்கிற நெருக்கம்தான் அதற்குக் காரணம். அதனால் அவர் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றார் கருணாநிதி.

அம்மாவின் குட்டிக்கதைகள் – கரடி, கம்பளி, சாக்லெட், தண்ணீர்

ஜெயலலிதாவின் scriptwriter யாரோ? மீண்டும் குட்டிக்கதைகள் ஆரம்பித்துவிட்டன. இவற்றைத் தொகுத்து ஒரு நல்ல புத்தகம் வெளியிடலாம். காப்புரிமை பிரச்னைகள் வரும் என்பதால் நான் கழன்றுகொள்கிறேன்.

தினமணியில் முழுதாக மூன்று கதைகள் உள்ளன. இட்லிவடை பதிவில் ஒரு கதையை யூனிகோடில் போட்டிருக்கிறார்.

இன்று சன் டிவியில் கருணாநிதியின் பதிலடி அறிக்கையை வாசித்தார்கள். அது நாளை செய்தித்தாளில் வந்ததும் சுட்டி கொடுக்கிறேன்.

சபாஷ்! சரியான போட்டி!

விஜயகாந்த் – திமுக மோதல் + காமெடி

விஜயகாந்த் கட்சி (ஏதோ மு.க) தொடங்கியதிலிருந்தே பெரிய கட்சிகளுடன் தகராறு ஆரம்பித்து விட்டது. விஜயகாந்த் தான் தனித்து நின்றே போராடுவேன் என்கிறார். திமுக, அஇஅதிமுக இரண்டுக்கும் மாற்று என்கிறார். ஏதோ கல்யாண மண்டப இடிப்பு என்று பிரச்னை வந்தது. அதன்பின் கருணாநிதியின் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டிருக்கிறார் போலும். (ப.சிதம்பரம், பழனிமாணிக்கத்தையெல்லாம் தாண்டி அது நடக்குமா என்ன?) அதற்கு பதிலாக நேற்று ஆற்காடு வீராசாமி விஜயகாந்தைத் தாக்கிப் பேசியுள்ளார்.

இப்பொழுது விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வீராசாமியாரின் சில துளிகள் இங்கே (தினமணி வழியாக):

* கருணாநிதி சிறையில் இருந்த நாள்களைவிட, இவருடைய (விஜயகாந்துடைய) கட்சியின் வயது குறைவு.

* சுனாமிக்கு கருணாநிதி நிதி வழங்கவில்லை என்கிறார். ஆனால் சோனியாவிடம் 1 கோடி, ஸ்டாலின் வழியாக ஜெயலலிதாவிடம் 21 லட்சம் சுனாமிக்காகக் கொடுத்தார். இப்பொழுது சன் குழுமப் பங்குகளை விற்றதன் வாயிலாக மனைவி வழியாகக் கிடைத்த பணத்தில் ரூ. 5 கோடியில் அறக்கட்டளை.

* விஜயகாந்த் நடித்த படங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார், அதன் செலவு விவரங்கள் என்ன ஆகியவற்றைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அடுத்து பழனிமாணிக்கம் தன் அதிகாரிகளை கேப்டனைப் பார்க்க அனுப்புவார் என்று நம்புகிறோம்.

விஜயகாந்த் தான் அதிமுக, திமுக அணிகளை விமரிசித்துப் பேசுவதால் தன் உயிருக்கு ஆபத்து என்று நேற்று கோவையில் பேசியிருக்கிறார்!

இதெல்லாம் பூச்சாண்டி. தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொல்லும் அளவுக்கு கேவலமான நிலைமை வந்துவிடவில்லை. அட, பீஹாரிலேயே இப்பொழுது இதெல்லாம் நடப்பதில்லை ஐயா!

புதிய சலுகை – ஜெயா

அரசு ஊழியர்களுக்கு மட்டும் சலுகைகள் வருவதாக இன்று ‘தேஸிகள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் அமெரிக்க வாழ் என்.ஆர்.ஐ.க்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் கூறினர்.

