ரொம்ப நாள் முன்னாடி ப்ரேமலதா, அழைப்பு விடுத்திருந்தார்கள். (Tagging me :: The normal self)
என்னைக் குறித்த ஒன்பது விநோதமான குணாதிசயங்களை சொல்லச் சொன்னார்கள். வலைப்பதிவில் சொந்த வாழ்க்கைக்கும் தாராளமாக இடம் கொடுப்பதாலும், ஒவ்வொரு கருத்துக்கு ஒவ்வொரு அவதாரம் போடாததாலும், இந்தப் பதிவில் புதிதாக புதிர் எதையும் பறைசாற்றப் போவதில்லை.
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, கூவியதற்காக, நவரசங்கள்:
1. ப்ரியம்: இனிப்புகளின் மேல் எனக்கு பெருங்காதல் உண்டு. வயிறு முட்ட சாப்பிட்ட பின் டிராமிஸு, ரச மலாய், பக்லாவா, காசி அல்வா, சம்-சம், குட் டே, ஓரியோ, ஹாகன் டாஸ், ஃபெரோ ராஷர் என்று ஏதாவது மெல்லுவது எங்கள் குடும்பத்துப் பழக்கம். சர்க்கரை வியாதி வா வா, கொழுப்பு போ போ என்று மிரட்டினாலும் அஸ்கா பதார்த்தங்களைக் கண்டால் ஜொள்ளுக்குக் குறைவொன்றுமில்லை.
2. நகைச்சுவை: என்னுடைய மறதிதான் பல சமயங்களில் பலரை சிரிக்க வைத்து, என்னை நகைப்புள்ளாக்கி இருக்கிறது. பெயர் நினைவில் இருக்காது. முகம் நன்கு பதிந்திருக்கும். ‘எங்கேயோ பார்த்திருக்கேன்!‘ என்று அழகான பெண்களிடம் வழிய ஆரம்பிப்பது போல், அறிமுகமானவரிடம் கஜினியாக தலை சொறிவேன்.
3. வருத்தம்: உருப்படியாய் உழைத்துக் கொட்டி, நாளொரு .NETடும் பொழுதொரு Perl-மாய் மதி வளர்த்து சம்பளம் வாங்குமிடத்தில் மதிப்பை வளர்க்காமல், நேரத்தை மதியாது, அவ்வப்போது இணையத்தில் வீழ்ந்து மயக்கமுற்று கிடப்பது.
4. கோபம்: காரணமில்லாமல் பொய் சொல்வது, செல்லிடத்து சினம் காவாமல் இருத்தல் என்று எழுத நினைக்கிறேன். ஆனால், கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் கூட அடங்கிப் போவதுதான் எனக்கு கோபத்தை வரவழைக்கிறது.
5. வீரம்: முகந்தெரியாத விற்பனாவாதிகளிடம் என்னுடைய சாகசம் பலித்திருக்கிறது. குழைந்து குழைந்து தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துபவர்களிடம் என்னுடைய வீரதீரம் வெளிப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘பாலாஜி இருக்கிறாரா?‘ என்று வினவுபவனிடம் தெனாவட்டாக ‘இல்லை!’ என்று தூய தமிழில் செல்பேசியிருக்கிறேன். ‘சாப்ட்டுண்டு இருக்கோமில்ல… வேற எப்பவாது கூப்பிடு.’ என்று கறாராக கண்டித்திருக்கிறேன்.
6. அச்சம்: தொலைபேசியில் அளவளாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான் என்னுடைய நீண்டகால பயம். ‘வேறென்ன விஷயம்?’ என்று கேட்டால், தொய்ந்து போன ‘ஒன்றுமில்லை‘ வருத்தமாக வருவது போல் இருக்கும். நானாகவே ரொம்ப நேரம் கதையளந்தால், ‘எனக்கு இன்னொரு ஃபோன் வருது‘, அல்லது ‘பாஸ் / மனைவி / குழந்தை / நாய் / கடுவன் / பக்கத்து வீட்டுக்காரி / டிவி / கடவுள் கூப்பிடறார்… கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடட்டுமா?’ என்னும் முடிவுரை விழுந்து, ரம்பம் போட்டதை நினைவுறுத்துமோ என்றும் எச்சரிக்கை உணர்வு வந்து தொலைக்கும்.
7. வெறுப்பு: ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமாக (தொடர்புள்ள சுட்டி: Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும்) சன் டிவியிடமுள்ள மையல். நெடுந்தொடர் எதுவுமே காலரைக்கால் விநாடி கூட நோடுவதில்லை. சனி, ஞாயிறு இரவுப் படங்களையும் தவிர்க்கிறேன். அதிகாலை ஆறரை மணிக்கு வேலைக்குப் புறப்படுவதால் ‘வணக்கம் தமிழகம்’ வசதிப்படாது. ‘காமெடி டைம்’மாக வரும் சன் நியூஸ் மட்டும் நையாண்டி தர்பாராக சிரிக்க வைக்கிறது.
8. அமைதி: துளி சத்தம் கூட எழாமல் பல மணி நேரம் வலையை மேய்வதுதான் மௌனமான வேளை. நண்பர்களின் பதிவுகள், செய்தித்தளங்கள், வலையகங்கள், தாளிகைக் கட்டுரைகள், நுட்ப சங்கதிகள் நடுநடுவே ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, அரட்டை அஞ்சல்கள் என்று நேரம் போவது தெரியாமல் இணையத்தில் சறுக்காட்டம்.
9. வியப்பு: ‘எங்காவது பெட்டியைப் பார்த்தால் ஏன்ப்பா டைப் அடிக்கறே?’ என்று என் மகள் வினவிய போதுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எங்காவது டெக்ஸ்ட் பாக்ஸ், மறுமொழிப் பெட்டி, எடிட் பாக்ஸ், அஞ்சல் டப்பா என்று கொடுத்தால் போதுமானது. படிப்பவர் மூர்ச்சையாகுமளவு மெகாபைட் எழுதித் தள்ளுவது.
இப்போது சிலரை அழைக்கும் நேரம். அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்காமல், ஏற்கனவே நான் விரும்பிப் படித்த சில நல்ல பகிர்வுகள். (இவர்களே மீண்டும் இன்னொரு சிறப்பான பதிவைப் இட்டால் மகிழ்வேன் : )
Tag | Personal | Navarasam