Booking Air Tickets for Travel within India (from Abroad)


”புனே… ரெண்டு டிக்கெட் கொடுங்க மேடம்”

செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்; தாதர் எக்ஸ்பிரஸ்; முன்னாடி இருபத்தி ஏழு பேர் நிற்கும் க்யூவில் காத்திருந்து, அதன் பின் உங்கள் வாய்ப்பு வரும்போது பதினேழு நிமிட காபி இடைவேளைக்கு ஒற்றைக்கால் மாற்றி தவமிருந்து, சரியான சில்லறை சரி பார்த்து, ஜேப்படி திருடர்களிடமிருந்து அந்த சில்லறை பணத்தைப் பாதுகாத்து, ரெனால்ட்ஸ் ஓசி வாங்கும் சாக்கில் நடுவில் நுழையும் கல்லுளிமங்கனை – விடாக்கண்டராக துரத்தி அடித்து, கடன் கொடுத்த பேனாவை திரும்பப் பிடுங்கி பத்திரபடுத்தி ஒளித்து வைத்து…

இந்த மாதிரி ஒத்த கவலை கூட இல்லாத இண்டெர்நெட் யுகம் இது.

கூகிள் திறந்தோமோ… India domestic Flights தேடினோமா… புக் செய்தோமா… என்று முடிய வேண்டிய இரண்டு நிமிட காரிய உலகம். கலிகாலம்.

முதலில் மேக் மை ட்ரிப்.காம் வந்தது.

விமானம் தேர்ந்தெடுத்து, ஊர்/பேர்/விலாசம்/பிறந்த நாள், நட்சத்திரம், லக்கினத்தில் மாந்தியை அங்காரங்கன் பார்ப்பதையும் நீச பங்க ராஜயோகத்தையும் சொல்லி முடித்தபிறகு, கிரெடிட் கார்ட் கேட்டார்கள்.

கேட்ட விவரம் எல்லாம் கொடுத்தாலும் செக்யூர் ஸ்வீட்.நெட் அனுப்பி வைத்தார்கள்.

பெயரைப் பார்த்தால் கொள்ளையர் கூட்டம் மாதிரி தெரிகிறதே என்று காபந்து கலந்த முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக பின்புல ஆராய்ச்சி செய்ய ஆசை. முகப்பு பக்கம் சென்றால் ’எங்கள் உள்ளம் வெள்ள மனசு’ என்று வெத்துப் பக்கமாக காட்டினார்கள்.

‘இது யாருடைய தளம்?’ என ஹூ – இஸ் இட்டுப் பார்த்தால்

Registrant:
cyota
yaron shohat

சர்வ நிச்சயமாகத் திருடர்கள் என்பதை ஓஜே சிம்ஸனிடம் கேசி அந்தோனி உரைப்பது போல், `கோ’வின் அம்ஜலைப் பற்றி ஜீவாவிடம் போஸ் வெங்கட் பிட்டு வைப்பது போல் குழப்பமாக உளறியது.

’உங்கள் நேரம் காலாவதியாகிவிட்டது’ என்று கொடுத்த கெடுவிற்குள் காரியத்தை முடிக்க துப்பில்லையே என நிராகரித்தும் விட்டது.

அடுத்து யாத்ரா.காம்

இணையம் வேஸ்ட். மக்களுடன் பேசுவோம். வேண்டியதை சொல்வோம். புரிந்து கொள்வார்கள். எனவே, 1-888-4MY-YATRA சுழற்றினேன்.

பன்னிரெண்டு நாழிகை இன்னிசைக்குப் பிறகு, தூக்கக் கலக்கத்தோடு மனிதக் குரல் கேட்டது.

“எனக்கு புனே போக ரெண்டு டிக்கெட் வேணும்”

“மத்தியானம் நாலு மணிக்கு போட்டுரவா?”

“இல்ல… கார்த்தால ஒரு ஸ்பைஸ் ஜெட் இருக்கே? அதில கிடைக்குமா?”

“மத்தியானம் நாலு மணிக்கு போட்டுரவா?”

“இப்பத்தான் உங்க சைட்டில பார்த்தேன். ஸ்பைஸ் ஜெட்டில் செஞ்சு தர முடியுமா?”

“முடியாது”

“ஏன்?”

“அவங்க இப்ப மூடிட்டாங்க. நாளைக்கு சண்டே. அதற்கப்புரமாத்தான் செய்யலாம்.”

“உங்க வெப்சைட்டில் செய்யப் பார்த்தேன்…”

டொக்.

இந்தியாவில் கஸ்டமர் சர்வீஸ் எப்படி என்பதை அங்காடித் தெருவும் சரவணா ஸ்டோர்சும் உணர்த்தி இருந்தாலும், டாட் காம் உலகில் 9 டு 5 உத்தியோகம் அமையப்பெற்ற பாக்கியவான்களை எண்ணி மகிழ்வதா அல்லது நானே பிசினஸ் அமைக்கும் திறவுகோலை ஆராய்ந்து பயனடைவதா என்னும் சிந்தனையை செல்பேசி சிணுங்கிக் கலைத்தது.

“ஹலோ?”

“நாங்க சிடி பேங்கில் இருந்து கூப்பிடறோம். நீங்க இந்தியாவில் இருக்கீங்களா?”

“இல்லை. ஆனா…”

“உங்க கார்டில் இருந்து சந்தேகாஸ்பமான விஷயங்கள் நடக்குது. எல்லாத்தையும் தடுத்துட்டோம்”

“ஒரு நிமிஷம்…”

“ஒண்ணும் கவலப்படாதீங்க”

“மேடம்…”

டொக்

திரும்ப சிட்டி வங்கியின் தவணை அட்டைப் பிரிவை அழைத்து ‘அது நாந்தான்; அந்தக் குயில் நான் தான்; அந்த விமானத்தில் பறக்க நினைத்தது நாங்கதான்’ என்று உணர்த்துவதற்குள் ஏழரை ஹாரி பாட்டர் புத்தகங்களை வாசித்தும், அதன் பின் நெட் ஃப்ளிஸ் ‘இன்ஸ்டண்ட் ப்ளே’வில் பார்த்தும் விடலாம் என்னும் அனுபவம் பெற்றிருந்ததால், அந்த நீண்ட நெடிய பயணத்தைத் துவக்கவே இல்லை.

என் பி ஆர் திருகினேன்.

முப்பத்தைந்து டாலருக்கு திருட்டு கடன் அட்டை விற்கப் படுவதை விவரித்தார்கள்.

எட்டு லட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து எழுநூற்றி இருபத்தி ஆறு பேரின் க்ரெடிட் கார்டுகளின் எண், ரகசியச் சொல், கடவு வார்த்தை இன்ன பிற களவாடப் பட்டதை செய்தியாக்கினார்கள்.

ஓட்டல்களில் பில் கட்ட அனுப்பும் வினாடித் துளிகளிலும், பெட்ரோம் பங்க் ரசீதுகளிலும், ஒட்டுக் கேட்டு, எட்டிப் பார்த்து திருடும் நுட்பங்களையும் அடுக்கினார்கள்.

திருடரை எல்லாம் சுதந்திரமாக விட்டுவிட்டு, விட்டு விடுதலையாகி சுதந்திரமாகத் திரிய விரும்புபவனின் வான் சிறகை முறிப்பதில் குறியாக இருந்தால் எகானமியும் நகராது; வயலாருக்கும் வருவாய் வராது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.