Daily Archives: ஜனவரி 3, 2015

In Our Translated World: Contemporary Global Tamil Poetry – புத்தக அறிமுகம்

எதிர் வீட்டில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கடுமையாகவே குரைப்பதாக எனக்குத் தோன்றியது. பின்னிரவில் சுவர்க்கோழிகளையும் சிள்வண்டுகளையும் மட்டுமே கேட்டுப் பழக்கமானவனுக்கு நாயின் குரைப்பு நிம்மதியை குலைத்தது. பின்னிரவில் மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து வேலை பார்த்த மதியங்களிலும் நாய் குரைத்துக் கொண்டிருப்பது ஓங்கி ஒலித்தது. அஞ்சல் பட்டுவாடா செய்த குட்டி லாரிகளின் சத்தத்திற்கு இடையேயும், நீர்நிலையைத் தேடி அலைந்த வாத்துகளின் சல்ம்பலுக்கு இடையேயும் நாயின் மெல்லிய ஓலம் துல்லியமாகக் கேட்டது.

அப்படி என்னதான் அந்த நாய் சொல்லிக் கொண்டிருக்கும்? வீட்டிற்குள் திருடர் நுழைந்தால் சொல்லிக் காட்ட பாதுகாப்பு அரண் இருக்கிறது. எஜமானனிடம் அன்பு தெரிவிக்க மாலை நேரம் இருக்கிறது. பசி தீர்க்க வீட்டின் பாதாள அறையின் மூலையில் உணவு வைக்கப்பட்டிருக்கிறது. உண்டதும் வெளிக்கிருக்க தினந்தோறும் அந்த நாயை ஒவ்வொரு மரத்தையும் முகர வைக்கிறார்கள். மைல்கல் போல் பாதையெங்கும் நிற்கவைக்கப்பட்டிருக்கும் நெருப்பு அணைப்பதற்கான நீர்க்குழாய்களையும் அந்த நாய் விட்டுவைப்பதில்லை. இருந்தும் அந்த அர்த்தஜாமத்தில் என்ன புலம்புகிறது என்று தெரியாமலே “நாய் வாள்வாளென்கிறது” என்று புகார் செய்ய வைத்தது.

நாய் கத்துவதில் ஒலிநயம் இருப்பதை இசையமைப்பாளர் அறிவாராக இருக்கும். அந்த நாய் எதற்காக ஊளையிடுகிறது என்பதை ஆய்வாளர் அலசுவாராக இருக்கும். அந்த நாயின் உண்ணிகளை குணமாக்க மருத்துவர் பயிற்சி பெற்றிருப்பாராய் இருக்கும். கோம்பைநாய், செந்நாய் என தரம் பிரிக்க விலங்கியலாளரால் இயலுமாக இருக்கும். எப்படி அதட்டினால், அந்த நாய் அடங்கும் என்பதை உரிமையாளர் தெரிந்திருப்பாராய் இருக்கும். ஆனால், அந்த நாயின் உணர்வைப் புரிந்துகொள்ள மிருகபாஷை தெரிய வேண்டும்.

நமக்கு அறியாத மொழியில் இன்னொருவர் கவித்துவமாக உண்மைகளை அறிய வைத்தாலும், அவற்றை மண்டைக்குள் ஏற்ற இயலாத குறைபாடுகளோடு நாம் இயங்குகிறோம். இந்த அவஸ்தையை மொழிபெயர்ப்புகள் ஓரளவு நிவர்த்தி செய்கின்றன. இந்த வகையில்தான் சமீபத்தில் வெளிவந்த In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) புத்தகத்தைப் பார்க்கிறேன்.

In_Our_Translated_World_Tamil_poems_English_Collection

 

கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இன்றைய பேச்சு மொழியையோ ஃபேஸ்புக் மொழியையோ எடுத்துக் கொண்டால் ஒன்று புலப்படுகிறது. நாம் புழங்கும் இணையத்தில் ஆங்கிலம் இரண்டறக் கலந்திருக்கிறது. இலக்கியத்திற்காக தமிழும் பிழைப்பிற்காக ஆங்கிலமும் என சிலசமயம் வைத்துக் கொள்கிறேன். சிரமமான உள் உணர்வுகளை வெளிக்காட்டத் தடுமாறும்போது திடீரென்று தமிழரோடு பேசும்போது ‘எம்பாரசிங்’ என்றோ, ஆங்கிலம் மட்டுமே அறிந்த நண்பரோடு உரையாடும்போது ’தோக்கா’ என்னும் ஹிந்தி வார்த்தையும் மின்னும். இந்தப் புத்தகத்தில் வெளியான கவிதைகளில் ஆங்கிலம் கலக்கவில்லை. இந்தப் புத்தகத்தின் சிறப்பு இடது பக்கம் தமிழ்க் கவிதையும் வலப்பக்கம் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் பக்கத்து பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பது.

எட்டுத்தொகை நூலில் என்னவெல்லாம் பாடியிருக்கிறார்கள் எதைப் பற்றியெல்லாம் கவி இயற்றியிருக்கிறார்கள் என ஒரு பத்தியில் விளக்குவது எவ்வளவு மேலோட்டமாக அமையுமோ, அவ்வாறே, இந்தப் புத்தகத்தில் அமைந்த கவிதைகளையும் அதன் பரப்புகளையும் சுருக்க முடியாது. ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து இதில் உள்ள கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கவிஞர்கள் வசிக்கும் நாடுகளின் வரிசைப்படி, கவிதைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடும் இலங்கையும் நடுநாயகமாக நிறைய ஆக்கங்களைக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கிருந்தெல்லாம் ஒரு கவிதை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லோரைப் பற்றியும் சிறு குறிப்பு கிடைக்கிறது. அனைவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பு தற்கால கவிஞர்களின் சிறுபத்திரிகை கவிதைத் தொகுப்பாக “சிற்றகல்” வாசித்திருக்கிறேன். பூமா ஈஸ்வரமூர்த்தியும் லதா ராமகிருஷ்ணனும் இணைந்து 107 கவிஞர்களின் 211 கவிதைகளை அந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார்கள். அருந்ததி நிலையம் வெளியீட்டிருக்கிறது.

அதைக் குறித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் எழுதப்படும் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்துப் பார்க்க வசதியான தொகுப்பு. ந. பிச்சமூர்த்தி, மயன் [க.நா.சு] முதலிய முதல் தலைமுறை புதுக்கவிஞர்களும் அசதா, அமிர்தம் சூர்யா போன்ற நான்காம் தலைமுறை இளைய கவிஞர்களும் இடம்பெறும் விரிவான தொகுப்பு. தொகுப்பில் தொகுப்பாளர்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆனால் தமிழ்க் கவிதை இன்று எப்படி ஒரு வெற்றுக் கைப்பழக்கமாக பெரும்பாலானவர்களிடம் உள்ளது என்ற மனப்பதிவையே இது உண்மையில் உருவாக்குகிறது. தேவதேவன் போன்ற தீவிரமான கவிஞர்கள் [அவரது ஒரு கவிதைதான் உள்ளது] எழுதும் சூழலிலேயே கவிதையே அல்லாத வெற்று வரிகளை மடித்துப்போடுபவர்களும் மண்டியிருக்கிறார்கள். இத்தொகுப்பில் உள்ள பெயர்களில் முக்கால்வாசிபேரை கழித்துவிட்டால்தான் நாம் கவிதையைப்பற்றியே பேசமுடியும். என்ன நடக்கிறது இங்கே என்று காட்டும் ஒரு ஆவணம் எனலாம்.

கவிஞனின் எல்லாக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு, அவரின் எழுத்தை, வயது மாற மாற… மாறும் சிந்தனைகளை, வார்த்தை தேர்வுகளை, அனுபவங்களை சொல்லும். அதே போல், சற்றேறக்குறைய ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த பற்பல கவிஞர்களின் தொகுப்பு, அந்தச் சமூகத்தின் எண்ணங்களையும் பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் முன் வைக்கிறது. அதிலும், இந்தப் பற்பல கவிஞர்களின் தமிழ்மொழியை ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர் வாசிக்க வைக்குமாறு மொழிபெயர்க்க வேண்டும். சீதை என்னும் கலாச்சார அடையாளத்தை விளக்க வேண்டும்; பிரமிள் என்று கவிதையில் வருகிரது… அவர் யார் என சிறுகுறிப்பு வரைய வேண்டும். சங்கப்பாடல்களில் சரளமாக வரும் மருத நிலக்குறிப்பிட வேண்டும்; புங்குடுத்தீவை வரைபடமாக்க வேண்டும்.

இத்தனையும் இந்த ”In Our Translated World” சாதிக்கிறது. சிறு பத்திரிகைகளில் எழுதும் பலரையும் தேர்ந்தெடுத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து இருக்கிறார்கள். பெண்ணியக் கருத்துகள், புலம்பெயர்ந்தோர் கருத்துகள், மார்க்சிய சிந்தனைகள், நடைமுறைவாதிகள், வாழ்வியல் புலம்பல்கள், இயற்கை காட்சிகள் என பல்வகையும் தொகுத்து இருக்கிறா் பேராசிரியர் செல்வ கனகநாயகம். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித் துறைப் பேராசிரியராக இருப்பவரும் தெற்காசியவியல் ஆய்வு மையத்தை இயக்குபவரும் இதன் தொகுப்பாசிரியராக இருந்திருப்பது இலகுவான மொழிபெயர்ப்பிலும் தமிழ்ச்சூழலின் அத்துணை இலக்கிய தொனிகளையும் சித்தாந்தப் போக்குகளையும் கருப்பொருட்களையும் கவிதை பாணிகளையும் தொடுமாறு உருவாகியிருக்கும் புத்தகத்தை வைத்து கணிக்கலாம்.

Tamil_Literary_Garden

இவ்வளவு கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு மிகப்பெரிய சிக்கல். தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரிடமும் அனுமதி பெறுவது அடுத்த நடைமுறை சிக்கல். அந்த ஒவ்வொரு கவிதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய மலையேறும் பணி. அந்த மொழிபெயர்ப்பை, நூல் முழுக்க ஒரே ஒடையாகவும் கொணர்ந்திருக்கிறார்கள். மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் இருந்து, ஒரு கவிதையில் இருந்து அடுத்த கவிதைக்குச் செல்லும்போது இடராமல், அதே பாணியே, ஒரே மொழி இலாவகத்தைக் கையாண்டது ஒத்திசைவான வாசிப்பனுவத்தை நல்குகிறது.

சங்கப்பாடல்களில் ஐங்குறுநூற்றில் அகவாழ்வின் ஐந்திணைகளான மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் தொகுத்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தண்ணீரும் மின்சாரமும் இன்னபிற அத்தியாவசியங்களும் பற்றாக்குறையான தமிழ்நாட்டிலும், தாய்மண் தவிப்பில் வாழும் அயலகத் தமிழரும், சொந்த பந்தங்களைப் பிரிந்து தனியே உழைக்கும் தெற்காசியத் தமிழர்களும், வேற்றுக் கலாச்சாரத்தில் சிக்கி அடையாளமிழந்து வாழும் அமீரகத் தமிழரையும் இந்த நூலில் பார்க்கலாம். இதையே உருத்திரமூர்த்தி சேரன் பனியும் பனி சார்ந்த இடமும் என விளிக்கிறார். அதையே ”தமிழ் இலக்கியத் தோட்டம்” தொகுத்த இந்தத் தற்காலத் தமிழ்க் கவிதைத் தொகுப்பு பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது.

அமேசான் மூலமாக அச்சுப்பிரதியாகவும் கிண்டில் பிரதியாகவும் ibooks மூலமாகவும் கிடைக்கிறது: http://www.amazon.com/Our-Translated-World-Chelva-Kanaganayakam/dp/1927494362

புத்தகத்தில் இருந்து:

Torture

Tongue ripped
words mangled,
on such a day I saw
a three-winged bird in flight
carrying the language;
asserting myself
is not to deny your world;
those words are swallowed
by the unkind tongue of the wind;
This solitude and indifference
always hurting someone,
they stone the bird that
sprinkles this language
across the grey sky;
my bird
shedding one wing in the
lengthening night of autumn
knows
struggling with language
only to lose
is solitude and
torture.

இளங்கோ கவிதையின் மூலம் இங்கே கிடைக்கும்: http://djthamilan.blogspot.com/2008/05/blog-post_22.html
-பாஸ்டன் பாலா

அணிகலன் அணிவகுப்பு

பள்ளியில் படித்த எண்பதுகளில் காதலைத் துவக்குவது எளிதாக இருந்தது. எதிரில் வரும் மாணவியிடம் சென்று, “டைம் என்ன?” என்று வினவுவது கால்கோள். ரவி நடராஜன் போல் நேரம் சரியாக (http://solvanam.com/?series=time_measurement_clocks_estimates) சொன்னால், காதல் தேறாது என்றும், “ச்சீ… போ” என்றால் தனுஷ் போல் ‘பார்க்கப் பார்க்க பிடித்துப் போகலாம்’ என்னும் பிடிப்பும் தோன்றிய காலம்.

இன்றைய யுவதிகள் மணிக்கட்டில் கடியாரம் கட்டுவதில்லை. கைப்பையில் இருந்து பத்து இன்ச் அகலத்திற்குப் பெரிய பெட்டியைத் திறந்து நேரம் அறிந்து கொள்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் இராஜேஷ்குமார் கதைகளிலும் மட்டுமே உலவிக் கொண்டிருந்த கையளவு நுட்பங்கள் இன்று சாமனியரின் கைகளிலும் புழங்குகிறது.

சென்ற அக்டோபரில் சாம்சங் தன்னுடைய கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது. புதியதாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பன்னிரெண்டு வினாடிக்கொருமுறை செல்பேசியை திறந்து பார்க்க வேண்டாம். எவராவது ஃபேஸ்புக்கில் என்னுடைய பதிவை விரும்பியிருக்க்கிறாரா என சென்று போய் பார்த்து ஏமாற வேண்டாம். நிலைத்தகவல், தட்பவெட்பம், போக்குவரத்து, என எல்லாமே ஸ்டாம்ப் அளவு திரையில் அறிந்து கொள்ள முடிந்தது. கேலக்ஸி கியர் என்ற நாமத்தில் வெளியான சாதனம் முன்னூறு டாலருக்கு விற்கப்படுகிறது.

Samsung_Galaxy_Gear_Watch_Note_Tablet_Wearable

இந்த கடிகாரத்திற்கென பிரத்தியேகமான சாம்சங் உபகரணங்கள் இருக்கும். அவற்றை மட்டும்தான் பயன்படுத்தலாம் என்பது முதல் எரிச்சல். சரியான நேரத்தை காதலி சொல்லமாட்டாள் என்பது போல் வராத மின்னஞ்சலைப் பார்ப்பதற்காகத்தான் செல்பேசி என்பதை அறியாத சாம்சங் நுட்பம் இரண்டாம் எரிச்சல். என்னுடைய ஐஃபோன் போன்ற பெரும்பாலான சாதனங்கள் இதனுடன் இணைந்து ஒத்துழைக்காது என்பதும் மின்னஞ்சலை எவர் அனுப்பித்தார் என்று முன்னோட்டம் கூட காண்பிக்காத நுட்பமும் ’தூக்கி ஓரத்தில் கடாசு’ என்று சொல்ல வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடிகாரம் எனப்படுவது நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது என்னும் சாஸ்திரத்தைப் புறந்தள்ளி, பத்து மணி நேரத்திற்குள்ளாகவே அதனுடைய பெரிய முள்ளும் சிறிய முள்ளும் உறங்கச் சென்றுவிடுகின்றன.

சாம்சங் கடிகாரத்தை ஒப்பிட்டால் கூகுள் கண்ணாடி எவ்வளவோ தேவலாம்.

கூகுள் கண்ணாடி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன் உங்களுக்கு கண்ணாடி வேண்டும் என்று பெரிய காதல் கடிதத்தை கூகிளுக்கு எழுத வேண்டும். அதைப் பொதுவில் டிவிட்டர், ஃபோர்ஸ்கொயர் என எல்லா சந்து பொந்துகளிலும் விளம்பரிக்க வேண்டும். அதன் பிறகு ஃபேஸ்புக்கில் உங்களைப் பின்தொடர்வோர் எக்கச்சக்கமாக இருக்க வேண்டும். கூடவே நாள், நட்சத்திரம், முகூர்த்தம் எல்லாம் கூடினால், ஆயிரத்தி ஐநூறு அமெரிக்க டாலர்களையும் அதற்கான சுங்க வரியையும் செலுத்தினால் உங்களுக்கு கூகிள் கண்ணாடி வாய்க்கப் பெறலாம்.

இப்படி கெடுபிடி செய்தே தன்னுடைய பொருள்களை சந்தைப் படுத்துவது கூகுளின் தந்திரம். அதனால், இந்த வருடத்தை அணிகல்ன்களின் ஆண்டாகக் கருதுகிறார்கள். சமீபத்தில் நடந்த “நுகர்வோர்களுக்கான மின்சாதன மாநாடு” (Consumer Electronics Show) சூடும் நுட்பங்களைக் (wearable tech) கொண்டாடியிருக்கிறது.

காலில் போட்டிருக்கும் கொலுசு நம்முடைய பாதம் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது, எத்தனை தப்படி வைத்திருக்கிறது, என்றெல்லாம் கணக்கு போட்டு உடல்நலத்தைப் பேண உதவும். இடுப்பில் போட்டிருக்கும் ஒட்டியாணம், உங்களுக்குப் பின்னால் எவர் வருகிறார் என்பதைப் புகைப்படம் எடுத்து, உங்கள் கண் முன்னே காட்சியாக்கும். தலையில் அணியும் சூடாமணி உங்களுக்கு விருப்பமான இசையை, காதுகளின் இடையூறின்றி, நேரடியாக கேட்கவைக்கும். நெற்றிச்சுட்டியில் ஒலியடித்தால் செல்பேசியில் யாரோ அழைக்கிறார் என அர்த்தம். கழுத்தை ஒட்டி வரும் ஆரம் உங்களுக்குத் தேவையான புகைப்படங்களையும் விழியங்களையும் சேமிக்கும். கை மோதிரம் கொண்டு அவற்றை நீக்கலாம்… மாற்றலாம்… பகிரலாம்.

இப்படி ஒரு தங்க மாளிகைக்கான காலம் எப்படி சாத்தியம் என்பதை லாஸ் வேகாஸில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒழுங்காகப் பல் தேய்க்கிறோமா, எத்தனை நிமிஷம் தேய்த்தோம், எவ்வளவு தடவை தேய்த்தோம் என்னும் அனைத்து தகவல்களையும் உங்கள் பல்துலக்கியே பல் வைத்தியருக்கு தகவல் அனுப்பிவிடும். மாத்திரையை தினசரிப் போட்டுக் கொள்கிறீர்களா என்பதை மாத்திரை டப்பாவில் இருக்கும் ஒளிப்படக் கருவியே விழியமாகப் போட்டுக் கொடுக்கும்.

இதெல்லாம் வேவு பார்ப்பதற்காகவே அணிகலன் மென்கலன் கண்டுபிடிக்கப்பட்டது போல் தோன்ற வைக்கலாம். ஆனால், கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டும் போது எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை உங்கள் காரின் முகப்புக் கண்ணாடியிலேயே கூகிள் தோன்ற வைக்கிறது. கவனமும் சிதறாது. கையைக் கொண்டு அங்கும் இங்கும் நகர்த்தி நிலப்படத்தையும் பயணத்திற்கான வழிகாட்டியையும் உபயோகிக்கும் சிரமம் இல்லவே இல்லை.

அதே போல், சமைக்கும் போது கூகுள் கண்ணாடி அணிந்தால், “அடுத்து தாளிச்சுக் கொட்டணும்… கடுகு இன்னும் கொஞ்சம் போடலாம்!” என்றெல்லாம் உடனடியாக அவதானிக்கவும் செய்கிறது. சமைத்துப் பார் புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை நுணுக்கி நுணுக்கிப் படிக்க வேண்டாம். உப்பின் அளவும் உளுந்தின் கணக்கு வழக்குகளையும் கூகுள் நிரலியே அளந்து சரி பார்க்கும். கண்ணெதிரே செய்முறை தோன்றி, கீழே நடக்கும் காரியங்களுக்கேற்ப சமையலை சுளுவாக்கி சுவையையும் சரியாக்குகிறது.

தட்ப வெட்பத்திற்கேற்ப மாறும் ஆடையையும் போட்டுக் கொள்ளலாம். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது மார்கழி மாத குளிர். அடக்கமான கோட் போல் தடித்துக் கொண்டிருக்கும். அதுவே மதியம் சாப்பிட செல்லும்போது வெயில் கொளுத்துகிறது… ஆடை உடனே பருத்தியாக இதமாக இருக்கும். சாயங்காலம் திடீரென்று மழை… ஆடை உடனே தண்ணீர் புகா சட்டையாக மாறும். இந்த நுட்பம் இன்றே அணிவதற்கு கிடைக்கிறது.

என்னுடைய மகள் பிறந்த சமயத்தில் இரவெல்லாம் எனக்கு சரியாகவே உறக்கம் வராது. அவள் நன்றாக குறட்டை விடாமலே உறங்குவாள். நானோ ஒரு மணி நேரத்திற்கொருமுறை அருகே சென்று நாடி பிடித்து, அது கிடைக்காமல், நெஞ்சில் காது வைத்து, அதுவும் கேட்காமல், கிள்ளி எழுப்பி அழ வைத்து நிம்மதி கொள்வேன். இப்பொழுதோ இண்டெல் நிறுவனம், குழந்தைக்கு பீதாம்பரத்தை மாட்டிவிடுகிறார்கள்.

baby_Intel_Edison_Android_Wearble_ces_2014-rest_devices_mimo-Kid_alerts

உங்கள் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ, அல்லது மூத்திர துணியை மாற்ற வேண்டும் என்றாலோ, உங்களுக்கு அழைப்பு மணி வந்து விடும். அதோடு நில்லாமல், அடுப்பை மூட்டி, பாலை வெதுவெதுப்பாக்கி தயாரும் செய்து வைத்துவிடும். மகள் அழ ஆரம்பித்த பிறகு பால் கலக்க செல்ல வேண்டாம். பசித்த மகவிற்கு, தானியங்கியாக புத்தம் புது பால் உடனடியாகக் கிடைக்க வைக்கிறார்கள்.

இதைப் போல் புத்தம் புதியதாக, அதே சமயம் பயனுள்ளதாகவும் உருவாக்கும் நிரலிகளுக்கு ஒன்றேகால் மில்லியன் டாலர்களுக்கு பரிசுகளை இண்டெல் நிறுவனம் வழங்குகிறது.

