Karaintha Nizhalgal – Asokamithiran (2)


‘பணம் பணத்தினால் வாங்கக்கூடிய வாழ்க்கை – இந்த இரண்டுக்கும் நீ சபலமில்லாமல் மீண்டு வளர்ந்தது பற்றி எனக்கு உன் மேல் மதிப்புண்டு. ஆனால் உனக்கு எவ்வளவோ விஷயங்கள் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடப் போதிய அறிவு கிடையாது என்று எனக்குத் தெரியும். உனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கரைகண்டவன் என்ற நினைப்புதான் உனக்கு இருக்கிறது.

மிகச் சாதாரணமான ஒன்றைப் பற்றி உனக்குச் சரியான மதிப்பீடு கிடையாது. உனக்கு பணத்தின் மதிப்பே தெரியாது. ஒவ்வொரு தம்படியும் எவ்வளவு நேர உழைப்பு, எவ்வளவு தீவிரமான உழைப்பு என்று எண்ணிக் கொண்டு இங்கே என் எஸ்டேட்டில் என் காரை எடுத்துக் கொண்டு வந்து என் பணத்தை வைத்துக் கொண்டு குடித்து விழுந்து கிடக்கிறாய்.

நான் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எனக்கு என் மூளை ஒன்றுதான் இருந்தது. உனக்கு என் மூளை இருக்கிறது. கூட ஒரு சிறு சாம்ராஜ்யம் இருக்கிறது. எனக்கு இருபது வருஷம் முப்பது வருஷம் உழைத்து எட்டிப் பிடிக்க முடிந்த நிலை உனக்கு இன் பிரக்ஞயில்லாமலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. நீ என்னோடும் சேராமல், குடும்பத்தோடும் சேராமல் வேறு யாருடனும் சேராமல் இங்கே வந்து அரை இருட்டில் அரை நினைவில் கிடப்பது ஏதோ பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

நான் இதைச் சொல்ல முடியும். இது சாதனையே அல்ல. நீ மனிதர்களைப் பார்த்துப் பேச நிற்காமல் நழுவிவிடுவது உனக்கு அவர்களின் தேவை இல்லை என்பதனால் இல்லை. நீ பேசப் பேச உன் அந்தரங்க நிலைமை சிறிதளவாவது வெளிப்பட்டுவிடும். உனக்கு உன்னைப் பற்றி நிர்ணயம் கிடையாது. அப்படியிருந்தாலும் அது நீ பெருமை கொள்ளும்படி இல்லை.

அதுதான் நீ மனிதர்களைக் கண்டு தூரப் போவதின் காரணம். பணம் பற்றி, பணம் ஒருவழிப் பாதை அல்ல. அது உனக்குத் தெரியும். உனக்கு வாங்கிக் கொள்ளத் தெரியும். திருப்பித்தரத் தெரியாது. ஒரு ஒப்பந்தத்தையும் காப்பாற்றத் தெரியாது. ஒப்பந்தங்களைக் காப்பாற்ற வேண்டிய குணம் உன்னிடம் கிடையாது.

நீ என்னைத் தராசிலிட்டுப் பேசுகிறாய், நீ பேசுவது எனக்கு வருத்தத்தைத் தரவில்லை. ஆனால், என்னைத் தராசிலிட்டு, தவ்றான மதிப்பீடுகள் வைத்து நீ சிந்தனை செய்கிறாய். என்னைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இந்த வக்கிரப்பட்ட சிந்தனை ஓட்டம்தான் இருக்கும். இதே பின்னப்பட்ட ஓட்டம்தான் மற்றெல்லாவற்றுக்கும். நீ எனக்கு நாணயம் பற்றி சொல்கிறாய்.

நான் துரும்பு பெற்றாலும் அதற்குரிய கட்டணம் கொடுத்து விடுகிறேன். யாரையும் என்னிடம் ஏமாற்றம் அடைய விடுவதில்லை. அது எங்கள் தலைமுறை. அந்தத் தலைமுறையில் சிக்கெடுத்துப் போகும் புத்தி கிடையாது. பொறுப்புகளைக் கண்டு நாங்கள் ஓடிப்போனது கிடையாது. வாக்குறுதிகள் தரவேண்டியிருப்பதற்காகச் சமூகத்தினின்றே ஒளிந்து கொண்டு இருந்தது கிடையாது. உன் புத்தி, உன்னைப் போன்றவரின் புத்திதான் விநோதமாக இருக்கிறது. அந்தப் புத்தி இன்றிருப்பதை எல்லாம் அப்படியே என்றைக்கும் இருக்கும் என்கிற நிச்சயித்தில் உழல்கிறது.

ஆனால் ஒவ்வொரு நாளிலும் எவ்வளவோ விஷயங்கள் அப்படியே அழிந்து போய் விடுகின்றன. இதோ இந்த இரண்டு மணி நேரம் உன்னை என்னோடு சேர்த்துக் கொண்டு போவதற்காக நான் மன்றாடிக் கொண்டிருக்கும் வேளையில் எவ்வளவோ விஷயங்கள், எவ்வளவோ பொருள்கள் என் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.

போவதை ஈடுகட்டுவதற்கு வேறு பல பெற வேன்டும். இதை நான் முதலிலிருந்து செய்தேன். இதைத்தான் நான் திட்டமிட்டுச் செய்தேன். இப்போது உன்னிடமுள்ளதைப் பெருக்க முயற்சி செய்யாவிட்டாலும் பாதுகாக்கப் பிரயத்தனம் எடுத்துக் கொள்ளாவிட்டால் திடீரென்று ஒரு நாளைக்கு இந்தக் கூரை இருக்காது. அந்த வேலி இருக்காது.

எதுவும் திடீரென்று மடிவது இல்லை. எதுவும் திடீரென்று பிறந்து விடுவதும் இல்லை. ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அதை அவன் விழிப்பொடு கைவசம் வைத்துக் கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன் மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன. நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவில் வைத்துக் கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.’

நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்  

One response to “Karaintha Nizhalgal – Asokamithiran (2)

  1. this is a conversation between father and his son.

    in this the father’s views abt his son is adaptable and acceptable to every son and father in this world at one moment of time in their life time…

    i like this long comment of a father on his son…

    and above all this novel is a very new of its kind

    uyirroli kannan.m

uyirroli -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.