Quotes: Thinnai VeSaa – Arts, Music, Dance, Performance


தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம் :: வெங்கட் சாமிநாதன்

  • தமிழ் நாட்டில் செவ்விய கலைகளாக, சங்கீதத்திற்கும் நடனத்திற்கும் உள்ள ரசனையின் வியாபகமும் ஆதரவும், இந்தியாவில் வேறு எங்கும் எந்த செவ்விய கலைக்கும் இல்லை.
  • இன்றைய சினிமாவை மீறி, அரசியலை மீறி ராக்ஷஸ பலம் கொண்ட தொலைக்காட்சியையும் மீறி, அது தன்னைக்காத்துக் கொண்டுள்ளது சற்று நம்ப முடியாத ஆனால், சந்தோஷம் அளிக்கும் ஒன்று தான்.

கர்னாடக சங்கீதம் ஒரு நாதோபாசனை என்று சொல்வதுண்டு. இன்று கர்னாடக சங்கீதம் உள்ள நிலையில் அதை நாதம் என்றோ உபாசனை என்றோ எவ்வளவுக்கு சொல்லமுடியும், எவ்வளவு பேரிடம் இதைக் காணமுடியும் என்பது எனக்கு சந்தேகமே.

இவ்வளவு செல்வாக்கும் ஆதரவும் இருந்த போதிலும், இன்று அது பாடுதல் (performance) என்ற அளவிலேயே இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை மீறி நாதத்தில் நம்மையோ, பாடுபவர் தம்மையேவோ மறந்து திளைக்கச் செய்யும் ஒரு அனுபவமாக(experience) எழுச்சி பெறுவது என்பது கிடைப்பதில்லை.

வேறு வார்த்தைகளில் சொன்னால்,

கற்ற காரணத்தால், செய்யுள் இயற்றத்தெரிகிறது, ஆனால் கவிதை பிறப்பதில்லை என்பது போலத்தான்.

இத்தகைய மீறலை, நிகழ்ச்சி அனுபவமாக எழுச்சி பெறுவதை நான் சில சமயங்களில், ஓ.எஸ் அருணிடம், சஞ்சை சுப்பிரமணியனிடம் கண்டிருக்கிறேன். அனேக மற்ற சமயங்களில், ‘ கச்சேரி எவ்வளவு நன்னா அமைஞ்சுட்டது பாத்தியா? என்பது போலத்தான் ஒரு உணர்வு.

ஒரு கிஷோரி அமன்கரோ, உஸ்தாத் அமீர் கானோ, குமார் கந்தர்வாவோ பாடும்போது ஏற்படும் அனுபவ மெய்சிலிர்ப்பு வெகு அரிதாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் இன்று கிடைக்கிறது. ஸ்வரங்கள் ராகமாவது போல, ராகம் ஒரு நாத உலகமாக, ஒரு தவமாக, தன்னை மறந்த லயிப்பாக, சஞ்சாரமாக அனுபவ மாற்றம் பெறுவதில்லை. சங்கீதம் இரண்டு மணிக்கான நிகழ்ச்சி நிரலாக, மாறியுள்ளது.

பாடகர்கள் தம் குரலைப் பற்றிக் கவலைப் படுவது என்பது முன்னரும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. தனக்காகப் பாடுவது, மற்றோர் கேட்பது என்பது இன்றைய நடைமுறையில் இல்லை.

குமார் கந்தர்வாவின் மகன், ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு காளி கோயிலில் தங்கி பூஜை செய்வதும், கோயிலைச் சுத்தப்படுத்துமாக நாட்களைக் கழிப்பவர், பெயர் மறந்து விட்டது, எப்போதாவது யாராவது அழைத்தால் படுவது என்று வாழ்க்கை மாறியுள்ளது அவருக்கு. அப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த மனம் வேண்டும்.

யாரும் தன் கவனத்தைக் கெடுத்தால், மனம் சரியில்லை என்றால், மேடையை விட்டு எழுந்து விடும் கிஷோரி அமன்கரின் சங்கீத அர்ப்பணிப்பு சங்கீதத்திற்குத் தேவை.

சடங்காக உள்ள ஒன்று பூஜையானால் நல்லது. குறைந்தது அது அர்ப்பணிப்பாக, தன்னை மறத்தலாக அல்லது ஒரு பங்கு பெறும் அனுபவமாகவாவது ஆவது நல்லது. அப்போது தான் அது கலையாகும். இல்லையெனில் பயின்ற தொழில் தான்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.