Monthly Archives: ஜூலை 2006

Two Stories

நல்ல எழுத்தைப் படிக்கும்போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

பட பட வென்று அடித்துக் கொண்டு பறக்கும் ஹம்மிங் பறவையை விவரித்து, நாவலில் படித்து முடித்தும் உட்காராத கதாபத்திரங்கள் போல் மறையாமல், துண்டு விரித்து வேலி கட்டி ஃப்ளாட் போடுகிறது.

செய்திகள் எவ்வாறு முக்கியம் என்று அலசும் இளம் நிருபரின் ராக்கால லாப்ஸ்டர் ஷிஃப்ட் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்தது.

முதல் கட்டுரை – கவிதை போல் மிகையின்றி செதுக்கிய வரிகள் என்றால்; முகத்தில் அறையும் எட்டாம் பக்க மூலையின் 150 வார்த்தைகள் எவ்வாறு செதுக்கப் படுகிறது என்று அமரிக்கையாக விவரிக்கும் இரண்டாம் கட்டுரை – கானாங்குருவி கண்ணி.

மொழிபெயர்க்க தூண்டும் இரண்டு பத்திகள். அருமை என்று சொல்வது இனி அருமை என்பதற்கான அளவுகோலாக்குவது போல் மனதை சென்றடையும் எழுத்து:

1. The Lobster Shift – Columbia Journalism Review September/October 2005: By Julia F. Heming:

Covering the news in a city that never sleeps – The scanner announces a fire on Park Avenue. I look at Veronika expectantly. She shakes her head. “I used to get excited when I heard something like ‘shots fired,’” she says. “But first they have to be confirmed, then they have to be aimed at somebody, then they have to hit somebody, then they have to hit them somewhere important. You learn to decipher with a sense of what’s going to make the paper.”

2. Brian Doyle’s “Joyas Voladores”: So much held in a heart in a day, an hour, a moment. We are utterly open with no one, in the end — not mother and father, not wife or husband, not lover, not child, not friend. We open windows to each but we live alone in the house of the heart. Perhaps we must. Perhaps we could not bear to be so naked, for fear of a constantly harrowed heart.


| |

Strategy for upliftment vs Possible execution plan

Dinamani.com – Editorial Page

எளியோருக்காகத் திட்டமிடுதல் :: ஆர். கண்ணன்
வளரும் நாடுகளைப் பொறுத்த அளவில் ஏழை மக்களை எவ்வாறு அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பது என்பதும் அதற்கான வழிமுறைகளை வகுப்பதும் 21-ம் நூற்றாண்டிலும் தொடரும் மிகப்பெரிய சவால்களாக அமைந்துள்ளன. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த அளவில் எழுத்தறிவின்மை, வேலையின்மை, வறுமை, சரிவிகித உணவின்மை, ஆரோக்கிய வாழ்வின்மை, வாழ்விடமின்மை போன்றவையே மக்களை ஏழ்மை, அதிகாரமின்மை, வளமின்மை எனும் நிலைக்கு உட்படுத்துகின்றன.

உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள் (வளமான நாடுகளின் அரசாங்கங்கள் உட்பட) சந்திக்கின்ற பிரச்சினைகள் குறித்து உலக வங்கியைச் சேர்ந்த பெனிலோப் புரூக் மற்றும் வார்ரிக் ஸ்மித் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமானவையாகும்.

உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், நீர், சுகாதார வசதி, தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனும் அவர்களின் கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உலகில் ஏறத்தாழ 2 பில்லியன் (200 கோடி) மக்கள் சுற்றுப்புறச் சுகாதார வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையிலுள்ள மக்கள் மின்சார வசதியின்றி இருக்கின்றனர். ஒரு பில்லியன் மக்கள் (100 கோடி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றியும் உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தொலைபேசியைப் பயன்படுத்தாதவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலைக்கு இருவகைக் காரணங்கள் உள்ளன. உலகின் ஒருசில இடங்களில் இந்த வசதிகள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்விடங்களிலோ அல்லது அருகாமையிலோ இல்லாதிருத்தல்; வேறு சில இடங்களில் இந்த வசதிகள் இருப்பினும் ஏழை மக்களிடம் இவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதி இல்லாதிருத்தல் என இந்த இரண்டையும் முக்கியக் காரணங்களாகத் தெரிவிக்கும், இக்கட்டுரையாளர்கள், திட்டமிடுதலில் உள்ள குறைபாடுகளையும் சுட்டுகிறார்கள்.

இறுதியாக கோட்பாடு எனும் தளத்திலிருந்து நடைமுறைச் சாத்தியம் எனும் நிலைக்கு வருவதற்கென ஐந்து உபாயங்களைக் கூறியுள்ளனர். அவை:

1. திட்டமிடுதலில் பங்கேற்பாளர்கள் (Stakeholders) குழுக்களை அமைத்தல் மற்றும் அவர்களின் ஆலோசனை பெறுதல்.

2. பயனாளிகள், பங்கேற்பாளர்கள் இவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல்.

3. உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்வடிவு மற்றும் அவற்றின் வழிமுறைகள் இவற்றில் தேவைக்கேற்ப நுணுக்கமான மாறுதல்களைச் செய்தல்.

4. தனியார்மயமாகும் தருணங்களில் மறுசீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதலில் கவனம் செலுத்துதல்.

ஏறத்தாழ ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமைப்பு ஆகியவற்றின் கருத்துகளும்கூட மேற்கூறப்பட்ட கருத்துகளை ஒட்டியே அமைந்துள்ளன. நகர்ப்புறச் சேவைகள் அனைத்தையும் அரசு நிறுவனங்கள் மட்டுமோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாத்திரமோ ஆற்றிட இயலாது என்று உணர்ந்த உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள் இப்போது நிறுவனச் சீர்திருத்தங்களில் (Institutional reforms) தனியார் அமைப்புகளைப் பங்கேற்கும்படிச் செய்துள்ளன என்கின்றது ஆசிய வங்கியின் அறிக்கை. சுலப் இண்டர்நேஷனல் எனும் இந்தியாவைச் சேர்ந்த தனியார் சேவை அமைப்பு, சூழல் பாதுகாப்பில் அடைந்த வெற்றியை இவ்வறிக்கை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. அரசாங்கங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இவை மட்டுமே, ஏழ்மையை அகற்றிட இயலாது என்று சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமைப்பின் அறிக்கையும் கூறுகிறது. ஏழை மக்களின் வாழ்விடங்களில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அந்த மக்களின் திறமைகளையும் பயன்படுத்திச் செயல்படும்போது ஏழ்மையிலிருந்து மக்களை மீட்க இயலும் என்கிறது இந்த அறிக்கை.

