Category Archives: Thinnai

நாங்கோரி என்ற உறுப்பினர் – ஆபிதீன்

 • நெருங்கிய நண்பனொருவனால் திடீரென நான் படுகுழியில் தள்ளப்பட்டு, அதிலிருந்து மேலேற முயற்சிக்கும்போது என் தலையில் குட்டியவர்களைத் திட்டியவர் இந்த மாக்கான். குட்டியவர்களின் நோக்கம் உண்மையிலேயே என்னைத் திருத்துவதுதான் என்று நான் சொன்னபோது அன்பின் மிகுதியால் , ‘துப்பு கெட்டவன்’ என்று என்னையும் திட்டியவர்.
 • ‘நீ துப்புன எச்சிலை நான் முழுங்கிட்டேன். எச்சில் எச்சிலோட போச்சு. நமக்குள்ள சண்டை வாணாம்’ என்று வீரத்தோடு பின் தங்கியவனுக்குத்தானே துப்பு கெட்டவன் என்று பெயர்
 • கிளப்கள் தொலையட்டும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு வலைப்பதிவுகள் எத்தனை சுதந்திரவெளி கொண்டதாக மாறிவிட்டது. எந்தப் பெரிய பத்திரிக்கையின் தயவும் தேவையில்லாமல், தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடும் விதமாய் எவ்வளவு பேர் அற்புதமாக எழுதுகிறார்கள். இந்த அ, த, சு, வெ மற்றும் அந்த க,பெ,ர,சியின் தமிழும் பன்முகத் திறமையும் மலைக்க வைக்கிறது. காலை எழுந்ததுமே தன் கடன்களைக் கூட முடிக்காமல் கருத்து சொல்ல புறப்பட்டு விடும் வெட்டி வீரர்களைப் போலல்லாமல் விஷய ஞானத்தோடு எழுதுகிறார்கள். பிறமதத்தினரை மதிக்கும் இவர்கள் மேல் பெரும் மரியாதை வருகிறது. இவர்கள் தொடாத துறையும் இல்லை.

முழுக்கதையும் படிக்க

கோம்பை குறித்து ஜெயமோகன் என்ன சொல்கிறார்?

1. தலைப்பை அறிய, படிக்க இங்கு செல்லவும் – Thinnai

ஊர்க்காவல் என்பது ‘திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது’ என்ற முறையில் அமைந்தது

2. Thinnai: அழகிய சிங்கரின் கவிதைகள் – வெங்கட் சாமிநாதன்

தேமாங்காயும் புளிமாங்காயும் கூட எங்கே என்று யாரும் கேட்பதில்லை. யாப்பு படிச்சிருக்கியாய்யா என்று கூட யாரும் இப்போது அடித்துக் கேட்பதில்லை. பயமுறுத்துவதற்கே கேட்கப்பட்ட இது போன்ற கேள்விகளைக் கேட்பது கேட்பவருக்கே ஆபத்தாக முடியக் கூடும்.

பாட்டாளிகளின் போர் முழக்கத்திற்காக முரசு கொட்டுவதாக யாரும் சொல்வதில்லை. அவர்கள் எல்லாம் சினிமாவில் குத்தாட்டத்திற்கு பாட்டெழுதப் போய்விட்டனர். உவமைக் கவிஞரெல்லாம் ஒரு பொன்னாடை போர்த்தி மறக்கப்பட்டு விட்டனர்.

படிமங்கள் பெய்து எழுதுவதும் சிரமமும் பழசுமாகிப் போனது. ஆக, கவிதையை இப்படிப்பட்ட வெளித்தெரியும் சீருடைகள் கண்டு இனங்காண்பது சிரமமாகிப் போகவே, கவிஞர்கள் எந்தவித ஒதுக்கீட் டையும் மீறி பேட்டைக்குப் பத்துப் பேராக அமோக விளைச்சல் காணத் தொடங்கிவிட்டனர். இப்போது அதிகாரம், அரசியல் சார்பு, சினிமா, பத்திரிகை முதலாளித்துவம், குழுச் சார்பு எல்லாம் கவிதைக்கு அங்கீ காரம் தருவனவாக பரிணாமம் பெற்றுவிட்டன.

பழங்காலம் பொற்காலம் தான். புலவர் பட்டம் பெற்று வாழ்த்துரை வழங்க வெண்பா இயற்றி கவிஞரான காலமே தேவலாமாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பரிசில் வாழ்க்கை தலைமைக்கு மிக நெருங்கிய அடப்பைக் காரர்களுக்குத் தான் சாத்தியமாகியுள்ளது.

சுய எள்ளல் என்பது மிகப் பெரிய விஷயம். நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத குணம். அந்த சுய எள்ளல், உண்மையும் சுவாரஸ்யமும் ஆகும்.