ஆனால், இந்த மாதிரி வித்தியாசமான கண்டுபிடிப்புகள் அறமாக இயங்குமா? அதை இயக்குபவர்கள் நெறிப்படி நடந்து நியாயமாக பயன்படுத்துவார்களா?

உதாரணத்திற்கு, கூகுள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கண்ணடித்தால் போதும்… எதிரில் போவோர் வருவோரின் புகைப்படம் எடுக்கப்பட்டுவிடும். தங்களின் விருப்பமில்லாமல் புகைப்படம் எடுப்பதும், உங்களுக்குத் தெரியாமல் பேச்சைப் பதிவைதும் வெகு சுலபமாக செய்யலாம். அதை அணிந்திருப்பவரே தீர்மானிக்கிறார்.

அடுத்ததாக இந்த அணிகலன்களில் வரும் விளம்பரங்களை எவ்வாறு புறக்கணிக்கப் போகிறோம்? தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் கைபேசியில் நோண்டுகிறோம்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து விளம்பரங்களை விலக்குகிறோம். கைபேசியின் உலாவியில் விளம்பரம் வந்தால், அப்படியே அதை x போட்டு நொடியில் மூடுகிறோம். ஆனால், கட்டிக் கொண்டிருக்கும் அணிகலனைக் கொண்டு உங்களின் சரித்திரம் முழுக்க விளம்பரதாரர்கள் அறிய முடிகிறது. நம்முடைய அணிகலனின் மென்கலன்கள், என்னுடைய வங்கி எது, எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் போன்ற விஷயங்கள் முதல் ஃபேஸ்புக் வரை எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறது. இதை வைத்து குறைந்த பட்ச விளம்பரத் தாக்குதலில் ஆரம்பித்து அதிகபட்ச மிரட்டல் வரை எல்லாமே சாத்தியம்.

முந்தாநேற்று திருட்டுப் படம் பார்க்க டெக்சதீஷ்.காம் மாதிரி ஏதோ எசகுபிசகான வலையகம் செல்ல, அந்த வலையகமோ, ஓசிப் படத்துடன் கூடவே நச்சுக்கிருமியையும் என்னுடைய மடிக்கணினிக்கு உள்ளே நுழைத்து விட்டது. எப்பொழுது மடிக்கணினியைத் திறந்தாலும், ஒலிபெருக்கியில் ஏதோ விளம்பரம் அலறிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி உங்களின் கம்மலும் மூக்குத்தியும் கொந்தர்களிடம் பறி போகும் அபாயமும் இந்த அணிகலன் மென்கலன் உலகத்தின் மிகப் பெரிய பிரச்சினை.

அதை விடுங்கள்.

அலுவலில் ஏந்திழைப் பெண்களை எதிர்பார்த்த காலம் போய், ஏந்திழை அணிந்துதான் வேலையே பார்க்க வேண்டும் என்னும் காலம் கூடிய சீக்கிரமே வரலாம். அந்த ஏந்திழையோ, ஐந்தாம்படை வேலையாக, எப்பொழுது அசல் அலுவல் பார்க்கிறீர்கள், எவ்வளவு நேரம் ஊர் மேய்கிறீர்கள் என மேலாளருக்குப் போட்டுக் கொடுக்கும் காலம் வெகு விரைவில் வந்து விடும்.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்னும் முதுமொழியை ஒத்து உங்களின் உள்ளாடையைக் கூட உங்கள் உணர்விற்கேற்ப ஆட்டுவிக்கலாம்; வாருங்கள் என்கிறது அணிகலன் காலம்.

Tamil Shorts

சிறுகதை சிறப்பிதழ் கட்டுரை – இணையத்தில் கதை படிக்கும் கலை

கதை கேட்பது எப்பொழுதுமே பிடித்தமானது. தமிழர்கள் தெனாலி இராமனும் மரியாதை இராமனும் முல்லாக் கதைகளும் ஈசாப் நீதிக் கதைகளும் அக்பரும் பீர்பலும் பஞ்சதந்திரக் கதைகளும் படித்து வளர்ந்தவர்கள்.

தமிழ் இலக்கியவாதிகள் எனக்கு எப்படி அறிமுகமானார்கள் என்பதை வைத்துத் துவங்குகிறேன். மைலாப்பூரில் நாங்கள் வைத்திருந்த மெஸ், ‘இராயர் காப்பி கிளப்’ அளவு புகழ் பெறவில்லை எனினும், துர்வாசர்களும் நல்ஹிருதயர்களும் அவ்வப்போது தலைகாட்டும் இடமாக இருந்தது. அப்படி வந்திருந்த ஒரு எழுத்தாளர், அப்பாவிடம் மூன்று கார்டுகளைக் கொடுத்து, “என்னுடைய கதை இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கு. உங்க ஹோட்டலில் சாப்பிடறவங்ககிட்ட சொல்லி, ‘நல்லா இருந்துச்சுன்னு’ எழுதிப் போட சொல்லுதீங்கள்லா!” என்று உரிமையுடன் கோருவதில்தான் ஆளுமைகளின் கதை விடும் அளப்பின் வீச்சை அறியத்துவங்கினேன்.

தமிழ் இலக்கியம் எனக்கு எப்படி அறிமுகமானது என்பது அடுத்த கட்டம். பத்தாவது படிக்கும்போது “நான் – டிடெய்ல்” புத்தகத்தில்தான் சிறுகதைகள் வாசித்தேன். அதில் ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஒரு ஆண்டி” வந்திருந்தது. முதலில் நல்ல மெட்டுள்ள கவர்ச்சியான பாடல் இருந்தது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி. – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

அப்பொழுது வாசித்துக் கொண்டிருந்த சுஜாதா, இராஜேஷ் குமார் பாக்கெட் நாவலில் இருந்து நிறையவே வித்தியாசமாகவே இருந்தது. அனால், அதன் பிறகு உடனடியாக ஜெயகாந்தனின் எல்லா ஆக்கங்களையும் படிக்கவில்லை. அதே பத்தாம் வகுப்பு துணைப்பாடத்தில் அசோகமித்திரனோ, சுந்தர ராமசாமியோ இருந்திருக்கலாம். ஏனோ கவரவில்லை. பரீட்சைக்கும் வராத பாடம் என்பதால், வாசிக்கவும் இல்லை.

அதே போல் இன்றைய நிலையில், ஒரு மாணவருக்கு இன்ன எழுத்தாளரின் மீது ஆர்வம் பிறந்தால், இணையம் இருக்கிறது.

விக்கிப்பிடியாவின் தமிழக_எழுத்தாளர்கள் பகுப்பில் மட்டும் கிட்டத்தட்ட 750+ புனைவாளர்கள் பட்டியலிடப் பட்டிருக்கிறார்கள்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இத்துணை எழுத்தாளர்களா…! இவர்களின் எந்தப் புத்தகத்தை வாசிப்பது என அங்கலாய்க்கறீர்களா? அந்தத் தேர்விற்கு ஆம்னிபஸ் (http://omnibus.sasariri.com/ ) உதவுகிறது. நூல் விமர்சனங்களையும், எழுத்தாளர் அறிமுகங்களையும் கொடுக்கிறது.

தமிழ் சிறுகதைகளை இணையத்தில் பல இடங்களில் வாசிக்கலாம். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு தளம் வைத்திருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் போன்றோருக்கு அவருடைய சிஷ்யர்கள் வலையகம் நடத்தினார்கள். இப்பொழுது இணைய வெளியில் ஜெயகாந்தன்.காம் மறைந்து விட்டது. சுஜாதா “மின் அம்பலம்” நடத்தினார். அவரின் மறைவிற்குப் பிறகு அதுவும் மாயாஜாலமாகி விட்டது.

ஜெயமோகன் போன்றோர் தாங்களே தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இந்த வரிசையில் எம்.டி.முத்துக்குமாரசாமி, இரா முருகன், வாமு கோமு (http://vaamukomu.blogspot.com/), எஸ்.ராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன், சாரு நிவேதிதா, அழகியசிங்கர் எனப் பலரை சொல்லலாம். திரள்மந்தைப் பத்திரிகைகளில் அதிகம் எழுதும் பிரபஞ்சன் (http://www.prapanchan.in/ ), மாலன் போன்றோரும் தங்கள் வலைமனைகளில் சிறுகதைகளை வெளியிடுகிறார்கள். அதே போல் சிறுபத்திரிகைகளில் பெரிதும் காணப்படும் தேவிபாரதி (http://devibharathi.blogspot.com/ ), குட்டி ரேவதியும் தங்கள் இணைய இல்லத்தில் புனைவுகளையும் அதன் மீதான தாக்கங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இது எல்லாம் ஒரு எழுத்தாளரின் மொத்த ஆக்கங்களையும் வாசிக்கவோ, அல்லது அவர்கள் எழுதியதில் அவர்கள் சிறந்ததாகக் கருதுவதை வாசிக்கவோ, அல்லது புகழ்பெற்ற எழுத்தாலர்களின் சமீபத்திய எழுத்துக்களை வாசிக்கவோ பயன்படும். நூலகம்.காம் சென்றால் ஒட்டு மொத்த ஈழ எழுத்துக்கள் குறித்த பார்வையும் கிடைக்கும். என்னைப் போன்ற தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கை எழுத்தாளர்கள் பெரிய அளவில் அறிமுகம் கிடையாது. அந்தக் குறையை (http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D ) தளம் போக்குகிறது.

அப்படியானால், தமிழக எழுத்தாளர்களை எங்கு கண்டுபிடிக்கலாம்?

தமிழ்ப் பத்திரிகைகளில் நீண்ட நெடுங்காலமாக சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வாரப் பத்திரிகையான குமுதத்தின் ஒரு பக்கக் துணுக்கு கதைகள் அவசரகதியில் வாசிப்போருக்கு ருசித்தது. தினமணிக் கதிரும் தினமலரின் வாரமலரும் சிறுகதைகள் வெளியிடுகின்றன. கல்கியும் வாரந்தோறும் இரு பக்கமாவது வருகின்ற அளவு கொண்ட சிறுகதைகள் வெளியிடுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றுக்குமே மூன்று பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது அளவு சாப்பாடு. “இன்னும் கொஞ்சம் ரசம் கொடுங்க…” என்று கேட்டால் ஊற்ற மறுக்கும் லிமிடெட் மீல்ஸ் போல் சிக்கனமாக அடைத்துக் கொள்வதால், வாசகரிடம் போதிய அளவு தாக்கம் ஏற்படுத்த இயலாதவை. இரண்டாவதாக அந்தக் கதைகள் எடுத்துக் கொள்ளும் கருக்கள் – “கொள்ளுத் தாத்தா காலத்தில் கட்டின வீடு” என சிமெண்ட் விளம்பரத்தில் வருவது போல் புராதன சிக்கல்களை அருகிப் போன நனவோடையாக புலம்பி வாந்தி எடுத்த உணர்வோடு தளரவைப்பவை. மூன்றாவது எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்குமான உறவு. நீங்கள் சரவண பவனிலோ தஞ்சாவூர் ஷண்முகாவிலோ அந்தந்த புகழ் பெற்ற வாரந்திர பத்திரிகை நிருபர்களை கௌரவிக்காவிட்டால், உங்கள் சிறுகதை வெளியாவது மிக சிரமமான விஷயம்.

இவற்றுக்கு மாற்றாக பல சிறு பத்திரிகைகள் உதயமாகின்றன. பக்க அளவில் கட்டுப்படுத்தாமல, கதைக்களன்களை புதியதாகவும் வைத்திருக்கின்றன. ஆனால், இங்கும் அனாமதேயமாக உங்கள் சிறுகதையை அனுப்பினால் எவ்வளவு தூரம் கவனிக்கப்படும், வெளியாகும் என்பதெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கின்றன.

இந்த வகையில் நிறைய மாற்றுப் பத்திரிகைகளைச் சொல்லலாம். அம்ருதா; யுகமாயினி; அந்திமழை; மொழிபெயர்ப்பிற்காக திசை எட்டும்; அணங்கு; கணடாவில் இருந்து காலம்; அடவி; வெகு இலக்கியத்தரத்துடன் தமிழினி; அற்றம்; எனி இந்தியன் வார்த்தை; அகநாழிகை; வனம்; கதை சொல்லி; கவிதாசரண்; உன்னதம்; கைநாட்டு; உயிர் நிழல்; உயிர் எழுத்து; பறை; ஆனால், இவற்றில் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்க முடியவில்லை. எதிர்பார்ப்பு என்பதை விட ஒரு இதழுக்கும் இன்னொரு இதழுக்கும் இடையேயான ஸ்திரமான எழுத்துத் தொடர்ச்சியை வெகு சிலரே கடைபிடித்தனர்.

அப்படியானால், காலச்சுவடு, உயிர்மை தவிர வேறு எங்கேதான் சுவாரசியமான தரமான சிறுகதைகளைப் படிக்கலாம்?

2012ல் ஆனந்த விகடன் வெளியிட்ட எழுத்தாளர்களை வைத்து வாசிப்பை மேம்படுத்தலாம் (http://10hot.wordpress.com/2012/09/07/2012-anandha-vikadan-short-story-writers-tamil-fiction-authors-list/). ஆனால், அந்தப் பட்டியலில் இருக்கும் பலர் இரு மாமாங்கமாக அரியணைக் கட்டிலை மாற்றாமல் இருக்கும் ஆப்பிரிக்க கொடுங்கோலன் போல் ஒரே மாவையே அரைப்பவர்கள். 1995க்குப் பிறகு வெளியானதில் தனக்குப் பிடித்த ஒரு டஜன் கதைகளை பாவண்ணன் பகிர்கிறார் (http://10hot.wordpress.com/2009/08/30/paavannan-picks-his-favorite-short-stories-in-tamil-after-1995/ ). அதை வைத்து பழக்கமாகாத எழுத்தாளர்களை அறியலாம்.

சிறந்த வாசகர்களான எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர் நூறு முக்கியமான சிறுகதைகளின் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். அவற்றை தமிழ்த் தொகுப்புகள் (http://www.thoguppukal.in/p/blog-page_6929.html ) வலையகம் வசதியாக வாசிக்கத் தருகிறது. அவர்கள் தரத் தவறியதை அழியாச்சுடர்கள், ஓப்பன் ரீடிங் ரூம் போன்றவை மூலம் தேடிப் பெறலாம். ”குங்குமம் தோழி”யின் வொர்ட்ப்ரெஸ் இணையத்தளத்தில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளின் மாதிரிகளை ஒரே இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதுவும் (http://kungumamthozhi.wordpress.com/category/tamil-classics-2/ ) ஓரளவிற்கு பயன்படுகின்றன.

சரி… நீங்களே எழுத்தாளர். உங்களுக்கு வோர்ட்பிரெஸ் பதிவு இருக்கிறது. அதிலேயே வெளியிட்டுக் கொள்கிறீர்கள் என்றால் முக்காடு போட்டுக் கொண்டு செல்ஃபீ எடுப்பது போல் ஆகிவிடும். அவர்களுக்கு திண்ணை.காம் இருக்கிறது. வாரந்தோறும் படைப்புகளை வெளியிடுகிறார்கள். கூடவே சிறுகதைகள்.காம் (http://www.sirukathaigal.com/ ) போன்ற வலைத்தளங்களும் இருக்கிறது.

இவர்களில் சமீபத்திய வருகையாக பதாகை.சொம் (http://padhaakai.com/ ) முளைத்திருக்கிறது. புதிய தலைமுறையின் குரல்களை ஒலிக்கச் செய்கிறது. வலைப்பதிவுக்கே உரிய பசலைக் குழந்தை போன்ற எடிட்டாத தன்மையும், தமிழுக்கு அன்னிய உரமூட்டும் மொழிபெயர்ப்புகளும், சோதனை முயற்சிகளும் புலர்ந்தும் புலராத ஐந்து மணி காலையின் உற்சாகம் கொள்ள வைக்கின்றன. போகப் போக இதே வேகமும் வித்தியாசங்களும் வெகுபதிவுகளும் தொடர்ந்தால் 21ம் நூற்றாண்டின் தமிழ்க்குரலாக ஒலிக்கும்.

இவ்வளவு பெயர்களையும் பத்திரிகைகளையும் சொல்லும்போது சமீபத்தில் வந்த இரண்டு பட்டியல்களை நிச்சயம் குறிப்பிட வேண்டும். இணையத்தில் எழுதுவோர்களிடமிருந்து தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ஜெயமோகன் ”புதியவர்களின் கதைகள்” (http://www.jeyamohan.in/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ) என அறிமுகம் செய்தார். ஆனந்த விகடனில் தன்க்குப் பிடித்த புதிய தலைமுறை எழுத்துக்களை நாஞ்சில் நாடன் அறிமுகம் செய்திருக்கிறார். (http://10hot.wordpress.com/2014/06/06/promising-tamil-writers-nanjil-nadan-picks-potential-literature-stars/ )

ஆங்கிலத்தில் வாசிக்கும் நண்பர்களிடம் “சமீபத்தில் உங்களைக் கவர்ந்த சிறுகதை ஆசிரியர்களைச் சொல்லுங்களேன்” என்னும் கேள்வியை வைத்தபோது திணறிப் போனார்கள். அவர்களால் அண்மையில் வாசித்த நாவல்களைச் சொல்லமுடிகிறது. வாரந்தோறும் புரட்டும் நியு யார்க்கர், மாதந்தோறும் படிக்கும் ஹார்ப்பர்ஸ் போன்றவற்றில் வெளியான சிறுகதைகளை சொல்ல முடிகிறது. ஆனால், சிறுகதைக்கெனவே சிறப்பாய் அமைந்திருக்கும் சமீபத்திய எழுத்தாளர்களைக் குறிப்பிட முடிவதில்லை.

சென்ற ஆண்டின் நோபல் பரிசை ஆலிஸ் மன்றோ வென்ற பிறகுதான் சிறுகதையாசிரியருக்கே மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆங்கிலப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை எல்லாப் பத்திரிகைகளுமே ஒரு சிறுகதை ஸ்பெஷலைப் போட்டுவிடுகிறார்கள். விளையாட்டு சம்பந்தமான விஷயங்களை மட்டுமேத் தாங்கி வரும் “ஈ.எஸ்.பி.என்.” இதழாகட்டும்; ஆண் எப்படி பழக வேண்டும், எதை அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் “ஜி.க்யூ.” ஆகட்டும். பெரும்பாலான இதழ்கள் வருடந்தோறும் ஒரு இதழை “புனைவுகளுக்கான சிறப்பிதழ்” என்று சொல்லி நாவலின் ஒரு பகுதி, நூறு வார்த்தைக் கதைகள், ஒரே தலைப்பிற்கு நாலு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கம் என இதழ் முழுக்க சிறுபுனைவுகளால் அலங்கரிக்கிறார்கள். அச்சிட முடியாததையும் அச்சில் வெளியிடமுடியாத எண்ணிக்கை கொண்ட பக்கங்களையும் தங்கள் சந்தாதாரர்களுக்கு இணையத்தில் தொடர்ச்சியாக வாசிக்குமாறு வலைக்கு வரவழைத்து அங்கேயும் சிறுகதை சிறப்பிதழைத் தொடர்கிறார்கள்.

நான் எதையும் ஒன்பது கேள்வியாக வைத்து பார்ப்பவன். இந்தத் தகவல் தொகுப்புக் கட்டுரையிலும் எனக்கு விடை தெரியாத சந்தேகங்களையும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் கொண்டு முடிக்கிறேன்:

1. அமெரிக்காவில்/இங்கிலாந்தில் இருந்து எழுதும் ஆங்கிலத்தில் நிலைமை எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது? சன்மானத்தை விட்டுவிடுங்கள்; தரத்திலும், பதிப்பாசிரியரின் வெட்டுதல்களிலும், புனைவின் பல்சுவைகளிலும் ஆங்கிலச் சிறுகதைகளுக்கும் தமிழ்க்கதைகளுக்கும் வலையுலகில் என்ன வித்தியாசம்?

2. இந்தியர்களின் ஆங்கிலச் சிறுகதைகளை எங்கு வாசிக்கலாம்? ஹிந்தியில்… கன்னடத்தில்… தமிழின் பிற மொழிக் கதைகளைப் படிக்க வேண்டுமானால் என்ன தளத்தைப் பார்க்க வேண்டும்?

3. அந்தக் காலத்தில் ”சிறுகதைக் களஞ்சியம்” போன்ற இதழ்கள் சிறுகதைக்கெனவே வெளியாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது அதற்கான தேவை இருக்கிறதா? உங்கள் இந்திய நண்பர்களில் எத்தனை பேர் அவரவர் தாய்மொழியில் சிறுகதைகளை வாசிக்கிறார்கள்?

4. சிறுகதை எழுதியவரைப் பார்த்து “இது உங்கள் சொந்தக் கதையா?” “என்னைப் பற்றியும் உங்கள் கதையில் எழுதுவீர்களா?” போன்ற தர்மசங்கடமான கேள்விகளைத் தொடுத்ததுண்டா?

5. நீங்கள் சிறுகதை எழுதுபவராக இருந்தால், எத்தனை நாளில் ஒரு கதையை முடிக்கிறீர்கள்? அதை எத்தனை முறை செப்பனிடுகிறீர்கள்? தலைப்பை எப்படி வைக்கிறீர்கள்? எழுதின கதையைக் கிழித்து (அல்லது டெலீட்) செய்ததுண்டா?

6. மேற்குலகில் சிறுகதை எழுதுவது இரண்டு காரணங்களுக்காக: தன்னுடைய முதல் நாவலின் கருவைக் கண்டுபிடிக்க; திரைக்கதை எழுதப் போகும் முன் காட்சிகளை வடிவமைக்க. தமிழகக் கல்லூரிகளில் “புனைவு எழுத்தாளாராக” படிக்க வாய்ப்பு இருக்கிறதா? எதற்காக கிரியேடிவ் ரைட்டிங் சேர்கிறார்கள்?

7. வலைப்பதிவு, ஃபேஸ்புக், கூகுள் குழு என இணையமெங்கும் சர்ச்சைகளில் சிக்கி, விவாதங்களில் அடிபடாவிட்டால், நல்ல எழுத்தாளராக அறியப்பட முடியாத சூழல் தமிழில் நிலவுகிறதா?

8. உங்கள் ஆதர்சமாக சுஜாதாவோ ஓ ஹென்றியோ இருக்கட்டும். அவர்களையே மீண்டும் மீண்டும் வாசிக்கிறீர்களா? அல்லது இளமைக்காலத்தில் ருசித்தவர்கள், இப்பொழுது ஆறினகஞ்சியாக அலுத்துவிட்டார்களா?

9. எதற்காக சிறுகதை வாசிக்கிறீர்கள்?