அனைத்திற்கும் மேலாக அரசாங்கங்களின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாதிருப்பதற்குரிய காரணங்களை ஆராய்ந்தால், முக்கியமான காரணமாக அமைவது மக்களைத் தகவல் சென்றடையாதிருப்பதேயாகும். விந்தையான ஒரு செய்தி என்னவென்றால் தகவல்புரட்சி நடைபெற்றுவிட்டதாகக் கூறப்படும் இந்த யுகத்தில் தகவல் இடைவெளி (Information gap) குறைக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் மக்களிடையே கலந்துரையாடல் இடைவெளி (interaction gap) அதிகரித்துவிட்டது. இதனால்தானோ என்னவோ நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும் கூட முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வர முடியாமல் போகிறது.

இன்றைய யுகத்தில் பணம் படைத்தவர்கள், ஏழைகள் என்ற பாகுபாட்டைக் காட்டிலும் தகவல் பெறுபவர்கள், தகவல் பெறாதவர்கள் (அல்லது பெற இயலாதவர்கள்) ஆகியோருக்கிடையே உள்ள இடைவெளிதான் சமூகப் பொருளாதார மேம்பாட்டை எதிர்காலத்தில் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக அமையக்கூடும்.

(கட்டுரையாளர்: இயக்குநர், யுஜிசி கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21).

Dinamani Stories of the Day

மும்பையில் சிவசேனைத் தொண்டர்கள் கலவரம்: பஸ்ஸுக்குத் தீவைப்பு; சாலைமறியல்: தாதர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் மனைவி மறைந்த மீனாதாயின் சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். தாதரில் உடல்பயிற்சி நிலையம் அருகே உள்ள கோயிலில் விநாயகர், ஹனுமன் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டதாக பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே கூறினார்.

‘இந்தியாவுக்கு எதிராக புலிகள் எப்போதும் செயல்பட்டது இல்லை’- திருமாவளவன் பேச்சு: இந்திய அரசு நினைத்தால் 3 நாள்களில் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். சிங்கள ஆட்சியாளர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்தியாவின் கடல் எல்லையையும், இலங்கையில் திரிகோணமலை பகுதியில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமித்துவிடாமலும் பாதுகாப்பது விடுதலைப் புலிகள் தான்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி தேரோட்டம் முடிந்தது: தேர் வடம் பிடிக்கச் சென்ற இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை நாட்டார்கள் தேரை தொடவிடாமல் தடுத்தனர். அதேபோல, தேர்வடம் பிடிக்கச் சென்ற சிறுமருதூரைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் ராஜா (22) உள்பட 5 தலித்துகளை நாட்டார்கள் தேர்வடம் பிடிக்கவிடாமல் அடித்துவிரட்டினர். இதில் ராஜாவின் சட்டை கிழிந்தது.

பங்காரு லட்சுமணன் தனிச் செயலர் அப்ரூவராகிறார்: தெஹல்கா இணையதள லஞ்சவிவகார வழக்கில் சிக்கிய பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணனின் தனிச் செயலர் சத்தியமூர்த்தி அப்ரூவராக ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்சப் பணத்தை தனக்காக வாங்கவில்லை என்றும் பாஜகவின் நிதிக்காகவே வாங்கமுற்பட்டதாகவும் விசாரணையில் பங்காரு லட்சுமணன் தெரிவித்தார்.

வேலூர் சிறையில் முருகன், நளினி 15-வது நாளாக உண்ணாவிரதம்: முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்திரா (எ) மேகராவுக்கு மத்திய அரசு உடனடியாக விசா வழங்கக்கோரி ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன் (ஜூன்-25) ஞாயிற்றுக்கிழமையிலிருந்தும், நளினி திங்கள்கிழமையிலிருந்தும் (ஜூன்-26) தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இருவரும் தண்ணீர் மட்டும் குடித்து வந்தனர். சோர்வடைந்ததால் முருகன், நளினி ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை குளூகோஸ் ஏற்ற சிறைத் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர்.


| |

Top Five book Choices from OpinionJournal

  1. ஐந்து சிறந்த குறுநாவல்
  2. ஆபிரகாம் லிங்கன், Gettysburg, சிவில் போராட்ட களம்
  3. (தற்கால) தீவிரவாத போராளி வழிமுறை
  4. சட்டத்துறையைப் பின்னணியாகக் கொண்ட நெடுங்கதை
  5. இருக்கை நுனிக்குக் கொண்டு வரும் கிரிமினல் நாவல்
  6. இராணுவத்தைக் குறித்த தலை ஐந்து புத்தகம்
  7. ஆங்கில மொழியின் ஆதிகாலமும் பயன்பாடும் குறித்த பட்டியல்
  8. தோட்டக்கலை
  9. தொழில் தர்மங்களும் வர்த்தக ரகசியங்களும்
  10. நான்கு முறை ஜனாதிபதியான ஃப்ரான்க்ளின் டி ரூஸ்வெல்ட்


| |

New York Times

சென்ற வார நியு யார்க் டைம்ஸ் செய்திகளில் என்னைக் கவர்ந்தவை. முன்னோட்டமாய் வடிவமும் தோற்றமும் கொடுத்த சண்டே போஸ்ட்டுக்கு நன்றி!

Here’s Proof That New Yorkers Like to Complain – 1700களில் இருந்து நியு யார்க் நகரத் தந்தைக்கு வந்த மனுக்களின் தொகுப்பு. பெண்களின் நீச்சலுடையை கண்ணியமாக்கும் கடிதம் வந்த அதே காலகட்டத்தில் ப்ராட்வே நிகழ்ச்சிகளில் காவல்துறையின் கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாகப் பெண்களை ரசிக்கவிடும்படி கோரும் கடிதங்களும் வந்து மேயரைக் குழப்பியிருக்கிறது.

