நாலைந்து பேர் கூடியிருக்கும் சந்திப்புகளில் காரசாரமாக விவாதம் நடக்கும். அரசியலோ… சினிமாவோ… விளையாட்டோ… கலையோ… வேலை நிமித்தமோ… இறுதியாக “நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று ஒருவரைப் பார்த்து பலரும் கேட்போம். அவரின் அபிப்ராயம் மற்றவர்களின் சிந்தனைகளை விட முக்கியமானதாக நினைக்கவைப்பது எது?
அதைத்தான் இந்தப் புத்தகத்தில் ஆராய்கிறார்கள்.
மரியாதை ராமன் கதைகளைப் படித்திருப்போம். அதே போல் சாலமன் அரசரின் முன் வந்த வழக்கை கவனிப்போம்.
சாலமன் ராஜாவின் முன் இரு அன்னையர்கள் நியாயம் கேட்டு வருகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் குழந்தைப் பெற்றிருக்கிறார்கள். பிறந்த குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது. பிழைத்த குழந்தையை, ‘தன்னுடையது’ என்று இருவருமே கோருகிறார்கள். மரபணுச் சோதனை இல்லாத காலகட்டம். அரசன எப்படி தீர்ப்பு வழங்குவார்? யாருடைய குழந்தை என்று எங்ஙனம் கண்டுபிடிப்பார்? ’குழந்தையை இரண்டாக வகுங்கள். தலைப் பாதியை ஒருவரிடமும், இடுப்பிற்கு கீழ் இன்னொருவரிடமும் கொடுங்கள்’ எனத் தீர்ப்பளிக்கிறார். இதைக் கேட்ட ஒருத்தி, இந்தத் தீர்ப்பில் தனக்கு முழு சம்மதம் என்கிறார். இன்னொரு தாயாரோ கலங்கிப் போய், ‘குழந்தை எனக்கு வேண்டாம். முழுவதுமாக எங்கேயோ நல்லபடியாக வளர்ந்தாலே போதும்!’ என நடுநடுங்குகிறார்.
நீதிபதி சாலமன், எவரிடம் குழந்தையை ஒப்படைத்தார் என்பது இப்போது புரிந்திருக்கும்.
அங்கிருந்து காந்திக்கு வரலாம். சமீபத்திய நெல்சன் மண்டேலாவை எடுத்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கானோர் ரத்தம் சிந்தாமல், களபலிகளில் அப்பாவி உயிர்கள் பறிபோகாமல், வெற்றிகளை எப்படிப் பெற்றார்கள்?
தங்களின் ‘விவேக’த்தினால்
விவேகம் என்பதை அகரமுதலியில் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்:
1. அறிவு: அறிவியல் பூர்வமாகவோ தத்துவார்த்தமாகவோ கற்றறிந்த கலை
2. ஞானம்: உள்ளார்ந்து ஆராய்ந்து அறிவது; தொடர்புகளையும் சிக்கல்களையும் புரிந்து கொண்ட ஒருவர் தன் தனிப்பட்ட இயல்பால் உண்மை அறியும் திறன்
3. மதிநுட்பம்: குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி தீர்வைத் தெளிவாக உணர்த்தும் நுட்பம்
புத்திசாலி என்றால் மிக அதிகமாக மதிப்பெண் பெறுபவரல்ல. வேகவேகமாக புதிர்களை விடுவிப்பவர் அல்ல. விக்கிப்பிடியாவை விட நிறைய விஷயங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் அல்ல. அந்த மாதிரி அறிவாளி எனப்படுபவர், ஊழலை எவ்வாறு திறன்பட செய்வது என்பதை அரசியல்வாதிகளுக்கும் பதவியாளர்களுக்கும் கற்றுக் கொடுத்து மோசடியில் கூட ஈடுபடுவார். மனிதர்களுக்கு நன்மை பயப்பது எது என்பதை கருத்தில் கொள்ளாமல் தன் மதியை அவமதிப்பான விஷயங்களில் வெளிக்காட்டுவார். பேராசையும் தொலைநோக்கு பார்வையின்மையும் கர்வமும் தலைக்கேறி பயனற்ற வாழ்வில் திளைக்கலாம். அது புத்திசாலித்தனமல்ல.
