Category Archives: Sources

How to find ‘News’ – Satrumun Special

சற்றுமுன்‘ தளத்திற்காக செய்தி சேகரிப்பில் ஈடுபாடு. அதன் பயனாக கிடைத்த துப்புகள் (டிப்ஸ்):

1. என்னுடைய நேரம் (அமெரிக்க கிழக்குக் கடற்கரை) மதியம் மூன்றரை மணியளவில் தினமணி நாளிதழ் வெளியாகும். தலைப்புகள் அனைத்தையும் மேய்ந்து விடுங்கள். பிடித்த, பகிரத்தக்க, கவர்ச்சியான (!?) செய்திகளை புது tabகளில் திறந்து வைத்துக் கொண்டே போகவும்.

2. சுரதா ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி மூலம், விருப்பமான செய்திகளை மாற்றி, வலைப்பதிவில் பகிரவும்.

3. அலுவல் வேலைகளை முடித்து வீட்டுக்குக் கிளம்பி விடவும். காரில் சென்றால் என்.பி.ஆர். கேட்கவும். கேட்டதை வீட்டுக்கு சென்று, சிரம பரிகாரம் செய்தவுடன், கேட்டதை செய்தியாகக் கோர்க்கவும்.

4. காரில் செல்லாமல், இருவுள் (ட்ரெயின்) பாதைப் பயணம் என்றால், அன்றைய செய்தித்தாளைப் புரட்டவும். செய்தி விமர்சனங்களைத் தலையங்களைப் படித்தால் தங்களின் பிரத்தியேக பதிவுக்கு பிரயோசனம். நான்கைந்து வரித் துணுக்கு செய்திகளையும், தலைப்புகளை மட்டும் படித்தால் சற்றுமுன்னுக்கு பிரயோசனம்.

5. தூங்கப் போவதற்கு முன் ‘சன் டிவி’ செய்திகள் பார்க்கவும்.

6. துயில் கலைந்த பின் அமெரிக்க செய்திகளைப் பார்க்கவும். இந்தியக் கன்னல் (சேனல்) ஹெட்லைன்ஸ் டுடேயும் அமெரிக்காவில் சல்லிசாகக் கிடைக்கிறது. நேரடி ஒளிபரப்புல் ஆகிறது.

7. காலைக் குளம்பியுடன் மாலைமலர் செல்லவும். இந்தியாவின் மாலை; அமெரிக்காவின் காலை. பரபரப்பான செய்திகளின் தாயகம் மாலை நாளிதழ்கள். ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி, காபி/பேஸ்ட் செய்யவேண்டும்.

8. அலுவல் நுழைந்து, அன்றாட மண்டகப்படி நிறைந்தவுடன், கூகிள் செய்திகளை நாடவும். கூகிள் செய்திகளை நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு வளைத்து நெளிக்க முடியும். எவ்வாறு என்பதை அறிய இங்கு செல்லவும்.

9. அடுத்ததாக மின்மடலில் ‘சற்றுமுன்’ நிகழ்ந்தவற்றை அறியும் வசதியை ஏற்படுத்தவும். அமெரிக்காவுக்கு ‘சி.என்.என்.‘; ஐரோப்பாவுக்கு பி.பி.சி.. ப்ரேகிங் நியூஸ் கொடுக்க இது அவசியம்.

10. கொஞ்சம் ஆறின கஞ்சியைப் பொறுமையாகத் தெரிந்து கொள்ள, மின்னஞ்சலில் செய்தித் தொகுப்புகளைப் பெற்றுக் கொள்ளவும். பிபிசி, கார்டியன், இன்டெர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் போன்றவை உலக நடப்புகளுக்கும்; என்.டி.டிவி இந்தியாவிற்கும்; நியு யார்க் டைம்ஸ் அமெரிக்காவிற்கும் உபயோகமாகும்.

11. அன்றைய தேதியில் அதிகம் பார்வையிடப்பட்டவற்றை அறிந்து கொள்ளவும். பிபிசி, நியு யார்க் டைம்ஸ், கார்டியன் முக்கியமானவை.

12. தமிழில் படிப்பவர்களுக்கு உள்ளூர் செய்திகள்தான் மதிப்பு. எனவே, தினத்தந்தி (மாலை மலரின் காலைப் பதிப்பு), தட்ஸ்தமிழ், தினமலர், தினகரன், தினபூமி ஆகிய தினசரிகளையும் பார்த்து விடவும்.

13. எல்லா ஊர் செய்திகளையும், அனைத்து செய்தித்தாளிலும் பார்த்தால் கடுப்பாகலாம். எனவே, ‘எங்க ஏரியா… நான் மாமூலாப் பார்த்துக்கறேன்’ என்று அமெரிக்கா, பிரான்சு என்று தொகுதி வாரியாகவோ; தினமணி, பிபிசி என்று கட்சி வாரியாகவோப் பிரித்து, ஒவ்வொரு வட்ட செயலாளரை ஒதுக்கவும்.

14. மிள்காய், இட்லி-வடை, பத்ரி போன்ற செய்திப்பதிவுகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வரவும்.

15. தமிழ் சிஃபி, வெப்துனியா, பரபரப்பு போன்ற இன்ன பிறரையும் விட்டு விடாதீர்கள்.

16. க்ளீவேஜ் காட்டாத சினிமா ஹீரோயின், சன் டிவி சீரியலில் தஞ்சம் புகுவார் என்னும் பழமொழி போல் புகைப்படங்கள் இல்லாத செய்தி நறுக்குகள், மக்கள் மனதில் தஞ்சம் புகா. நிழற்படங்களுக்கு என்றே பிபிசி போல் பலரும் சிறப்பு பக்கம் கொடுக்கிறார்கள். கவனிக்கவும்.

17. சரி… (ஆங்கில/புகழ்பெற்ற) வலைப்பதிவுகளில் எங்கு செய்தி கிடைக்கிறது? தனிப் பதிவுதான் இட வேண்டும்.

நேரம் கிடைக்கும்போது விட்டதைத் தொடரலாம்.

எனக்கு மறந்து போனதை, உங்களுக்குப் பயனுள்ளதாக படுவதை, நீங்கள் அனுதினமும் தவறவிடாமல் பின்பற்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

métier or Tamil blogging guide for dummies இன் தொடர்ச்சியாக இதை வைத்துக் கொள்ளலாம்.