“The point of complaining is not necessarily that it’s going to change things. It’s more kind of an existential act that is essential to democracy.”


Tail Is Wagging the Internet Dogதமிழ்மண வாக்கெடுப்பு குறைகளைக் களைவதற்கு Digg.com போன்ற முறைகளைப் பின்பற்றினாலும் இரண்டு வருடம் முன்பு எழுதிய பதிவுகள் எல்லாம் அகழ்வாராய்ந்து முன்னணி பெறுவதற்கு பெருங்கூட்டம் வேண்டும்.

The lengthening of the long tail means that old or minimally popular stuff — like an old Slate article or a new album by an obscure Bolivian folk musician — is becoming more valuable thanks to the falling costs of production, storage and distribution.


The Myth of the New India – ‘சுதந்திர நாடு சோத்துக்கு கேடு’, ‘அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகில் ஒலைக் குடிசை கட்டி’ என்பது போல் எகனாமிஸ்ட், டைம் என்று ‘ஒளியிலே தெரிவது தேவதையா?’ என்று டூயட் பாடும் கனவலிருந்து நினைவுக்குக் கொண்டு வருகிறார்.

Mr. Mittal, who lives in Britain, announced his first investment in India only last year. He is as much an Indian success story as Sergey Brin, the Russian-born co-founder of Google, is proof of Russia’s imminent economic superstardom.

$728 per capita gross domestic product is just slightly higher than that of sub-Saharan Africa and that, as the 2005 United Nations Human Development Report puts it, even if it sustains its current high growth rates, India will not catch up with high-income countries until 2106.

Nor is India rising very fast on the report’s Human Development index, where it ranks 127, just two rungs above Myanmar and more than 70 below Cuba and Mexico. Despite a recent reduction in poverty levels, nearly 380 million Indians still live on less than a dollar a day.

2.5 million Indian children die annually, accounting for one out of every five child deaths worldwide; and facilities for primary education have collapsed in large parts of the country (the official literacy rate of 61 percent includes many who can barely write their names). In the countryside, where 70 percent of India’s population lives, the government has reported that about 100,000 farmers committed suicide between 1993 and 2003.


Web site to offer money for popular video clips – இவர்களின் ‘நமக்கு நாமே’ புத்தகம் பதிப்பிக்கும் தொழில் போல் ஒளிக்கோப்புகளை காசாக்கிக் கொள்வதற்கும் டிவி ஆரம்பித்திருக்கிறார்கள். YouTube என்.பி.சி.யுடன் ஒப்பந்தம் போடுவது, Revver.comஇன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்வது போன்ற வலையகங்களுக்கு மாற்று.

Fred Vanderpoel, a creator of television commercials based in Hawaii, has posted lyrical videos on Lulu.tv in his off hours, documenting a triathlon. He said he was not yet sold on setting up a pro account. “I don’t know if I would spend money to make money,” he said.


| |

Othello – Omkara

பீடி ஜலாய் லே ஜிகர் ஸே பியா
ஜிகர் மா படி ஆக் ஹை

ஒத்தெல்லோ – நாடக சுருக்கம் :: என் சொக்கன்

நன்றி: நாடகமல்ல, வாழ்க்கை – நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு

வெனிஸ் நகரின் பணக்காரப் பிரபு ஒருவரின் மகளான டெஸ்டமெனோ, கறுப்பு வீரன் ஓதெல்லோவைக் காதலித்து மணந்துகொண்டாள். டெஸ்டமெனோவின் அப்பா இந்தத் திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஓதெல்லோ தன் மகளை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான் என்று வழக்குத் தொடர்ந்தார் அவர். ஆனால், தீவிர விசாரணைக்குப்பின், ஓதெல்லோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஓதெல்லோவும் டெஸ்டமெனோவும் தங்களின் சந்தோஷ வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவர்களுக்கு இடைஞ்சலாக ஒரு விஷயம் வந்தது – போர் வீரர்களின் பதவி உயர்வு தொடர்பான அரசியல், அவர்களுடைய வாழ்க்கையை பாதித்துவிட்டது.

காசியோ என்பவன், ஓதெல்லோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் நெருங்கிய சிநேகிதன். அவனுக்குதான், ராணுவத்தில் பதவி உயர்வு கொடுத்தான் ஓதெல்லோ. ஆனால், இந்த அறிவிப்பைக் கேட்டதும், காசியோவுக்கு முன்பிருந்தே ராணுவத்தில் பணிபுரிந்துவரும் இயாகோ என்பவனுக்குப் பொறாமையும் எரிச்சலும் உண்டானது. ஏனெனில், இந்தப் பதவிக்குத் தகுதியானவன் தான்தான் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.

ஆகவே, தனக்கு வரவேண்டிய பதவியைப் பிடுங்கிக்கொண்டுவிட்ட காசியோவின்மீதும், தனக்கு உரிய மரியாதையைக் கொடுக்காத ஓதெல்லோவின்மீதும் பயங்கரமான கோபம் கொண்டான் இயகோ. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பழிவாங்குவதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.

அதன்படி, ஒருநாள் காசியோவுக்கு ஏகப்பட்ட மதுவை ஊற்றிக்கொடுத்தான் இயாகோ. பின்னர், அவனுக்கு நன்கு போதையேறியபின், வலுக்கட்டாயமாக அவனை ஒரு வம்புச் சண்டைக்குள் நுழைத்துவிட்டான்.

இதனால், போர் வீரர்களிடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், இயாகோ அந்தச் சிறிய விஷயத்தை, ஊதிப் பெரிதாக்கிவிட்டான். அதுபற்றி விசாரிப்பதற்காக வந்த ஓதெல்லோவிடம், காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பாசாங்கு செய்து, பணி நேரத்தில் அவன் மது அருந்தியதை விளக்கமாக விவரித்தான் இயாகோ. இதனால், ஓதெல்லோவின் கோபம் அதிகரித்தது.

எல்லாம் ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் நடக்கவேண்டும் என்று நினைக்கிற ஓதெல்லோவால், இந்தத் தவறை சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஆகவே, அவன் உடனடியாக காசியோவின் பதவி உயர்வை ரத்து செய்துவிட்டான்.