அறப்பார்வை என்பதை விட்டுவிடுவோம். எதற்காக உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறோம் என்னும் அர்த்தமும் எந்த லட்சியங்களுக்காகப் போராட வேண்டும் என்னும் மதியூகமும் எவ்வகையில் அந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்னும் சரியான பாதையும் தெரிந்து கொள்ளாதவர்களை எப்படி அறிவாளி என்று கருத முடியும்!
அறிவாற்றலுக்கும் விவேகத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. அறிவாற்றல் நிறைந்தவர் மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களின் அபிலாஷகளை அறிந்தவராக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. பொதுசனங்களுக்கு எது உத்வேகம் தரும், எவ்வாறு நம்பிக்கை ஊட்டலாம், எந்த சமாச்சாரங்கள் அவர்களின் நிம்மதியைக் குலைக்கிறது, எப்படி அவர்களை துடிப்பாக இயங்க வைக்கலாம் என்று புரிந்துகொள்வதே விவேகம்.
நீங்கள் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக இருக்கலாம்; உங்களின் ஊழியர்களின் நாடித்துடிப்பையும் பயனாளர்களின் பற்றுகளையும் அறிந்திருக்க வேண்டும். தேர்தலில் வாக்குகோரும் அரசியல்வாதியாக இருக்கலாம்; வாக்காளர்களின் விருப்பங்களை உணர்ந்திருக்க வேண்டும். சீரிய கலைப் படைப்புகளை உருவாக்குபவராக இருக்கலாம்; காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக நிலைத்திருக்கும் கலாரசிகர்களை ஒன்றிணையவைக்கும் பற்றுதலை தெரிந்திருக்க வேண்டும். சராசரி குடும்பத் தலைவியாக இருக்கலாம்; குழந்தைகளின் நாடித்துடிப்பையும் எங்கே அழுத்தினால் எவ்வாறு விளைவு வரும் என்பதையும் புரிந்திருப்பவராக இருக்க வேண்டும். இவ்வளவு ஏன்… என்னைப் போல் ஒரு மூலையில் கணினி பாஷையில் பொட்டி தட்டி நிரலி உருவாக்குபவராகவே இருக்க்கட்டும்; அந்த செயலி எவ்வாறு வெகுசனத்தை ஈர்க்கும் என்பதையும் எவ்விதம் பயனடும் என்பதையும் சிந்தையில் நிறைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு மக்களை எப்படி புரிந்துகொள்வது என்பதை இந்தப் புத்தகம் ஆய்வு அடிப்படையில் உண்டான முடிவுகளைக் கொண்டு சமூக மனவியல் துறை துணை கொண்டு விளக்குகிறது.
புத்திசாலி என்பவர் ‘எவ்வாறு’ ஒரு செயலை செய்வது என்பதை அறிந்திருப்பார். ’எந்தச் செயலை செய்யவேண்டும் என்பதைக் கூட அறிந்திருப்பார். ஆனால், விவேகமுள்ளவர், ‘ஏன்’ அந்தச் செயலை செய்யவேண்டும் என்பதை உணர்த்தக் கூடியவராக இருப்பார். ஏன் அந்தச் செயல் செய்யப்படாமல் இருக்கிறது என்பதையும், ஏன் நம்முடைய குண்டுச்சட்டியில் மட்டுமே குதிரையோட்ட விரும்புகிறோம் என்பதையும் அரிஸ்டாடில் போன்ற அறிஞர்களே வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் நம்முடைய முடிவுகளின் போதாமையைப் புரிந்து கொள்ளவும் சம்மட்டியால் அடிக்கவைத்து நினைவில் நிறுத்துகிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் குறிக்கோள்கள் என்ன?
அ) எது மக்களை மனமகிழ்ச்சிக்கான பாதையில் இட்டுச் செல்கிறது? எவ்வாறு அவர்களின் சிந்தையை அலைக்கழிப்பில் இருந்து மீட்கலாம்?
ஆ) மனிதர்களுக்கிடையேயான சச்சரவுகளை எது நீட்டிக்கிறது?
