சொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…
இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.
மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.
இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:
1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”
இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!
2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”
இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!
ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.