Quotes – Jeyamohan on Historical Archives (Book Reader)

1. Thinnai: சில வரலாற்று நூல்கள் 1மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) :: ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]

2. Thinnai: சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் :: ஜெயமோகன் [Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]

ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை.
1. தெளிவான செறிவான நடை
2. ஏராளமான தகவல்கள்
3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம்
4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை.
5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு

அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு
1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும்
2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும்
3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி.

கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை.

பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.

கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.


3. Thinnai: சில வரலாற்று நூல்கள் – 3 மதுரை நாயக்கர் வரலாறு : (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) :: ஜெயமோகன் [பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018]

 • விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படும் பெருமன்னர். [நான் கிருஷ்ண தேவராயன் என்ற பேரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்]
 • அவர் தன் தளபதி நாகம நாயக்கனை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று ராயர் கேட்டபோது அவன் தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை அகிலன் வெற்றித்திருநகர்‘ என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]
 • இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்– இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [நா பார்த்தசாரதி ராணிமங்கம்மாள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

4. Thinnai: சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் :: ஜெயமோகன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]

  Quotable Quotes – Muthulingam

  Thinnai :: இரண்டு முத்தங்கள்பொ கருணாகர மூர்த்தி

  அ.முத்துலிங்கம் கதையில் ‘என்னுடைய சேர்ட் கொலர் சைஸும், என் வயதும் ஒன்றாயிருந்த வருடம்’ என்கிற வரியை நான் வெகுவாக இரசித்தேன். அ. முத்துலிங்கம் சொல்லும் உவமானங்கள் எப்போதும் தனித்துவமானவை.

  ஒரு முறை சொன்னார் : ‘இளமையில் யாருக்கும் காலம் புது டாய்லட் பேப்பர் சுருள் உருள்வதைப்போல மெல்ல மெல்லத்தான் உருள ஆரம்பிக்கும்…………பின் வயசாக ஆகத்தான் வேகம் பிடிக்கும்.’

  Thinnai :: முகம் கழுவாத அழகிஅ.முத்துலிங்கம்

  பொஸ்டன் நகரத்து வீதிகளை நம்ப முடியாது. வளைந்து நெளிந்து மேடும் பள்ளமுமாக இருக்கும். திடீரென்று நெடுஞ்சாலை வரும், போகும். நெடுஞ்சாலை வரிக்காசு சரியாக வைத்திருக்க வேண்டும். பாதைகள் சுழன்று சுழன்று இடப் பக்கம், வலப்பக்கம் என்று பிரிந்துபோய் எனக்கு குழப்பம் உண்டாக்கும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன்.

  அந்தப் பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துப்போக வரும் தாய்மார்களில் ஒலிவியா வித்தியாசமானவளாக இருந்தாள். எல்லோருமே இளம் தாய்மார்தான். பளவென்று இருப்பார்கள். இரவு விருந்துக்கு புறப்பட்டதுபோல ஒப்பனையுடன் அலங்காரம் செய்திருப்பார்கள். உடைகள் ஆடம்பரமானவை என்பது பார்த்தவுடனேயே தெரியும். அவர்கள் வரும் வாகனங்களும் உயர்ந்த ரகமாகவே இருக்கும். இதற்கு விதி விலக்கு நான் ஒருத்தன் மட்டுமே. எனக்கு அடுத்தபடி வருவது ஒலிவியா. அவள் முடி கலைந்து இருக்கும். முகம் காலையிலோ மாலையிலோ அதற்கிடைப்பட்ட காலத்திலோ தண்ணீர் என்ற பொருளை காணாததாக இருக்கும். விற்பனைப் பெண், வரவேற்பறைப் பெண் அல்லது உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்போல கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்துவிடும் புன்னகையுடன் அவள் இருப்பாள்.

  பொஸ்டன் நகரத்தில் எட்டு லட்சம் கார்கள் இருப்பதாக எங்கோ புள்ளிவிபரத்தில் படித்திருந்தேன். அன்று பார்த்து அத்தனை கார்களும் இருபதாவது நெடுஞ்சாலையில் நின்றன.

  இருவருமே சாதுவான குழந்தைகள். ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது விளைவு மோசமாக இருந்தது. நான் வேதியியல் மாணவனாக இருந்தபோது தண்ணீர் போலத் தெரியும் இரண்டு திரவத்தைக் கலந்தபோது குபீரென்று ஊதா நிறமாக மாறியது ஞாபகத்துக்கு வந்தது. அப்ஸரா ஒரு விளையாட்டு சாமானைத் தூக்கினால் அது அனாவுக்கு வேண்டும்; அனா எடுத்தால் அந்த நிமிடமே அப்ஸராவுக்கும் அது தேவை. சிரிக்கும்போது இருவரும் குலுங்கி சிரித்தார்கள்; அழும்போது இருவரும் சேர்ந்து அழுதார்கள்.