இயாகோவின் சதித் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது!

போதை தெளிந்தபின், நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட காசியோ, அழுது புலம்பினான். ‘இனிமேல் நான் எப்படி ஓதெல்லோவிடம் நல்ல பெயர் வாங்கமுடியும்?’, என்று அவன் வருந்த, மீண்டும் அவனுக்கு உதவுவதுபோல் குழி பறித்தான் இயாகோ.

‘தன் மனைவி சொன்னால் ஓதெல்லோ கண்டிப்பாகக் கேட்பார், ஆகவே, அவருக்கு உன்மீது உள்ள கோபம் குறையவேண்டுமானால், நீ நேராக டெஸ்டமெனோவிடம் சென்று பேசு’, என்று காசியோவுக்கு யோசனை சொன்னான் இயாகோ. அவன் சொல்வதில் உள்ள சூட்சுமம் புரியாமல், நேரடியாக டெஸ்டமெனோவைச் சந்திக்கச் சென்றான் காசியோ.

நடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட டெஸ்டமெனோ, கண்டிப்பாக காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவேன் என்று வாக்களித்தாள். அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு காசியோ புறப்பட்டபோது, அவன் டெஸ்டமெனோவின் அறையிலிருந்து வெளியேறுவதை ஓதெல்லோ பார்த்துவிட்டான்.

அப்போது ஓதெல்லோவுடன் இருந்த இயாகோ, அவன் மனத்தில் தவறான ஒரு சந்தேகத்தை விதைக்க முயன்றான்.

டெஸ்டமெனோவை மிகவும் பிரியமாக நேசித்த ஓதெல்லோவுக்கு, அவள்மீது எந்த சந்தேகமும் இல்லை, என்றாலும், தந்திரமாகவும் புத்திசாலித்தனமான வாதங்களுடனும் தொடர்ந்து பேசி, காசியோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஓதெல்லோவை நம்பச் செய்துவிட்டான் அவன்.

போதாக்குறைக்கு, அப்போது ஓதெல்லோவைச் சந்தித்த டெஸ்டமெனோவும் காசியோவை ஆதரித்துப் பேசினாள், அவன் செய்தது அப்படியன்றும் பெரிய தவறு இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பதவி உயர்வு தரவேண்டும் என்று வாதிட்டாள் அவள். இதனால் ஓதெல்லோவின் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவளுக்கு ஏன் காசியோமீது அவ்வளவு அக்கறை? தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாளா, இல்லையா என்றெல்லாம் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாமல் திணறினான்.

ஓதெல்லோவின் இந்தக் குழப்பத்தைத் தெரிந்துகொண்ட இயாகோ, இன்னொரு தந்திரம் செய்தான். ஓதெல்லோ டெஸ்டமெனோவுக்குப் பரிசாக அளித்த ஒரு கைக்குட்டையைத் திருடி, காசியோ செல்லும் வழியில் போட்டுவிட்டான் அவன். இந்த விஷயம் தெரியாத காசியோ, அந்தக் கைக்குட்டையை எடுத்துத் தன்னோடு வைத்திருக்க, அதைச் சுட்டிக்காட்டி, ‘டெஸ்டமெனோதான் இதை காசியோவுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறாள்’, என்று பொய் மூட்டினான் இயாகோ.

ஏற்கெனவே சந்தேகப் பேயின் வலையில் சிக்கியிருந்த ஓதெல்லோ, இந்தப் பொய்யைச் சுலபமாக நம்பிவிட்டான். தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று நிச்சயமாகத் தீர்மானித்த அவன், இந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளைக் கொன்றுவிடுவதாக முடிவுசெய்தான்.

ஓதெல்லோ டெஸ்டமெனோவின் அறைக்குச் சென்றபோது, அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்படியே அவளை அழுத்திக் கொன்றுவிட்டான் ஓதெல்லொ.

அதேசமயம், அலறியபடி அங்கே ஓடிவந்தான் காசியோ, அவன் உடம்பெல்லாம் காயம். அவனைக் கொல்வதற்கு, இயாகோதான் ஆள் அனுப்பியிருந்தான். எப்படியோ அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்ட காசியோ, அந்த அடியாளின் சட்டைப் பையில், சில முக்கியமான கடிதங்களைக் கண்டுபிடித்திருந்தான்.

அந்தக் கடிதங்களைப் படித்தபின், காசியோ – டெஸ்டமெனோ இருவருமே நிரபராதிகள், நடந்ததெல்லாம் இயாகோவின் சூழ்ச்சிதான் என்னும் உண்மைகள் ஓதெல்லோவுக்குத் தாமதமாகப் புரிந்தது.

அநியாயமாகத் தன்னுடைய காதல் மனைவியின்மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொன்றுவிட்டோமே என்று வருந்திய ஓதெல்லோ, தன் தவறுக்கு தண்டனையாக, தன்னுடைய வாளின்மீது விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.
என் சொக்கன்


கொன்கொனா சென் (எமீலியா), நஸ்ரூதீன் ஷா (ஹே ராம் தோற்றத்தில் கட்டைக்குரலில் பேசுகிறார்), பிபாஷா பாசு என்று நட்சத்திரக் கலக்கலாக இருக்கும் ‘ஓம்காரா’ திரைப்படம் ஒத்தெல்லோ அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது.

அஜய் தேவ்கன் – ஓதெல்லோ

கரீனா கபூர் – டெஸ்டமெனோ

சாய்ஃப் அலி கான் – இயாகோ

காசியோ – விவேக் ஓபராய் (கம்பெனி-க்குப் பிறகு அடுத்த ஹிட் எப்ப கொடுக்கப் போறீங்க?)

திரை முன்னோட்டங்களைப் பார்க்க | குல்சாரின் வரிகளில் பாடல்களைக் கேட்க

பொடிக் குறிப்பு: பாடல் வரிகளைக் கேட்டவுடன், மத்திய அமைச்சர் மாண்புமிகு அன்புமணி ராமதாஸ் – ‘புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாக’ அறிவித்து, சென்ஸார் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்!


| |

Affirmative Action & India’s Reservations

திசைகளுக்கு நன்றி.

