இது work in progress. எப்பொழுது பார்த்து முடிக்கிறேனோ அதுவரை இற்றைப்படுத்தப்படும்.
1. சிறந்த நன்றியுரை: ‘சிவாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர்.
மொட்டை பாஸ் தலையில் தட்டுவதற்கு தேவைப்பட்ட உழைப்பைக் கோடிட்டு காட்டி, ஒரு செகண்டுக்கு இவ்வளவு மினுக்கிட்டால், 12,000 விநாடிக்கு எவ்வளவு உழைத்துக் கொட்டியிருப்பார் என்பதை மேஜிக்கலாக ரியலைஸ் செய்யவைத்தார்.
மொட்டைத் தலையில் அதிறும் அந்த ஒலி, பில்லியர்ட்ஸ் பந்து அடித்தவுடன் ஏற்படும் நாதமும் தபலாவின் சத்தமும் இணைந்தது.![]()
2. சிறந்த நடிகை: சிங்கப்பூர் கலைவிழா தொகுப்பாளர் அனு ஹாஸன்
‘கானல் நீர்’ திரைப்படத்தில் நடித்து உள்ளங்கவர் கள்ளனாக, புது முக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரித்தீஷைப் பாராட்டி ஒன்றைரை நிமிடம் நக்கல் வெளிப்படாமல், நையாண்டி எட்டிப்பார்க்காமல் பேசியதற்காக வழங்கப்படுகிறது.
3. சிறந்த பேச்சாளர்: மொக்கை பேசினார் சேரன்
பேசினார். பேசியதையேத் தொடர்ந்து அலுக்காமல் பேசினார். பேசிக் கொண்டிருக்கிறார். கேள்விகளும் படு திராபை ரகம். ஆனந்த விகடன் மாதிரி வாயில் வார்த்தை வரவழைக்கும் கலையை எப்பொழுதுதான் தமிழ் வெள்ளித்திரைகள் கற்றுக் கொள்ளுமோ!
4. சிறந்த பேச்சாளினி்: ஜூனியர் ‘ஸ்னேஹா’ ஷெரின்
ஸ்னேஹா போல எந்த டாபிக் கொடுத்தாலும் கருத்து இருக்கிறதோ, விஷயம் தடவலோ, தட்டித் தடுமாறாமல் பேசுகிறார். ‘திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபியிடம் உதவி நெறியாளராக சேர்ந்துவிட்டார். சுகாசினியைத் தொடர்ந்து இன்னொரு கதாநாயகி ↔ இயக்குநர்.
5. சிறந்த நிகழ்ச்சி: சத்யராஜூடன் பேட்டி
கேள்வி: ‘நமீதா உங்களுடன் பல படங்கள் நடித்தது பற்றி?’
சத்யராஜ்: ‘அவங்க என் கூட நடிக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு பெட்டர். என்னை மாதிரி வயசான ஆளுங்களோட நடிச்சா மார்க்கெட் அவுட்னு அர்த்தம்.
ஆன்டன் பாலசிங்கமாக நடிக்க ஆசை என்றார். குளிர் கண்ணாடியுடன் நேர்காணல் தொடுத்தவரை ‘ஹீரோயினை சைட் அடிக்க போட்டிருக்கீங்களா!’ என்று எதார்த்தமாய் கால்வாரினார். சம்பிரதாய கேள்விகளுக்குக் கூட அவரின் பாமர பதில் தவறவிடக் கூடாத நிகழ்ச்சியாக்கியது.
‘சிவாஜி’யில் காசிமேடு ஆதிக்கு கதாபாத்திரத்தின் கனம் கம்மி என்றார். நான் நடித்தால் பதிலுக்கு பதில் எகத்தாளமாய் ‘என்ன அதிறுது? சும்மா சவுண்ட் விடாதஜி’ என்று போட்டுத் தாக்கினால்தான் சரிப்படும் என்று இயல்பாகப் பேசினார்.
6. சிறந்த ஆட்ட கலைஞர்: நடன இயக்குநர் ராம்ஜி
ரஜினியை மிஞ்சும் நடனம் என்று விளித்தால் அது ராம்ஜிக்கு வஞ்சப்புகழ்ச்சியாகி விடும். பரபரப்பு, துள்ளல், grace கலந்த நளினம் எல்லாம் உண்டு. துவக்க ஆட்டத்தில் மேற்கத்திய ஆட்டமும் சாஸ்திரீய சங்கீதமும் கலந்து வித்தியாசமும் உண்டு.
7. சிறந்த ஆட்டக்காரி: one film flopper ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ அபர்ணா
‘மஸ்தானா மஸ்தானா‘வில் வந்திருக்க வேண்டியவர். ஒற்றைநாடி தேகமாக இருந்தும் மூச்சு வாங்கல் இருக்கட்டும்; உடம்பையாவது லூசாக வைத்து ஆடியிருக்கிலாம். கலக்கல் ஆட்ட அமைப்பை (dance choreography) மிரட்சியுடன் ஆடி அப்பீட்டானார்.
8. சிறந்த ஆடை அலங்காரம்: ‘காதல்’ சந்தியா
தொப்பை என்பது தமிழ் ரசிகர்களின் கனவுப் பிரதேசம். பத்மினி ஆரம்பித்து நயன் தாரா, நமீதா வரை போஷாக்கான காம்ப்ளான் கேர்ள்களை ரசிக்கும் கோலிவுட் உலகம். இருந்தாலும், கொழுப்பு மட்டும் திரட்சியாகத் தனித்துத் தெரியுமாறு ஆடை அணிவது, மில்ஸ் அண்ட் பூன் படிக்கும் chick- இடம் யூமா வாசுகி நாவலை படிக்க வைக்கும் கொடூரம்.











