அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.
ஏன்?
- ஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.
- ஜான் மெகயினை மிகக் கடுமையாக தாக்கினார் பைடன்.
- அவ்வாறே பராக் ஒபாமாவை எள்ளலுடன் விமர்சித்தார் பேலின்.
- ‘தான் உள்கை அல்ல!’ → தலைநகருக்கு அப்பால் தன்னுடைய பேட்டை என்பதால் அனைத்தையும் புரட்டிப் போடுவேன் என்றார் பேலின்.
ஸ்டைலு:
- பேலின் குத்திக் கொண்டிருந்த அமெரிக்க கொடி பின் பளபளாவென்று கண்ணைப் பறித்தது – நாட்டுப்பற்று மிக்கவர்.
- ‘என் வழி தனி வழி’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குத் தெரிந்த விடைகளை சொன்னார் பேலின்.
- ‘மில்லியன், பில்லியன்’ என்று விஜய்காந்த் படம் போல் பைடன் பட்டியலிட்டார்.
- தமிழ்க் கவியரங்குகளில் எல்லாவற்றையும் இரண்டாம் தடவை ரிப்பீட்டேய் என்று முழங்குவார்கள். பைடனும் தமிழகம் வந்திருப்பார் போல… பேசியதை எல்லாம் இரண்டு தடவை மறுமொழிந்தார்.
விஷயம்
- ‘புஷ் ராஜாங்கம் மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறது’ என்பதை வெளிப்படையாக பலமுறை ஒப்புக்கொண்டார் அவரின் கட்சியை சேர்ந்த பேலின்.
- ‘என்னுடைய ஜனாதிபதியுடன் வேறுபடும் இடங்களைத் தயங்காமல் வெளிப்படையாக சொல்வேன்’ என்று முழங்கினார் பைடன்.
அப்படியானால்… இறுதியாக?
- ‘அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை’ என்று பாரா சொல்வது போல் பைடனும் சொல்லி ‘ஆனால், அவரவர்களின் முடுவெடுக்கும் திறனை ஆராய்வது சாத்தியமே’ என்றது நெத்தியடி.
- ‘புச்சா எதுனாச்சும் சொல்லுபா! இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து மாரடித்தால், உனக்கு நாங்க புதுசுன்னு புரியவைப்பதற்குள் தாவு தீருது’ என்பது பேலின் பதிலடி.
இரண்டணா கருத்து
- பேலின் தம் கட்டி இவ்வளவு பெரிய அரங்கைக் கண்டு மிரளாமல், பைடனின் அதிரடி வினாக்களுக்கு மறைந்தோடி, புஷ்ஷையும் தன்னுடைய கட்சியையும் காவு கொடுக்காமல் → சிரித்து சிரித்து பல கோடி அமெரிக்கர்களை சிறையிலடைத்தார்.
- இடுப்புக்குக் கீழே அடிக்கவும் தயங்கமாட்டேன் என்று → ஸ்பெயின் விஷயத்தில் மகயின் நாக்குழறியதையும், பேலினை டிக் சேனியோடு ஒப்பிட்டும், ஒபாமாவிற்கான புள்ளிவிவரங்களை பதினெட்டு வயசு பாலகரும் புரியுமாறு ஆணித்தரமாக ரிப்பீட்டியும் ஜோ பைடன் தன்னுடைய அனுபவத்தை எடுத்துரைத்தார்.