அமெரிக்க தேஸிகளின் பத்திரிகைகளான ‘லிட்டில் இந்தியா‘, ‘தென்றல்‘, போன்ற மாத இதழ்களின் நிருபர்களை திடீரென்று அழைத்து சந்தித்த செல்வி. ஜெயலலிதா, “இணையத்தில் மட்டும் வம்பளந்தாலும், அமெரிக்கத் தமிழர்களையும் வாக்கு வங்கிகளாகத்தான் நான் பார்க்கிறேன். எனக்கு பாரபட்சம் கிடையாது. உங்களில் சிலர் தமிழகத் தேர்தலின் போது, இந்தியாவுக்கு வருகை புரிந்தாலும், வாக்களிப்பது கிடையாது என்பது எனக்குக் கவலையைத் தருகிறது. தாங்கள் எந்தக் கட்சிக்கும் வோட்டளிக்காமல் திரும்புவதற்கு மரணபயம் தவிர, வேறு எண்ணங்களும் இருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று ஆரம்பித்தார்.

தொடர்ந்து அமெரிக்கத் தமிழர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார். அமெரிக்காவில் சம்பாதிப்பதற்கு ஓப்பான சம்பளம், பதினைந்து நாள் வரை ஈடாகாத் தரப் போவதாகக் கூறினார்.

“ஒரு நாள் சம்பளத்திற்கு கூட சபலப்படுபவர்கள் அவர்கள். தாங்க்ஸ்கிவிங் போன்ற தினங்களுக்காகக் காத்திருந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் வருபவர்கள், சகாய விலையில் தாசில்தாரை (உரிய முறையில்) கவனித்துக் கையெழுத்து வாங்கி, ‘விடுமுறைத் தேர்தல்’ என்னும் படிவத்தை தகுந்த அன்பளிப்புடன் அதிமுக அலுவலகத்தில் சமர்ப்பித்தால், பத்து வருடங்களுக்குள், அவர்களின் விடுமுறை கால ஊதியம் திரும்பத் தரப்படும்” என்றார்.

இதைக் கேள்விப் பட்டவுடன் ‘முரசொலி’ நிருபர்கள் கலைஞர் கருணாநிதியிடம் விரைந்தார்கள். நாளைய சன் டீவியில் தன்னுடைய அறிக்கை வெளியாகும் என்று கலைஞர் சொன்னதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்களுக்காக நாளைய கலைஞரின் இன்றைய அறிக்கை:

“நான் என் வக்கீல்க்களைத் தொடர்பு கொண்டுள்ளேன்.அம்மையார் சோனியா காந்தியுடன் அளவளாவினேன். கூட்டணிக் கட்சிகளுடனும் சர்வ கட்சி மாநாடு போடவுள்ளேன். இந்த சலுகையை வளைகுடா நாட்டில் இருக்கும் தமிழருக்கும் கொடுக்காதது காலங்காலமாகத் தாழ்த்தப்பட்டோரை வஞ்சிப்பதைக் காட்டுவதாக இராமதாஸ் என்னுடன் தொலைபேசினார். என்னைப் பொறுத்தவரை கடாரம் சென்ற தமிழ்க்குடிமகனும் ஒன்றுதான். கலிங்கம் சென்று உழைக்கும் தேசியத் தமிழனும் ஒன்றுதான். அனைவருக்கும் இந்த சலுகை வேண்டுமென்று கொல்கதா முதல் க்யூபெக் வரைத் தமிழர்கள் போராடுவதாக எனக்குத் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

நான் ஆட்சிக்கு வந்தால் ‘விடுமுறை சந்தை’ என்பதை புதிய நிகழ்ச்சியாக சன் டிவியில்ல் அறிமுகப்படுத்துவேன்.” என்று முடித்துக் கொண்டார்.

சிகாகோவில் இருக்கும் வைகோ, அதிமுக-வின் புதுமையான அறிவிப்பை வரவேற்பதாக டெலக்ஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புள்ள நிஜ அறிவிப்பு: சென்னைஆன்லைன்


|

கிராம்மி விருதுகள் 2006

1. (பீட்டில்ஸ் புகழ்) பால் மெக்கார்ட்னி புத்தம்புதிய ‘Chaos And Creation In The Backyard’ தவிர தங்களுடைய குத்து ஸ்பெஷல் ‘Helter Skelter’ போட்டுத் தாக்கினார். வயதானாலும் சூப்பர் ஸ்டாரும் மெக்கார்ட்னியும் கலக்குறாங்கப்பா!

