Monthly Archives: ஜூலை 2006

Africa – Novel – Socialism

தற்போது புரட்டும், நூலகத்தில் கிடைத்த, மூன்று ஆங்கிலப் புத்தகங்கள்:

  • The Fate of Africa: From the Hopes of Freedom to the Heart of Despair: Martin Meredith – ஆப்பிரிக்காவின் வரலாறு. தெரியாத பூமிக்குள் கை பிடித்து அழைத்து செல்கிறார்.

  • All the King’s Men : Robert Penn Warren: லூயிஸியானாவின் முன்னாள் கவர்னர் Huey Long-இன் உண்மைக் கதை என்பது வாங்க வைத்தது. சாதாரண மனிதன் சேவை செய்ய அரசியலுக்கு வருவதும், பதவிக்கு வந்தபின் கெட்டுப் போவதையும் விவரிக்கும் நாவல். 1946-இல் எழுதப்பட்டது. புலிட்சர் பரிசை வென்றிருக்கிறது.

  • Guilt, Blame, and Politics: Allan Levite: இருபது வயதில் கம்யூனிஸ்ட் ஆக இருப்பவர், நாற்பது வயதில் கன்சர்வேடிவ் ஆக மாறும் பின்னணி, சுய மதிப்பு vs விடுதலை உணர்ச்சி, சுகங்களை அனுபவித்து செல்லும் கையாலாகத்தனத்தினால் எழும் குற்றவுணர்வு போன்றவற்றை வலது சாரி கருத்தாக்கத்தில் கொடுக்கிறார்.

  • Crash – Movie Review

    க்ராஷ்

    தமிழோவியத்திற்கு நன்றி.

    9/11 முடிந்து ஒரிரு மாதம் கழிந்திருக்கும். உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கவும் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கவும் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றிருந்தோம். அனைவரும் பன்னாட்டு உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவுடன் தான் அந்த இருவரை கவனித்தோம். அழுக்கு அதிகம் தெரியாத பழுப்பு நிற குர்தா, பைஜாமா. தலையில் வெள்ளை நிற பருத்தியுடைத் தொப்பி. உட்கார்ந்திருந்த மேஜையில் உணவோ, குளிர்பானமோ எதுவும் கிடையாது. எதைக் குறித்தோ ஆர்வமாய் ஆனால் தங்களுக்கு மட்டுமே கேட்கும் சன்னமான குரலில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களில் ஒருவன், ‘அடுத்து எங்கே என்று திட்டம் தீட்டுகிறார்களோ?’ என்று சத்தமாக யோசித்தான்.

    க்ராஷ் படம் முழுக்க ‘பொலிடிகலி இன்கரெக்ட்‘ ஆக சிந்திப்பதை எதிராளியிடம் நேரடியாகத் தாக்குகிறார்கள். அதன் பிறகு, தங்கள் மனிதத்தை இயல்பாக நடப்பதன் மூலம் மனதில் ஊறிய மொழி, இன, வகுப்பு பிரிவினைகளை மேற்சென்று தாண்டியும் விடுகிறார்கள்.

    சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற படம். தொட்டுக் கொள்ள படத்தொகுப்பு, திரைக்கதை என்று மேலும் இரண்டு ஆஸ்கார்கள். நடித்தவர்களின் பட்டியலை பார்த்தால், ஹாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இருக்கிறார்கள். 21 கிராம்ஸ், ட்ரா·பிக் போன்ற சிதறலான காட்சிகளுடன், பராக்கு பார்த்து கவனம் சிதறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

    தேர்தலில் நிற்கும் வெள்ளை வேட்பாளரின் கார், கறுப்பர்கள் இருவரால் கொள்ளையடிக்கப் படுகிறது. அவரின் பணக்கார மனைவிக்கு பயத்தினாலும் தனிமையினாலும் எதைப் பார்த்தாலும் நம்பிக்கையின்மை தொற்றிக் கொள்கிறது. காரைத் திருடியவர்களில் ஒருவன், இரட்டை குதிரை சவாரியாக ஒரு புறம் குற்றவுணர்ச்சியும்; இன்னொரு புறம் பணத்தேவையுமாக, திருந்த யோசிப்பவன். இன்னொருவன், ஆதிக்க சமூகத்தை கடுமையாக சாடிக் கொண்டு, புத்திசாலித்தனமான வாதங்களினால், தன்னை மழுங்கடித்துக் கொள்பவன்.

    லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையை சுற்றி வரும் கதாமாந்தர்கள். அப்பாவிற்கான மருத்துவ செலவு செய்ய முடியாத இயலாமையை, வேறுவிதமாய் தீர்த்துக் கொள்கிறான் ஒருவன். இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் அந்த அருவருக்கத்தக்க நிகழ்வை கண்டிக்கும் அவனுடைய கூட்டாளியே, பிறிதொரு சந்தர்ப்பத்தில், இன உணர்வை வெளிப்படுத்துகிறான்.

    தொலைக்காட்சியில் உயர்பதவியில் இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கரும் இனபேதத்தை சகித்துக் கொள்ள நேரிடுகிறது. படப்பிடிப்பில் வெள்ளையனைப் போல் நடிக்கும் சகாவை, கறுப்பினத்தவன் போல் உச்சரித்துப் பேச வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறான். வண்டியோட்டுகையில் எவ்விதக் குற்றமும் செய்யாத போதும் DWB என்று செல்லமாய் அழைக்கப்படும் செய்கைக்காக மனைவியினைத் தடவி சுகம் காணும் போலீஸ் அதிகாரியிடம் செயலற்று நிற்கிறான். அந்தக் கோபம் எல்லாம், தன்னிடம் திருட வருபவனுக்கு கடுமையாக அறிவுரை கூறுவதாக மாறுகிறது. வழிப்பறிக்காரனைப் போன்ற ஓரிரு விஷ விதைகளால், மொத்த சமூகமே எவ்வாறு சித்தரிப்புக்கு உள்ளாகிறது என்று புரிய வைக்கிறான்.

    அமெரிக்காவை கலாச்சாரங்களை கலக்கியுருக்கும் கலயம் (melting pot) என்று சித்தரிப்பார்கள். இந்தப் படம் போதுமான அளவு வெள்ளையர், ஆப்பிரிக்க அமெரிக்கர், மெக்ஸிக்கர், பிற பழுப்பு நிறத்து ஸ்பானிய மொழியர், இரானியர், சீனர், என்று எவர் எப்படி அனுமாணிக்கப் படுகிறார்கள், எவ்வாறு உள்-சித்தரிப்பு நிகழ்கிறது என்பதை அணுகுகிறது. கூடவே, அமெரிக்காவுக்கு மட்டுமே உரித்தான குடியேறிகளுடன் நிறுத்தாமல், உலகத்துக்கே பொதுவான ஏழை – பணக்காரன்; காவலாளி – களவாணி; பதவி வகிப்பவன் – வகிக்காதவன் என்று ஏற்றத்தாழ்வுகள் நீக்கமற நிறைந்திருக்கும் இண்டு இடுக்குகளுக்கும் ஒளி பாய்ச்சுகிறது.

    விவரணப் படங்களுக்கு உரிய தகவல்களான, எதிர்ப்பக்கத்தில் கறுப்பர் நடந்து வந்தால் சாலையைக் கடந்து, அந்தப் புறமாக ஒதுங்கி நடப்பது அல்லது பர்ஸைத் தொட்டுப் பார்த்து பத்திரப்படுத்துவது – போன்ற ஆராய்ச்சித் தகவல்களை சம்பவமாகக் கோர்த்திருக்கும் லாவகம்; பதவிக்கு போட்டியிடுவதால் நடுநிலையை பிரஸ்தாபிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க அதிகாரிக்கு பதக்கம் குத்தி பெயரை நிலை நாட்டத் துடிக்கும் அரசியல்வாதியின் சந்தர்ப்பவாதம்; வாயிற்கதவை மாற்ற பட்ஜெட் இடிப்பதால், கடையை பாதுகாக்க முடியாமல் 9/11 வெறுப்பிற்குள்ளான அப்பாவி நடுத்தர வர்க்க வர்த்தகரின் இயலாமை; தான் மெக்ஸிகன் அல்ல என்று இனத்தின் சினம் தலைக்கேறுபவர், அடுத்த காட்சியில் ஆசியரின் ஆங்கிலப் புலமையை எள்ளி நகையாடும் அமெரிக்கத்தனம்; என்று ஒவ்வொரு சம்பவமும் கதாபாத்திரங்களை எதார்த்தமாக நகர்த்துகிறது.