இ) ஆபத்தில் இருக்கும் குடியாளர்களை எவ்வாறு படிப்பறிவு பெற வைத்து சமுகச் சிந்தனையை மேம்படுத்துவது?
ஈ) வளர்ந்த நாடுகளின் தொலைநோக்கு கவலையான உலகவெம்மையாக்கம் போன்ற ஆபத்துகளை எல்லோரும் உணர்வைப்பது எப்படி?
இவ்வாறு எல்லாம் சிந்திப்பது எப்படி?
தோற்றமயக்கங்களில் சிக்காமல் பார்ப்பது என்பதை குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். மேனாமினுக்கல்களில் மயங்காமல், அதன் மேற்சென்று தீர்வுகளை யோசிக்க வேண்டும். அதற்கு விவேகத்தின் ஐந்து தூண்கள் உதவும்:
1. பாரபட்சமின்மை என்னும் மாயை: என்னை எவ்வாறு பிறர் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ, அவ்வாறுதான் நான் பிறரை நடத்துகிறேன் என்பது பொதுபுத்தி. பாரபட்சமற்ற மதீப்பீடு, நேர்மையான தீர்ப்பு என்பதில் உள்ள அனர்த்தங்களை இந்தப் பகுதியில் ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள்.
முதல் அத்தியாயத்தில் இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்:
உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.
இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும் இந்தப் பத்தி பொருந்துகிறதா? அப்படியானால், அவசியம் இந்த நூலை நீங்கள் வாசிக்கவேண்டும்.
2. சிறு துரும்பும் பல் குத்த உதவும்: சந்தர்ப்பவசத்தால் அதிசயிக்கவைக்கும் வகையில் செல்வாக்கை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதை இங்கே விவரிக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு:
பல மேற்கத்திய நாடுகளில் உடல் உறுப்புகளை தானம் செய்பவர் என்பதை உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தில் குறிப்பிடலாம். உடல் உறுப்புகளை தானம் செய்பவர் என்று டென்மார்க்கில் வெறும் நான்கே நான்கு சதவிகிதத்தினர் மட்டுமே இருக்கிறார்கள். அதன் அருகிலேயே உள்ள ஸ்வீடனிலோ கிட்டத்தட்ட 95% பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஏன் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு? அண்டை நாடுகளுக்கு நடுவே இவ்வளவு பெரிய வித்தியாசம்?
டென்மார்க் நாட்டு ஓட்டுநர் உரிமத்தின் பின்புறத்தில் ’உடல் உறுப்பு தானம் செய்வேன்’ என்று உரிமக்காரரின் கையெழுத்து வேண்டும். ஸ்வீடனிலோ, உடல் உறுப்பை தானம் செய்ய விருப்பமில்லை என்றால் மட்டுமே பின்பக்கத்தில் ‘நான் தானம் செய்யமாட்டேன்’ என்று உரிமக்காரர் கையெழுத்து இட வேண்டும்.
காலையில் சுப்ரபாதம் போட்டால் விழித்துக்கொள்வது மாதிரி, எல்லோருக்கும் சிற்சில உந்துதல்கள் தேவையாக இருக்கின்றன. நல்ல விஷயங்களில் நாட்டம் ஏற்பட வேண்டுமானால், இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் தற்செயலான தேர்வுகளை உலகத்தின் நன்மைக்கேற்ப அமைத்துக் கொடுத்தல் அவசியமாகிறது. சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை தானியங்கியாக சேமிப்புக் கணக்கில் மாற்றிவைப்பது, கழிவுகளை மக்கும் குப்பையாக மாற்றத் தூண்டுவது என எல்லாவற்றிலும் இதே போன்ற பாதைகளைப் போட்டு வைக்கலாம்.
3. பேரில் என்ன இருக்கு? : நம்முடைய திட்டங்களுக்கு என்ன பெயர் கொடுக்கிறோமோ, அந்த நாமகரணங்களும் அவற்றின் தொடர்புகளும் நம்மின் சிந்தையில் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.