2. கற்பனைக்கு இடம் தராத ‘Desperate Housewives’ நட்சத்திரம், முன்னாள் சூப்பர் மேனின் காதலி டெரி ஹாட்சரின் ஆடை சலிப்பைத் தந்தது. ‘வானிடி ஃபேரி’ன் அட்டைப்படம் போல் கற்பனைக்கு விடுவது உகந்தது. (அல்லது பரி-க்கு சுட்டி கொடுக்க வேண்டுமானால், கற்பனைகளுக்கு உகந்தன 🙂


3. யூ-2வுக்குக் கொடுக்கும் விருதுகள் போதுமப்பா… கொஞ்சம் மிச்ச மீதிப் பேர்களையும் கவனியுங்க கிராம்மி :-((((((

4. குலுங்கிக் குலுங்கிப் பாடாமல், இறைவனைத் துதித்தார் மரியா கரே. தெய்வீக அனுபவம். இறைவி தரிசனைத்தைக் கொடுக்காமல் சம்ர்த்தாகப் பாடினார் க்ரிஸ்டினா அகிலெரா.

5. காமெடி நாய்கர் டேவ் சேப்பல் வந்தார். அமரிக்கையாக ரெண்டே ரெண்டு வார்த்தை சிரிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டார். அவர் இல்லாமல் காமெடி செண்ட்ரல் கன்னலே சகிக்கலே! சீக்கிரம் திரும்பு வந்து உய்வியுங்கள் சேப்பல்காரூ.

மிச்ச மீதி உருப்படியான விவரங்களுக்கு கிராம்மி என்று யாஹூவிலோ அல்லது யாஹூ வலையகத்திலோ தேடித் தெளியவும்.

முன்குறிப்பு: இந்தப் பதிவில் கூகிள் எங்கும் சுட்டப்படவில்லை \:D/ யாஹூ என்னும் தாழ்த்தப்பட்ட நிரலியை இட ஒதுக்கீடாக உபயோகித்திருக்கிறேன்.


முதல்வர் யார்? – Kalki

கல்கி தலையங்கம் :: 12.Feb.2006:

மார்ச் மாதம் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடைபெறும் முன், தொகுதிப் பங்கீடு விவரங்கள் முடிவு செய்யப்பட்டுவிடும் என்கிறார் கருணாநிதி.

மிகவும் சரி. அதற்குள் முடிவானால் தான் மே மாதம் வரவிருக்கும் தேர்தலுக்குக் கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து, திட்டமிட்டு உழைக்க முடியும். ஆனால், இவ்வளவு திட்டமிடலுக்கிடையே மிக முக்கியமான கேள்விக்கு தி.மு.க தலைவர் இன்னும் பதில் கூறவில்லை: தி.மு.க கூட்டணி முன்னிறுத்தும் முதல்வர் யார் ?

கடந்த தேர்தலின் போதே கருணாநிதி தாம் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துவிட்டார். ‘இதுவே நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்’ என்று உறுதிபடவே சொல்லிவிட்டார்.

இன்றும் அந்நிலையில் அவர் உறுதியாய் இருக்கிறாரா என்று கேட்டால், அதை தி.மு.க பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்!

பொதுக் குழு என்ன முடிவெடுக்கும்? எப்போது அம்முடிவு எடுக்கப்படும்? முதல்வர் யார் ?

கருணாநிதியா ? ஸ்டாலினா ? அல்லது தி.மு.கவின் வேறு மூத்த தலைவரா ? – இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல்

அ) கூட்டணி கட்சிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ள முடியும் ?

ஆ) மக்கள் எவ்வாறு வோட்டுப் போட முன்வருவார்கள் ?

கூட்டணி கட்சியினர் யாருமே ஆட்சிப் பகிர்வில் ஆர்வம்
காட்டவில்லை என்று கருணாநிதி திட்டவட்டமாகச் சொல்கிறார். இந்தக் கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. ‘ஆட்சியில் பங்களிக்கிறேன்’ என்று தி.மு.க தலைவர் கூறினால் மற்ற கட்சியினர் ‘வேண்டாம்’ என்றா சொல்லுவார்கள் ? ஒரு நாளும் கிடையாது!

ஆனால் அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன் ?

அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவில் தி.மு.கவுக்கே தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டு, மிச்சத் தொகுதிகளைப் பகிர்ந்தளிப்பதால்தான் ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கிடையாது என்று தி.மு.க தரப்பில் அடித்துப் பேசப்படுவதால் ஆர்வம் காட்டவில்லை – அவ்வளவே!

