அமெரிக்கா, ஈராக்மீது போர்தொடுத்து இன்றுவரை அதில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதுதான் மிச்சம். தினம் ஒரு கார் குண்டு. பலர் சாவு. பெய்ரூட், பாலஸ்தீனம்போல எப்போதும் கனன்று கொண்டிருக்கும் தீவிரவாத நெருப்பு. இந்தச் சாதனையை இன்றுவரை பெருமையாக சொல்லிக்கொள்பவர் ஜார்ஜ் புஷ். தனது அந்திமக் காலத்திலும்கூட ஈராக்கில் வெற்றியை நிலைநாட்டிய தனது பெருமையை ஊடகங்களில் தானே மெச்சிக்கொள்கிறார் புஷ்.
ரிபப்ளிகன் கட்சி வலதுசாரிக்கூட்டம் நிரம்பியது. ஏற்கெனவே வியட்நாமில் சண்டைபோட்டு பல மாதங்கள் கைதியாக இருந்து திரும்பிய போர்நாயகன் ஜான் மெக்கெய்ன் ஈராக் போரை ஆதரிப்பவர். இவரது பொன்வாக்கு: “They said that we would never succeed militarily; then we began to succeed militarily. Granted, we still have a long way to go in Iraq. And then they said they can’t succeed politically.”
ராணுவ வெற்றி என்பது எது? வெற்றி என்பதை எப்படி வேண்டுமானாலும் வரையறுத்துக்கொள்ளலாமா? சதாம் ஹுசைனைக் கொல்வதுதான் வெற்றி என்றால் அமெரிக்காவுக்கு ராணுவ வெற்றி கிடைத்துவிட்டது. சதாம் ஆட்சியை ஒழித்துக்கட்டுவதுதான் வெற்றி என்றால் அது நடந்துவிட்டது. அதற்குமேல்? அடுத்து பல பத்தாண்டுகளுக்கு ஈராக் ஒரு சுடுகாடாக மட்டுமே இருக்கப்போகிறது. அமெரிக்கப் போர் காரணமாக.
மெக்கெய்ன் தனது இணையத்தளத்தில் “Fighting Islamic Terrorists – Progress in Iraq” என்று ஒரு தனிப் பகுதியையே வைத்து நடத்துகிறார். அதைப் பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா, இஸ்லாமிய தீவிரவாதிகளை அடக்குவதற்காக ஈராக் போய் சண்டைபோடுவதான ஒரு தோற்றம் ஏற்படக்கூடும். அமெரிக்கா ஈராக்மீது போர்புரிய ஆரம்பித்தபோது, ஈராக் ஒரு தோல்வியுற்ற அரசமைப்பாக இல்லை. அங்கே, ஏகப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும், பல சேவைகள் தொடர்ந்துவந்தன. ஆனால் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு அத்தனை அரசாங்கச் சேவைகளும் நொறுங்கிப்போயின. விளைவாக பொதுமக்கள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். தீவிரவாதக் குழுக்கள் வலிமை பெற்றன. கள்ள ஆயுதச் சந்தையில் கிடைக்கும் அமெரிக்க மற்றும் பிற நேச நாடுகளின் ஆயுதங்களையே கையில் ஏந்தி தீவிரவாதிகள் அமெரிக்கப் படைகளையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையே இருந்துவந்த வெறுப்பு சதாம் ஹுசைன் காலத்தில் உள்ளடங்கி இருந்தது. இப்போது அது வெளிப்படையாகப் பரவியுள்ளது.
ஆக, பின்விளைவுகள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமெரிக்கா ஆரம்பித்துவைத்த போர் இன்று ஒரு நாட்டை முற்றிலும் அழித்துள்ளது; இனியும் தொடர்ந்து அழிவு நிலையிலேயே அந்த நாட்டை வைத்திருக்கும்.
மற்றொருபுரம் அமெரிக்கா, இந்தப் போருக்குச் செலவழிக்கும் பணம் எக்கச்சக்கம். இதன் தேவை என்ன? அப்படி செலவழித்து என்ன சாதனையை அமெரிக்கா புரியப்போகிறது என்று அங்கு யாருமே கேட்பதில்லை. ஒபாமாவைத் தவிர!
இப்போது ஈராக்கில் நடக்கும் போரில் செலவழிக்கப்படும் பல நூறு பில்லியன் டாலர்களை அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கு செலவழிப்பேன் என்று சொல்லும் ஒரே ஆள் ஒபாமா. இந்தப் போர் நடந்திருக்கவே கூடாது என்று மனப்பூர்வமாகச் சொல்லும் ஒரே ஆள் ஒபாமா.
இந்தப் போரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகவே ஹிலாரி கிளிண்டன் பிரைமரியில் தோற்கடிக்கப்பட வேண்டியவர். இன்றுவரைகூட அவர், தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை.