    இவர் நல்லவர்; இவர் கெட்டவர்; இவர் உயர்ந்தவர்; இவர் மோசமானவர் – என்று மனிதன் வாழ்க்கையில் நடந்து கொள்வதில்லை. தவறிழைக்க வாய்ப்பு, அதிகார சந்தர்ப்பம், தப்பித்துக் கொள்ளும் சூழல், முன் நடந்த வாழ்க்கை சம்பவம், தனக்கு விதிவசத்தால் கிடைத்த அனுபவத்தினால் கிடைக்கும் நியாய மதிப்பீடு, போன்றவையே ஒவ்வொருவரையும் அவ்விதம் அந்தத் தருணத்தில் நடத்தி செல்கிறது. பிறர் பார்த்தால் மட்டுமே நியம அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்தான் இங்கே அதிகம். செல்லிடத்து சினம் காக்காமல் கோபத்தை பிரயோகிப்பதும், அதன் பலாபலன்கள் தன்னை வந்தடையும்போது பாதை மாறி செய்கையை மாற்றிக் கொள்வதை காட்டுகிறது.

    இவ்வளவு சேரியமான படமாக இருந்த போதிலும் ஜனரஞ்சகமான விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. நொடி நேரம் வந்துபோகும் கதாபாத்திரங்களும் அழுத்தமான வசனங்களினாலும் நிதானமான கேமிரா கவனிப்பினாலும், நாவலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை திரையில் கொடுக்கிறார்கள்.

    மிகை நாடும் கலை என்பதற்கு ஏற்ப, திரையில் மட்டுமே நடந்தேறக் கூடிய மன்னிப்பு கோரும் வாய்ப்புகளும், பிராயச்சித்தம் செய்து பாவமன்னிப்பு கேட்டுவிடும் அதிசய தற்செயல் காட்சியமைப்புகளும் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது.

    அமெரிக்காவில் வாழ்வது நரகத்தைப் போன்றதோ? எல்லாருமே மனதில் அழுக்கு கொண்டிருந்தாலும் புறப்பூச்சுகளில் மினுக்குபவர்களோ? நிஜம் ஒன்றாக இருக்க, வெளித்தோற்றத்தில் இன்முகம் பாராட்டுபவர்களோ?
    என்று வெறுத்து வெதும்ப செய்யாமல், வாழ்க்கையில் விரியும் விநோதங்களைப் போல், இயற்கையில் நிகழும் பருவகாலங்களைப் போல், மக்கள் மனம் மாறிக் கொண்டே இருப்பதை சுட்டிக்காட்டி படம் முடிவடையாமல் தொடர்கிறது.


    | |

    Train Stories

    நேற்று வழக்கம் போல் 5:30 இருவுள் வாயிலைப் பிடிக்க முடிந்தது. ட்ரெயினின் சில பெட்டிகளில் குளிரூட்டுவது குறைவாக இருந்ததால், ஏசி இல்லாத பெட்டியில் இருக்கை எளிதில் வாய்த்தது. பக்கத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண். உட்கார இடம் கொடுப்பதற்காக கைப்பையை சீட்டில் இருந்து எடுத்து, மடியில் புதைத்துக் கொண்டாள்.

    ‘You don’t know anybody in the train, right?’

