Category Archives: PD

Games Indians Play – Why we are the way we are: V Raghunathan

புத்தகத்தில் பெரிதாக சரக்கு இல்லை. மேல் அடுக்கு மக்களாக விழைபவர்களுக்கு புலம்பல் தீனி கிடைக்கலாம்.

புரட்டியதில் கிடைத்த முத்துகள்:

What’s wrong with America is the way in which we are being forced more and more to equate criticism as something counter to democracy, when, in fact, it’s the core of it.
– Sean Penn

1. கைதிகளின் முட்டாப்பாடு: ‘ஜெமினி’ கதைதான். விக்ரமிடமும் கலாபவன் மணியிடமும் காவல்துறை டீல் போடும். இங்கு அப்படியே உல்டா. இரு கைதிகளை வெவ்வேறு செல்களில் பூட்டி வைக்கிறார்கள். முதலாமவரிடம் ‘இன்னொருத்தரைப் போட்டுக் கொடு; உன்னை ரிலீஸ் செஞ்சுடறேன்’ என்கிறார்கள். அதை அப்படியே இன்னொருத்தரிடம் ‘அவனைப் பற்றி உளவு சொல்லிவிடு; உனக்கு விடுதலை!’ என்பார்கள்.

இருவருமே கிலியில் எலியாகாமல் இருந்தால், இரண்டே ஆண்டுகளில் விடுதலை ஆகலாம். ‘தனக்கு விடுதலை கிடைக்கலாம்’ என்று ஒருவரைப் பற்றி இன்னொருத்தர் உளறிவிடுவதால், இரண்டு பேரும் குற்றஞ்சாட்டப்பட்டவரில் இருந்து குற்றவாளி ஆகி தண்டனை பெறுகிறார்கள்.

சுருக்கமாக சுயநலம்.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

என்று மருதகாசி எழுதி வைத்ததுதான்.

படித்தவுடன் நினைத்தது: ‘அரசியல்வாதிகளின் சங்கடம்’ என்று எதுவும் கிடையாது. தேமுதிக விட்டு திமுக வருபவரோ, ஆளுங்கட்சி விட்டு எதிர் கட்சி தாவுபவரோ, செஞ்சி ராமச்சந்திரனோ! எவருமே முந்தைய சுற்றம் காட்டிக் கொடுக்கும் என்று கவலை கொள்வதில்லை. முன்னாள் தோழர்களும் வசவு பரிமாறுகிறார்களே தவிர, வசதிகளை போட்டுக் கொடுப்பதில்லை.

2. அந்த விவசாயிக்கு வருடா வருடம் விருது கிடைத்தது. சுற்றுப்பட்ட பதினெட்டுப்பட்டிக்கு மட்டுமல்ல, முதலமைச்சரே வியக்குமளவு முப்போகம் விளைச்சல். வேறு எவரும் காணாத அறுவடை. ‘மெயினே ப்யார் கியா’ போட்டி வைத்தால் பாக்யஸ்ரீ முதல் தமிழ் ரீமேக் த்ரிஷா வரை தள்ளிக் கொண்டு போகுமளவு மூட்டை மூட்டையாக கதிர்கள்.

அவரை சுற்றியிருக்கும் எல்லாருக்கும் அவருடைய உயர் தர நெல்லை வருடா வருடம் விநியோகித்து வேறு வருகிறார். அப்படியிருந்தும் அவர்தான் ராஜா.

அவருக்கும் மட்டும் எப்படி? விசாரித்தார்கள்.

“காற்றில் எல்லாத் திசைகளிலும் நெல்மணிகள் பறக்கும். அப்படியிருக்க, பக்கத்து நிலக்கிழார்கள் தரமற்ற நெல்லைப் போட்டு வைத்தால், எனக்கும் சாவிதான் மிஞ்சும். அங்கேயும் என்னுடைய நல்ல முத்துக்கள் விதைக்க, அவை எங்கேயும் பரவி கலக்க, எனக்கு பெரும் நன்மை உண்டாகிறது”.

படித்தவுடன் நினைத்தது: இந்தியாவில்தான் இப்படி சேரன் சென்டிமென்ட் எல்லாம் எடுபடும். அமெரிக்காவில் இந்தத் திட்டத்துக்கு காப்புரிமை வாங்கி ‘மொன்சான்டா மொட்டை சான்டா பயிரிடும் முறை’ என்று காப்புரிமை வாங்கி, அதை சந்தாவுக்கு இந்தியாவில் விறபார்கள். ஒரு இந்தியர் மட்டும் அதை வாங்கி, திருட்டு விசிடி செய்து உலகெங்கும் தரவிறக்க வலையகம் துவக்கி விடுவார்.

உருப்படியான விமர்சனம்: Book Review: Games Indians Play: Nice idea, shame about the execution « La Vie Quotidienne

மேற்கத்திய பார்வையில்: A Hyderabadass: The Games Indians Play