மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது.
“புதிய வார்ப்புகள்” படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.
“ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?” கேட்டேன், பாரதியிடம்.
“நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்” உறுதியாகவே சொன்னார், பாரதி.
மறுநாள் என்னைப் பார்த்தவர், “என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்” என்றார்.
கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், “என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?” என்று கிண்டல் செய்தேன்.
அவரோ, “இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்” என்று யதார்த்தமாக சொன்னார்.
அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ – இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். “ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?” என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.