  Quotes: Thinnai VeSaa – Arts, Music, Dance, Performance

  தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம் :: வெங்கட் சாமிநாதன்

  • தமிழ் நாட்டில் செவ்விய கலைகளாக, சங்கீதத்திற்கும் நடனத்திற்கும் உள்ள ரசனையின் வியாபகமும் ஆதரவும், இந்தியாவில் வேறு எங்கும் எந்த செவ்விய கலைக்கும் இல்லை.
  • இன்றைய சினிமாவை மீறி, அரசியலை மீறி ராக்ஷஸ பலம் கொண்ட தொலைக்காட்சியையும் மீறி, அது தன்னைக்காத்துக் கொண்டுள்ளது சற்று நம்ப முடியாத ஆனால், சந்தோஷம் அளிக்கும் ஒன்று தான்.

  கர்னாடக சங்கீதம் ஒரு நாதோபாசனை என்று சொல்வதுண்டு. இன்று கர்னாடக சங்கீதம் உள்ள நிலையில் அதை நாதம் என்றோ உபாசனை என்றோ எவ்வளவுக்கு சொல்லமுடியும், எவ்வளவு பேரிடம் இதைக் காணமுடியும் என்பது எனக்கு சந்தேகமே.

  இவ்வளவு செல்வாக்கும் ஆதரவும் இருந்த போதிலும், இன்று அது பாடுதல் (performance) என்ற அளவிலேயே இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை மீறி நாதத்தில் நம்மையோ, பாடுபவர் தம்மையேவோ மறந்து திளைக்கச் செய்யும் ஒரு அனுபவமாக(experience) எழுச்சி பெறுவது என்பது கிடைப்பதில்லை.

  வேறு வார்த்தைகளில் சொன்னால்,

  கற்ற காரணத்தால், செய்யுள் இயற்றத்தெரிகிறது, ஆனால் கவிதை பிறப்பதில்லை என்பது போலத்தான்.

  இத்தகைய மீறலை, நிகழ்ச்சி அனுபவமாக எழுச்சி பெறுவதை நான் சில சமயங்களில், ஓ.எஸ் அருணிடம், சஞ்சை சுப்பிரமணியனிடம் கண்டிருக்கிறேன். அனேக மற்ற சமயங்களில், ‘ கச்சேரி எவ்வளவு நன்னா அமைஞ்சுட்டது பாத்தியா? என்பது போலத்தான் ஒரு உணர்வு.

  ஒரு கிஷோரி அமன்கரோ, உஸ்தாத் அமீர் கானோ, குமார் கந்தர்வாவோ பாடும்போது ஏற்படும் அனுபவ மெய்சிலிர்ப்பு வெகு அரிதாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் இன்று கிடைக்கிறது. ஸ்வரங்கள் ராகமாவது போல, ராகம் ஒரு நாத உலகமாக, ஒரு தவமாக, தன்னை மறந்த லயிப்பாக, சஞ்சாரமாக அனுபவ மாற்றம் பெறுவதில்லை. சங்கீதம் இரண்டு மணிக்கான நிகழ்ச்சி நிரலாக, மாறியுள்ளது.

  பாடகர்கள் தம் குரலைப் பற்றிக் கவலைப் படுவது என்பது முன்னரும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. தனக்காகப் பாடுவது, மற்றோர் கேட்பது என்பது இன்றைய நடைமுறையில் இல்லை.

  குமார் கந்தர்வாவின் மகன், ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு காளி கோயிலில் தங்கி பூஜை செய்வதும், கோயிலைச் சுத்தப்படுத்துமாக நாட்களைக் கழிப்பவர், பெயர் மறந்து விட்டது, எப்போதாவது யாராவது அழைத்தால் படுவது என்று வாழ்க்கை மாறியுள்ளது அவருக்கு. அப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த மனம் வேண்டும்.

  யாரும் தன் கவனத்தைக் கெடுத்தால், மனம் சரியில்லை என்றால், மேடையை விட்டு எழுந்து விடும் கிஷோரி அமன்கரின் சங்கீத அர்ப்பணிப்பு சங்கீதத்திற்குத் தேவை.

  சடங்காக உள்ள ஒன்று பூஜையானால் நல்லது. குறைந்தது அது அர்ப்பணிப்பாக, தன்னை மறத்தலாக அல்லது ஒரு பங்கு பெறும் அனுபவமாகவாவது ஆவது நல்லது. அப்போது தான் அது கலையாகும். இல்லையெனில் பயின்ற தொழில் தான்.