அமெரிக்காவில் affirmative action என்றழைக்கப்படும் நேர்செய்கைத் திட்டங்கள் (அ·பர்மேடிவ் ஆக்ஷனுக்கு இனி சுருக்கமாக அ.ஆ.) ஒடுக்கப்பட்டோருக்கு சம அந்தஸ்து நிலைநாட்ட செயல்படுகிறது. ‘அ.ஆ.’ குறித்த எனது புரிதலையும் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கொஞ்சம் பார்க்கலாம். அதன் பின் இந்திய சூழலுக்கு இவற்றில் எது பொருத்தமாக இருக்கும், எவை பயன்படும் என்று நான் நினைப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

‘அ.ஆ.’ குறித்த சில் மேலோட்டமான பயனர் பார்வை

  • இனம், மொழி, நிறம், பால், மதம், என்று அடையாளங்கள் பார்த்து, வேற்றுமை கொண்டாடுவதை தவிர்ப்பதற்காக Equal Employment Opportunity (சமத்துவ வேலைவாய்ப்பு) தொடங்கப்பட்டது.
  • வெளிப்படையாக இன ஆதிக்கம் காட்டுவதை சட்டரீதியாகவும், புரையோடிய ஆனால் நேரடியாக காணவியலாத நிறத் துவேஷத்தை நீக்கவும் செயல்படுகிறது.
  • தங்களின் தவறான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாத நிறுவனங்களை, 1964 சிவில் உரிமை சட்டம் (பகுதி ஏழு) மூலமாக, நீதிமன்றத்தின் உதவியுடன் சரி செய்ய வைக்கலாம்.
  • 1971இல் இயற்றப்பட்ட வழிகாட்டு ஆணையின் படி சிறுபான்மையினரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்குப் போதிய பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் தரப்படும்.
  • 1960களில் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தாலும், எண்பதுகளில் இருந்து முனைப்புடன் நிறைவேற்றுவதில் சுணங்கல்கள் ஆரம்பித்து இருக்கிறது.
  • ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக ஆரம்பிக்கப் பட்டாலும், மகளிர், உடல் ஊனமுற்றோர், மெக்ஸிகோ போன்ற பிற தேசத்து சிறுபான்மையினர் ஆகியோருக்கும் பயன்கள் சென்றடையும்.
  • அயர்லாந்தை சேர்ந்தவனாக இருந்தால் காவல் துறை, இத்தாலி நாட்டுக்காரனாக இருந்தால் பழ வியாபாரி, யூதராக இருந்தால் வர்த்தகத்துறை என்று கொள்முதல் எடுத்துக் கொண்ட வேலைகளை, ‘அ.ஆ.’ மூலம் வெள்ளை நிறமல்லாதவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வைத்தது.
  • சிறு வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகை, பெண்களை முதலாளியாகக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மிக எளிதில் தாராளமான கடன் கொள்கை + வருமான வரிச் சலுகை, சிறுபான்மையினரின் நிறுவனங்களுக்கு துவக்கத்தில் வருமான வரி சலுகை போன்றவை உண்டு.

    எங்கெல்லாம் ‘அ.ஆ.’ பின்பற்ற வைக்கிறார்கள்?

  • கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் சேர்வதற்கு
  • மாகாண மற்றும் மாவட்ட எல்லைகளில் பல இனத்தவரும் கலந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு
  • மனித உரிமை நலன் பாதுகாப்பிற்கு
  • வீடு வாங்க இடம் மற்றும் கடன் போன்றவை சம உரிமையோடு கிடைப்பதற்கு
  • வேலை பார்க்கும் இடத்தில் சுதந்திரமாக செயல்படுவதற்கு
  • சிறுபான்மையினரால் துவங்கப்படும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு
  • காவல், தீயணைப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சார்ந்த துறைகளில் இனக்கலவை ஏற்படுவதற்கு

    கல்லூரியில் இட ஒதுக்கீடு:

    பள்ளிக்கூட வகுப்புகளில், கல்லூரிகளில் முடிந்த மட்டும் பரவலாக சிறுபான்மையினரை நிரவி அமைக்கிறார்கள். கல்லூரியில் கூட, இந்தியர்கள் சிறுபான்மையினர் என்பதால் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, எம்.ஐ.டி. போன்ற ஐவி லீக் கல்லூரியில் ஆசியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் மற்ற நிறத்தவர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் நிறைந்த பள்ளிகளுக்கு சென்று தங்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதுண்டு.

    இனம், மொழி போன்றவை கல்லூரியில் சேரும் வாசற்படிக்குக் கொண்டு சென்றாலும், என்னுடைய பார்வையில் அவற்றுக்கு நிகராக கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:

  • பள்ளியில் கிடைத்த கிரேட் – ஜி.பி.ஏ.
  • SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்
  • பெற்றோர் அந்தக் கல்லூரியில் படித்தவர்களா?
  • விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்
  • அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்?
  • எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…?)
  • தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு
  • பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்?
  • கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்
  • கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்
  • ரெ·பரன்ஸ் – எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார்? அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார்? அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா?
  • எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்?
  • எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார்? அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்?

    இவை அனைத்தும் முக்கியம். கல்லூரிக்கு கல்லூரி வித்தியாசப்பட்டாலும், ஹை ஸ்கூல் முடிப்பதற்கு இரண்டாண்டு இருக்கும்போதே வேட்டையைத் துவக்கி, தங்கள் பல்கலை தேடலை ஐந்துக்குள் அடக்கிக் கொண்டு, அவை ஐந்திற்கும் நேரடியாக வருகை புரிந்து, சேர்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

    இட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.

    அமெரிக்க குடுமிப்பிடி குழாயடி வாக்குவாதங்கள்:

    அமெரிக்காவில் ‘அ.ஆ.’ என்னும் கொள்கைக்கு இரு கட்சிகளுமே ஆதரவளிக்கிறது. இருக்கும் இரு பெரிய கட்சிகளும் ‘அ.ஆ.’ தொடர வேண்டும் என்பதில் ஓரளவு ஒத்துப் போகிறது. அது எவ்வாறு, எவருக்காக, எப்படி செயல்பட வேண்டும் என்பதில்தான் கடும் கொள்கை வேற்றுமை நிலவுகிறது.