    அலெக்ஸாண்ட்ரோ கொன்சாலெஸ் திரைப்படத்தைப் பாதியில் பார்க்க ஆரம்பித்தவன் போல் பேந்த பேந்த விழித்தேன். இந்த ரயிலில் சில இந்தியரை எனக்கு தெரியும். என்னுடைய குக்கிராமம் அருகே, இறங்குபவர்களில் ஓரிரு சக பயணியரை முகமன் சொல்லும் பழக்கம் உண்டு. இவளுக்கு என்ன ஆச்சு? எனக்கு யாரைத் தெரிந்தால், இவளுக்கு என்ன பயன்?

    கோடை ஆரம்பித்தாலும் மலையுச்சி பனி தாமதமாக உருகுவது போல் கொஞ்ச நேரம் கழித்தவுடன் உறைத்தது.

    ‘இல்லை… என்னுடையவர்கள் எவரும் இல்லை!’

    நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். எங்கள் சம்பாஷணை இனிதே முடிந்தது. பேப்பரை புரட்டியதில் ஜிதான் செய்தது சரியா, மோசமான புத்தக விமர்சனம் என்று பாப்புலரான செய்திகளை நிம்மதியாகப் படிக்க முடிந்தது.

    ஆங்கில வலையகங்களில் சில:

  • Mumbai Train Blasts 2006
  • Death Ends Fun: In touch, morning after | Death Ends Fun: Four in this rickshaw
  • Flickr: Search
  • Comment is free: Avoiding the backlash
  • Ultrabrown : Terrorists blow up Bombay trains (updated)
  • Pickled Politics » Blasts in Mumbai

    | |

  • Attacks continue in India

    இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள்


    மார்ச் 12, 1993: மும்பையின் 13 இடங்களில் குண்டு வெடிப்பு; 257 பேர் இறப்பு; 713 பேர் படு காயம். குற்றஞ்சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிம் இன்னும் தலைமறைவு.

    அக்டோபர் 2001: காஷ்மீர் சட்டசபையில் 38 பேர்களை தீவிரவாதிகள் கொன்றனர்

    டிசம்பர் 2001: இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலில் 14 பேர் இறக்கின்றனர்

    பெப்ரவரி 2002: அயோத்தியா இரயில் நிலையத் தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டனர்

    செப்டம்பர் 2002: குஜராத் அக்சர்தாம் கோவில் அசம்பாவிதம்

    டிசம்பர் 2, 2002: காட்கோபர் பஸ்ஸில் குண்டுவெடிப்பு – இருவர் கொலை; 31 பேர்களின் கை, கால் சேதம்

    டிசம்பர் 2, 2002: பம்பாய் செண்ட்ரல் ரயில் நிலைய உணவகங்களில் குண்டு வெடிப்பு – 25 பேர் படு காயம்

    ஜனவரி 27, 2003: வில்லே பார்லே ரயில் நிலைய குண்டு வெடிப்பு – 30 பேர் படு காயம்

    மார்ச் 13, 2003: முலுந்த் ‘பெண்கள் சிறப்பு ரயிலில்’ குண்டு வெடிப்பு – 12 பேர் கொல்லப்படுகிறார்கள். 65 பேர் படு காயம்

    ஆகஸ்ட் 25, 2003: மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா மற்றும் ஜவேரி பசார் குண்டுவெடிப்பில் 46 பேர் மரணம். 160க்கும் மேற்பட்டோருக்கு கை, கால், பிற பாகங்கள் சேதம்.

    ஆகஸ்ட் 2004: அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் 16 பேர் மரணம்

    அக்டோபர் 2005: புது தில்லி குண்டுவெடிப்புகளில் 61 பேர் மரணம்

    மே 2006: காஷ்மீரில் 35 பேர் கொலை

    ஜூலை 11, 2006:

  • சாண்டா க்ரூஸ் :: 6:24 pm
  • ஜோகேஸ்வரி :: 6:25 pm
  • போரிவிலி :: 6:26 pm
  • மாஹிம் :: 6:28 pm
  • Mira Road :: 6:31 pm
  • பாந்த்ரா :: 6:33 pm
  • மாதுங்கா :: 6:34 pm

    india_mumbai_train_blasts

    ஆதாரம்: NDTV.com – News on Leads in Mumbai blasts case: Govt sources | Guardian Unlimited | Special reports | Sophistication suggests work of Sunni group


    | |

  • Map: Where the blasts happened 

    Map: Where the blasts happened Posted by Picasa

    Read & Stirred

    நன்றி: ஜெகத் | காலச்சுவடு | தமிழ் சிஃபி

    அசோகமித்திரன்: “சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன.

    ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.”


    ஜேஜே சில குறிப்புகள் வயசு 25 – சுகுமாரன்: “புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் ‘திட்டமிட்ட சதி’யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது.

    ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது.

    சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.


    நூற்றாண்டு நாயகர் ம.பொ.சி. :: வெங்கட் சாமிநாதன்

    சற்று முன் தான் ஆர்.கே நாராயணன் நூறாண்டு நினைவு தமிழ்நாட்டில் அல்ல, கர்நாடகத்தில் கொண்டாடப்படுவது பற்றிப் பேசினேன். கன்னடம் பேசிய ஈ.வே.ராவை தமிழர்கள்தான் பெரியாராகக் கொண்டாடுகிறார்கள்.

    அடுத்து 1906 மனிதர் சிட்டி. அடுத்து இன்னொருவரும் இருப்பது நமது நினைவுக்கு வரக் காரணம் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் (Pro-Vice Chancellor) எம்.ஏ.எம். ராமசாமி அவர்களும் ம.பொ.சிவஞான கிராமணியாரின் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடிய செய்தியைப் பத்திரிகையில் படித்தது தான்.

    எனக்கு இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் சரிவரத் தெரிவதில்லை. ஒரு இடத்தில் உள்ள சம்பிரதாயம் இன்னொரு இடத்தில் வழங்குவதில்லை. தமிழ்நாட்டின் சம்பிரதாயங்கள், அதிலும் அரசியல் பொது மேடை சம்பிரதாயங்கள் விளங்குவதில்லை. இதில் யாருக்கு யார் நினைவுப் பரிசு தருவது என்பதில் எனக்குக் குழப்பம் அதிகம். சாதாரணமாக அரசு தான் நினைவு விழா நாயகரின் நினைவில் ஏதும் செய்யும், விழாக் குழுவினருக்கு உதவும், ஆதரவளிக்கும் என்று நினைப்பேன். இங்கு தலைகீழாக இருக்கிறது. அல்லது என் நினைப்புகள்தான் தலைகீழோ என்னவோ.

    எப்படியாயினும், இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாவிட்டால், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த, ஒரு பெரிய மனிதரை நினைவுகொண்டு கௌரவித்துள்ளது பெரிய விஷயம்.

    வெற்றுப் பேச்சாளர் இல்லை. பேச்சும் சிந்தனையும், வாழும் வாழ்வும் ஒன்றாக இருந்தது அவர் வாழ்வு. இதை எத்தனை பேர் நம்ப முடியும் இன்று? ஒரு பைசா சம்பளமில்லாத ஒரு கிராமத்துப் பஞ்சாயத்துத் தேர்தலுக்கு லட்சக் கணக்கில் போட்டியாளரிடம் பேரம் பேசும் அரசியல் இன்று. இந்தக் கலாச்சாரம், நாடு முழுதும் பரவியிருக்கிறது. எத்தனை முறை சென்றார் என்பது இப்போது கணக்கில் இல்லை. சிறையில் மின் விசிறி இல்லை, கரப்பும் தேளும் என்று கூச்சலிட்டார்கள் இன்றைய நமது தலைவர்கள் பலர் அன்று. ம.பொ.சியோ மற்றவர்களோ ஏதும் குறை சொன்னதாக அன்று கேள்வி இல்லை. அது வேறு கலாச்சாரம்.