புத்தக அறிமுகம்: The Reckoning: Women Artists of the New Millennium

வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே!
– எட்வர்டு ஹாப்பர் [1882-1967]

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் மதிப்பீடும் விற்பனையும் எப்படி இருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கு After the Revolution: Women Who Transformed Contemporary Art (2007) புத்தகமும், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக வெளிவந்த The Reckoning: Women Artists of the New Millennium (2013, Prestel) புத்தகமும் விடை கொடுக்கின்றன.

முதல் புத்தகத்தில் ஒரு டஜன். இரண்டாவது நூலில், 1960களுக்குப் பிறகு பிறந்த இருபத்தைந்து பேர்களுடைய வாழ்க்கை சித்திரத்தையும் நிஜ கோட்டோவியங்களையும் கலைப் படைப்புகளையும் அறிமுகம் செய்கிறார்கள். இரண்டு புத்தகங்களையும் எலெனார் ஹார்ட்னி (Eleanor Heartney), ஹெலேன் பாஸ்னர் (Helaine Posner), நான்சி (Nancy Princenthal) மற்றும் சூ ஸ்காட் (Sue Scott) உருவாக்கியிக்கின்றனர். நூல் முழுக்க ஓவியர்களின் உருவாக்கங்கள் முழு வண்ணத்தில் வழ வழ தாளில், பெரிய வடிவில் காணக் கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அதை உருவாக்கியவரின் பின்னணியைச் சொல்கிறார்கள். இளம்வயதில் எப்படிப்பட்ட படைப்புகளைப் படைத்தார் என்பதில் ஆரம்பித்து சமீபத்திய ஆக்கம் வரை ஒளிப்படங்களுடன் விளக்குகிறார்கள். ஆங்காங்கே, கலைஞர்களின் பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள்.

அறுபதுகளில் பெண்ணிய இயக்கங்களின் தாக்கத்தினால் உடலைக் குறித்துப் பேசுவதும் கலையாக்கத்தில் உடல்மொழியை வெளிப்படையாகப் படைப்பதிலும் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்ததைக் காணமுடிகிறது. உலகமயமாக்கப்பட்ட சமூகப் பிரச்சினைகளும் எல்லை கடந்த அரசியல் சிக்கல்களும் பெண்களின் கண்ணோட்டத்தில் காணமுடிகிறது. உள்நோக்கில் ஆய்வுகளும், கனவுகளின் அபிலாஷைகளும், கற்பனைகளின் அத்துமீறல்களும் அறியமுடிகிறது. பால்சார்ந்த நிலைப்பாடுகளையும் வீட்டில் அவர்களின் நிலையையும் மேற்கத்திய உலகின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது.

புத்தகத்தை நான்கு பாகமாகப் பிரித்திருக்கிறார்கள்:
1. பொல்லாக் குழந்தைகள் (Bad Girls)
2. மோகனச்சுண்ணம் (Spellbound)
3. இல்லத்து கலகங்கள் (Domestic Disturbances)
4. வரலாற்றுப் பாடங்கள் (History Lessons)

காடா ஏமர் (Ghada Amer) எகிப்தில் பிறந்தவர். ஃபிரான்ஸ் நாட்டின் நைஸ் (Nice) நகரத்தில் ஓவியம் கற்க கல்லூரியில் படிக்கிறார். ஆனால், சில பாடங்களை ஆண்களுக்கு மட்டுமே கற்றுத் தர முடியும் என்று சொல்லி அவரை வகுப்பில் இருந்து தள்ளிவைத்து விடுகிறார்கள். அப்பொழுதுதான் அடுக்கு அடுக்காக வரையும் தன்னுடைய ஓவிய முறையை ஏமர் கண்டறிகிறார். பாலுறவையும் பால் இச்சையையும் வெளிப்படையாகப் பேச இயலாத மேற்கத்திய நாகரிகத்தை தன்னுடையப் படைப்புகளின் மூலம் குறிப்பாக சாடுகிறார். இஸ்லாமியராகப் பிறந்ததினால் அறிந்திருக்கும் தன்னுடைய மதத்தில் பெண்களின் நிலையும் இவருடைய ஓவியங்களில் ஊடாடும்; பிரான்சிலும் வெளிப்படும் பெண்பால் அடக்குமுறையும் இழையோடும்; காதலின் புரியாமையும் போர்களின் முட்டாள்தனமும் டிஸ்னி படங்களின் கதாநாயகி இலட்சணங்களும் அழகுக்கான தேடலும் மிளிருமாறு சித்திர வேலைப்பாடுகளுடன் பூத்தையல் தொடுக்கிறார்.

இவரைப் போல் ஒவ்வொருவரையும் தனித்துவமாகப் பொறுக்கி எடுத்து கோர்த்திருக்கிறார்கள். பாலுறவு படங்களின் துண்டுகளை ஒட்டு வடிவமாக்கி அதன் அர்த்தமின்மையை வெளிப்படுத்துவது ஆகட்டும்; வணிக விளம்பரத்தில் சாஸ்வதமாகிப் போன இலட்சண ஸ்திரீகள் ஆகட்டும்; கற்பு, கன்னி, பத்தினி என்று கவிதை பாடுபவர்களுக்கு போட்டுடைக்கும் கிட்டத்தட்ட ஆபாசப் படங்கள் ஆகட்டும் – இதுதான் பெண்ணியம் என்று எதையும் அடைக்க முடியாது என்பதை இந்தப் புத்தகமும் கலைஞர்களும் அவர்களின் படைப்புகளும் சொல்கின்றன.

இரண்டு புத்தகமும் சேர்த்து 37 பெயர்கள்தான் தெரிய வருகிறது. எந்தத் தமிழரும், யாதொரு இந்தியரும் இடம்பிடிக்கவில்லை. அனுபந்தத்தில் கொடுத்திருக்கும் பட்டியலைப் பார்த்தாலே, ஆண் ஓவியர்களின் எண்ணிக்கையும் அவர்கள் நடத்தும் தனி கண்காட்சிகளின் அளவிற்கும் எதிர்பாலாரின் சிற்றிரை சித்திரக்காட்சிகளுக்கும் சம்பந்தமில்லா நிலையை அறிய முடிகிறது. பெண்களின் ஓவியம் என்பதற்கும் பெண்ணிய ஓவியம் என்பதற்குமான வித்தியாசத்தை எல்லாம் இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் ஆய்வதில்லை.

ஆனால், இந்தப் புத்தகம் ஒரு நல்ல ஆவணம். முக்கியமான துவக்கம். கல்லூரிகளில் பாடமாக வைக்க உதவும். ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இதே போல் ஆய்வு நூல்களை மற்ற நாடுகளும் மொழிகளும் வெளியிட உந்துதலாக இருக்கும்.

புத்தகத்தின் அட்டைப்படத்தில் 1997ல் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அவள் நம்முடைய சினேகிதி போல் தோற்றம் அளிக்கிறாள். துள்ளலாகப் பாய்கிறாள். எடுப்பான நீல நிற ஆடையும் அதற்கு மாற்றாக பளீரெனும் சிவப்பு சப்பாத்துகளையும் அணிந்திருக்கிறாள். கையில் பூத்தண்டு வைத்திருக்கிறாள். ஒவ்வொரு காரின் கண்ணாடியையும் உடைக்கிறாள். அவளைப் போல் கண் விரியச் செய்யும் அதிசய ஆக்கங்களும் கலைநயம் பூக்கும் நளினங்களும் அறியத் தரும் புத்தகம்.

காணொளிகள்:

http://youtu.be/TLzxXIiamCU

படங்கள்:
Yael Bartana

Wangechi Mutu

walker

The-Reckoning-Cover-JPG_335W

Tania Bruguera, The Burden of Guilt

Sharon Hayes

New Museum_Phylida Barlow_2012_benoit_Pailley

IMG_0640

IMG_0630

IMG_0631

IMG_0632

IMG_0635

IMG_0636

IMG_0637

IMG_0638

IMG_0629

Cao Fei, RMB City 4, 2007

1482849_601067086613608_1515361582_n

1470388_590035241050126_524614984_n

நான்கு புத்தகங்கள்

குளிர் காலத்தில் காட்டுப் பறவைகளுக்கான உணவு எளிதில் அகப்படுவதில்லை. நான் இருக்கும் வனாந்திரத்தில் குருவிகளும் மரங்கொத்திகளும் தவிர சிவப்பு, நீலம் என எல்லா நிறங்களிலும் பட்சிகளைப் பார்க்க முடிகிறது. புள்ளினங்களைக் கவர்வதற்காகவே வீட்டின் கொல்லைப்புறத்தில் தீனி வைத்திருக்கிறேன். சிட்டுகளும் சிறகடித்து வரும். கொஞ்சம் கொத்தும். முதலில் சோதனைக்காக நண்பர்களைச் சாப்பிடச் சொல்லும். அதன் பிறகு பக்கத்து வீட்டு அமுதசுரபிக்கு ஓடிவிடும். அங்கேயும் முகர்ந்தும் ஊர்ந்தும் உரசியும் சோதித்த பின் இன்னொரு கிளையைத் தேடிக் காணாமலேயேப் போய்விடும்.

இதையெல்லாம் காண்பதற்கு முன்பே, இந்த புரட்டிப் பார்த்து சோதிக்கும் நிலையை நானும் வாய்க்கப் பெற்றிருந்தேன். காய்கறிச் சந்தையில் காரட் மட்டும் அரை கிலோ வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருப்பார்கள். முதலில் கண்ணில் பட்டவரிடம் ஐந்து கிலோவிற்கான விலை கேட்டு, கேரட்டைத் தொட்டுப் பதம் பார்த்து, பேரம் பேசி, அதன் பின் அந்தக் கடையில் இருந்து விலகி, நாலு கடை தள்ளி, மீண்டும் காரட் ‘கிலோ என்ன விலை’ கேட்டு, ஆதியில் இருந்து அலசலைத் தொடங்குவதில்தான் இந்த சுகானுபவம் அஸ்திவாரம் இடப்பட்டது. தொலைக்காட்சியில் தூர்தர்ஷனும் தூர்தர்சனின் இரண்டாம் அலைவரிசையான மெட்ரோவும் மட்டுமே இருக்கப் பெற்றிருந்தாலும், அவை இரண்டுக்கு நடுவே மாற்றி மாற்றி வேடிக்கை பார்ப்பதில்தான் இந்த விளையாட்டு வளர்ச்சியடைந்தது. இப்பொழுது புத்தகக் கடையில் நூல்களை மேய்வதில் வந்து நிற்கிறது.

பத்து பன்னிரெண்டு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் விருப்பமில்லாத பலவற்றை வடிகட்டுவது முதல் நிலை. அந்த மாதிரி, கண்ணில் கண்டு, கவனத்தை ஈர்த்தாலும், கடைசி பதினொன்றில் ஆட்டக்காரராக களமிறங்காத நான்குப் புத்தகங்கள் குறித்த அறிமுகம், இந்தப் பதிவாக வந்திருக்கிறது.

1. The World of Raymond Chandler: In His Own Words :: Edited by Barry Day

சொல்வனம் மூலமாகத்தான் (http://solvanam.com/?p=29639 ) ரேமண்ட் சாண்ட்லர் அறிமுகமானார். அதனால்தான் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.

எழுத்தாளரின் புனைவை வைத்தே அவருடைய வாழ்க்கையைச் சொல்ல முடியுமா? இந்தப் புத்தகத்தில் ரேமண்ட் சாண்ட்லரின் எழுத்துக்களை வைத்தே அவரைப் பற்றிய குணச்சித்திரத்தை எழுப்புகிறார்கள். 250 பக்கங்கள்; ஒரு பக்கத்திற்கு இரண்டு டஜன் மேற்கோள்கள்.

ஏன் இந்தப் புத்தகத்தை எடுத்தேன்?

நான் இராஜேஷ்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் இராஜேந்திர குமாரும் படித்து வளர்ந்தவன். அவர்களைப் போல் ரேமண்ட் சாண்ட்லரைப் பார்க்கலாமோ?

ரேமண்ட் கதை எழுதும் வேலை குறித்து: – ‘எல்லாப் புத்தகங்களையும் படித்ததால் மட்டும் நல்ல புத்தகங்களை எழுதி விட முடியாது!’
கதாபாத்திரங்களின் முகலட்சணங்கள் குறித்து: – ‘அவனுடைய வாய்க்குள் பல் மருத்துவரின் முழங்கையே நுழைந்து விடும்.’
குரல்களும் பேச்சொலிகளும் குறித்து: ‘அப்பொழுதுதான் ரொட்டி தின்னும் போட்டியில் வெற்றி பெற்றவன் போன்ற சாரீரத்தில்…’
மூன்று பக்கம் தொடர்ச்சியாக உவமைகள்: ‘அவனைப் பார்த்தால் இரும்படிப்பவனின் கௌபீனம் போன்ற கவர்ச்சி கிடைத்தது.’

எனக்கு பட்டியல்கள் மிகவும் பிடிக்கும். இந்தப் புத்தகம் ரேமண்ட் சாண்ட்லர் எழுதிய நூல்களில் இருந்தும் கடிதங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட மேற்கோள்களின் தொகுப்பு. அந்த மேற்கோள்களைக் கொண்டு, ரேமண்ட் எப்படி சிந்திக்கிறார் என்றும் அவரின் எண்ணங்கள் எவ்வாறு காலப்போக்கில் மாறுகிறது என்றும் இங்கிலாந்து, சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற நகரங்கள் குறித்த அவருடைய விவரிப்புகளையும் ஒருங்கே அறிய முடிகிறது. அதனால் இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்தது.

ஆனால், கடகடவென்று நாலைந்து சொற்றொடர்களைப் படிக்கும்போது ஒரு கோர்வை கிடைக்க வேண்டும். நாவலில் அது கிடைக்கும். இந்தப் புத்தகமோ ரேமண்ட் சாண்ட்லரின் பைபிள் போல். அதனால், இருபத்தி இரண்டாம் பக்கத்தில் இரு மேற்கோள்கள், எழுபத்தி ஆறாம் பக்கத்தில் மூன்று வாக்கியங்கள் – எனப் படித்து, மூடி வைத்து விட வேண்டும். முதலில் ரேமண்ட் சாண்டலரின் ஒரு நூலையாவது முழுமையாக வாசிப்போம். அதன் பின் இது போன்ற தொகுப்புகளுக்குள் நுழையலாம் என எண்ணி மூடி கடையிலேயே விட்டு வைத்து விட்டேன்.

2. Your Fathers, Where Are They? And the Prophets, Do They Live Forever? by Dave Eggers

டேவ் எக்கர்ஸ் மெக்ஸ்வீனியைத் (McSweeney’s) தோற்றுவித்தவர். சுவாரசியமான பல நூல்களை எழுதியவர். பின் நவீனத்துவம் என்றால் எனக்குப் பிடிக்கும் என்பதை உணர்த்தியவர்.

‘உங்கள் தந்தையர்கள் எங்கே இருக்கிறார்கள்? அப்புறம் அந்த புனித குருமார்கள் சாஸ்வதமாக வாழ்வார்களா?’ என்று தலைப்பு சுண்டியிழுத்தது. அது விவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

இந்த நூல் முழுக்க முழுக்க உரையாடல்களால் ஆனது. ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், அவளின் உயரம், அங்க அடையாளம், உடை அலங்காரம், நடை பாணி என்றெல்லாம் விலாவாரியாக சித்தரிக்க முடியாது.

நீங்கள் கேட்கலாம்… திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் உரையாடல் மட்டும்தானே வெளிப்படுகிறது? ஆனால், சினிமாவில் அந்தக் கதாபாத்திரத்தின் முகமும் நடிப்பும் தசைகளும் அவர்களுக்குப் பின்னே இருக்கும் அரங்கப்பொருட்களும் அந்தக் குறிப்பிட்ட மனிதரின் குணச்சித்திரத்தை நமக்கு நன்கு அறிமுகம் செய்யும். இந்த நாவலில் அந்த மாதிரி பின்னணிக்கே இடமில்லை.

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்களை, ‘டவுட்டிங் தாம்ஸ்’ என்பார்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் தாமஸ். அவனுடைய அத்யந்த சிநேகிதனை இரண்டாண்டுகளுக்கு முன்பு காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டது. அவனுடைய தோழனை ஏன் கொன்றார்கள் என்றறிந்து கொள்வதற்காக ஏழு பேரை தாமஸ் கடத்துகிறான். அந்த ஏழு பேர் யார்? எப்படி அவர்களை கடத்துவதற்கு தீர்மானிக்கிறான்? இதுதான் நாவல்.

அமெரிக்காவில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் காவல்துறை அதீதமாக செயல்படுகிறது என்னும் சஞ்சலம் வீதிகளில் வீரியமாக கோஷமாக செயலாக்கத்திற்கு அடிக்கல்லாக முழங்குகிறது. ஃபெர்கூசனில் மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டது போன்ற சம்பவம்தான் – இந்தக் கதையில் தாமஸின் நண்பனுக்கு நிகழ்ந்திருக்கிறது. வெறுங்கையை வீசிக் கொண்டிருப்பவன் தன்னைத் தாக்கி, தீர்த்துக்கட்டிவிடக் கூடும் எனத் தற்காப்பைக் காரணம் காட்டி, காவல்துறை சிறுபான்மையினரைக் கொல்வதை அன்றாடம் செய்திகளில் பார்க்கிறோம். நியு யார்க் நகரத்தின் கார்னர் ‘என்னால் மூச்சு விடவில்லை’ என்று கதறினாலும், கறுப்பராக இருப்பதால் கண்டு கொள்ளாத காவல்துறையை செய்தித்தாளில் படிக்கிறோம். அந்த மாதிரி செய்தியாகி, மறந்து போன நண்பனுக்காக உண்மையறியும் குழுவின் ஒற்றை படைவீரனாக தாமஸ் எப்படி துப்பு துலக்குகிறான் என்பது நாவலின் உள்ளடக்கம்.

இந்த மாதிரிக் கதையில் தாமஸ் போன்ற பாத்திரத்தை படு புத்திசாலியாக சித்தரிக்க முடியாது. அந்த மாதிரி சாமர்த்தியமானவர்களாக இருந்தால், மனநிலைப் பிழற்ந்தவர் போல் ஏன் கடத்தலில் ஈடுபட்டு, கஷ்டப்படுகிறார்கள்? அந்த மாதிரி அதிமனிதர்களால் நேரடியாக பிரச்சினையின் மூல சூட்சுமத்தை அறிய முடியும். அதற்காக, அந்த தாமஸ் கதாபாத்திரத்தை படுமுட்டாளாக்கவும் சித்தரிக்க முடியாது. அவ்வாறு காண்பித்தால், அமெரிககாவின் எம்.பி.யையும் மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரையும் அவர்களுடைய பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து கவர்ந்து கொண்டு வருவது நம்ப இயலாமல் போய்விடும். இந்த மாதிரி சித்தரிப்பையெல்லாம், உரையாடலின் மூலமாகவே, இருவருக்குள் நடக்கும் சம்பாஷணைகளாகவே, எவ்வாறு எட்கர்ஸ் எழுதி இருக்கிறார்?

நிச்சயம் வாசிக்க வேண்டும்.

ஆனால், புனைவுகள் என்பது நூலகத்தில் எடுக்கப் பட வேண்டியது என்பது என் கருத்து. நான் பல்லாண்டு காலமாக நெட்ஃப்ளிக்ஸ் வைத்திருக்கிறேன். நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் என்று சென்ற வார கணக்கு வழக்கின் படி நூற்றி ஆறுபத்தி நான்கு படங்களைப் பட்டியலில் சேமித்து வைத்திருக்கிறேன். அந்த 164 சினிமாக்களை விட்டுவிட்டு, நேற்று வந்த “இடா” படத்தை இன்றே பார்த்தும் விடுகிறேன். ஏற்கனவே விழைவுப் பட்டியலில் இருக்கும் 164ம் அப்படியே படு பத்திரமாக நீடுழி பன்னெடுங்காலம் அவ்வாறே அந்த இடத்தில் நீடிக்கும். இந்த மாதிரி சோம்பேறிக்கு, நூலகத்தில் கொடுக்கப்படும் கெடுவே சாலச்சிறந்தது. நான்கு வாரம் தருவார்கள். அதற்குள் கிடுகிடுவென்று படித்து விட்டு, எடுத்த இடத்திலேயே திரும்பக் கொடுக்க வேண்டும். நூலின் சுவாரசியமும் குன்றாமல், அதற்கான அவசரத்தையும் கருத்தில் கொண்டு, புத்தம்புதிய பரபரப்பான விற்பனையில் உள்ள புத்தகத்தையும் பத்து பைசா செலவில்லாமல் படிக்கலாம். எனவே, உள்ளூர் வாசக சாலையில் இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்து வைத்திருக்கிறேன். கூடிய சிக்கிரம் கையில் வந்துவிடும்.

இரண்டு புத்தகங்கள் ஆகிவிட்டது. பாக்கி இரண்டு புத்தகங்கள்? படித்தால்தானே, அவற்றைப் பற்றி குறிப்புகள் எழுத முடியும்!?!

3. God’s Planet by Owen Gingerich

4. Bohemians, Bootleggers, Flappers, and Swells: The Best of Early Vanity Fair

One Gram Short By Etgar Keret: New Yorker

அமெரிக்காவில் இப்பொழுது கொண்டாட்ட காலம். நன்றியறிவித்தலை ஒட்டி நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விருந்து கொடுக்கிறேன். அலுவலில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடக்கும் களியாட்டுகளுக்குச் செல்கிறேன். புத்தாண்டை முன்னிட்டு ரொம்ப நாளாகத் தொடர்பில் இல்லாதவர்களையும் ஏதாவதொரு ஜமா சந்திப்பில் முகமன் சொல்லி சந்திக்கிறேன். கையில் போஜனம்; முகத்தில் புன்னகை; எப்பொழுதோ தொடர்பறுந்த கிரிக்கெட்டோ, யாரோ கண்டுபிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் போன்ற நிரலியையோ விவரித்து சாப்பாட்டை உள்ளே தள்ளுகிறேன்.

டிசம்பர் முதல் வார நியு யார்க்கரில் எட்கர் (Etgar Keret) எழுதிய ”ஒரு கிராம் குறைகிறது” (One Gram Short) கதையும் இது போன்ற மனநிலை கொண்ட நாயகனையும் ஊட்டமற்ற சம்பாஷணையில் இயங்கும் வாழ்க்கையையும் சிறுகதை ஆக்குகிறது.

காபி கடையில் பணிபுரியும் பெண்ணை ஒருவன் விரும்புகிறான். அவளை திரைப்படத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறான். ஆனால், “படத்திற்கு வருகிறாயா?” என பட்டென்று கேட்டால், காதலை பட்டென்று போட்டு உடைத்து நிராகரிப்பிற்குக் கூட வழிவகுக்கும். அதனால், நாசூக்காக, மீசையில் மண் ஒட்டாமல் வினவ விரும்புகிறான். சினிமாவிற்கு பதில் போதை மருந்தடிக்க அழைக்க முடிவெடுக்கிறான். அவனுக்கு போதை சரக்கு எப்படி கிடைத்தது? அவள் அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொன்னாள் என்பது பாக்கி கதை.

இங்கே படிக்கலாம்: http://www.newyorker.com/magazine/2014/12/01/one-gram-short

டட்ச்சு வீரம் (நெதர்லாந்து நாட்டவரின் – Dutch courage) புகழ் பெற்ற பதம். முதலாளியிடம் சம்பள உயர்வு கேட்க வேண்டுமா? நேரில் சென்று பேச பயமாக இருக்கும். கொஞ்சம் மதுவருந்திய பிறகு, அதே முதலாளியிடம் சென்று, கேட்கவேண்டிய சம்பள உயர்வை, போதையின் உதவியோடு எதிர் கொள்வதை நெதர்லாந்து நாட்டினர் போல் நடந்து கொள்கிறாய் என கிண்டலடிக்கிறார்கள்.

இங்கே டோப்பு அடிக்க அழைப்பதும் டட்ச்சு வீராப்புதான். “நான் அந்த மாதிரி போதை மருந்தெல்லாம் சாப்பிடுவதில்லை!” என்று சொல்லிவிட்டால், “நானும் உல்லு லுவாக்கட்டிக்குத்தான் அப்படிச் சொன்னேன்.” என மழுப்பி விளையாட்டாக்கிப் பேச்சை மாற்றி விடலாம். தன்னுடைய அழைப்பிற்கு ஒத்துக் கொண்டுவிட்டால், முதல் படியாக வைத்துக் கொண்டு, காதல் கோட்டை எழுப்புவதற்கான அஸ்திவாரத்தை அமைக்கலாம்.

தமிழகக் கல்லூரிகளில் காதல் எப்படி முளைக்கிறது? தமிழ் சினிமா மட்டுமே பார்த்து வளர்ந்தவர் என்றால், பெண்களைத் துரத்துவதாலும், அவர்களின் பார்வையிலேயே படும்படி உலாவுவதாலும், அவர்களை பின் தொடர்வதாலும் ஆடவருக்கும் மகளிருக்கும் அன்பு பிறக்கிறது என நினைத்திருப்போம். ஆனால், உண்மையிலேயே, இந்தியாவில் காதல் எவ்வாறு அரும்புகிறது? சந்தேகாஸ்தபமில்லாமல், சங்கோஜமில்லாமல் நட்பும், நட்பின் பின் சென்று தொடர்ச்சியான வளர்ச்சியாக காதலும் எவ்வாறு உருவாகிறது?

நியு யார்க்கரில் வெளிவந்த சிறுகதையின் பேசுபொருள் அதுவல்ல என்பதால், அந்த ஆராய்ச்சியை இன்னொரு முறை வைத்துக் கொள்வோம். ஆனால், மேலை நாடுகளில் நேசத்தைப் பகிர போதையைப் பகிர்வது சகஜமான கால்கோள் வாய்ப்பாக இருக்கிறது.

சூழலை இளக்கவும், பரஸ்பரம் கைவிரல்களின் நுனிகளை இயல்பாகத் தொடவும், சொக்குப்பிடி வைத்தியமாக உதவுகிறது. அவனுக்கும் அதுதான் எண்ணம். போதை மருந்தை உட்கொள்வது சட்டப்படி குற்றம். அதை இருவரும் செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மதுவருந்துவதை விட இணக்கமான நிலை; அதே சமயம் பாலுறவை விட மயக்கமான நிலை.

இப்படி காதலையும் போதையையும் மட்டும் பேசியிருந்தால் சாதாரண தமிழ்த் திரைப்படம் போல் இந்தக் கதையும் பத்தோடு பதினொன்றாகி இருக்கும். பசலை நோயைக் கொண்டு புனைவைத் துவங்கியபின், மின்னல் வேகத்தில் இஸ்ரேலின் அரசியல் சூழலையும், சட்டத்தின் சஞ்சலங்களையும் இணைக்கும் லாவகத்தில்தான் இந்தச் சிறுகதை முக்கியம் பெறுகிறது.

இந்தக் கதை ஹீப்ரு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் கண்டிருக்கிறது. இவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்பு என்பதை புத்தகத்தின் இறுதியில், நூற்குறிப்பு கொண்டே அறிய முடியுமாறு சுலபமான மொழிநடையில் ஆங்கிலமாக்கம் செய்திருக்கிறார் நேத்தன் (Nathan Englander).

இஸ்ரேலில் போதை மருந்து கிடைப்பது கஷ்டமாகி இருக்கிறது. சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டிருக்கிறது. எகிப்தில் இராணுவ ஆட்சி. இஸ்லாமிய நாடு என்னும் ஐஸிஸ் வேறு எல்லாப்புறத்திலும் முற்றுகை இட்டிருப்பதால், போதைவரத்து ஸ்தம்பித்திருக்கிறது. பத்து கிராம் வசியமருந்து கிடைக்க என்ன பாடுபடுகிறார்கள் என்னும் இடியாப்பச் சிக்கலை குழப்பமின்றி மனதில் பதிக்கிறார் கதாசிரியர்.

வக்கீலிடம் சென்றால் போதை மருந்து கிடைக்கும். வக்கீலுக்கு எப்படி போதை மருந்து கிடைத்தது? வக்கீலுடைய வேலைக்காரருக்கு புற்றுநோய். வேலைக்காரருடைய வலி தெரியாமலிருக்க, வக்கீல் மூலமாக, வேலைக்காரருக்கு போதை மருந்தை படியளக்கிறது அரசாங்கம்.

வேலைக்காரருக்குக் கொடுக்க வேண்டிய போதை மருந்து, எப்படி கதையின் நாயகனுக்கு வந்து சேரும்? அதற்கு வக்கீலுக்கு சாதகமாக நடக்க வேண்டும். அன்றைய தினத்தில் வக்கீலின் கட்சிக்காரர், நஷ்ட ஈடு கேட்டுத் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வருகிறது. பத்து வயதுச் சிறுமியை பாலஸ்தீனியனின் கார் மோதிக் கொன்றுவிட்டது. பாலஸ்தீனியனுக்கு ஆதரவாக அவனுடைய குடும்பமே அணி திரள கோர்ட்டுக்கு வருகிறது. ஆனால், விபத்தில் இறந்த பத்து வயதுச் சிறுமிக்கு, பெற்றோர் இருவரைத் தவிர எவரும் ஆஜராகவில்லை. கதாநாயகனும் அவனுடைய நண்பனும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். “அந்த பச்சிளம் குழந்தையைக் கொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்தது!?” என்று அராபியனைப் பார்த்து கண் சிவக்க, நெஞ்சம் புடைக்க வசனம் பேச வேண்டும். நீதிபதியின் மனம் உருக வேண்டும்.

ஒழுங்காக நடித்தால் பத்து கிராம் போதை இனாம். கேஸ் தோற்றுவிட்டால், போதை மருந்து கிடைக்காது.

கடமையைப் போல் கத்துகிறார்கள். கொடுத்ததிற்கு மேல் கூவுகிறார்கள். பெருத்த தொகை தீர்ப்பாகிறது. போதை மருந்தும் கைமாறுகிறது. ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுகிறேன். பார்ட்டிகளில் அளவளாவும்போது உள்ளார்ந்து உரையாடுகிறோமா? கதையின் நாயகனும் அவ்வாறே எதையும் ஆத்மார்த்தமாக செய்வதில்லை. கோர்ட்டில் நியாயத்திற்காக சத்தம் போடுவது போல் தோன்றினாலும், பின்னால் கிடைக்கப் போகும் பரிசுப் பொருளுக்காகவே வேஷம் போட்டு உரக்க கோஷமிடுகிறான். காபிக்கடையில் தனக்குப் பரிமாறும் பெண்ணுடன் சினிமாவுக்கு உல்லாசமாகப் போக எண்ணமிருந்தாலும், அதை வெளிப்படையாகக் கேட்காமல், “போதை மருந்து வைத்திருக்கிறேன்… சேர்ந்து அடிக்கலாமா?” என்றுதான் பேச்சைத் துவங்கத் திட்டமிடுகிறான்.

நம்முடைய அசல் கேள்விகள் வேறு எங்கோ ஒளிந்திருக்கின்றன. ஆனால், அதற்கு முலாம் போடுகிறோம். நிஜமாக சொல்ல வேண்டியதை முக்காடு போட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு முஸ்தீபுகளில் காலம் கடத்துகிறோம். ”இன்றைக்கு செம மழை இல்ல…!” என்று பேச்சைத் துவக்குகிறோம். “இந்தச் செய்தியைப் பார்த்தியா..?” என்று மின்னஞ்சல் போடுகிறோம். “உனக்கு நெட்ஃப்ளிக்ஸில் மார்க்கோ போலோ பிடிக்கும்.” என்று குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.

இந்த மாதிரியெல்லாம் சுற்றி வளைக்காமல் கதாசிரியரிடமே பேட்டி எடுத்து இருக்கிறார்கள். (http://www.haaretz.com/life/books/.premium-1.607239 )

நான் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் இருந்து துரத்தப்பட்டோரின் மகன் – நிஜமாகவே ஹோலோகாஸ்ட் அழித்தொழிப்பில் பாதிப்புக்கு உண்டானோர் அல்ல; ஆனால், அந்த மனநிலையில் இருப்போரின் மகன். ஒவ்வொரு நாளும் தாங்கள் உயிரோடு வசிப்பதற்கு இடம் இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு துவக்குபவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன. தன்னுடைய மூதாதையர்களின் பிறந்த இனத்திற்காக தான் துன்பப்படும் சூழல் இல்லை என எண்ணி கொண்டாடுபவர்கள் அவர்கள். சொந்த மொழியைப் பேசுவதால் விலக்கிவைக்கப்பட மாட்டோம் என நம்பிக்கையோடு வசிக்கிறார்கள். இஸ்ரேலின் தேசிய கீதமான “ஹத்விகா”வில் இந்த சொற்றொடர் உண்டு: ’எங்கே அவர்கள் சுதந்திர மக்களாக இருக்க முடியுமோ, அந்த நம்முடைய பூமி!’ (Where they could be a free people in our land). எனக்கு இது முக்கியமாகப் பட்டது. இந்த இடத்திற்கு வருவதற்கு என்னுடைய தாய், தந்தையர் ரொம்பவேக் கஷ்டப்பட்டார்கள்.

ஹீப்ரு மொழியில் என்னுடைய ’கெரட்’ என்ற பெயருக்கான அர்த்தம் ‘சவால்’. நான் பிறந்ததே பெரிய வெற்றிதான். இந்த மண்ணில், இந்த இனத்தில், இவ்வளவு அடக்குமுறையைத் தாண்டி உயிர் கொண்டதே சவாலை ஜெயித்த மாதிரி. நான் விடிகாலை ஆறு மணிக்கு அப்பாவை எழுப்பினால் கூட, அவரின் ஓய்வை புறந்தள்ளிவிட்டு, மகிழ்ச்சியோடு என்னோடு விளையாடுவார்.

இதே உரிமை சக பாலஸ்தீனியர்களுக்குத் தரப்படாமல், தாய்மண்ணில் தன்னுடைய புறத்தோற்றத்திற்காக சிமிழுக்குள் முடக்கப்படுவது கதையில் பூடகமாக வெளிவந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் உள்ள உறவு குறித்து புகழ்பெற்ற நகைச்சுவை உண்டு. இஸ்ரேலில் சட்டம் படித்து முதலாம் வகுப்பில் தேறி பட்டம் வாங்கிய பாலஸ்தீனியன் இஸ்ரேலின் முக்கிய இடமான டெல் அவிவ் நகரத்தின் புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கேட்டுச் செல்கிறான். அந்த நிறுவனத்தின் தலைவர், அவனை வரவேற்று, “இதுதான் உன்னுடைய ஜாகை. பிடித்திருக்கிறதா?” என்று ஐம்பதாவது மாடியில் ஜன்னலோரமாக இருக்கும் பிரும்மாண்டமான அலுவல் அறையை அவனுக்குக் காட்டுகிறார்.

அவனால் நம்ப இயலவில்லை. “நம்பிக்கையில்லையா… இந்தா கார் சாவி. அதோ இருக்கும் லாம்போர்கினி உன்னுடையது. இப்போவாது ஒகேயா?” என்கிறார். அவன் ஸ்தம்பித்துப் போய் “நீங்கள் என்னுடன் விளையாடுகிறீர்கள்!” என்கிறான். கம்பெனி தலைவரும், “வேலை கேட்க வந்து, நீதானே முதலில் ஜோக் அடிக்க ஆரம்பித்தாய்!” என்றாராம்.

இதே காமெடியை பாகிஸ்தான் – இந்தியர் என்று கூட மாற்றலாம். அந்த மாதிரி அரசியல் சூழலிலும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளிலும் சக மனிதரின் நாணயத்தின் மேல் விசுவாசமின்மையும் கொண்ட சமயங்களில் வாழ்கிறோம். அதன் பின்னணியிலேயே இனப் பாகுபாடு தோன்றுகிறது. இனவெறி மிகுந்து வன்முறை வளர்கிறது. கதையின் நடுவில், அந்த ஓட்டுனரை “நீ ஒரு தீவிரவாதி!” என்கிறான் நாயகனின் நண்பன். கொள்கையில் தீவிரமாக இருப்பவரை ‘தீவிரவாதி’ எனலாம். பயங்கரமான செயல்களில் துணிந்து இறங்குபவரை ‘பயங்கரவாதி’ எனலாம். ஆனால், இஸ்லாமைச் சார்ந்த ஒருவரை ‘தீவிரவாதி’ என்னும்போது அர்த்தமே மாறி ஒலிக்கிறது என்பதை உணர முடிகிறது.

கருப்பர்களை இன்ன சொல் கொண்டு அழைக்கக் கூடாது என்பது போல்… யூதர்களை இப்படி விளிக்கக் கூடாது என்பது போல்… பிராமணர்களை ‘பாப்பான்/பாப்பாத்தி’ எனச் சொல்வது வசையானது போல்… சில வார்த்தைகளும் வழக்குமொழிகளும் சந்தர்ப்பத்திற்கேற்ப, அழைக்கப்படுபபவருக்கேற்ப தகாத சொல்லாக மாறிவிடுகிறது. இந்தப் பகுதி இந்தக் கதையின் உச்சகட்டம்.

போதை மருந்து உட்கொள்வதோ, அதைக் கையில் வைத்திருப்பதோ, வாங்குவதோ, விற்பதோ – சட்டப்படி குற்றம். ஆனால், அதே நாட்டில், முஸ்லீமைப் பார்த்து, சட்டத்தை இரட்சிக்கும் நீதிமன்றத்தில் வைத்து, “தீவிரவாதி!” என முழங்குவது குற்றமேயல்ல என்று நம்முடைய எண்ணம் மரத்துப் போயிருக்கிறது.

இப்படி எல்லாம் கதை முகத்திலறைந்தாற்போல் பேசுவதில்லை. சுவாரசியமாகப் பறக்கிறது. கதையின் போக்கில், வாசிக்கும்போது இதெல்லாம் நெருடலாக, பிரச்சார பீரங்கியாகத் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. சம்பவங்கள் வருகின்றன. மனிதர்களின் குணாதிசயங்கள் தெரிகின்றன. அவ்வளவுதான். ஆனால், இதெல்லாம் வாசகரின் புரிதலுக்கே வைத்துவிடுவதில்தான் கதாசிரியரின் சாமர்த்தியம் தெரிகிறது.

இதே ஸ்டைலை இதே வகையில் இன்னொரு துறையில் கையாள்பவர்கள் கோயன் (Coen) சகோதரர்கள். அவர்களின் பார்ட்டன் ஃபின்க் (Barton Fink) திரைப்படத்தையும் இந்தக் கதையையும் ஒருங்கே வைத்துப் பார்க்கலாம்.

பார்டன் ஃபின்க்கில் பல திரைப்படங்களுக்கான குறியீடுகள் ஒளிந்து கொண்டிருக்கும். அந்தந்தப் படங்களைப் பார்த்திராவிட்டாலும், பார்ட்டன் ஃபின்க் சுவாரசியமாகவே இருக்கும். இன்னொரு முறை பார்ட்டன் ஃபின்க் பார்த்தால், வேறொரு உள்ளர்த்தமும் சூட்சுமம் பிடிபடும். இந்த நியு யார்க்கர் சிறுகதையும் அவ்வாறே அமைந்திருக்கிறது.

கோயன் சகோதரர்களின் திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அழுவதா? சிரிப்பதா!’ என்னும் குழப்பம் எழும். பார்ட்டன் ஃபின்க் போன்ற கதாபாத்திரங்களின் தாற்காலிக வெற்றிகளுக்காக அவர்களின் நிர்த்தோஷமின்மை மெல்ல இறப்பதையும் உணர முடியும். இந்தக் கதையின் நாயகனும் தன்னுடைய வீரத்தழும்பைக் கொண்டு காதலில் அடியெடுத்து வைக்கும் அர்த்தமின்மையை உணர முடிகிறது.

Pam Nicholson: Enterprise’s $15 billion CEO

உங்களால் மாட மாளிகைகள் கட்ட முடியலாம்; மூலதனத்தை கொட்ட முடியலாம். ஆனால், தொழில் துலங்க, திறன்பணி மக்கள் அவசியம்.
– தாமஸ் ஜே வாட்ஸன் (ஐ.பி.எம். நிறுவனத்தை தோற்றுவித்தவர்)

1981ஆம் வருடம். அமெரிக்காவிற்கு சிரமமான காலகட்டம். ஜிம்மி கார்ட்டர் தேர்தலில் தோற்று ரொனால்டு ரேகன் ஜனாதிபதி பதவியில் அமர்ந்திருந்தார். மற்ற மேற்கத்திய நாடுகளைப் போலவே அமெரிக்கப் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்த தருணம். வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், வங்கிகள் திவாலாகுதல் என நம்பிக்கையற்ற நிலை குடிகொண்டிருந்த நேரம்.

இந்த நிலையில்தான் கல்லூரியை முடித்து தன் பி.ஏ. பட்டப்படிப்பைப் பெற்றுக் கொண்டு வேலை தேடத் துவங்குகிறார் பமீலா நிக்கல்ஸன். பாம் (Pam) என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் பமீலாவிற்கு, ‘ஸ்திரமான வேலை’ என்பதே அன்றைய தேவையாக இருந்தது.

‘நுகர்வோர் பொருளாதார’த்தில் இளங்கலை பட்டம் பெற்றவருக்கு வாடகைக்கார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. “பயிற்சி மேலாளர்” என்னும் நாமகரணமிட்ட பதவி என்றாலும், அன்றாட வேலையாக அனைத்தும் செய்ய வேண்டியது பமீலாவின் கடமை.

வாடகைக்கு கார் எடுக்க வரும் வாடிக்கையாளரிடம் முகஞ்சுளிக்காமல் பேசுவது, அவருக்குத் தேவையான கார் கொடுப்பது, விற்பனையைப் பெருக்க சந்தையாக்கத் திட்டங்களை நிறைவேற்றுவது – போன்றவை முக்கிய வேலைகள். சிகரெட் குப்பைகளுடனும் இன்ன பிற அசுத்தங்களுடனும் திரும்பி வரும் கார்களை கழுவித் துடைப்பது, புத்தம்புதிய கார் போல் சுத்தம் செய்வது, சக வேலையாள்கள் வேலைக்கு வராமல் மட்டம் போடும்போது, தன் வேலை நேரம் தாண்டியும் செயலாற்றுவது – போன்றவை எழுதப்படாத கடமைகள்.

தங்களுடைய தொழிலாளர்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு தருவதில் என்டர்ப்ரைஸ் (Enterprise) வாடகைக் கார் நிறுவனம் துரிதமாக செயல்பட நினைத்தது என்றால், பமீலா நிக்கல்ஸனின் செயல்திறன் அந்த வேகத்தை நிஜத்தில் நிறைவேற்றியது. குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்த ஒன்பதே மாதங்களில், உள்ளூர் நிறுவனத்தில் துணை மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.

இது அமெரிக்கா உருமாறிக் கொண்டிருந்த காலகட்டம். இரும்பும் எஃகும் காய்ச்சி உருக்கிக் கொண்டிருந்த பிட்ஸ்பர்க் போன்ற நகரங்கள் மங்கிக் கொண்டிருந்தன. கலிஃபோர்னியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு புகழ் ஓங்க ஆரம்பித்த நேரம் இது. பமீலாவை கலிஃபோர்னியாவிற்கு சென்று என்டர்பிரைஸ் வாடகைக் கார் சேவையைத் துவங்குமாறு மேலிடம் பணிக்கிறது.

கலிஃபோர்னியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பத்தே பத்து என்டர்பிரைஸ் வாடகைக் கார்களை இருபத்தியேழாயிரம் கார்களாகப் பெருக்குகிறார். ‘சல்லிசாகக் காரை வாடகைக்கு எடுக்க வேண்டுமா? என்டர்ப்ரைசிடம் வாங்க!’ என்பதை நுகர்வோர் நெஞ்சில் ஆழமாகத் தைக்கிறார்.

பட்டி தொட்டியெங்கும் வாடகைக் கார் வைத்திருப்பது என்டர்பிரஸின் வர்த்தக சூட்சுமம். அதையும் கடைபிடிக்கிறார். கூடவே, விமான நிலையங்களிலும் என்டர்பிரைஸ் கொடியைப் பறக்க விட ஆரம்பிக்கிறார்.

அதன் அடுத்த கட்டமாக, கார் பழுதுபார்க்கும் இடங்களிலும் ‘வாடகைக்குக் கார் எடுக்கலாம் வாங்க’ என்று புதிய தலங்களுக்குச் சென்று என்டர்பிரஸ் பெயரை எங்கும் நிறுவுகிறார். அதுவரை கார் ரிப்பேர் செய்யும் இடங்களில் காரை வாடகைக்கு விடுவது என்பது செயலில் இல்லை. பமீலா நிக்கல்ஸனின் என்டர்பிரைஸ் செய்வதைப் பார்த்து பிற வாடகைக் கார் நிறுவனங்களும், இந்த செயல்முறையை பிரதியெடுக்க ஆரம்பித்தன.

மேலிடத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவரை கலிஃபோர்னியாவில் இருந்து செயின்ட் லூயிஸ் தலைமையகத்திற்கு அழைக்கிறது. கலிஃபோர்னியாவில் சோதனையாக நிறைவேற்றிய புதிய திட்டங்களை நாடெங்கும் கொண்டு செல்ல அவரை பணிக்கிறது. அதையும் வெற்றிகரமாக செய்து காட்டுகிறார்.

என்டர்பிரைஸிற்கு அப்போதைய பிரச்சினையாக அதன் நியு யார்க் கிளை அமைந்து இருந்தது. இருபதாயிரம் வாடகைக் கார் புழங்கினாலும், அதற்கேற்ற லாபம் ஈட்டாத பிரிவாக நியு யார்க் இருந்தது. பாம் நிக்கல்ஸனை நியு யார்க் சென்று நிலைமையை சரி செய்யுமாறு மேலிடம் பணித்தது.

கலிஃபோர்னியா மேற்கு கடற்கரை என்றால், நியு யார்க் கிழக்கு மூலை. இரண்டிற்கும் கலாச்சாரமும் தட்ப வெப்பமும் விண்டோஸுக்கும் ஆப்பிள் மெகின்டாஷுக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஆப்பிள் நிறுவனமும் கணினி தயாரிக்கிறது. மைக்ரோசாஃப்ட் கணினியும் கிடைக்கிறது. இருந்தாலும், உள்ளே சென்றால்தான் எவ்வளவு வேறுபாடுகள்?

கலிஃபோர்னியாவிற்கு பாம் நிக்கல்ஸன் சென்றபோது, அந்த இடத்தில் என்டர்பிரைஸ் முளைக்கவேயில்லை. வெறும் ஆறு கிளைகள் இருந்தன. எனவே, புத்தம்புதியதாக நிறுவனத்தைத் துவங்கி, தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை நியமித்து, திறமைசாலிகளை சட்டென்று முன்னேற்றி, கடும் உழைப்பாளிகளை தட்டிக் கொடுத்து, மூன்னூறு கிளைகளாகப் பெருக்கி, மாபெரும் வளர்ச்சியை கட்டியமைக்க பமீலாவால் முடிந்தது.

ஆனால், நியு யார்க்கில் வேறு விதமான சிக்கல்கள். ஏற்கனவே, மாபெரும் வர்த்தகம் நடக்கிறது. இருபதாயிரம் கார்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் ஆங்காங்கே பழம் பெருச்சாளிகள் உட்கார்ந்து கொண்டு மேலிடத்தை பார்த்து, ‘உனக்கும் பெப்பே… உங்க முதலாளிக்கும் பெப்பே’ என கெக்கலிக்கின்றனர். இந்த இடைத்தரகர்களை பார்த்து உண்மையாக உழைக்க விரும்புபவர்களும் தங்களின் செயலூக்கத்தை கைவிட்டு சோர்வடைகின்றனர். இதற்கு நடுவே, வர்த்தகத்தை மேலும் பன்மடங்காக அதிகரிக்கக் கோரும் தலைமையகத்தையும் திருப்தி செய்ய வேண்டும்.

புகழ்பெற்ற மகாபாரதக் கதை ஒன்று உண்டு:

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்கள் அவனை துரத்த ஆரம்பித்தன. மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்.

அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான்.

நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே கொடிய வனவிலங்குகள் காத்துக்கொண்டிருந்தது.

அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன.

நியு யார்க் சென்ற பமீலா நிக்கல்சனின் நிலையும் இதுதான். அப்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சிமுகமாக விளங்கியதை அடுத்து என்ன எதிர்கொள்வோம் என்றறிய இயலாத பாழும் வனம் என எண்ணலாம். பெருங்காடு என்பதை நியு யார்க் மாநில என்டர்பிரைஸ் கார் கிளை என்றும் வைத்துக் கொள்ளலாம். அங்கேயே தின்று பெருத்த விலங்குகளாக, அந்தக் காட்டின் மிருகங்கள் இருக்கின்றன. அவர்களிடம் இருந்து தப்பிக்கப் பார்த்தால், போட்டி வாடகைக் கார் நிறுவனங்கள், என்டர்பிரைஸின் வர்த்தகத்தை விழுங்க பாம்புகள் போல் காத்திருக்கின்றனர். நடுவில் பமீலாவின் வளர்ச்சியைப் பொறுக்காத எலிகள் இவருக்கும் மேலிடத்திற்கும் உள்ள நம்பிக்கைக் கயிறை கழுத்தறுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

செயல்படாத சோம்பேறிகளை நியு யார்க் கிளையில் இருந்து நீக்குவது, நீக்கிய இடங்களை உடனுக்குடன் இளரத்தம் கொண்டு நிரப்புவது, புதிதாக நியமிக்கப்பட்டவர்களை தன்னுடைய வழிகாட்டுதலில் மிளிரச் செய்வது என அதிரடியாக செயல்பட்டு ஐம்பது சதவிகித வளர்ச்சியை நியு யார்க்கிலும் காண்பிக்கிறார் பமீலா.

இந்த மாதிரி இரண்டு ஓரத்திலும், நியு யார்க் மாநிலம் ஆகட்டும், கலிபோர்னியா ஆகட்டும் – தன் திறமையை நிரூபித்ததாலும்; இரண்டு வித்தியாசமான தருணங்களிலும், ஒன்று கால்கோள் இட்டு குழந்தையாக இருக்கும் இடம்; இன்னொன்று நன்கு நடப்பட்டு ஆல மரமாக தழைத்திருக்கும் இடம் – இரண்டு நிலைகளிலும் உத்வேகத்துடன் பணியாற்றியதாலும், சென்ற வருடம் தலைமைப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

என்டர்பிரைஸ் கார் நிறுவனம், முழுக்க முழுக்க தனியார் நிறுவனம். இது வரை குடும்பப் பொறுப்பில் மட்டுமே இயங்கிய நிறுவனம். தாத்தா, பையன், பேரன் என தலைமை பீடத்தில் உட்கார்த்தி வைக்கும் நிறுவனம்.

அந்த மாதிரி அமைப்பில் நிறுவனரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லாத ஒருவர் எவ்வாறு முதன்மைப் பொறுப்பை அடைய முடிகிறது?

எம்.பி.ஏ.வும் பி.எச்டியும் படித்தவருக்குத்தான் தரப்படும் என்றெண்ணப்படும் சீ.யீ.ஓ. (CEO) பதவி வெறும் பி.ஏ. மட்டும் படித்தவருக்கு எவ்வாறு கிடைத்தது?

கார் கழுவுவதில் துவங்கியவர், அந்த நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக ஆவது என்பது சினிமாவிலும் கதைப் புத்தகத்திலும் மட்டுமே கிடைப்பது அல்ல… நிஜத்திலும் நடக்கும் என்று சாதித்தது எப்படி?

ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் இருபதே இருபது பேர்தான் தலைமைப் பதவியில் வீற்றிருக்கிறார்கள். அதில் ஒருவரானது எப்படி?

அவரே சொல்கிறார்… கேட்டுக் கொள்ளுங்கள்:

உசாத்துணை:
1. Enterprise Rent-A-Car நிறுவனத்தின் வலையகம், http://www.erac.com

2. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆகஸ்ட் 4, 2008 “Breaking Barriers: Enterprise Rent-A-Car’s Pam Nicholson” http://www.wsj.com

3. Alison Stein Wellner, “Nothing but Green Skies,” Inc., November 2007, http://www.inc.com;

4. “Mentoring Is a Mission at Enterprise Rent-A-Car,” Diversity in Action, April/May 2007, http://www.diversitycareers.com.

5. மஹாபாரத விதுர நீதிக்கதை: http://temple.dinamalar.com/news_detail.php?id=20480

Drones

2008ன் ஜனாதிபதி தேர்தலில் நின்ற ஒபாமா நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். அவற்றில் ஒன்றை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். பாகிஸ்தானிலும் இன்ன பிற தேசங்களிலும் பதுங்கியிருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளை டிரோன் கொண்டு குறி வைத்து தாக்கி அழிப்பேன் என்றார். ’இளம் அமெரிக்க உயிர்களை இழக்கக்கூடிய ஆபத்து நிறைந்த காலாட்படை அனுப்ப மாட்டேன். கடுமையானப் பொருட்செலவில் அதிவேக விமானங்களை அனுப்ப மாட்டேன். அதே சமயம் தீவிரவாதிகள், நம்மை தாக்கி அப்பாவி உயிர்களை கொல்வதையும் தடுப்பேன். அதற்கு டிரோன் உபயோகிப்பேன்.’ என்றார்.

அதை எப்படி தொழில்நுட்பம் கொண்டு நிறைவேற்றினார் என்பதைப் பார்ப்போம்.

சொல்வனம் இதழ் 59ன் மகரந்தத்தில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது:

கொல்லுவதை மட்டும் மேன்மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொலையாளிகள் மறைந்து இருந்து கொல்லும் ராட்சத யுத்தம் மேன்மேலும் பெருகி வருகிறது. மறைந்து கொல்வதை விமான குண்டு வீச்சு, ராக்கெட் குண்டு வீச்சு, பன்னாடு தாண்டித் தாக்கும் மிஸைல்கள்-இப்படிப் படிப்படியாக தூரத்திலிருந்தும், உயரத்திலிருந்தும் தாக்குவதை முனைந்து வளர்க்கிறார்கள் மேலையர். ஒரு காரணம், மிக அடிப்படையானது. இதை எத்தனை பேர் யோசித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்கில் குழந்தைகள் பிறப்பது மிகவும் குறைந்து விட்டது. போருக்குப் போய்ச் சாக இளைஞர்கள் முன்னளவு தயாராக இல்லை, அத்தனை எண்ணிக்கையிலும் அவர்கள் இல்லை. முதியோர்கள் கூட்டம் பெருத்து வருகிறது. உலக வளங்களில் பெரும்பகுதியை இன்னமும் கபளீகரம் செய்து வாழும் மேற்குக்குத் தம் வாழ்விலும் வசதி குறையக் கூடாது, தம் நிலங்களில் இதர நிலப்பகுதிகளிலிருந்து மனிதர்கள் உள்ளே நுழையக் கூடாது. அதே நேரம் பிற நிலப்பகுதிகளில் கிட்டும் கனிமங்களும் எரிபொருட்களும், தொழிலுற்பத்திப் பொருட்களும் தம் நாடுகளுக்கு மலிவு விலையில் பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இப்படிப் புலி வாலைப் பிடித்த கதை அவர்களுடையது.

எனவே போர்களில் ஆட்களை இழக்காது ஆயுதங்களால் மட்டும் தாக்க மேன்மேலும் திட்டமிட்டு சாதிக்கிறார்கள். கொல்லப்படும் மனிதரை அருகில் பார்த்தால், தொலைக்காட்சிகளில் ஊறி வளர்ந்து எதையும் உளநிலைப் பார்வையிலேயே பார்த்துப் பழக்கமான முதலியப் பண்பாட்டு மனிதர்களுக்கு மிக்க மன உளைச்சல் ஏற்படுகிறதாம். ஆனால் அதனால் கொல்வதை விடுவார்களா என்றால் அதெப்படி முடியும்? அது பண்பாட்டில் ஊறிப் போய் விட்டது. அதனால் நேரில் பார்க்காமல் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொல்வதை ஒரு பெரும் தொழில் நுட்பமாக வளர்க்கிறார்கள். ட்ரோன் என்று அழைக்கப்படும் ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மிக்க பயனுள்ளவையாக இன்று ஆகி விட்டன என்றாலும், அதையும் விட அணுக்கமாகத் தாகக வேண்டும், ஆனால் சிறிதும் குறி தவறாமல் தாக்க வேண்டும். எப்படி? ராட்சதப் போராளிகளுக்குக் கற்பனையா பஞ்சம். இந்திரஜித்தர்களாயிற்றே. எனவே இந்தக் கருவி தயாராகிறது. இது ட்ரோன்கள் குஞ்சு பொறித்தால் எப்படி இருக்கும் அது போல, முட்டையிட்டு முட்டைகளைத் தரையெங்கும் உருள விடுவது போல. உருண்டு வரும் சாவு இது. படியுங்கள், நேற்றைய அறிவியல் கதைகளில் வந்த கற்பனை உத்திகள் இன்று நிஜமாகின்றன என்பது புரியும்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு கூடுவாஞ்சேரியில் பறக்கும் விமானத்தை இயக்கினால், அந்த விமானத்தை டிரோன் எனச் சொல்லலாம். துவக்க காலத்தில் பெரும்பாலும் வேவு பார்ப்பதற்கு ட்ரோன்கள் உதவின. கொஞ்ச நாள் கழித்து தொலைதூர கண்காணிப்புக்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது, குறி பார்த்து அடிக்கவும் டிரோன்கள் செயல்படுகின்றன. தீவிரவாதிகளின் வீட்டை முகவரி தேடி, அவர்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு வண்டியோட்டியோ, பொடி நடையாகவோ செல்லும் காலத்திற்குள், தீவிரவாதிகள் வீடு மாற்றி விடுகிறார்கள். அப்புறம், அந்த வீட்டின் முகவரியைத் தேடும் படலம், என கண்ணாமூச்சி விளையாடாமல், இருந்த இடந்த்திலிருந்து ரிமோட் பொத்தானை அமிழ்த்தி, தொலைக்காட்சியை இயக்குவது போல், தொலைக்கட்டுப்பாட்டில் தீவிரவாதியைப் போட்டுத் தள்ள டிரோன்கள் இயங்குகின்றன.

உலக வர்த்தக மையம் தகர்க்கப் பட்டபிறகு இதன் உபயோகம் அதிகரித்தது. செய்திகளில் பரவலாக அடிபட்ட மட்டில் – யேமன், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்க வான்படையில் 2,300த்து சொச்சம் விண்கலங்கள் இருக்கின்றன. படைவீரர் ஓட்டிச் செல்லும் விமானங்க்ளில் இருக்கும் பல விஷயங்கள் டிரோன்களிலும் இருக்கின்றன. தானியங்கியாகப் பறக்கும் வசதி உண்டு; எந்த இடத்தில் இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதை அறியும் புவிநிலை காட்டி (GPS) உண்டு; கொடூரமான ஆயுதங்களும் உண்டு; ஆனால், விமான ஓட்டி மட்டும் கிடையாது. எனவே, இவற்றை ‘ஆளில்லா விமான வாகனங்கள்’ (unmanned aerial vehicles) அல்லது ’தொலை ஓட்டுந‌ர் விமானங்கள்’ (remotely piloted aircraft) என அழைக்கிறோம்.

ஆங்கிலத்தில் டிரோன் என்றால் ஆண் தேனீ. இவற்றால் தேன் சேமிப்பில் பங்குபெற இயலாது. பிறரை கொட்ட இயலாது. சோம்பேறி. ஒவ்வொரு தேனீக்கூடாக சென்று, அங்கு, இனப்பெருக்கம் செய்வது மட்டுமே, இதன் ஒரே வேலை. இந்த அப்பாவி ஆண் தேனீயான ’ட்ரோன்’, எப்படி ஆபத்தான தானியங்கி விமனத்திற்கு பெயர் ஆனது?

1935ல் இங்கிலாந்தில் தொலைதூரத்தில் தானியங்கியாகப் பறக்கும் விமானத்தை இன்னொரு விமானம் இயக்கும். அதற்கு டி.எச். 82பி இராணித் தேனீ (DH 82B Queen Bee) எனப் பெயரிட்டார்கள். இராணி இல்லாமல் அந்த மற்றொரு தேனீ இயங்காது என்பதால், அந்த பலிகடா விமானத்திற்கு ‘டிரோன்’ எனப் பெயர் சூட்டினார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் பயிற்சிக்கு உபயோகித்த இலக்குகளை டிரோன் என அழைக்கத் துவங்குகிறார்கள். அன்று இலக்காக பயன்பட்ட டிரோன்கள், இன்று தங்கள் இலக்குகளை பலி கொள்கின்றன.

வியட்நாம் போரின் போது மட்டும் ஆறாயிரத்து சொச்சம் விமானிகளை அமெரிக்கா இழந்தது. அது தவிர பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை இழக்கிறது. விமானங்கள் தரைக்கு அருகே பறப்பது முதல் காரணம். விமானிகளால் டக்கென்று தப்பித்து ஓட முடியாத சரேல் திருப்பங்கள் செய்ய இயலாத விமானங்கள் இரண்டாம் காரணம். விமானியின் திறமைக்கேற்பவே விமானம் இயங்கும்; அந்த சாமர்த்தியம் இல்லாத விமானிகள் மூன்றாம் காரணம். இந்தப் பிழைகளை ஆளில்லா விமானங்கள் போக்குகின்றன.

ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது. ஒரே வேலையையே, திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால், ‘போரடிக்கிறது’ என அலுத்துக் கொள்ளாமல் இயந்திரகதியில் மீண்டும் மீண்டும் துல்லியமாக கண்காணிக்கும்; கால் கடுக்க விழி இமைக்காமல் தன் பிடியில் சிக்கியவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பின் தொடர்ந்து அவரும் அறியாவண்ணம் காவல் காக்கும்.

விமானி இயக்கும் சண்டை ஜெட்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் இயக்க இயலாது. போனோமா.. வந்தோமா என்று இருக்க வேண்டும். கடைசியாக, டிரோனிற்கு ஆகும் செலவும் கம்மி. விமானியுள்ள போர்விமானத்தில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு ஆகும் செலவில், டிரோன் விமானங்கள் முன்னூறு கிலோமீட்டர் பறந்துவிடும். அவ்வளவு இலேசானது. காரைப் போல் எடை கொண்டது. சோப்புத் துண்டு போல் போர் விமானம் கனக்கும். டிரோன்களோ நுரை போல் பறக்கும். விமானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இருக்கும் இராட்சத உபகரணங்களோ, பாதுகாப்பு அம்சங்களோ, துரத்துவோரிடமிருந்துத் தப்பித்துச் செல்ல அதிவேகமாக பறக்கவேண்டும் என்னும் நிர்ப்பந்தமோ இந்த உலோகப்பறவையிடம் இல்லை. எதிராளி தாக்க வந்தால் தற்கொலப் படை – மௌனமாக தன்னுடைய விஷக்குப்பியை அருந்துவது போல், தன்னைத் தானே வெடித்துக் கொள்ளக் கூட முடியும்.

ஏன் இதெல்லாம் திடீரென்று முக்கியமாகிறது?

இராக்கில் இப்பொழுது அமெரிக்கப் படை இல்லை. ஆப்கானிஸ்தானை விட்டும் கூடிய சீக்கிரமே அமெரிக்கா மூட்டை கட்டப் போகிறது. இன்றைய நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளைத் தாக்க ஆப்கானிஸ்தானில் இருந்து டிரோன்களை அனுப்ப முடிகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வாசஸ்தலம் இல்லாவிட்டால். உள்ளூர் ஃப்ளோரிடாவில் இருந்தும், நெவாடாவில் இருந்தும் டிரோன்களை அனுப்பலாம். மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் ஐம்பதாயிரம் அடியில் பறக்கும் டிரோன்களைக் கொண்டு சொமாலியா அல்க்வெய்தாவும் பாகிஸ்தான் தாலிபான் தலைவர்களும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அறியலாம். தேவைப்பட்டல், அவரின் தலை மட்டுமே சகஸ்ரபத்தலாக வெடிக்குமாறு ஆணையும் பிறப்பிக்கலாம்.

இப்போதைக்கு இந்த உளவாளி டிரோன்களை இயக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க சி.ஐ.ஏ. (மத்திய புலனாய்வுத் துறையிடம்) இருக்கிறது. அதாவது, உளவு பார்ப்பது உளவுத்துறையின் வேலை. எனவே, உளவு பார்க்க டிரோன்கள் அனுப்புவது உளவுத்துறையின் கடமை. ஆனால், இப்பொழுதோ, உளவு என்பதைத் தாண்டி, தாக்குதல் என்னும் பயனிற்காக டிரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதை இராணுவத்திற்கு மாற்றிக் கொடுக்குமாறு ஒபாமா விண்ணப்பித்திருக்கிறார். இதை இரகசியமாகச் செயல்படும் சிஐஏ-வில் இருந்து ஓரளவு வெளிப்படையாக இயங்கும் பெண்டகனுக்கு மாற்றிவிட்டால், ஒபாமா மேல் பாயும் ஊடகங்களும் இடதுசாரி கருத்துடைமையாளர்களும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மீது தங்கள் விமர்சனத்தைச் செலுத்துவார்கள்.

ஏன் இராணுவத்திற்கு கை மாற வேண்டும்?

மூன்றடி நீளமே இருக்கிறது ‘ரேவன்’ (Raven). இராணுவ வீரரின் தோள்பையில் அடக்கமாக உட்கார்ந்திருக்கும். எப்பொழுது தேவையோ, அப்பொழுது பையில் இருந்து வெளியில் எடுத்து, கை கால் நீட்டி. முழு உருவமும் கொடுத்து, பேப்பர் ராக்கெட் விடுவது போல், அம்பைப் போல் கையால் வீச வேண்டும். அதன் பிறகு, பொம்மை ஹெலிகாப்டர் ஓட்டுவது போல், அதை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைக்கலாம். பாகிஸ்தான் இராணுவத்திடம் கூட நூற்றுக்கணக்கான இந்த ரேவன் டிரோன்கள் இருக்கின்றன.

ஒசாமா பின் லாடனைப் பிடிக்க சி.ஐ.ஏ. செண்டினல் (sentinel) டிரோன் விமானத்தை உபயோகித்தது. ஆனால், அதே போன்ற பழைய பஞ்சாங்க டிரோன்களை சீனாவிற்கும் ருஷியாவிற்கும் வேவு பார்க்கவோ, வெடி வெடிக்கவோ அனுப்பித்தால் பாதி வழியிலேயே நசுக்கி விடுவார்கள். அதற்கு அடுத்த தலைமுறை கொலைகார டிரோன்கள் தயாரிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து, தானியங்கியாக வெளிவந்து, சமயம் பார்த்து விண்ணில் பறந்து, அயல்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கேயே யார் கண்ணிற்கும் எந்த ரேடாருக்கும் தெரியாமல் பறக்கும் டிரோன்கள் தேவை. அதற்கு இராணுவத்தின் பணபலமும் தேவை.

இங்கிலாந்தில் இந்த மாதிரி புத்தம்புதிய டிரோன்களை டரானிஸ் (Taranis) என பறக்க விடுகிறார்கள். பிரான்சும் நியுரான் (Neuron) தயாரித்திருக்கிறது. இரானும் சவூதி அரேபியாவும் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள் விதவிதமான பெயர்களில் கள்ளமாக தாக்கும் டிரோன்களைத் தயாரிக்கின்றன. நார்த்ரப் (Northrop) டிரோன்களுக்கு எக்ஸ் 47பி (X-47B) என மறைபெயர் சூட்டியிருக்கிறது. லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆர்.கியூ 170 (RQ-170); ஜெனரல் அடாமிக்ஸ், போயிங் என எல்லோரும் எம்.க்யூ 9 (MQ-9 Reaper) ரீப்பர் வடிவமைப்பில் மும்முரமாக இருக்கிறார்கள்.

உங்கள் செல்பேசியில் இருக்கும் புகைப்படக் கருவிகள்தான் இங்கேயும் பயன்படுத்தப்படுகிறது. செல்பேசியில் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு கேமிராக்கள் இருக்கும். இந்த புதிய வகை டிரோன்களில் அது போல் ஐநூறு கேமிராக்கள் அதன் உடலெங்கும் பதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தன் அடியே நடக்கும் அனைத்து விஷயங்களையும் வெகு துல்லியமாக கண்காணிக்க இயலுகிறது. அதே சமயம், பருந்துப் பார்வையாக, மொத்த விஷயங்களையும் பார்க்க முடிகிறது. அதாவது கூகுள் வரைபடத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாக பெரிதாக்கிக் கொண்டே போய், உங்கள் வீட்டினுள் நுழைவதைப் போல் ஐம்பதாயிரம் அடியில் இருந்து இந்த டிரோன்கள் உங்களை இருபத்து நான்கு மணி நேரமும் ரோந்து சுற்றலாம். அப்படியே ஒட்டும் கேட்கலாம். எந்த வீடு எப்பொழுது தேவையோ, அந்த வீட்டின் செயல்பாடுகளை மட்டும் தேவைக்கேற்ப அகலமாக பிக்சல் பிக்சலாக விருத்தியாக்கி நோக்கலாம். அங்கே நடக்கும் உரையாடலை பதிவு செய்ததைப் போட்டு தானியங்கியாக மொழிபெயர்க்கலாம்.

இந்த வகை டிரோன்களிடம் இப்போதைக்கு எதிர்ப்பு சக்தி என்பது ரொம்பவேக் குறைவு. காலுறை கிழிந்தால் தூக்கிப் போட்டுவிட்டு, புதியது மாற்றிக் கொள்வது போல், அவ்வப்போது ஒரு டிரோன் பழுதாகிவிட்டாலோ, எதிரியால் சுடப்பட்டாலோ, அதை தாரை வார்த்துவிட்டு, புதிய டிரோனை அதே பகுதிக்கு ஏவுவது வழக்கம். ஆனால், அதற்கு பதில் எதிராளியின் விமானத்தை சுதந்திரமாகத் தாக்குவது, தற்காப்பாக ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது என ரோபோ போல் தனக்குத் தானே முடிவெடுக்கும் திறனும் எடுத்த முடிவை செயலாக்கும் வசதியும் அமையப் பெற்றால், இவ்வகை டிரோன்களை அயல்நாட்டால் அழிக்க இயலாது.

முதலாம் உலகப் போரின் போது விமானங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறுதான் இப்போது டிரோன்கள் இளம்பிராயத்தில் இருக்கின்றன. இனிமேல்தான் முழுமூச்சில் என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும், எப்படியெல்லாம் உபயோகிக்கலாம், எங்ஙனம் கட்டுப்பாடுகள் வைக்கலாம், எங்கே பறக்கலாம், எவர் கையில் கொடுக்கக் கூடாது போன்ற சட்டதிட்டங்களையும் சமூக வழக்கங்களையும் தயாரிக்க வேண்டும்.

அவற்றை பிறகு பார்ப்போம்.

புருஷ லட்சணம்வேறு; பொறி லட்சணம் வேறு என்று வித்தியாசப்படுத்தாமல், இயந்திரங்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் பிறரின் எண்ணங்களை உணரும் குணநலனும் அமையப்பெறுவதை அறி-புனை கதைகளில் மட்டுமே படித்து வந்த காலம் போயே போயாச்சு. இன்றைய ரோபோக்கள், தரைப் பெருக்குவது, நீச்சல்குளத்தை சுத்தம் செய்வது போன்ற ஒரேயொரு வேலையை மட்டும் செய்வதற்காக தயாரிக்கப்படுவதில்லை.

உதாரணத்திற்கு வீட்டிற்கு வீடு வந்து, கதவு தட்டி வாடிக்கையாளர்களின் பொருள்களை விநியோகிக்கும் அமேசானின் தூரயியங்கியை (டிரோன்) எடுத்துக் கொள்வோம். அதைப் பாதி வழியில் திருடர்கள் வழி மறிக்கிறார்கள். அந்த தூரயியங்கியிடமிருந்து திருடுகிறார்கள். இதை அந்தத் தூரயியங்கியே தடுத்தாட் கொள்ளும் வசதியைத் தரலாமா? இன்னொருவருக்கு சொந்தமான பொருளைத் திருடு போகாமல் பாதுகாக்கலாமா? யாராவது தாக்கினால், திருப்பி அவர்களையே அடிக்கும் சக்தியை தூரயியங்கிகளுக்கு வழங்கலாமா?

தூரயியங்கிகளுக்கு இந்த தற்காப்பு சக்தி வழங்காவிட்டால், அவற்றை நடுவில் யாராவது அபகரித்து தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஆனால், அவற்றிற்கான சட்டதிட்டங்கள் இன்னும் உருவாகவில்லை. இப்போதைக்கு தூரயியங்கியை ஆளில்லா காடுகளில் மட்டுமே உபயோகிக்கிறார்கள். ஆர்க்டிக் முனையில் பனிப்பாறைகள் எவ்வாறு உருகுகின்றன என்பதை தூரயியங்கி படம்பிடித்து நமக்கு அனுப்புகிறது. துருவங்களில் தெரியும் புவிவெப்பமயமாதலை உடனடியாக அறிய முடிகிறது. ஆப்பிரிக்க, அமேசான் காடுகளில் அருகிவரும் உயிரினங்களை கண்காணிக்க தூரயியங்கியை பயன்படுத்துகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையின் ஃப்ரான்செஸ்கோ பீட்சா கடை தூரயியங்கி மூலம் பீட்சாவை தந்திருக்கிறது. டி.சி.எஸ்.ஸின் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் துப்பு துலக்க தமிழகக் காவல்துறை தூரயியங்கியைப் பயன்படுத்தியது. உரிமம் பெறாமல் கருங்கற்களை உடைப்பதையும் மணற்கொள்ளையையும் கண்காணிக்க தூரயியங்கியை மதுரை காவல்துறை பயன்படுத்துகிறது. இமானுவேல் சேகரனின் நினைவாஞ்சலி ஊர்வலத்தை தள்ளி இருந்து பதிவு செய்யவும், தேவர் குரு பூஜையில் சட்டம் ஒழுங்கைப் பேணவும் தொண்ணூறு இலட்ச ரூபாய் செலவில் மூன்று தூரயியங்கிகள் உதவியிருக்கின்றன. ராஜ் தாக்கரே ஊர்வலங்களில் தூரயியங்கி கடமையாற்றி இருக்கிறது. 2013ல் மட்டும் 1,467 ஆர்ப்பாட்டங்களிலும், 1,183 தர்ணாக்களிலும், 683 ஊர்வலங்களிலும், இன்ன பிற 6,500 இடங்களிலும் தூரயியங்கிகள் களத்தில் பறந்திருக்கின்றன.

ஆபத்தான வேலைக்குப் போகும் காவல்துறைக்கு தூரயியங்கி துணை போகலாம் என உலகெங்கும் இப்பொழுது முடிவெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். பெருந்திரளான கொந்தளிப்படந்த மக்கள் கூட்டத்தின் நடுவே கண்ணீர் புகை போடவும், மாலடோவ் குண்டு வீசுபவனை குறி பார்த்து வீழ்த்தவும் தூரயியங்கி உபயோகமாகிறது. தூரயியங்கி கொண்டு இந்த மாதிரி போராட்டங்களை கண்காணிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை சட்டத்தின் உதவியோடு காவலர்களுக்கு நெடுங்காலமாக உதவுகிறது. ஆனால், அதே தூரயியங்கியிடம் துப்பாக்கியும் பிளாஸ்டிக் தோட்டாக்களும் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவும் வசதியையும் கொடுத்தனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க ஸ்கன்க் (Skunk) நிறுவனம் இவற்றைத் தயாரிக்கிறது. ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இவை விற்கப்படுகின்றன. நாலாயிரம் துப்பாக்கி ரவைகளையோ மிளகாய்ப்பொடி பொட்டலங்களையோ ஒரே சமயத்தில் வைத்திருக்கும். ஒரு திசை வீதம் நொடிக்கொருமுறை இருபது பொட்டலங்களை குறி பார்த்து ஏவும். எனவே, ஒவ்வொரு நொடியிலும் நாலாபக்கமும் எண்பது குட்டி குண்டுகள் போடலாம். போராட்டக்காரர்களை பல்வேறு வகையினராகப் பிரித்து குறிப்பிடும் வசதியும் இவற்றில் இருக்கிறது. ‘சிவப்பு’ வகையினர் என்றால் கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்; இவருக்கு துப்பாக்கி ரவை கொண்டு தாக்குதல். ‘நீல’ வகையினர் என்றால் மூர்க்கமாக தாக்குபவர்; இவர்களுக்கு மிளகாய்த்தூள் அபிஷேகம். ‘பச்சை’ வகையினர் என்றால், வேடிக்கை பார்க்கவோ, வலைப்பதியவோ வந்து நடுவில் திருதிருவென முழிப்பவர்; இவர்களை எந்தவித உபத்திரவமும் இல்லாத பிரகாசமான ஒளிவிளக்கு கொண்டு ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இவ்வாறு இலக்கு அறிந்த தாக்குதல்களை ’பாலை ஓநாய்’ (Desert Wolf) கொண்டு நிகழ்த்தலாம். குறி தவறாது. ‘நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை!’ என கற்பூரம் அடித்து மறுத்தாலும், தான் செய்யும் ஒவ்வொரு தாக்குதலையும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றையும் விழியமாகப் பதிந்தும் வைத்துக் கொள்கிறது.

இந்த மாதிரி தூரயியங்கி கொண்டு வருமுன் காப்போனாக கிளர்ச்சிகளின் போதும் நிகழும் வன்முறையையும், அதன் பிற்பாடு நிகழும் எண்ணற்ற ஊரடைப்புகளும், பழிவாங்கல்களும், பதற்ற நிலையையும் முளையிலேயேக் கிள்ளலாம். அமைதியானப் போராட்டம் நிகழும்வரை, தூரயியங்கி வெறுமனே கண்காணித்திருக்கும். போராட்டத்தை அசம்பாவிதமாக்க ஒருசிலர் தோன்றினால், அவர்களை மட்டும் நசுக்கும். அதை வைத்து அடுத்த கட்டத்திற்குக் கிளர்ச்சியை கிண்டிவிட நினைப்போருக்கு வீடியோ ருசுவை உடனடியாகப் பகிரங்கமாகப் போட்டுக் காட்டும். உயிர்ச்சேதம் கிடையாது; ஊழல் வராது; வெளிப்படையான செயல்பாடாகவும் இருக்கும். ஆனால், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சமாதான உடன்படிக்கையைக் கையெழுத்திடவும் இன்னும் மனிதர்கள்தான் தேவைப்படுகிறார்கள்.

எல்லாவிதமான தூரயியங்கிகளிலும் பலவிதமான ஒளிப்படக் கருவிகள் இருக்கின்றன. சிலவற்றில் ஆயிரக்கணக்கில் உள்ளன. இரவில் படம் பிடிக்க உதவும் அகச்சிவப்பு (infrared) படமிகள் இருக்கும். வெப்பம் சார்ந்து (Thermographic – thermal imaging) இயங்கக் கூடிய படமிகள் இருக்கும். இந்த உணரி (sensor) கீழே இருக்கும் மனிதர்களையோ, இன்ன பிற விஷயங்களையோ துல்லியமாகக் குறிக்க உதவுகின்றன. லேசர் கொண்டு இவர்களை தொடர்ச்சியாக பின் தொடர் முடிகிறது. அந்த லேசர் எங்கே சுட்டுகிறதோ, அந்த இடத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குகின்றன. இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போல் விதவிதமாக செயல்படுகிறது.

இப்போதைக்கு தூரயியங்கி விமானங்களை தானியங்கியாக செயல்பட அமெரிக்க இராணுவம் ஒப்பவில்லை. அதை இயக்க, கண்காணிக்க, இருவர் கொண்ட அணி இயங்குகிறது. கீழே இருக்கும் பயங்கரவாதியை சுடுவதானாலும் சரி; இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்பு தூரயியங்கி ஆனாலும் சரி; அதை எப்பொழுதுமே மேற்பார்வையிட விமானிகளை வைத்திருக்கிறார்கள். இது கொந்தர்களிடமிருந்து (hackers) விமானத்தை மீட்கவும் உதவுகிறது. ‘இவன் நமது எஜமானன்; இவன் எதிரி’ என்று தூரயியங்கியை சிந்தித்து பிரித்துப் பார்க்க வைப்பதெல்லாம் நிரலியும் அதை இயக்க வைத்திருக்கும் ரகசிய கடவுச் சொற்களும்தான். அவற்றை யாராவது நடுவில் வந்து கொத்திக் கொண்டு போய்விட்டால்?

மூன்றாண்டுகள் முன்பு இந்த மாதிரி வேவு பார்த்த அமெரிக்க தூரயியங்கியை இரானியர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள். தூரயியங்கிக்கும் தான் கைப்பற்ற பட்டோம் என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை. தன்னுடைய செயல்பாடு, தன்னை இயக்கும் நிரலி, தூரயியங்கியைத் தயாரிக்கும் மூலப்பொருள் என எல்லாவற்றையும் வெகுளியாக சொல்லிவிட்டது. அந்த நிரலியையும் தொழில்நுட்பத்தையும் வைத்தே ஈரான், தன்னுடைய தூரயியங்கி நுட்பத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டது. இப்போது இந்த மாதிரி தூரயியங்கி விமானக் கடத்தல்கள நீக்குவதற்கு இரண்டு உபாயங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. எவராவது தூரயியங்கியைக் கைப்பற்றினால், அதை வெடிக்க வைத்துவிடுவது; அல்லது அதனிடம் சேமிக்கப் பெற்ற அத்தனை விஷயங்களையும் அழித்துவிடுவது.

1990கள் வரை இஸ்ரேலிடமிருந்துதான் தூரயியங்கிகளை(http://www.indiandefencereview.com/news/uavs-gaining-currency-with-indian-armed-forces/0/ ) இந்தியா வாங்கி வந்தது. ஆனால், 2000 ஆண்டில் இருந்து டி.ஆர்.டி.ஓ. (Defence Research and Development Organisation – DRDO) வழிகாட்டலில் சொந்தமாக தூரயியங்கியைத் தயாரிக்கத் துவங்கியது. காற்றினூடே செல்ல ஏதுவான வடிவமைப்பு, தொலைவுக் கணிப்பியல், மூலப்பொருள் ஆராய்ச்சி, முன்செலுத்தலில் புதிய வழிமுறை, விமானத்தை இயக்கும் நிரலி, பதிவு செய்தவற்றை இரகசியமாக பாதுகாக்கும் தகவல்மறைப்பியல், உணரிகள், பொறிகள் என ஒவ்வொரு பாகத்திலும் தனித்தன்மையும் தற்கால தொழில்நுட்பத்தையும் கொண்டு புதிய வகை தூரயியங்கியை உருவக்கி இருக்கிறார்கள்.

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன. 2008 சுனாமியின் போது தூரயியங்கி கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். மாவோயிச செயல்படுகள் அதிகம் உள்ள பிஹார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் சிறிய கிராமங்களையும் மரங்களால் மூடப்பட்ட வனங்களையும் ஊடுருவி உளவுபார்க்க தூரயியங்கியை இந்தியா செயல்படுத்துகிறது.

ஆனால், அடர்ந்த காடுகளிலும் தொடர்ந்து பெருமழை பொழியும் புயல் சமயங்களிலும் இந்தத் தூரயியங்கி பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கெனவே 1,163 கோடி ரூபாய் செலவில் ‘லஷ்யா’ என்னும் தூரயியங்கியை இந்தியா கண்டுபிடித்திருக்கிறது. சூரிய ஒளியில் பறக்கும் தூரயியங்கி மேகங்கள் மூடிய மழைக்கால தூரயியங்கி என பற்பல கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் தானியங்கியாக கிளம்பி, தான்கியங்கியாக தறை இறங்கும் நுட்பத்தை இந்தியா பெறவில்லை. இந்தியாவில் ஓய்வுபெற்ற அல்லது உடல் ஊனமுற்ற முன்னாள் விமானிகளையே இந்த தூரயியங்கியை செயல்படுத்த வைக்கிறார்கள்.

அமெரிக்கா இதற்கு நேர் எதிர். முன்னாள் விமானிகளுக்கு விமானம் ஓட்டி பழக்கம் என்பதால் அதே எண்ணத்திலேயே இந்த தூரயியங்கியையும் இயக்குகிறார்கள். அது சரிப்படவில்லை. இந்தப் புதிய வகை போர்விமானங்கள் போல் வேகமாக செயல்படுவதில்லை. எதிராளியிடமிருந்து அழித்துக்கொண்டால் போதும். தப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீடியோ விளையாட்டில், உங்கள் குறிக்கோள் என்பது அதிக அளவு மதிப்பெண் எடுப்பது என்பது போல், அதிக நேரம் விமானத்தை கண்காணிக்க வைத்தால் போதுமானது. கணினி விளையாட்டில் எத்தனை முறை உயிரிழந்தோம் என்பது முக்கியமேயல்ல என்பது போல், எவ்வளவு தூரயியங்கி இழந்தோம் என்பது பொருட்டே அல்ல.

இதனால்தான் 1970களிலும் எண்பதுகளிலும் இருபது மணி நேரத்திற்கு ஒரு முறை தூரயியங்கி வெடித்துச் சிதறியது. மில்லியன் டாலர் கணக்கில் செலவழித்தாலும் நம்பகமாக நீடித்துப் பறக்கும் தூரயியங்கிக் கிடைக்கவே இல்லை. ரிமோட் மூலமாக இயக்குதல் – ரேடியோ அலைகள் மூலம் இயக்குதல் என்பது பல பத்தாண்டுகளாக இருக்கிற தொழில் நுட்பம். ட்ரோன் வருவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே அண்ட வெளியில் பயணிக்கும் பயனீயர் விண்கலங்களை நாசா இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆளில்லாக் கலங்களை இயக்குதல் என்பதும் பல பத்தாண்டுகளாக இருக்கிறது. சிறுவர் விளையாட்டுப் பொருட்களிலும் தானியங்கி விளையாட்டுச் சாமான்களும் சரி, ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தப் படக்கூடிய சிறு கருவிகளும் இருந்திருக்கின்றன. விமானம், ஹெலிகாப்டர் போன்றன கூட சிறுவர் விளையாட்டுக் கருவிகளாகக் கொஞ்ச வருடங்களாக இருக்கின்றன. அப்படி இருக்கையில் பெரிய அளவு விமானங்களை, ஆளில்லாது தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இயக்கப்படக் கூடிய விமானங்களைத் தயாரிக்க இந்தனை காலம் ஆனது ஏன்?

இங்கேதான் ஆபிரஹாம கரீம் (Abraham Karem) வருகிறார். வெறும் பதினெட்டாயிரம் டாலர் செலவில் ஐயாயிரம் மணி நேரமாகப் பறந்தாலும் வீழாத தூரயியங்கியைக் கண்டுபிடிக்கிறார். அந்த மூல தூரயியங்கியை வைத்துதான் இன்றைய பெரும்பாலான டிரோன்கள் உருவாகின்றன.

கரிம் முதல் காரியமாக விமானத்தின் ஓட்டுங்கருவியையும் இயக்குறுப்புகளையும் பின்னுக்கு தள்ளினார். முன்புறத்தில் இருக்கும் உணரிகளுக்கும் படப்பிடிப்புக் கருவிகளுக்கும் இதனால் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் விழியங்களைப் பதிய முடிந்தது. அடுத்ததாக விமானத்தின் வால் இறக்கைகளை கீழ்நோக்கி அமைத்தார். சாதாரணமாக மேல்நோக்கியோ, பக்கவாட்டிலோ தூரயியங்கியின் வால் இருக்கும். சிறப்பாக பறப்பதற்கு இந்த வடிவமைப்பு உதவும். ஆனால், தூரயியங்கிக்கோ வேகமாக எழும்புவது என்பது இலட்சியம் அல்லா. கரடுமுரடான பிரதேசங்களில் கூட பாதுகாப்பாக தரையிறங்கி தன்னுடைய இயக்கத்தைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு, இந்த கீழ்நோக்கிய வால் வடிவமைப்பு இன்றளவும் உதவுகிறது.

கரீம் வடிவமைத்த தூரயியங்கி, ஆல்பட்ராஸ் என அழைக்கப்படுகிறது. அண்டரண்டப்பறவையைப் போலவே இந்த தூரயியங்கியும் இருந்த இடத்தில் இருந்து எழும்பி, உயரத்தில் பறக்கக் கூடியவை. வேகத்தை விட நீடித்துப் பறப்பவை. தன்னுடைய உடலைவிட இருபது மடங்கு பெரிய அகலமான இறகுகளைக் கொண்டது. இந்தத் தூரயியங்கிக்கு எஞ்சினாக டிவிஎஸ்-50 போன்ற கோ-கார்ட் (go-cart) பொறியை பயன்படுத்துகிறார். அதுவரை இராட்சத விமானத்திற்குறிய பொறியை உபயோகுத்தவர்களுக்கு இந்த வழிமுறையெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது. எனினும், முடிவுகளைப் பார்த்தால், விமானத்தைப் பார்த்து உருவாக்கிய தூரயியங்கியை விட கரீம் கண்டுபிடித்த தூரயியங்கி சிறப்பாக, நெடுநாளைக்கு, இடையூறுகளைத் தவிர்த்து செயல்பட்டது.

கரீம் கண்டுபிடித்த பறக்கும் வடிவமைப்பு, செயற்கைகோள்களின் வளர்ச்சி, இயந்திரமே சொந்தமாக முடிவெடுக்கும் சக்தி, புவிநிலை காட்டி (GPS) முன்னேற்றங்கள், தொலை தூரத்திற்கு தகவல் அனுப்பும் வசதி, அறை முழுக்க அடைத்துக் கொண்டிருக்கும் கணினி நுட்பத்திற்கு பதிலாக மடியில் வைத்துக் கொண்டு இயக்கும் புதிய தலைமுறை கணிப்பொறிகள், இலேசாக இருந்தாலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் மூலப்பொருள்களின் வருகை, விமானத்தை அனலாக் முறையில் இயங்குவதை விட்டு டிஜிட்டல் வழியில் கட்டுபடுத்தும் பொறிகள் என பல தொழில்நுட்பங்கள் ஒன்று சேர்ந்துதான் இன்றைய தூரயியங்கிக்கு வித்திட்டு இருக்கின்றன.

Open_Source_Arducopter_Quad_3d_Robotics_drones_Military_Army

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’

தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள்.

நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை. ஐஃபோன் போல் எல்லோர் கைகளிலும் தூரயியங்கி வைத்திருக்கும் காலம் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் நிகழும். அப்பொழுதுதான் தூரயியங்கிகளின் உண்மையான வீச்சு எல்லோருக்கும் ஓரளவிற்காவது தெரியவரும்.

உலக நாடுகளின் இராணுவத்திடம் உள்ள தூரயியங்கிகளை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் தனிநபர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான தூரயியங்கிகளை இயக்குகிறார்கள். இராணுவத்தினால் குண்டு போட முடியும்; இந்த தனி நபர் பரிசோதனைகளில் குண்டு போட முடியாது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இந்த தூரயியங்கிகளில் கிடையாது.

அடுத்த வருடத்தில் (2015ல்) இருந்து வர்த்தக வேலைக்காக தூரயியங்கிகளை எவர் வேண்டுமானாலும் இயக்க ஆரம்பிக்கலாம். தூரயியங்கிகளை எவ்வாறு செய்வது, எப்படி வடிவமைப்பது என்னும் திட்டங்களையும் வரைபடங்களையும் தன்னார்வலர்கள் பலர் இணையக் குழுமங்களில் பகிர்கிறார்கள். இதைக் கொண்டு சீனாவில் இருந்து எக்கச்சக்கமான இரகவாரியான தயாரிப்புகள் சந்தைக்குள் புகுகின்றன. காசே இல்லாமல் செய்முறை சொல்லப்பட்டு, மிகக் குறைவான பொருட்செலவைக் கொண்ட உபகரணங்களைக் கொண்டு உருவாகி, திறமுல நிரலிகளை உள்ளடக்கிய இந்த தூரயியங்கிகள் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு டேவிட் ஷ்மேல் (David Schmale http://www.popsci.com/science/article/2013-09/david-schmale) என்னும் காற்றியல்-உயிரியல் வல்லுநரை எடுத்துக் கொள்வோம். காற்று வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிக்க தூரயியங்கிகளை இவர் பயன்படுத்துகிறார். மேகத்தினூடே பயணிக்கும் நுண்கிருமிகளையும் வான்வெளியில் சஞ்சரிக்கும் நுண்ணுயிரிகளையும் கண்டுபிடிக்க, துரும்பைப் போல் எங்கும் தாவி, சோதனைச் செய்யப்படும் ஜந்துக்களுடனேயே பயணிக்க தூரயியங்கிகளைக் கொண்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும்போது, வருமுன் காப்போனாக பயிர்களைக் காப்பாற்றலாம். நோய்களைத் தடுக்கலாம்.

ஆப்பிரிக்காவில் இருந்து வரும் எபோலாவை அறிய இந்த ட்ரோன் முறை பயன்படும். ஆனால், ஆப்பிரிக்காவில் இணையத்தை பரவலாக்கவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன.

WWW_Internet_Usage_Worldwide_Web_Mobile_Computing_LIght_up_Reach_Ping_GlobaL_Devices_Tech_Reach

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது போன்ற இடங்களில் இணையப் பயன்பாடும் செல்பேசிகளும் சிறு கிராமங்களையும் அனைத்து வயதினரையும் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் எல்லாவிடங்களிலும் வையவிரிவு வலை கிடைப்பதில்லை. பலரிடம் செல்பேசியும் செயற்கைகோள் கொண்டு தொலைபேசும் வசதியும் இருந்தாலும், அந்த செல்பேசியில் இணையம் கிடைப்பதில்லை. இணையம் கிடைத்தால்தான் ஃபேஸ்புக் பார்க்க முடியும். ஃபேஸ்புக் பார்க்க முடிந்தால், அதன் மூலம் அந்தத் தளத்தின் பயனர்களும், அதனால் கிடைக்கும் விளம்பரங்களும், வருவாயும் பல்கிப் பெருகும்.

இண்டு இடுக்குகளையும் இணையம் சென்றடைய என்ன வழி?

சூரிய ஒளியில் இயங்கும் தூரயியங்கியை ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கில் எல்லாம் ஃபேஸ்புக் நிறுத்தப் போகிறது. ஆப்பிரிக்காவில் வருடம் முழுக்க நல்ல வெயிலும் அடிக்கிறது. கடுமையான வெப்பத்தைத் தேக்கி வைக்கும் இராட்சத சக்தியும் தூரயியங்கியின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் போட வேண்டும் என்னும் தடையும் இல்லை. ஃபேஸ்புக் நிறைய பணம் வைத்துக் கொண்டிருப்பதால், இது போன்ற பிரும்மாண்டமான திட்டங்களை செயலாக்குவதில் எந்த சிரமமும் இல்லை. மேலும், பங்குச்சந்தையில் உலவும் பணத்தை விட, அசையாச் சொத்துக்களான விமானங்கள், அந்த தூரயியங்கிகளின் மூலம் இணையச் சேவை என்று நிலையான முதலீடுகளில் கால்கோள் இடவும் ஃபேஸ்புக் விரும்புகிறது. அதே சமயம், இணையம் என்றால் ஃபேஸ்புக்; ஃபேஸ்புக் என்றால் இணையம் என்று புதுப்பயனர்கள் நெஞ்சில் ஊன்றிப் பதியவும், நிரந்தமாக அடையாள இலச்சினை போட்டு குடிகொள்ளவும் ‘ஃபேஸ்புக தூரயியங்கிகள்’ உதவுகின்றன.

ஃபேஸ்புக வந்துவிட்டால் கூகுள் சும்மா இருப்பாரா?

கூகிளைப் பொருத்தமட்டில் அது சேவை இயங்குத்தளத்தில் இருக்கிறது. பணம் பரிமாற வேண்டுமா? கூகுள் வாலே (wallet) நாடுகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுமா? கூகுள் ஆட்வோர்ட்ஸ் (AdWords) நாடுகிறோம். செல்பேசியை இயக்க வேண்டுமா? ஆன்டிராய்ட் நாடுகிறோம்.

அதே போல், ஏதாவது பொருளை எங்காவது கொடுக்க வேண்டுமா… அதற்கும் கூகிளை நாடுங்கள் என்று உலகெங்கும் சொல்வதற்கு தூரயியங்கியை சேவையாகத் தருவதற்கு கூகுள் திட்டமிட்டு வருகிறது. தானியங்கியாக ஓடும் கார்களை கூகுள் வைத்திருக்கிறது. அதே போல், தானியங்கியாக ட்ரோன்களை நீங்களே துவக்கலாம்; எங்கு வேண்டுமோ அங்கே இறக்கலாம்; பொருள்களை பட்டுவாடா செய்யலாம்.

ஒரு பொருளை பயன்படுத்தியபின் என்ன செய்கிறோம்? அதை வீட்டின் மூலையில் போட்டு வைக்கிறோம். அதன் பிறகு அந்த சுத்தியலோ, தயிர் கடையும் மத்தோ, இன்ன பிற உபகரணமோ பயனின்றி உறங்கிக் கிடக்கும். அனைவருக்கும் அனைத்தும் என்று வாழும் காலம் இது; அதே சமயம் வீட்டை அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் பொருள்களும் இல்லாமல் எளிமையாக வாழ வேண்டும் என்னும் விருப்பமும் உள்ள காலம்; தேவை என்னும்போது தருவிக்கலாம்; தேவை முடிந்தபின்பு இன்னொருவருக்கு தந்து உதவலாம் எனக் கூட்டுச் சமுதாயச் சிந்தனைக்கும் தூரயியங்கிகள் உதவுகின்றன.

உங்களுக்கு எந்தப் பொருள், எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது, அந்தச் சமயத்தில், தூரயியங்கிக் கொண்டு அந்தப் பொருளை தருவிக்கலாம். உங்களின் தேவை முடிந்தபின்பு ‘யதாஸ்தானம் ப்ரதிஷ்டயாமி’ என்று பொதுவிடத்தில் கொடுத்துவிடலாம். சிக்கனமாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழலையும் பேணலாம்.

தூரயியங்கிகளின் வளர்ச்சியை தனித்துப் பார்க்க முடியாது. முப்பரிமாண நகலி (3D printing http://solvanam.com/?p=25176), எந்திரனியல் (robotics) போன்ற பிற துறைகளுடன் இணைத்தே தூரயியங்கிகளின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும். இதுதான் அமேசான்.காம் வர்த்தகத் தளத்தின் திட்டம்.

வானகத்தில் ஆங்காங்கே, நகரத்திற்கு ஒன்றாகவோ, மாவட்டத்திற்கு ஒன்றாகவோ மாபெரும் தூரயியங்கிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனுள்ளே முப்பரிமாண வார்ப்பி (3D Printer) இருக்கும். அவை சிறிய பொருள்களை அச்செடுத்துக் கொடுக்கும். அந்தக் குட்டி குட்டி வடிவங்களை ஒருங்கிணைக்க எந்திரன்கள் உள்ளே இருக்கும். முழுப்பொருளும் தயாரானவுடன் அதை தரையிறக்க இன்னும் சில வேறுவகையான தூரயியங்கிகள் உதவும். இவையெல்லாம் நொடி நேரத்தில் நடக்கும்.

சீனாவை நம்பி இறக்குமதி செய்யவேண்டாம். மாபெரும் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தயாரிக்கலாம். உங்களுக்கான செருப்பை நீங்களே உருவாக்கலாம். உங்களின் முகத்தின் கோணல்களுக்கேற்ப கண்ணாடியை செதுக்கலாம். வீட்டின் மூலையில் அமர்ந்தபடி தயாரிக்கலாம்.

நீங்கள் தயாரா?

உதவியவை:
https://www.youtube.com/watch?v=IOzCiCl05Ec

12 Years a Slave and Ferguson

பன்னிரெண்டு வருடங்களாக அடிமையாக வாழ்ந்த தன்னுடைய சொந்தக் கதையை சாலமன் நார்த்ரப் (Solomon Northup) சுயசரிதையாக எழுதியிருக்கிறார். பதினெட்டு வயது வரை கருப்பராக வளர்ந்த கதையை மைக்கேல் பிரவுன் எழுதவில்லை. அதற்குள் சுடப்பட்டு செத்துவிட்டார். முன்னது “12 Years a Slave” — என திரைப்படமாக வெளிவந்து ஆஸ்கார் விருது கூட வென்றிருக்கிறது. பெர்குசன் நகரத்தில் தெருவில் நடந்த குற்றத்திற்காக கொல்லப்பட்ட மைக்கேல் பிரவுனின் அகால மரணத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை செய்தித்தாள்களில் படிக்கிறோம்; தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இன்றும் மனதைப் பிசைகிறது.

கதாநாயகன் சாலமனின் கண்காணிப்பாளராக டிபீட்ஸ் (Tibeats) இருக்கிறான். சாலமனுக்கும் டிபீட்ஸுக்கும் பொதுவான மேற்பார்வையாளராக இன்னொருவர் உண்டு. சாலமனுக்கு வயது நாற்பதுகளில் இருக்கலாம். டிபீட்ஸ்க்கு இருபது கூட ஆகியிருக்காது. சாலமன் கருப்பர். டிபீட்ஸ் வெள்ளை. சிரத்தையாக பல மணி நேரம் வெயிலில் உழைத்து சாலமன் செய்து முடித்த மரவேலையை சின்னாபின்னமாக்கி விடுகிறான் டிபீட்ஸ். அந்த ஆத்திரத்தில் தன்னுடைய அதிகாரியை நோக்கி கையை நீட்டி விடுகிறார் சாலமன்.

டிபீட்ஸிற்கு ஆத்திரம் பொங்குகிறது. ‘கருப்பு நீக்ரோ நாய்! எப்படி எதிர்த்து பேசுவாய்!’ என கருவிக் கொண்டு, நாலைந்து பேரோடு திரும்பி வருகிறான். சாலமனை கழுவில் ஏற்றுகிறான். அதைப் பார்த்த சாலமனின் மேற்பாற்வையாளர் உடனே விரைந்தேறி வந்து, தன்னுடைய முதலாளியின் சொத்து பறிபோகாமல் இருப்பதற்காக சாலமனின் உயிரை மீட்கிறான்.

அதாவது கழுத்தில் சுருக்கு நெருக்குகிறது. கால்களோ மண் தரையில் உழலுகிறது. பாதம் தரையில் படாமல் விந்தி விந்தித் தரையைத் தொடுகிறார் சாலமன். சாலமனின் தாம்புக்கயிறை அவிழ்ப்பதற்கு, மேற்பார்வையாளனுக்கு உரிமையில்லை. சாலமனின் கழுத்தில் தொங்கும் தூக்குக் கயிறை நீக்குவதற்கு முதலாளி வர வேண்டும். அது வரை குற்றுயிராய் இருக்கும் சாலமன் தன்னுடைய மூச்சைத் தக்கவைத்துக் கொள்ள குதியங்காலில் நின்று எட்டு மணி நேரம் போராட வேண்டும்.

அவனைச் சுற்றி உலகம் எப்பொழுதும் போலவே இயங்குகிறது. திரையில் அந்தக் காட்சி மூன்று, நான்கு நிமிடங்கள் அப்படியேக் காட்டப்படுகிறது. எட்டு மணி நேர மூச்சுத் திணறலைக் காண்பிக்க மூன்றே மூன்று நிமிடம் பார்ப்பது கூட மனதைக் கூச வைக்கிறது. சாலமன் கூட வேலை பார்க்கும் சக அடிமைகள் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடுகள் பாட்டுக்கு மேய்கின்றன. கதிரை அறுக்கிறார்கள். வாளியில் தண்ணீர் கொண்டு போய் தொட்டியில் நிரப்புகிறார்கள். எவருக்கும் ஒரு சக மானிடன் நாக்கு வறண்டு சாவின் விளிம்பில் தத்தளிப்பது பொருட்டாகவே இல்லை.

இதே போல் மைக்கேல் பிரவுன் நான்கு மணி நேரம் அனாதையாக சாலையில் கேட்பாரற்று பிணமாக இருந்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார் பிரவுன். நண்பருடன் காரில் உலா வந்தபோது, காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலமுறை சுடப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தும் சுடப்பட்டார். இறுதியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டதால் இறந்தார். இறந்தவரின் சடலம், இறந்த இடத்திலேயே தொடுவாரற்று, சீந்துவாரற்று நான்கு மணி நேரத்திற்கு மேலாக நூறு டிகிரி கோடை வெயிலில் அனாதராவாக இருந்திருக்கிறது.

1840களில் சாலமன் அனுபவித்த கொடுமை இன்றும் மைக்கேல் பிரவுன்களுக்குத் தொடர்கிறது. அன்று நடந்ததை திரையில் பார்க்கிறோம். இப்படியும் கூட சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடுதல் கண்டும், காணாத சொரணையற்றவர்கள் இருந்தார்களா என்று நாணுகிறோம்.

1840ல் சாலமன் கழுத்திற்கு தூக்குக் கயிறு மாட்டப்பட்டது ஒரு குறியீடு. வெள்ளையனை எதிர்த்தால், எஜமானனை கை நீட்டிப் பேசினால், கொல்லப்படுவீர்கள் என்று அனைத்து கருப்பு அடிமைகளுக்கும் உணர்த்துவதற்காக சாலமனுக்கு தூக்குக் கயிறு போடப்பட்டு, எட்டு மணி நேரத்திற்கு மேலாக உயிர் ஊசலாட விடப்படுகிறது.

இன்று 2014. அதே அமெரிக்கா. கருப்பராக இருந்து கொண்டு சாலையில் நடமாடினால் ஆபத்துதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். சில மாதம் முன்பு ஃப்ளோரிடா மாநிலத்தில் டிரெவான் மார்டின் என்னும் இளைஞன். சென்ற வாரத்தில் மிஸௌரி மாநிலத்தில் மைக்கேல் பிரௌன். வெள்ளைத்தோல் இல்லாதவர் தைரியமாக நிமிர்ந்து நடந்தால் என்னவாகும் என்பதை பாடம் கற்பிக்க இவர்களை உதாரண புருஷர்கள் ஆக்குகிறார்கள்.

சாதாரணமாக இதற்கு சொல்லப்படும் காரணங்கள், ‘காக்க… காக்க’ போன்ற போலீஸ் திரைப்படங்களில் சொல்லப்படுவதுதான்: “என்கவுன்டர்” என்பது இல்லாவிட்டால் சட்டம் – ஒழுங்கு சீர்குலையும். இவ்வாறு கண்டவுடன் சுடுவதால் மட்டுமே கேங் (gang) எனப்படும் ரவுடிக் கும்பல்களை ஒழிக்கமுடிகிறது. பயங்கரவாதிகள் பெருகிவிட்ட இன்றைய அச்சம் நிறைந்த துப்பாக்கிகள் எங்கும் எவருக்கும் கிடைக்கும் சூழலில், பாதுகாப்பை நிலைநிறுத்த, இதுபோன்ற வருமுன்காப்போன் தற்காத்தல்களை தவிர்க்க இயலாது – போன்று பற்பல சொல்லப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடந்தோறும் ஆயிரம் பேராவது இப்படி காவல்துறையினரால் சுடப்பட்டு இறக்கிறார்கள். இவர்களில் எவ்வளவு பேர் நிஜமாகவே ஆபத்தானவர்கள், எவ்வளவு பேர் அனாதைகள், எவ்வளவு பேர் மைக்கேல் பிரவுன் சந்தர்ப்பவசத்தால் செத்தவர்கள் என்பதை உள்ளூர் காவல் அமைப்புகள் தெரிவிப்பதில்லை. எனவே, தெளிவான தகவல் கிட்டுவதில்லை. ஆனால், காவல்துறையினாரால் நிறுத்தப்பட்டால், சகல மரியாதையுடன் முன்ஜாக்கிரதையாக, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்தையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றாவிட்டால், ‘பயங்கரவாதி பிடிபட்டான்’ எனத் தலைப்பு செய்தி ஆகாமல் நாம் தப்பிப்போம்.

1853ல் “பன்னிரெண்டு ஆண்டு அடிமை” புத்தகமாக வெளிவந்தது.

அப்போதைய அமெரிக்காவில் வடக்கு பகுதி – அடிமை முறையை ஆதரிக்கவில்லை. ஆனால், தெற்குப் பகுதிகளில், அடிமை முறை சட்டபூர்வமாக அமலில் இருந்தது. கருப்பராக இருந்தால், விலையாளாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கு பத்திரங்கள் தேவையாக இருந்தது. சுதந்திரம் பெற விரும்பிய ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியு யார்க் நகரத்திற்கு தப்பித்து விட்டாலும், கையில் அதற்குரிய சாட்சியங்கள் இல்லாவிட்டால், மீண்டும் அடிமை சேவகத்திற்கே அனுப்பப்படுவார்.

இந்தக் காலகட்டத்தில் சாலமன் நியு யார்க் மாநிலத்தில் மனைவியுடனும் மகனுடனும் மகளுடனும் வசித்து வருகிறார். அவருக்கு வயலின் வாசிக்க மிகவும் பிடிக்கும். அந்த வயலினை வாசிப்பதற்காக நிறைய சம்பளமும் வாஷிங்டன் வரை ஊர் சுற்றவும் சர்க்கஸ்காரர்கள் அவரை அழைக்கிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையுடனும், தன்னுடைய வயலின் திறமையை ஊர் ஊராகச் சென்று வெளிக்காட்டும் வாய்ப்பும் கிடைத்த சந்தோஷத்தில் சாலமனும் ஒப்புக் கொள்கிறார். ஆனால், சாலமனை போதையேற்றி, அதன் பின் அந்த போதை மயக்கத்திலேயே அடிமையாக்கி விற்று விடுகிறார்கள் அந்த சர்க்கஸ்காரர்கள்.

இந்த சமயத்தில் அமெரிக்காவின் தலைநகரத்தின் புகழ்பெற்ற காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டல் கட்டிமுடிக்கப்படவில்லை. அதாவது அமெரிக்கா என்னும் நாடு இன்னும் முழுமையாகவில்லை. தன்னுடைய சித்தாந்தமான ‘சுதந்திரம்’ என்பது பிரகடனத்தில் மட்டுமே இருந்த காலம். வெள்ளை ஆண்களுக்கு மட்டுமே முழுச் சுதந்திரம் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்த விடுதலை சாற்றுரையை குறிக்கும் விதமாக, அந்த ‘கேப்பிடல்’ கட்டிடம் பாதி கட்டி, மீதி தொக்கி நிற்கும் காட்சி காட்டப்படுகிறது.

இன்று 2014. அமெரிக்க காங்கிரஸ் கூடும் இடமான ‘கேப்பிடல்’ கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பெண்களும் வாக்களிக்க சட்டத்தில் உரிமை கிடைத்துவிட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாம இருக்கிறார்.

ஆனால், அவர்கள் கட்சி நிலைமை எப்படி இருக்கிறது? கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

எட்டாண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் புஷ் இருந்தார். அப்பொழுது இராக் போரில் பதின்ம வயதினர் எக்கச்சக்கமாய் காவு கொடுக்கப்பட்ட காலம். அதை முன்வைத்து, இராக் போரை வாபஸ் பெறுவதை வாக்குறுதியாக வைத்து டெமொகிராட் கட்சி வாகை சூடியது.

அதைப் பின் தொடர்ந்து, இரண்டாண்டு கழித்து அடுத்த தேர்தலில் பராக் ஒபாமா வென்றார். இப்பொழுது மொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்திருந்தது. அதை மீட்க, ஆளூங்கட்சியைத் தோற்கடிப்போம் என எதிர்க்கட்சியாக கோஷம் போட்டார். நிதிநிலை மோசடிகளை உருவாக்கிய குடியரசுக் கட்சிக்கு எதிரான அலை, இந்தத் தேர்தலில் வீசியது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அலை வீசும். சாமானிய மக்களுக்கு உரிமை வேண்டும் என்றும் வருமான வரியே கூடாது என்றும் போராடிய ‘டீ பார்ட்டி’ அலை வீசியது. அதன் பின் பெருநிதிக்கிழார்களிடம் இருந்து சட்டசபையை மீட்டு, சாமானியனுக்கு உதவும் அரசாங்கத்தைக் கோரும் ‘ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்’ போராட்டம் உதவியது.

கடைசியாக நடந்த தேர்தலிலும் அலை உண்டு. ஒரு பக்கம் ஒபாமாவின் சேமநல நிதித் திட்டத்தை விரும்புபவர்கள் ஒன்று கூடினார்கள். அரசாங்கமே வேண்டாம் என்று சொல்பவர்களும், சட்டம் எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கருதுபவர்களும், இந்த உடல்நலக் காப்பீட்டை மறுதலித்து இன்னொரு அணியில் குடியரசுக் கட்சி பக்க சாய்ந்தார்கள்.