    குடியரசு (ரிபப்ளிகன்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு

  • இன அடிப்படையில் மட்டும் வேலைவாய்ப்பு தருவதை நிறுத்திக் கொள்ளாமல் பொருளாதார அடிப்படையிலும் மாற வேண்டும்.
  • நிறுவனத்திற்குள்ளேயே பதவி உயர்வு பெறுவதற்கெல்லாம் ‘அ.ஆ.’-வை பிரயோகிக்க சட்டம் வகை செய்யக் கூடாது.
  • நிறுவனங்களுக்குள் நுழைதல், தொழில் பயிற்சி – போன்றவற்றில் ‘அ.ஆ.’ பரவலாக பயன்படுத்தினால் போதுமானது.
  • சரித்திரத்தில் செய்த அநீதிகளுக்கான குற்றவுணர்ச்சியாக மட்டுமே தற்போது ‘அ.ஆ.’ உபயோகமாகிறது.

    சுதந்திர (டெமோக்ரடிக்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு

  • ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னும் பெருமளவில் வேலையில்லாமலும் வாய்ப்பில்லாமலும் பெருமளவில் திண்டாடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு மட்டுமே ‘அ.ஆ.’ தொடர வேண்டும்.
  • நிறுவனத்தில் எல்லா நிலைகளிலும் சிறுபான்மையினர் இடம் பெற்றால்தான், தங்கள் இனத்தவரும் உயர முடியும் என்னும் எண்ணம் வளரும். அவர்கள் மூலமாக பலரும் தூண்டப்பெறுவார்கள்.
  • பல்லாண்டு கால ஒடுக்குமுறைக்கு இருபதாண்டு கால பிராயசித்தம் சமன் செய்து விடாது.
  • இன்னும் சிறுபான்மையினரில் பலர் அஞ்சி ஒடுங்கிப் போகிறார்கள். இவர்களில் பலருக்கு முதிர்ந்த வயதும் ஆகிய நிலையில், ‘திறந்த நிலைப் போட்டி’யினால் நசுக்கப் பட்டுவிடுவார்கள்.

    அமெரிக்காவில் ஏன் ‘அ.ஆ.’ வெற்றியடைந்தது?

    முழுமையாக இன்னும் கொண்டாட முடியாவிட்டாலும் ‘அ.ஆ.’ மூலம் சிறுபான்மையினருக்கான வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. புதிதாக நிறுவனம் அமைக்கவும் ஆர்வத்துடன் செயல்படத் தூண்டுகிறது. இதற்கு கென்னடி, க்ளிண்டன், ரேகன் என்று பலரின் திட்டங்களை காரணமாக சொல்லலாம்.

    ஆனால், சட்டங்களை இயற்றுவதை விட அவற்றை சிறப்பாக செயலாக்குவதினால்தான் ‘அ.ஆ.’ மிகப் பெரிய வெற்றியை கண்டிருக்கிறது. தான்தோன்றியாக நடந்து கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களை ஒரிரு முன்னாள் உழைப்பாளிகள் சந்திக்கு இழுத்தாலும், தீர விசாரித்து, தப்பு செய்தவர்களை தண்டித்த நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியது.

    அமெரிக்காவுக்கே தனிப் பெரும் தொலைபேசி தாதாவாக விளம்பிய ‘பெல்’ நிறுவனத்தை கண்டித்த தீர்ப்பு பலருக்கும் பயத்தையும் பொறுப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘ட்யூக்’ மின் விநியோகிப்பாளர், கறுப்பர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்க வைத்து சரியான பாதையில் நடக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இரும்புத் தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என்று பெண்களையோ, பிற நிறத்தவரையோ தாழ்த்தி நடத்தினால், பொது ஊடகங்களின் மோசமான சித்தரிப்புக்கு உள்ளாக நேரிடும். மேலும், தங்களுக்கு சோறு போடும் பங்குதாரர்களின் கோபத்துக்கு உள்ளாகுமாறு பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக சேவை அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டி வரும். அதன் பின்னும் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் தொடரும் என்னும் அச்சம் – ஆகியவையே அமெரிக்காவில் ‘அ.ஆ.’ துரித கதியில் செயல்படுத்தத் தூண்டியிருக்கிறது.

    சட்டத்தை இயற்றிக் கிடப்பில் போட்டு விடாமல், அதை செல்லாக்காசாக நினைத்து சிறுபான்மையினரை ஒடு(து)க்கிய முதலைகளை நீதிக்கு முன் தலை வணங்க வைத்ததற்கு இரண்டு பேர் முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.

    1. அரசு சாரா அமைப்புகள்: லாப நோக்கில் இயங்காமல், சுயசேவையாக – ஒடுக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்தி, அவர்களின் வழக்குகளை நீதிமன்றத்துக்கு சுளுவாகக் கொண்டு சென்ற அமைப்புகள். தங்கள் முன்னோர் இயங்கிய விதத்துக்கு உண்மையான பிராயச்சித்தமாக, சிறுபான்மையினரின் நிலையை ஆராய்ந்து அறிந்தவர்கள், அறிக்கை எழுதி சமர்ப்பிப்பதுடன் நில்லாமல், ஊடகம் மூலம் நிறுவனங்களுக்கு நெருக்கடியைத் தர முனைந்தார்கள்.

    2. நீதிமனறம்: கோர்ட்டு, கேசு, வக்கீல், வாய்தா, சர்க்யூட், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அல்லாட வைக்காமல், சட்டத்தை செயல்படுத்திய அமெரிக்க நீதிமன்றங்கள். விசாரணையை உரியமுறையில் செலுத்தி, தீர்ப்புகளை சரியான முறையில் வழங்கி, சட்டத்தை துரிதகதியில் செயல்படுத்தியவர்கள்.

    இந்தியாவிற்கு இவற்றில் எவை எப்படி பொருந்தும்/செயலாக்கலாம்?