  This Week’s Jeyamohan quota

  அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ :: ஜெயமோகன்

  • கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது.
  • புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே அந்தரங்கம் என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.
  • ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, தன் விதி மீதான வன்மம். ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.
  • ஒருவரின் சிறு மகிழ்ச்சி கூட பிறரிடமிருந்து பறிக்கவேண்டிய ஒன்றாக அமையுமளவுக்கு வறுமையும் போட்டியும் நிலவும் உலகம் அது. அத்துடன் மீட்பு கண்ணுக்குத்தெரியாத கொடிய வறுமை மூலம் உருவான முரட்டுத்தனமும் குரூரமும் அவர்களை ஆள்கிறது.
  • துயரமே வாழ்க்கையாக உள்ள அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் பிறருக்கு முடிந்தவரை தீங்கிழைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட கொடிய வாழ்க்கையை மேலும் மேலும் துயரம் மிக்கதாக ஆக்கிக் கொள்கிறார்கள். அந்தச் சூழலின் ஒவ்வொருவருமே அதே நரகத்தில்தான் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெருவில் சண்டை நடக்கிறது. உள்ளங்கள் குத்தி கிழிக்கப்படுகின்றன. எளியமுறையிலான வாழ்க்கையைக்கூட பக்கத்துவீட்டாரை வதைத்துத்தான் வாழவேண்டியுள்ளது, அல்லது பக்கத்து வீட்டாரை அஞ்சி வாழவேண்டியுள்ளது.
  • கொஞ்சம் கூலி அதிகம் கிடைப்பதற்காக பக்கத்து தெருவுடன் வேலைக்குப் போனால் சிக்கல் உருவாகிறது. பக்கத்து தெருவினர் இந்ததெருவுக்கு ஜென்ம எதிரிகளாக இருக்கின்றனர்.
  • ஒரு பழங்குடிச் சமூகத்தில் தனிமனித சிந்தனை, தனி வாழ்க்கை என்பதற்கே இடமில்லை. பழங்குடி சமூகமென்பது ஓர் உடல் போல ஒற்றைஅமைப்பு. அதன் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் இறுக்கமாகப் பிணைந்துள்ளது. ஆகவே ஒருவரை அவர் சமூகமே ஒவ்வொரு கணமும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. பழங்குடிச் சமூகங்களில் சமூகக் கட்டுப்பாடுகள், சடங்குமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் குடித்தலைவனின் ஆணைகள் கிட்டத்தட்ட இயற்கையின் மாறாவிதிகள் போன்றவை. ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாகவே வாழும்வரை அது இயல்பாக இருக்கிறது. ஒருவர் சிறிதளவு மீற ஆரம்பித்தால்கூட மொத்தச் சமூகத்தின் அழுத்தமும் மாபெரும் வன்முறையாக அவர் மீது கவிகிறது
  • இருபதாம் நூற்றாண்டில் பழங்குடிச் சமூகங்களில் கல்வி ,மதமாற்றம், இடம்பெயர்தல் ஆகியவை நிகழ ஆரம்பித்ததுமே பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் வன்மூறை மிக்கதாக ஆகிவிட்டன. ஊர்விலக்கு, சமூக விலக்கு முதல் ஊர்க்கொலைகள் வரை நடக்க ஆரம்பித்தன. நம் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே பழங்குடிவாழ்க்கையே தொடர்கிறது என்பதைக் காணலாம்.
  • பழங்குடிவாழ்க்கையின் இரு கூறுகள், இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்பிரிவினைகள்.

  Tamil Quotes to chew

  ஜெயமோகன் (நித்ய சைதன்ய யதி நினைவு)

  உண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.

  காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலை கூறுபோடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள் வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக்கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்கவேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்.

  ஜெயமோகன் (பேராசிரியர் ஜேசுதாசன் நினைவு)

  சான்றோர் (திறனாய்வாளர்கள்) நான்கு அம்சங்களைக் கொண்டவராக இருப்பார்.

  1. கல்வி
  2. அழகியல் உணர்வு
  3. அறச்சார்பு
  4. நயத்தக்க நாகரீகம்.

  பாவண்ணன் (உயிர்க்கோடுகள் . கே.எம்.ஆதிமூலம், கி.ராஜநாராயணன். தொகுப்பு: புதுவை இளவேனில். அகரம் பதிப்பகம்)

  மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத அரசு நிர்வாகம் அந்தச் சோர்வின் பின்னணியில் உள்ளது. மக்களுக்காக உழைப்பதற்காக உருவாகும் (அரசு) நிர்வாகம் தன் வளர்ச்சிப்போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தெரியாத அகங்காரம் நிறைந்த உறுப்பாக மாறிவிடுகிறது. அது வழங்கும் கசப்புகளை விழுங்கும் (விவசாயியின்) முகத்தில் சோர்வைத் தவிர வேறு எதைப் பார்க்கமுடியும்?