அமெரிக்காவில் அந்தக் கல்லூரிக்கு பெரிய மதிப்பு கிடையாது. ஃபிலடெல்பியாவிற்கு அருகே இருக்கும் அர்சினஸ் கல்லூரியை (Ursinus College) உள்ளூர்க்காரர்களே மதித்தது இல்லை. இத்தனைக்கும் The Catcher in the Rye எழுதிய ஜே.டி. சாலிங்கர் (J. D. Salinger) போல் பல புகழ்பெற்றவர்களை உருவாக்கிய கல்லூரி. அவர்கள் ஒரு உபாத்தியாயம் செய்தார்கள். தங்களுடைய கல்விகட்டணத்தை தடாலடியாக ஐந்தில் ஒரு பங்கு உயர்த்தினார்கள். உடனடியாக மாணவர்களின் கவனம் இந்தக் கல்லூரியின் பக்கம் திரும்பியது. ‘அது நல்ல கல்லூரியாக இருக்கும்… அதனால்தான் அத்தனை பணம் வசூலிக்கிறார்கள்!’ என்னும் பேச்சு பலப்பட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை எகிறியது.
4. எண்ணம் போல் வாழ்வு: நாம் எப்படி நடக்கிறோமோ, அதுவே நம்முடைய நம்பிக்கையாகி விடுகின்றது. உற்சாகமின்றி உழைக்கும் வேலை நேரத்தில், சீட்டியடித்து துடிப்பை வரவைத்துக் கொள்வது, நம்மை மேலும் திறன் வாய்ந்த பணியாளராக மாற்றுகிறது. மந்தையில் எல்லோரும் ஒரே மாதிரி நடந்தாலும், விவேகிகள் தங்கள் நம்பிக்கையில் மாறாப்பற்றுக் கொண்டு, ‘என் வழி… தனி வழி’யாக புதுப்பாதை அமைக்கிறார்கள்.
5. சேணம் கட்டிவிட்ட குதிரை: நம்முடைய சித்தாந்தம் எதுவோ, அந்த சித்தாந்தத்தை எவை நிலை நாட்டுகிறதோ, அந்த ஆதாரங்களையே நம் மனம் நாடும். முழுமையானத் தகவல்களை நாம் உள்வாங்க நம் புத்தியை அனுமதிப்பதில்லை. நமக்குத் தேவையான தரவுகளைப் பெற்றுக் கொண்டபின் தேடலை முடித்துவிடுகிறோம். அந்தத் தரவுகளின் மேற்சென்று பிற கருத்துகளை கவனத்திலேயே கொள்வதில்லை. எளிதான விடைகள் தவறான விடைகளாக இருக்கக் கூடும். நம்முடைய முடிவுக்கு எதிரான விடைகளைத் தேடித் தெளிய வேண்டும்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். மற்றவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் நன்கு அறிந்தே இருக்கிறோம். அதுவும் உளவியலும் மனவியலும் பாடமாகப் படிப்பவர்களும், சந்தையாக்கத்தையும் விற்பனை நுட்பத்தையும் மேலாண்மைப் பாடமாகப் படிப்பவர்களும் இதையேத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களும் இந்த நுணுக்கங்களை அனுபவமாகக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பற்றி பிறர் பாராட்ட நினைக்கிறோம்; நம்மை மற்றவர்கள் விரும்ப நினைக்கிறோம்; சந்தோஷத்தை அதிகமாக்கி, சுணங்கல்களை நீக்க விழைகிறோம். நம்முடைய முடிவுகள் (அல்லது பிறருடைய தேர்வுகள்) சுயநலத்தையும் மதநம்பிக்கை சார்ந்த கலக்கங்களையும் முன் அனுபவத்தையொட்டியும் அமைந்திருப்பதை தெரிந்தே வைத்திருக்கிறோம்.
ஆனால், இவை எதுவுமே, ‘இவர் இப்படித்தான் முடிவெடுப்பார்!’ என்று அறுதியிட்டுச் சொல்லவைப்பதில்லை. நாம் நினைப்பது ஒன்று; பிறர் முடிவெடுப்பது பிறிதொன்று. ஔவையார் பாஷையில் சொன்னால்:
ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
ஈசன் செயல் என்று எங்கோ பழி போடாமல், அல்லது ஈசன் திருவிளையாடல்களை முன்கூட்டியே அறிவதற்கு, இந்த நூல் உதவும்.
2. அமேசான்.காம்