  • அரசுத் துறையோடு நிறுத்தாமல் அனைத்து நிறுவனங்களுக்கும், அந்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடை சட்டமாக்குதல்.
  • நகை, ஜவுளி, கணினி, உணவு, சேவை என்று அனைத்து இடங்களும் சுய பொறுப்புடன், பரவலான இனங்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், தன் இனம்/மொழி சார்ந்தவர்களையே வேலைக்கு வைக்கும் நிறுவனங்களை ஊடகங்கள் கடுமையாக சாடுதல் அவசியம்.
  • பதவி உயர்வுக்கான எல்லா நிலைகளிலும் இட ஒதுக்கீடை கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில் தொடர்ச்சியான தேர்வுகளின் மூலம் நிர்ணயிப்பது. வாசல் படி வரை ஏணி வைத்து தூக்கி விட வேண்டும்; உள்ளே நுழைந்தபின் லி·ப்ட் போல் செயல்படும் இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறுத்திவிட்டு, படிக்கட்டுகளில் யார் முந்துகிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.
  • கல்லூரி நுழைவதற்கு சாதி அடிப்படையைப் பெரும்பான்மையாகக் கொண்டாலும், மற்ற இயல்புகளையும் கருத்தில் கொண்டு பலவகையான மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுதல்.
  • சட்டமன்றத்தின் மூலமே சாதிக்காமல், நீதிமன்றங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை நேரத்தே வழங்கினால், ஒடுக்குவோருக்கு நெஞ்சில் பயம் வரும். மனசாட்சிக்கு பயப்படா விட்டாலும், சாட்சிக்கூண்டுக்கு பயந்தாவது தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.
  • அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இனக்கலப்பு இயல்பாக தினந்தோறும் நிகழ்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கும் இத்தால்ய-அமெரிக்கருக்கும் திருமணங்கள், குழந்தை தத்தெடுப்பு என்று ‘அமெரிக்க’ இனம் என்பது நாளடைவில் முன்னிலை வகிக்கும். அதே போல், ஜாதி பார்த்து திருமணம் செய்வதை வரதட்சிணை போன்ற கொடுமையாகக் கருதும் சித்தரிப்பு தேவை.


    | |

  • Copyrights Reserved for and of Kalachuvadu

    காலச்சுவடு வலையகத்தின் காப்புரிமை பக்கம்/அறிக்கை.


    | |

    Incentive Suggestions for the Indian Farmer

    Dinamani.com – Editorial Page

    உழவுத்தொழில் மீட்சி பெற! :: அ. பிச்சை

    “”உண்மையான இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது; நகரங்களில் அல்ல” என தேசப்பிதா காந்தியடிகள் ஆயிரம் முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ஆனால் இன்று கிராமியப் பொருளாதாரம் சிதைந்து வருகிறது. கிராமங்கள் உயிரற்ற சடலங்களாக மாறி வருகின்றன. பண்டித ஜவாஹர்லால் நேரு 15-08-1947 அன்று நிகழ்த்திய தனது சுதந்திர தின உரையில் “”இந்தியாவில் எதுவும் காத்திருக்கலாம்; ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது” (Everything else can wait in India; but not agriculture) எனப் பகிரங்கமாக அறிவித்தார். இதனை எல்லோரும் மறந்து விட்டார்கள் – ஆட்சியாளர்கள் உட்பட. 60 ஆண்டுகள் காத்திருந்த விவசாயிக்கு இன்னும் விமோசனம் ஏற்பட்டபாடில்லை.

    படித்து, பட்டம் பெற்று, உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் உழவுத் தொழிலை ஏற்றுக் கொண்ட ஓர் இளைஞனைக் கேட்டேன். அவர் சொன்னார்:

    விவசாயம் கொஞ்சமும் கட்டுபடி ஆகவில்லை; மழை இன்மையால் கிணறு வறண்டுவிட்டது; விவசாயக் கூலியும், செலவும் நாளும் கூடுகின்றன; விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைப்பதில்லை; கடன் வாங்க விரும்பாத நான், கடனுக்குள் மூழ்கி விட்டேன். என்னால் இனிமேலும் விவசாயத்தில் தாக்குப் பிடிக்க முடியாது; விவசாயக் கூலியாக வெளிநாடு போக வழி இருந்தால் சொல்லுங்கள்”

    – என்றார். இவரது பேச்சுதான் கிராம விவசாயிகளின் எதார்த்த நிலையை உணர்த்தியது. இதுகேட்டு நான் மிகவும் அதிர்ந்து போனேன். ஆனாலும் கிராமத்து விவசாயிகளின் உண்மை நிலை இதுதான்.

    இப்படிப்பட்ட இருண்ட சூழலில்தான், அரசின் சமீபகால அறிவிப்புகள், ஓரளவு நம்பிக்கை ஒளியைத் தருவதாக உள்ளன. அவை:

  • விவசாயக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
  • விவசாயத்திற்கு இலவச மின்சாரம்.
  • சில அத்தியாவசியப் பொருள்களுக்கு மானியம்.

    உண்மையில் தற்கொலைப் பாதையின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் துயரங்களுக்கு இவை முழுமையான விடியலைத் தராவிட்டாலும், சிறிது வெளிச்சத்தையாவது தரலாம்!

    இந்திய மூலதனச் சீரமைப்பு நிறுவனம் (Assets Reconstruction Company of India) என்ற ஓர் அமைப்பு ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது (ஆதாரம்: The New Indian Express, Dated 04-01-2006). அதன்படி பெரும்பாலும் நகர்ப்புறங்களில் வாழும் வசதி படைத்தவர்கள், இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளிலிருந்து, தொழில் கடன் பெற்று, அவற்றைத் திருப்பிக் கட்டாமல், வராக் கடன் என்று கணக்கிடப்பட்டிருக்கும் தொகை ரூ. 2,36,000 கோடியாம்! இதில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை: ரூ. 77,000 கோடி. தொழில் கடனைத் தள்ளுபடி செய்தது சரி என்றால், விவசாயக் கடன் தள்ளுபடியும் நியாயம்தானே!

    வளர்ந்த நாடுகளில் விவசாயத்திற்கு பெருமளவு மானியம் வழங்குகிறார்கள். அதன் மூலம் விவசாயம் பட்டுப்போகாமல் பாதுகாக்கிறார்கள். ஆங்கிலேய அரச குடும்பத்தினர் கூட இத்தகைய மானியத்தைப் பெறுகிறார்கள்! நமக்கு இது வியப்பாக இருக்கலாம்; ஆனால் இங்கிலாந்தில் இது விதி அல்லது நடைமுறை.

    பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் 2003 – 2004ஆம் ஆண்டில் பெற்ற மானியம்: 13 லட்சம் அமெரிக்க டாலர் (ஒரு டாலர் சுமார் 45 ரூபாய்). இளவரசர் சார்லஸ் பெற்றது: 4.8 லட்சம் டாலர். காரணம்: இருவரும் சொந்தத்தில் விவசாயப் பண்ணை வைத்திருக்கிறார்களாம்.

    டென்மார்க் இளவரசர் ஜோகிம் 2003-ல் பெற்ற விவசாய மானியம்: 2.2 லட்சம் டாலர். தெற்கு ஜெட்லாண்டில் அவரது பண்ணைக்குக் கிடைத்த மானியம் இது. இங்கிலாந்தின் பெரும் பணக்காரர் வெஸ்ட் மின்ஸ்டர் டியூக் 1200 பசுக்கள் வைத்து வளர்க்கிறாராம்! அதற்காக ஆண்டொன்றுக்கு அவர் பெறும் மானியம்: 5.5 லட்சம் டாலர். அதாவது நாள் ஒன்றுக்கு பசு ஒன்றுக்கு 1.3 டாலர் மானியம் வழங்கப்படுகிறது.

    அமெரிக்காவில் விவசாய மானியம் பெற்றவர்களில் தொழில் அதிபர்கள் டேவிட் ராக் பெல்லரும், டெட் டர்னரும் அடங்குவார்கள்! அரச பரம்பரையினர் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் இத்தகைய விவசாய மானியம் பெறுபவர்களே!

    அமெரிக்காவில் 25,000 பருத்தி விவசாயிகள் மானியம் பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் மொத்தமாக நாள் ஒன்றுக்குப் பெறுவது: 101 லட்சம் டாலர். ஜெர்மனியில் உள்ள 136 பால் பண்ணைக் கம்பெனிகளுக்கு 78 மில்லியன் டாலர் ஏற்றுமதி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஜப்பானில் உள்ள பசு ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 8 டாலர் மானியம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் 60 கோடி விவசாயக் குடும்பங்களில், பாதிக் குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு 1.5 டாலரில் (ரூ. 75) தான் தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்! இதனைப் பார்த்தால் ஏழை இந்தியனைவிட, ஜப்பானியப் பசுக்கள் அதிர்ஷ்டசாலிகளே!

    இந்நிலையில் இந்திய விவசாயிகளுக்கு இன்று வழங்கப்படும் மிகக் குறைந்த மானியத்தைக்கூட, நீக்க முயற்சிப்பது வேதனையிலும் வேதனை.

    வளர்ந்த நாடுகளில் சராசரி குடும்ப வருமானத்தைவிட, சராசரி விவசாயக் குடும்ப வருமானம் அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவிலோ தலைகீழ் மாற்றம். இந்திய தேசிய வருமானம் பற்றிய புள்ளிவிவரத்தில் கடைசியில் இருப்பவர்கள் விவசாயிகளே!

    வேளாண்மை வளர, விவசாயிகள் உயர வழிமுறைகள்:

  • வேளாண் நிலங்களை அரசு உழுபவனுக்கே உடமை ஆக்குவதற்கு, மோதல் இல்லாமல் முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நில உரிமையாளருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு முன்வர வேண்டும்.
  • தரமான விதைகளைக் குறைந்த விலையில் அல்லது மானியத்துடன் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
  • வங்கியில் பணிபுரிவோர் வீடு கட்டுவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கிய காலம் உண்டு. அதேபோல் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் அல்லது 4% வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
  • அரசுப் பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் Cost of Living Index – வாழ்க்கைச் செலவுக் குறையீட்டு எண் அடிப்படையில் ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படியை நிர்ணயம் செய்கிறார்கள். அதேபோல் விளைபொருள்களின் விலையை ஆண்டுதோறும் உற்பத்திச் செலவையும் நியாயமாகத் தர வேண்டிய லாபத்தையும் சேர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும். நுகர்வோருக்குக் குறைந்த விலையில் பொருள்களைத் தர வேண்டுமெனில், விலை வித்தியாசத்தை அரசு மானியமாக ஏற்க வேண்டும்.
  • விவசாயி வீட்டுப் பிள்ளைகளுக்குத் தகுதி அடிப்படையில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர் படிப்புக்கு இடம் கிடைத்தால், கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்.
  • நோய் வந்தால் வைத்தியம் செய்ய விவசாயிக்கு வசதியில்லை. ஆகவே அவனுக்குத் தரமான மருத்துவ வசதி இலவசமாக வழங்கும் வகையில், வட்டார அளவில் அரசு மருத்துவமனைகளின் தரமும், பணியின் தன்மையும், நிலையும் உயர்த்தப்பட வேண்டும்.
  • விவசாயக் குடும்பத்தின் தலைவன் 50 வயதுக்குள் இறந்து விட்டால், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பரிவுத்தொகை ரூ. 50,000 வழங்கப்பட வேண்டும்.

    சுருங்கச் சொன்னால் நாடு வேகமாக வளர்கிறது என்று சொல்லுகிறார்கள். அத்தகைய வளர்ச்சியின் பயன் கிராமப்புற விவசாயிகளுக்கும் போய்ச் சேருமாறு உறுதி செய்யப்பட வேண்டும்.

    “”ஒரு செயலைச் செய்யும்போது, தயக்கம் ஏற்பட்டால் அச் செயலால், இத் தேசத்தின் கடைநிலை மனிதனின் கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற கேள்வியைக் கேள். “ஆம்’ எனப் பதில் கிடைத்தால், அதைத் துணிந்து செய்” – என்றார் காந்திஜி.

    இன்று இத் தேசத்தில் வாழ்வின் கடைநிலையில் இருப்பவர்கள் விவசாயிகளே! ஆகவே மத்திய, மாநில அரசுகள் செய்கிற ஒவ்வொரு செயலாலும், திட்டத்தாலும் ஏழை விவசாயி ஏற்றம் பெறுவானா என எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

  • Copyrights Reserved for and of Kalachuvadu 

    Copyrights Reserved for and of Kalachuvadu Posted by Picasa