ஆனால், இந்தத் தேர்தலில் எந்த அலையுமே வீசவில்லை. ஒபாமாவின் சேமநலத் திட்டத்தை அனைவரும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். ஈராக் போர் முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்தும் வீரர்கள் திரும்பி, ஆளில்லா தூரயியங்கி விமானங்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொருளாதாரம் தலை நிமிர்ந்துவிட்டதால் ‘டீ பார்ட்டிக்காரர்’களும், ‘ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’காரர்களும் வேலையில் அமர்ந்துவிட்டார்கள்.

இந்த மாதிரி விட்டேற்றியான காலத்தில் மக்களை உசுப்பேத்துவது எப்படி? ஒவ்வொரு வாக்காளரையும் வோட்டுச்சாவடிக்கு அனுப்புவது எப்படி? தங்களுடைய ஆதார பலத்தை நிரூபிப்பது எப்படி? அதற்கும் ஃபெர்கூசன் போராட்டங்கள் உதவுகின்றன. பராக் ஒபாமாவிற்கு மவுசு குறைந்து விட்டது. அவரின் டெமோகிரட்ஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட இந்த மாதிரி நடவடிக்கைகள் உதவும்.

கம்பரின் இராமாயணத்தில் ‘கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவவேலான்’ என்னும் பிரயோகம் வெகு பிரசித்தமானது. ஏற்கனவே கண் பார்வையற்ற ஒருவன், தன்னுடைய பார்வையைப் பெறுகிறான். உலகத்தின் ஒவ்வொரு அதிசயத்தையும் பார்க்கிறான். சூரியன் உதிக்கும் காலையையும், பறவைக் கூட்டத்தின் ஒருங்கையும், நாணல்களின் அலையோரத்து அசைவையும் ரசிக்கிறான். பின், கண் பார்வை பறிபோகிறது.

சேவகம் மட்டுமே செய்து வாழ்ந்த வம்சாவழியில் வந்த சாலமன் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறான். தன் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, தன்னுடைய விருப்பமான துறையில் ஈடுபாடு என நினைத்தபடி வாழ்முடிகிறது. பின் அதை இழக்கிறான்.

இழந்ததை எவர் கண்டுகொண்டார்கள்? சாலமப் இவ்வாறு விலையாள் ஆகிப்போனது யாருக்கு தெரியும்?

ப்ரூகல் வரைந்த இகாரஸின் வீழ்ச்சி (http://en.wikipedia.org/wiki/Landscape_with_the_Fall_of_Icarus) ஓவியம் நினைவிற்கு வருகிறது. நம்முடைய அனுமான் போல் இகாரஸும் அசகாய சூரர். சூரியனைத் தொட்டுவிட நினைக்கிறார். ஆனால், இறக்கைகள் இல்லை. அதனால் என்ன! கோந்து போட்டு பிரும்மாண்டமான இறக்கைகளை ஒட்டிக் கொள்கிறார். அப்பாவின் அறிவுரையைக் கேட்காமல், பகலவனை நோக்கிப் பறக்கிறார். கதிரோன் ஒளியின் வெபந்த்தில் மெழுகு கரைகிறது. ஐகாரஸ் கடலில் வீழ்கிறான்.

ஐகாரஸின் கால்களை மட்டும் கடலில் காண்கிறோம். அதுவும் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே தெரியும். ஓவியத்தின் முகப்பில் குதிரை உழவர் தெரிகிறார். கொஞ்சம் போல் சென்றால் வானத்தைப் பார்க்கும் மேய்ப்பன் புலப்படுகிறார். யாருடைய கால்களோ, தண்ணீரில் தத்தளிப்பது அதன் பின் தெரிய வரலாம். சொந்த உயிர் வாடுவது நமக்குத் தெரிவதேயில்லை. நம் வாழ்க்கையின் அர்த்தமற்ற தருணங்களிலேயே நாம் லயித்து மூழ்கிவிடும்போது, மைக்கேல் பிரவுன் சுடப்படுவதை நாம் கண்டுகொள்வதேயில்லை.

பெர்கூசன் நகரத்தில் சுடப்பட்ட மைக்கேல் பிரவுனுக்கும் பன்னிரெண்டு ஆண்டுகள் அடிமையாக இருந்து மீண்டும் சுதந்திரம் பெற்ற சாலமன் நார்த்ரப்பிற்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.

முதலாமவர் ஃபிரான்சிஸ்கோ கோயாவின் ‘மே மூன்றாம் தேதி, 1808’ (http://en.wikipedia.org/wiki/The_Third_of_May_1808) ஓவியத்தின் நாயகன் போல் நிராயுதபாணியாக துணிந்து எதிர்த்து நின்றவர். தான் சுடப்படுவோம் என்பதைத் தெரிந்து இருந்தாலும், பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தியவர்.

ஆனால், சாலமன் நார்திரப் வளைந்து கொடுக்கத் தெரிந்தவர். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தவர். அவசரமாக ஆத்திரத்தில் முடிவெடுக்காமல், பொறுமை காத்தவர். அவர் எழுதிய புத்தகத்திலேயே கூட பருத்தியை எவ்வாறு பறிப்பது என்பது குறித்தும், கறும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் விலாவாரியாக அனுபவித்து எழுதியிருக்கிறார். நாயைப் போல் நடத்தப்பட்டாலும், நல்ல காலம் என்றாவது பிறக்கும் என்னும் நம்பிக்கையைக் கைவிடாதவர்.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாகவோ, பதின்ம வயதினருக்கான புத்தகப் பரிந்துரையாகவோ, அடிமை வாழ்விற்கு உதாரணமாக – இரு புத்தகங்களை முன்வைக்கிறார்கள்: Narrative of the Life of Frederick Douglass and The Interesting Narrative of the Life of Olaudah Equiano.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே மொழியாளுமையையும் அறிவுக்கூர்மையையும் முன்னிறுத்துகின்றன. படிப்பினால் முன்னேறலாம். வாசிப்பை விசாலமாக்கினால் பதவி கிடைக்கும். அதன் மூலம் சுயத்தை அடையாளம் காணலாம். அதனால் தங்களைக் கட்டியிருந்த தளைகள் அறுகின்றன.

சாலமன் நார்திரப்போ, ஏற்கனவே கற்றறிந்த, எழுதப் படிக்கத் தெரிந்தவர். அவருக்கு, எழுத்துக் கூட்டி பாலபாடம் படித்து, அதன் பிறகு பெரிய பெரிய நூல்கள் வாசித்து முன்னேற வேண்டிய நிலை இல்லை. ஆனால், தன்னுடைய வாசிப்பறிவை பகிரங்கமாக்கினால், சவுக்கடி மட்டுமே மிஞ்சும். எனவே, பட்டறிவை சொல்லாமல் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

ஒரு வகையில் நானும் அவ்வாறே பொதுவில் நடந்து கொள்கிறேன். அலுவலில் அரசியல் பேசுவதில்லை. மைக்கேல் பிரவுன் குறித்தோ, ஹமாஸ் குறித்தோ, அலுவல் சார்ந்த தொழில்துறையாளர்கள் கூடும் சந்திப்புகளில் வாய் திறப்பதேயில்லை. மௌனமாக பொதுவான நுட்பங்கள் குறித்தும் வானிலை குறித்தும் விளையாட்டு குறித்தும் அளவளாவுகிறோம். சில சமயம் உறவினர்கள் புழங்குவதால், ஃபேஸ்புக்கிலும் கூகுள் பிளஸ்சிலும் கூட அமைதி காக்கிறேன்.

—-

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் இன்னொரு மிக முக்கியமான பாத்திரம் பாட்ஸி (Patsey). சாலமனைப் போலவே பாட்ஸியும் இன்னொரு கலைஞர். இவர் சின்னக் குழந்தை. பதின்மூன்று வயது இருக்கும். அந்த வயதிற்கேயுரிய அழகும் குறும்பும் உற்சாகமும் ததும்புகிறது. சோளகொல்லை பொம்மைகளை விதவிதமாக செய்கிறார்.

காலை முழுவதும் பருத்தியை பறிப்பது. மாலையில் எஜமானனின் தாசியாக இருப்பது. வன்சிறை என்பதால் தாசிகளுக்குக் கிடைக்கும் சன்மானமும் கிடைக்காது. எஜமானனின் விருப்பத்திற்குரியவராக இருப்பதால், எஜமானியிடமிருந்து அடியும் வதையும் வன்மத்துடன் கொடுக்கப்படுகிறது. சாலமனைப் போல், ‘என்றாவது விடுதலை கிட்டும்! குடும்பத்தோடு இணைவோல்.’ என்னும் நம்பிக்கை ஆதாரமும் கிடையவே கிடையாது.

பாட்ஸியின் கதையைப் படித்தால் தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டிருக்கும் கதை தெரியவரும். வாழ்க்கை வருங்காலம் இருட்டு குகையாக மட்டுமே தெரிவதை உணரமுடியும். உயிரை விட முடியாத அவலமும் இரண வேதனையை தினமும் அனுபவிக்கும் சவுக்கடியும் சித்திரவதை பயமும் நிறைந்த இருட்டுகள் புலப்படும்.

அதை எதிர்த்துதான் கோயாவின் The Third of May 1808 (http://en.wikipedia.org/wiki/File:El_Tres_de_Mayo,_by_Francisco_de_Goya,_from_Prado_thin_black_margin.jpg) மைக்கேல் பிரவின் நிற்கிறான். செத்து பிழைத்தது போதும் என்று நெஞ்சை உயர்த்துகிறான்.
-பாலாஜி
———————

Minecraft

மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானது.

ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன.

Star_Wars_XKCD

அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே அவற்றை வாசிப்பது கீக் பட்டத்திற்கான எல்.கே.ஜி. படிக்கட்டு. ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக், டாக்டர் ஹூ எல்லாம் பார்ப்பது யூகேஜி. ஜப்பானிய மாங்கா படங்கள், நெட்ஃப்ளிக்ஸின் இண்டு இடுக்கில் ஒளிந்திருக்கும் மேட்ரிக்ஸ் கார்ட்டூன் என மூன்னேறலாம். எக்ஸ் பாக்ஸ், ப்ளேஸ்டேஷன் எல்லாம் வைத்துக் கொண்டு, அதன் புகழ்பெற்ற, பெறாத கணி விளையாட்டுகளில் சாதனையாளர் பட்டம் பெறுவது கீக் பள்ளிக்கூடத்தைத் தாண்ட வைக்கும். நேரப்பயணத்தை (time travel) திட்டமிடுதல்; டஞ்சன்களும் டிராகன்களும் விளையாட்டை ஒருங்கிணைத்தல் ; Tor உபயோகித்து இணையத்தின் உள்ளரங்குகளில் உலவுதல்; காமிக் கான் (Comic-Con) கூட்டத்திற்கு தவறாமl செல்லுதல்; எப்பொழுதும் ஹவாய் செப்பலுடன் (சாலையில் தண்ணீர் ஊற்றினால் பனிக்கட்டி ஆகிவிடுமே, அந்தக் கடுங்குளிரில் கூட) முண்டா பனியனில் தலை சொறிய வைக்கும் சொற்றொடருடன் எவரொருவர் உலா வருகிறாரோ – அவரே முழுமையான கீக்.

இதன் ஒரு அங்கமாகத்தான் மைன்கிராஃப்ட் (Minecraft) எனக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இது எந்த மாதிரியான விளையாட்டு?

Minecraft_Large_Fortress_Buildings_Game_Of_thrones_Westeros_Kingdoms

சதுரம் சதுரமாக பொட்டிகளை உடைத்து, அதை சேமித்துக் கட்டும் கலை. உங்களால் பிரும்மாண்டமான கோட்டை எழுப்ப முடியும். கோவில் கட்டலாம். மாபெரும் மலைகளை உருவாக்கலாம். தோண்டத் தோண்ட வளரும் ஆழ்துளைகளில் பூதங்களை உலவ விடலாம். திடீரென்று சாத்தான்கள் எட்டிப் பார்க்கும். வெள்ளம் வரலாம். எரிமலைக்குள் விழுந்து விடலாம். தப்பித்து ஓட வேண்டும். இருட்டிய பிறகு, பாதுகாப்பாக இருக்க, அரண்கள் ஏற்படுத்த வேண்டும். மற்றபடிக்கு, மற்றவர்கள் என்னவெல்லாம் கட்டியிருக்கிறார்கள், எப்படியெல்லாம் கற்பனைகளை கணித்திரையில் மிரட்டியிருக்கிறார்கள் என பராக்கு மட்டுமே கூட பார்த்து காலம் கழிக்கலாம்.

எல்லா விளையாட்டுகள் போலவே கற்றுக் கொள்ளுதல் மிக எளிது. கற்றுக் கொண்ட பின், இன்னொருவரைப் போல், அந்தக் கட்டிடத்தைப் போல் நாமே நமக்குத் தோற்றுவிக்க வேண்டும் என எண்ணுவதும் எளிது. அதை உருவாக்குவது, உருவாக்கியதைப் பாதுகாப்பது, நண்பர்களை அழைப்பது, என் ஒன்றன் பின் ஒன்றாக பதினாறு மில்லியன் மக்களைக் கணினியில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மைன்கிராஃப்ட். ஒரே ஒரு விளையாட்டைக் கொண்டு நூறு மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி இருக்கிறார்கள்.

Minecraft_World_Games

மார்கஸ் பெர்ஸ்ஸ்ன் (Markus Persson) என்பவரால் 2009ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. ”இதென்ன, வெட்டுவதும், தோண்டுவதும்?!” என வந்த புதிதில் வெகு சிலரே உபயோகித்தார்கள். 2011 வாக்கில் அரசல் புரசலாக அலுவலில் பேசிக் கொண்டார்கள். ”சிவந்த கண்களுக்கு என்ன காரணம்? ஃபைட் கிளப் மாதிரி எங்காவது சென்றாயா?” என சகாக்களைக் கேட்டபோது குசுகுசுவென ‘மைன் கிராஃப்ட்’ விடை கிடைக்கப் பெற்றேன்.

துவக்கத்தில் கணினி வல்லுநர்களுக்கு மட்டுமே மொழுதுபோக்காக இருந்த விளையாட்டு, இப்போது, மெதுவாக, பல்வேறு புனைவுலக கலைஞர்களின் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. பதின்ம வயதில் எவரைக் கேட்டாலும் ஒரு நாளில் பத்து மணி நேரமாவது உலகை சிருஷ்டிப்பதில் செலவழிக்கிறார்கள்.

வெட்டிய சதுக்கங்களையும் மரக்குச்சிகளையும் கொண்டு விதவிதமாக கருவிகளை உருவாக்குவதில்தான் மைன்கிராப்ட் விளையாட்டின் சூட்சுமம் இருக்கிறது. உங்களுக்குத் தரப்பட்ட 3×3 தளத்தில், நீங்கள் சேமித்த பொருள்களை கலந்து கட்டி, புதுமையான ஆயுதங்களை வடிவமைக்க வேண்டும். சமையற்குறிப்புகள் மாதிரி இந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கவே சில வலையகங்கள் இருக்கின்றன. அவையும் கை கொடுக்கும்.

Minecraft_Crafting_Table_Tools_Construction_Recipes

இதற்கெல்லாம் எது ஆரம்பம்? தமிழில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், அதன் மூலம் எங்கே என தேடுவோமே… அந்த மாதிரி மைன்கிராஃப்டின் ஆதி மூலம் எங்கே இருக்கிறது?

அதன் பெயர் டிவார்ஃப் ஃபோர்ட்ரெஸ் (Dwarf Fortress). உங்களின் கணித்திரையெங்கும் வண்ண வண்ணமாக எண்ணும் எழுத்தும் இருக்கும். இது ஓவியங்களும் படங்களும் அறவே இல்லாத பத்திர பூமி. சித்திரக்குள்ளர்கள் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு மதிற்சுவர்கள் எழுப்ப வேண்டும்; மீன் பிடிக்க வேண்டும்; வேட்டையாட வேண்டும்; சமைக்க வேண்டும்; அரிய கனிமங்களை சேமிக்க வேண்டும். நாச சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கில் கூட என்னை அடிக்கடி ‘ஃபார்ம்வில்’ (FarmVille) விலையாட வா… வா… என அழைக்கிறார்கள். அந்த விளையாட்டும், கிட்டத்தட்ட இதே தாத்பர்யம்தான்.

ஆனால், சில வித்தியாசங்கள் உண்டு!

சாதாரணமாக கணினி விளையாட்டு என்றால் அதில் வரும் மிருகங்களின் நகம் கூட ஜொலிக்கும். மேற்படி குள்ளர்களின் கோட்டையில் வைரமும் வைடூரியமும் கூட வெறும் “£” குறி காட்டி முடித்து விடுகிறார்கள். பயமுறுத்தும் நட்டுவாக்கலிகளுக்கு பழுப்பு நிறத்தில் “S”. படுக்கையைக் குறிக்க வெளிறிய மஞ்சள் நிற “+”. மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் பச்சை நிற புள்ளிகளும் முக்கோணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சிரிப்பான்களைக் கொண்டு குள்ளர்களை அடையாளம் காண்கிறோம். ‘கற்பனையை விட எது பெரிய பயமுறுத்தும் சக்தி’ என்பதுதான் இதை உருவாக்கியவரின் வாதம்.

கற்பனையில் எதை வேண்டுமானாலும் உண்டாக்கலாம் என்பதற்கு இந்த விளையாட்டு முன்னோடியாக இருந்தது. இங்கிருக்கும் நாலைந்து மூலப் பொருள்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான பாதைகளும் வழிகளும் குழப்பங்களும் உருவாக்கலாம் என்பதை இந்த ஆட்டம் நடைமுறையில் விளக்கியது.

இன்னொரு முக்கிய வித்தியாசம்: பெரும்பாலான கணினி விளையாட்டுக்களில் முடிவு என்று ஒன்று இருக்கும். கடைசி குகை, இறுதி கதவு என்று ஒன்று கண்டுபிடித்தால்… அவ்வளவுதான். ஆட்டம் முடிந்தது. பள்ளிக்காலத்தில் ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா அடும்போது, பன்னிரெண்டாம் கட்டத்தை முடித்தவுடன் வெறுமையாக இருந்தது. “இதற்குத்தானே ஏமாற்றி விளையாடினாய் பாலாஜி!” என சோகம் கலந்த கோபம் வந்தது. அதெல்லாம் இந்த இந்த மைன்கிராஃப்ட் போன்ற விளையாட்டுகளில் ஏற்படாது. கட்டுங்கள். கட்டியதை சீரமையுங்கள். பிறர் கட்டுவதைப் பாருங்கள். பயணித்துக் கொண்டே இருங்கள் என்பதுதான் இதன் இலட்சியம்.

Markus_Notch_Persson_minecraft1

மார்க்க்ஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.

இவருடைய வழிகாட்டுனர் சொன்னதையும் மீறி காலை 9 முதல் ஐந்து வரை அலுவலில் வேலை பார்த்துவிட்டு, குளிரான ஸ்வீடனின் இரவு நேரங்களில் மைன்கிராஃப்ட் உருவாக்குகிறார் மார்க்கஸ். அதன் வெற்றியின் வாசனையை சற்றே முகர்ந்தவுடன் வேலையை விட்டு விட்டு முழுக்க இறங்குகிறார். அவருடன் பணிபுரிபவர்கள், இந்த மாதிரி ஸ்திரமான உத்தியோகத்தை விட வேண்டாம் என அறிவுறுத்தலை புறக்கணித்து களத்தில் முழுமூச்சாக இறங்குகிறார்.

இன்று மைன்கிராஃப்ட் அலுவலகத்தில் மொத்தம் பதின்மூன்றே பேர்கள்தான் வேலை செய்கிறார்கள். இத்தனைக்கும் ஆண்டிராய்ட், ஐ போன், ஐ பேட், எக்ஸ் பாக்ஸ், என எல்லாக் கருவிகளுக்கும் மைன்கிராஃப்ட் கிடைக்கிறது.

ஆனால், மைன்கிராஃப்ட் என்றால் மார்க்கஸ் மட்டும்தான் தெரிகிறார். விளையாட்டு குழுமங்களில் இவருடைய புனைப்பெயர் நாட்ச் (Notch). நாட்ச் என்றால் நவீன மொழியில் ’யேசுவிற்கு இன்னொரு பெயர்’ என்று அர்த்தமாகிறது. திரைப்படங்களில் யாருடைய இயக்கம் என பார்க்கிறோம், கிறிஸ்டொபர் நோலன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்றால் தனி மரியாதை. ஃபாக்ஸ் வெளியிடுகிறதா, சோனி தயாரித்ததா என கவனிப்பதில்லை. ஒலிக்கோப்பு வாங்கும்போது, இளையராஜாவா, ஏ. ஆர். ரெஹ்மானா எனப் பார்க்கிறோம். எச்.எம்.வி. வெளியிட்டிருக்கிறதா, எக்கோ போட்டிருக்கிறதா என்பது முக்கியமேயல்ல. ஆனால், கணினி விளையாட்டில் அப்படி கிடையாது. எந்த நிறுவனம் வெளியிடுகிறதோ, அவர்களின் பெயரே பிரதானமாக இருக்கும். EA என்கிறார்கள்; ஜிங்கா என்பார்கள்; ஆக்டிவிஷன் என்பார்கள். மார்க்கஸ் வந்த பிறகுதான் ‘இது மார்க்கஸ் உருவாக்கம்’ என்கிறார்கள்.

st_alphageek_minecraft4_f

மைன்கிராஃப்டில் இருக்கும்போது, ‘உலகம் ரொமப் பெருசு மாமே!’ என எண்ணவைக்கிறது. இத்தனை பேர் நிறைந்த பொம்மை ஜகம் கண் முன்னே விரியும் போது, ‘என்னத்தப் பார்த்து, எதக் கட்டி, எப்படி எல்லாத்தையும் முடிக்கப் போறே!’ என மலைப்பு வரும். கூடவே இரவு முழுக்க, விடிய விடிய நாமும் ஏதாவது புத்தம்புதியதாக உருவாக்கும் உந்துதல் அடைகிறோம்.

மகாபாரதம் மாதிரி மைன்கிராஃப்ட் உருவாகியிருக்கிறது. ஆங்காங்கே கிளைக் கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. போர் உண்டு. வரைபடங்கள் உண்டு. வில்லன்கள் உண்டு. கண்ணக் கட்டிய மன்னனாக கதை எங்கே ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடியும் என்றும் தெரியவில்லை. ஆபத்துகளும் இரகசிய பாதைகளும் வரங்களும் சாபங்களும் நிறைந்திருக்கின்றன. மொத்தத்தில் பொழுது போவதே தெரிவதில்லை.

மைன்கிராஃப்ட் குறித்த ஆவணப்படம்: https://www.youtube.com/watch?v=wxrrKkfRHvs

http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game/viewall
http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game
http://www.wired.com/2013/11/minecraft-book/all/
http://www.polygon.com/2014/4/29/5665834/minecraft-sales-15m-copies-pc