இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒபாமாவின் பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.
- ஓகாயோ போன்ற தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகம். இம் மாநிலங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செல்வது முக்கிய தேர்தல் பிரச்சனையாக இருந்தது. ஹில்லரியின் பொருளாதார அனுபவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த வெற்றியை பார்க்க முடியும்.
- லேட்டினோ பிரிவினரின் ஆதரவு
- பெரிய மாநிலங்களில் பெரும்பாலும் ஹில்லரியே வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹில்லரியின் வெற்றி ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது. போட்டியின் போக்கு ஒபாமா சார்பாக இருந்த நிலையில் இருந்து மாற்றம் அடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மெக்கெயினின் போர் அனுபவத்திற்கு எதிராக ஹில்லரியின் பொருளாதார அனுபவம் ஒரு வலுவான வாதமாக இருக்கும் என ஜனநாயக கட்சியினர் நினைக்க கூடும்.
ஒபாமா இந்த தேர்தலில் இது வரை பெரிய அளவிலான “கொள்கை குழப்பங்கள்” குறித்த தாக்குதல்களை எதிர்கொண்டதில்லை. எனவே நாப்டா தொடர்பான ஹில்லரியின் தாக்குதலுக்கு ஒபாமாவால் சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை. ஒபாமா தன்னுடைய பிரச்சார உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
குடியரசுக் கட்சியின் மெக்கெயின் வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் உத்திகள் எப்படி இருக்கும் என்பதையும் இன்றைய பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்
– ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது
– பொருளாதாரம் உலகமயமாக்கல் பாதையில் தான் நகரும். எந்த மாற்றமும் இருக்காது
என்பன அவரது கொள்கையில் முக்கிய அம்சங்கள். இது புஷ் ஆட்சியின் தொடர்ச்சி என ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் முதலில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வேட்பாளரை முடிவு செய்தாக வேண்டும். ஒபாமா-ஹில்லரி இடையேயான போட்டி தொடர்ந்து நீடித்தால் மெக்கெயினுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது












