மதுரை இடைத் தேர்தலில் 68% வாக்குப்பதிவு
மதுரை, அக்.12: மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதியின் எந்தப் பகுதியிலும் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை.
வாக்குப் பதிவு தொடங்கியபோதே சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், மகபூப்பாளையம், பேச்சியம்மன்படித்துறை ஆகிய பகுதிகளில், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு: வாக்குப் பதிவு தொடங்கியபோது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாலும், வாக்காளர் சிலர் கட்சி சின்னத்துடன் கூடிய பனியனுடன் வந்ததாலும் ஒரு சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. எனினும் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் பிரதான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் பார்வையாளர்கள்:மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான உதயச்சந்திரன், தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சீவ்குமார், மீனா, மாஹி, தென்மண்டல ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மாநகர் காவல்துறை துணை ஆணையர்கள் அறிவுச்செல்வம், பி.நாகராஜன் ஆகியோரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறதா என்பதைப் பார்வையிட்டனர்.
வாக்களித்த வேட்பாளர்: பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் கௌஸ்பாஷாவுக்கு மட்டுமே இத்தொகுதியில் வாக்குரிமை உள்ளது. அவர், டி.பி.கே. சாலையில் இருந்த வாக்குச் சாவடிக்கு, வாக்களிக்கச் சென்றபோது, கட்சி சின்னத்துடன் கூடிய பாட்ஜ் அணிந்திருந்தார். இதற்கு வாக்குச் சாவடியில் இருந்த பிற கட்சி ஏஜெண்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அதை எடுத்துவிட்டுச் சென்று வாக்களித்தார்.
வாக்காளர்கள்: இத்தொகுதியில் மொத்தம் 1,32,231 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66,331 பேர் ஆண் வாக்காளர்கள், 65,900 பேர் பெண் வாக்காளர்கள்.
இத் தேர்தலில்தான் தமிழகத்தில் முதன்முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் பெரும்பாலும் புகைப்பட அடையாள அட்டையையே எடுத்து வந்திருந்தனர். அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்த 13 வகையான மாற்று ஆவணங்களை வாக்களிப்பதற்குப் பயன்படுத்தினர்.
19 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.
கடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 94,224 வாக்குகள் பதிவானது. இதில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 43,185 வாக்குகளும், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.டி.கே. ஜக்கையன் 35,992 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சுந்தரராஜன் 12,038 வாக்குகளும் பெற்றனர்.
அக்.17-ல் வாக்கு எண்ணிக்கை: இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் அக்.17-ம் தேதி நடைபெறுகிறது.











மத்திய தொகுதியில் நடந்த ஓட்டுப்பதிவு சதவிகிதம் 68.72 ஆகும். கடந்த சட்டசபை தேர்தலில் 69.7 சதவிகித ஓட்டுகள் பதிவானது. ஆனால் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.
நேற்றைய ஓட்டுப்பதிவில் 90,887 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ஆண்கள் 46,207 பேரும், பெண்கள் 44,680 பேரும் ஓட்டு போட்டுள்ளனர். பெண்களை விட ஆண்கள் ஓட்டுகள் அதிகமாக பதிவாகி உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலை விட இடைத்தேர்தலில் 3,337 ஓட்டுகள் குறைவாக பதிவாகி உள்ளது.