’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’
மகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.
எனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.
இப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.
– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி
– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.
எதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.
கடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”
மகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”
“தமிழில் சொல்லு…”
“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.