கூட்டணி கட்சிகள் மாநிலத் தேர்தலில் வோட்டுகளைக் குவிக்க உழைக்க வேண்டும்; ஆனால் ஆட்சியில் மட்டும் பங்கு கிடையாது என்பது ஏற்கக் கூடிய நியாயம் அல்ல.

மத்திய அரசில் தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தையும் செல்வாக்கையும் மாநில அரசியலில் தி.மு.க தலைமை பயன்படுத்திக் கொள்ள முயல்வதும் ஆரோக்கியமானதல்ல.

போகிற போக்கைப் பார்த்தால், இடது சாரிகளின் அதிருப்தியை ஒன்றன்பின் ஒன்றாகப் பல விஷயங்களில் சம்பாதித்து வரும் மத்திய அரசே இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை தான் மேலோங்குகிறது.

தி.மு.க தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா ? இன்றையச் சூழலில் அது சாத்தியமில்லை. கூட்டணியின் இதர கட்சிகள் தி.மு.கவுடன் இணைவதால் எந்த அளவுக்குப் பயனடையுமோ அதே அளவுக்குத் தி.மு.கவும் இதர கூட்டணி கட்சிகளால் பயனடையும். இந்த பரஸ்பர சார்பு நிலைதான் நிதர்சனம், யதார்த்தம்.

ஜெயலலிதா எதிர்ப்பு என்கிற பொதுநோக்கு தி.மு.க அணியின் அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது. ஆனால் இது போதாது. ஆக்கபூர்வமான பொதுநோக்கும் குறைந்தபட்ச செயல் திட்டமும் வகுக்கப்பட வேண்டும். அந்தச் செயல்திட்டத்தைப் பிரதானமாக்கி தி.மு.க கூட்டணி தேர்தல் களத்தில் இறங்கினால்தான் மக்களின்
நம்பிக்கையைப் பெற முடியும். இப்படி ஒரு செயல்திட்டம் வகுக்கப்படுவதுடன் அடுத்த முதல்வர் யார் என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

‘முதல்வர் யார்’ என்பதை இப்போதே அறிவிப்பதன் மூலம் எதிர்ப்பும்
பிளவும் ஏற்படும் என்றும் தி.மு.க தலைமை கருதலாம். ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்துவது வைகோவுக்கு மட்டுமென்ன, வேறு சில கட்சியினருக்கும்கூட ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால், இந்தப் பிரச்னையைத் தேர்தலுக்குப் பிறகு சந்திப்பதற்குப் பதில் தேர்தலுக்கு முன்பு சந்திப்பதே நல்லது.

மேலும், முதல்வர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க கூட்டணி தேர்தல் களத்தில் இறங்குமேயானால், தி.மு.க உட்பட எந்த கட்சித் தொண்டரும் உற்சாகத்துடன் உழைக்க மாட்டார்!

‘யார் முதல்வர் என்பதையே அறியாத ஒரு கூட்டணிக்கா வோட்டுப் போடப் போகிறீர்கள் ?’ என்று அ.தி.மு.கவினர் பிரசாரம் செய்ய ஏதுவாகிப் போகும்.

வாக்காளர்களும் முகமறியாத ஒரு முதல்வருக்கு வோட்டுப் போடுவதைக் காட்டிலும் ஜெயலலிதாவுக்கு வோட்டுப் போடலாம் என்று முடிவெடுக்கக் கூடும்.

கருணாநிதி முதல்வராகவும் ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருப்பார்கள் என்று ஒரு ‘சமாளிப்பு’ முடிவைக் கூட தி.மு.க அறிவிக்கலாம். எந்த முடிவும் இல்லாத அந்த கார நிலையைக் காட்டிலும் இது ஏற்புடையதாக இருக்கும்.


| |

இது நம்ம தேடல்

கடந்த நாட்களில் கூகிளில் தேடியதில் – சொல்லக்கூடிய சில கேள்விகளும்… கிடைத்ததும்


|

நாடார்களுக்கு பட்டை நாமமா?

தேர்தல் நேரத்தில் பல்வேறு சுவரொட்டிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. அதுவும் நான் வசிக்கும் இடம் மிகவும் பலமான இடம். சரியாக 250 மீட்டர் நடந்தால் கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு. மற்றொரு பக்கம் 500 மீட்டர் நடந்தால் ராயப்பேட்டை அஇதிமுக தலைமை அலுவலகம். அதனால் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க போஸ்டர்களுக்கு சிறிதும் குறைவில்லை.

