Monthly Archives: ஒக்ரோபர் 2024

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றம்

நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா?
அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.

சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது.
அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!

ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன.
எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.

அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு.
’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம்.
எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?

ஜாலிலோ ஜிம்கானா!
டோலிலோ கும்கானா!!

பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது.
பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

Manimegalai | 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

நேற்றோடு நவராத்திரி + தசரா முடிவு.

இன்றோடு நோபல் பரிசு அறிவிப்பு முடிவு.

முதலில் இதைக் கொண்டாட வேண்டும் என்று அருணாச்சலம் ரமணன் முன்மொழிந்தார்.

பானுமதி, காரைக்குடி சுபா, ஜெகதீஷ், நட்பாஸ் எல்லோரும் அதை முன்னெடுத்தனர்.

மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம், சமாதானம், பொருளியல் – ஒவ்வொரு நாளும் சொல்வனத்தில் சுடச்சுட விரிவான, விவரமான கட்டுரை.

இன்று பணக்காரர்கள் ஏன் மேலும் பெருஞ்செல்வந்தர்களாக ஆகிறார்கள் என்பதை எளிமையாகச் சொன்னவர்களுக்கான விருது குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

பரிசு பெற்றவர்களின் கருத்தோடு ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு நாடு உள்கட்டமைப்பைக் திட்டமிட்டு, கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ​​வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சந்தை விலையைப் பயன்படுத்தினால், அது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது நோபல் பெற்றவர்கள் முன்மொழியப்பட்டதை விட தெள்ளத் தெளிவைக் கொண்டுள்ளது, காலப்போக்கில் என்ன நடந்தது என்பதற்கான உண்மைகளுடன் பொருத்தமாக இருக்கிறது. – பில் கேட்ஸ் பார்வை

ந. பானுமதி பார்வை:

வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தற்குமான தீவிரமான கவிதை உரைநடை

”பொற்குகை ரகசியம்” எழுதிய ஜெகதீஷ் குமார் நோபல் பரிசு பெற்ற ஹான் காங் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார்.

இரண்டே மணி நேரம்தான் கெடு. அதற்குள் அப்படி ஒரு அடர்த்தி; அதே சமயம் எளிமை; எந்தவித சமரசங்களும் அவசரமும் இல்லாத அற்புதமான விருதுக் குறிப்பு!

இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருப்பது தமிழுக்குக் கிடைத்த கொடை. புனைவிலும் பின்னுகிறார்கள். விமர்சனங்களிலும் மிளிர்கிறார்கள். மொழியாக்கங்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல.

இலக்கியம் இனி நிறைய வளரும். வியுற்பன்னர்கள் நிறைய உருவாகும் தமிழ்.

மகிழ்ச்சி!

வேட்டையன் வ.கே.கே.

1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்

2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!

3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.

4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.

5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)

6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.

7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.

8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.

9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.

10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.

சொல்வனத்தில் நோபல் கட்டுரைகள்

யூடியூப் விழியங்களோடு பேசும் இயந்திர தற்கற்றல் நுட்பம் தெரியும்.
’புள்ளியியல் இயற்பியல்’ என்னும் துறை இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இயந்திர கற்றலில் இயற்பியலும் சேர்ந்து நரம்பியல் பின்னலமைப்புகளும் பொறி பறந்து நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

இதை எல்லாம் இன்றைய #solvanam கட்டுரையில் அறிமுகம் செய்கிறார் அருணாச்சலம் ரமணன்.

இன்று செயற்கை நுண்ணறிவு காலம்.
விருதுக்காரர்கள் இலக்கியத்திற்கும் இயற்றறிவு (gen AI)க்கு கொடுக்கும் காலம் எந்த ஆண்டு என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். (என் கணிப்பு – 2030)

அதற்கு முன் சொல்வனத்தில் கட்டுரையை வாசித்து விடுங்கள்.

குட்டி ஆர்.என்.ஏ.

கிரி அறிவியல் புனைவொன்றை எழுதுகிறார்.

மருத்துவத்திற்கான நோபல்பரிசு இன்று அறிவிறிக்கிறார்கள்.

இரண்டையும் தெரிந்து கொள்ள சொல்வனம் வர வேண்டுகிறோம்.

நன்றி பேராசிரியர் ரமணன்.

புரதத்தின் எம்ஆர்என்ஏவை மாற்றியமைப்பதன் மூலம் மற்ற புரதங்களை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ (மைஆர்என்ஏ) ஐ அவர்கள் கண்டுபிடித்தனர், புரதத்தின் படியெடுத்தல் அல்ல.

இதற்கு முன்னர், மரபணுக்கள் (புரதங்கள்) பெரும்பாலும் டிஎன்ஏவின் வரிசைமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டது, அவை படியெடுத்தல் காரணிகளைக் கட்டுப்படுத்தின.

புரத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் படியெடுத்தல் காரணிகளைக் காட்டிலும் மரபணு வெளிப்பாட்டின் செயல்பாட்டில் பிற்பகுதியில் இந்த ஒழுங்குமுறை ஏற்படுவதை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கவனித்தனர்.

விவரங்களை அறிய:

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024 – சொல்வனம் | இதழ் 327 | 22 செப் 2024 (solvanam.com)