இந்த போஸ்டர்களை கேமராவால் படம் பிடித்து தேர்தல்2006 வலைப்பதிவில் போட ஆசைதான். ஆனால் இதற்கென கையில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்வது அபத்தமாக உள்ளது. என் செல்பேசியில் கேமரா வசதி கிடையாது.

எனவே அவ்வப்போது படம்; மற்ற நேரங்களில் போஸ்டர்களில் கண்ட வாசகங்கள் மட்டும்.

இன்று பார்த்த போஸ்டர்:

“தலைவர் கலைஞர் அவர்களே
சோனியா காந்தி அவர்களே
தமிழகத்திற்கு 13 மந்திரிகள்
ஆனால் நாடார்களுக்கு பட்டை நாமமா?
பதில் சொல்வீர்!

நாடார் பேரவை”

இந்த போஸ்டரில் காமராஜர் படம் இடது மேற்புறம் உள்ளது.

புலி வருது..புலி வருது…

தமிழக தேர்தல் அலசலில் ம.தி.மு.க வை எடுத்து அலசலாம் என்று உள்ளேன். ஏற்கனவே குழலி ஒரு அலசலை வெளியிட்டுள்ளார்.இது என் பார்வையில் சுருக்கமாக.

இது சிறிய கட்சிதான் எனினும் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் சுமார் ஐம்பது தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆப்பு வைத்தது என்பதிலிருந்து இவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த கட்சியில் வைகோ மட்டும்தான் பெரிய தலைவர்.ஆனால் கருணாநிதிக்கு பிறகான தமிழக அரசியலில் வைகோவின் பங்கு மிகப்பெரிது.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

வைகோ தலைமையில் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க மீண்டும் விசுவரூபம் எடுக்கும். தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது வைகோ நடத்திய போட்டி பொதுக்குழுவிற்கும் கணிசமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். சேலம் வீரபாண்டி ஆறுமுகம்கூட ஊசலாடி கொணடிருந்தார்.கருணாநிதி ஒருவருக்காகத்தான் அனைவரும் ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்வது போல் நாடகம் ஆடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.ஸ்டாலின் கோஷ்டி என்று ஒன்று உண்டு.அதைத்தவிர மற்ற அனைவரும் வைகோ பின்னால் அணிசேருவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்டாலினா, வைகோவா என்ற கேள்வி ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் வரும்போது தொண்டன் கண்டிப்பாக வைகோவை தான் தேர்தெடுப்பான் என்பது திண்ணம்.அந்த நம்பிக்கையில்தான் வைகோவும் கட்சி நடத்திக்கொண்டு வருகிறார்.நம்பிக்கை வீண்போகாது என்பது என் கணிப்பு.

தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட வைகோ அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, மீண்டும் தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, பி.ஜே.பி, காங்கிரஸ் என்று அனைவருடன் ஒரு ரவுண்ட் கூட்டணி அனுபவம் உள்ளதால் அரசியல் நடத்துவதிலும் தேறுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

அதிகம் உணர்ச்சி வசப்படும் தலைவரான வைகோ ஆட்சி நடத்திய அனுபவம் எதுவும் பெற்றிருக்கவில்லை. குறைந்தது ஒரு மந்திரி பதவியில் கூட ரொம்ப நாள் இருந்ததில்லை.இவருடைய நிர்வாகத்திறன் பற்றி யாருக்கும் தெரியாது.ஆனால் நேர்மையானவர் என்ற பெயர் உள்ளது.கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்ற பெயர் உள்ளது.அதுவே போதும்.

தேர்தலை பொறுத்தவரை தனியாக இந்த தேர்தலில் எந்த சீட்டையும் இவர்கள் வெல்ல முடியாது.கூட்டணி விஷயத்திலும் ம.தி.மு.க ஊசலாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் அதிக சீட் கேட்கும் நோக்கத்தில்தான் இந்த நாடகத்தை வைகோ ஆடுவதாக தோன்றுகிறது.பொடாவில் உள்ளே இருந்ததை மறப்பது வைகோவிற்கு கடினம்.

ம.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கு நாயுடு இனத்தை சேர்ந்த விஜயகாந்த கட்சி ஆரம்பித்து உள்ளதால் குறைந்திருக்கும் என்று ஒரு எண்ணம் உள்ளது.அது உண்மையா என்று இந்த தேர்தல் பதில் சொல்லும்.