    ‘என் போராட்டம்’, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ போன்ற நூல்கள் தமிழ் சரித்திரத்தில் இன்னும் விரிவாகப் பேசப்படாத, (இனி பேசப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சரித்திரம் வேறு விதமாக கற்பித்து எழுதப்படத் தொடங்கிவிட்டது என்பது என் கவலை), பேசப்பட மாட்டாதோ என்று இருக்கும் இந்நாளில், அந்தப் புத்தகங்கள் திரும்பப் படிக்கக் கிடைக்க வேண்டும். நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழ் அரசுக் கழகம் அவர் தொடங்கியது, தேசீயம் பேசும் காங்கிரஸ் தமிழையும் தமிழ்நாட்டையும் புறமொதுக்கப் பார்த்திருந்து விடுமோ என்ற அச்சத்தில் பிறந்தது. தேசீயத்தில் தமிழ் அடையாளம் கரைந்துபடாமல் இருப்பதில் அவருக்குக் கவலை அதிகம். தமிழைச் சொல்லி தேசீயத்தை மறுத்த அரசியல் அல்ல அவரது.

    அகில இந்தியப் பின்னணியில் தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் இந்து மதச் சீர்திருத்த புருஷர்களாக, 19ஆம் நூற்றாண்டின் அரசியல், பண்பாட்டுச் சூழலில், இந்து மதம் தன்னை அர்த்தமுள்ளதாக, புதுப்பித்துக் கொள்ளும் ஒரு பரந்த அலையின் பின்னணியில் ராமலிங்க ஸ்வாமிகளின் வாழ்க்கையையும் அவரது உபதேசங்களையும் பார்த்தார். 19ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, அதன் இன்றைய அர்த்தங்களையும் பொருத்தத்தையும் காந்தியடிகளின் தோற்றத்தையும் வாழ்க்கையும் உறவுபடுத்திப் பார்த்தார்.

    திராவிட இயக்கச் சிந்தனையாளர்களான, இலக்குவனார், சாமி சிதம்பரனார் போன்றோரெல்லாம் அந்நாளில் சிலப்பதிகாரம் பற்றிப் பெருமையாகப் பேசி எழுதி அவையெல்லாம் ‘விடுதலை’ பத்திரிகையில் வெளிவரும். அதே சமயம் சிலப்பதிகாரம் பற்றியும் பொதுவாகத் தமிழ்ப் படிப்பு அறிவு வளர்ச்சிக்கு உதவாதது பற்றியும் ‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்வார்களா?’ என்றெல்லாம் பெரியார் கருத்துகளும் வெளிவரும். இலக்குவனாரோ, சாமி சிதம்பரனாரோ அல்லது கழகத் தமிழ் அறிஞர்களோ பெரியாரோடு வாதம் புரிந்ததில்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பேசிச் செல்வார்கள். பெரியார் கருத்துகள் மறுபுறம் வெளிவந்துகொண்டிருக்கும்.

    ஆனால், ம.பொ.சி. அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார். தான் நடத்தி வந்த தமிழ் முரசு பத்திரிகையில் வெகு விரிவாக “கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்” என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். கடைசியில் இதுவும் அதுபாட்டுக்கு அது என்றுதான் ஆயிற்று. அது ம.பொ.சியின் குற்றமல்ல. தமிழ்ப் பண்பு. பதில் சொல்லத் தெரியாவிட்டால், முடியாவிட்டால், கண்டுக்காமல் இருந்து விடுவது தமிழ்நாட்டுப் பண்பு. அப்படித்தான் வாழவேண்டாததெல்லாம், வாழத் தகுதியற்றவெல்லாம், வாழ்வு பெறுகின்றன. யாரும் யாரோடும் மோதுவதில்லை. மோதினாலும் கண்டுக்காமல் ஒதுங்கிவிடுவது சாலவும் நன்று.

    அப்படி ஒதுங்கி நல்ல பிள்ளையாகிவிடக் கூடாது காங்கிரஸ் என்ற காரணத்தால்தான், ம.பொ.சி ஆந்திரா பிரிந்த போது சென்னையையும் திருத்தணியையும் தமிழ்நாடு இழந்துவிடாதிருக்கப் போராடினார். கேரளம் உருவானபோதும், பீர்மேடு, தேவிகுளம் சம்பந்தமாகவும் போராடினார். அவர் இருந்திருந்தால், கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்த்திருக்க முடிந்திராது என்றுதான் நினைக்கிறேன்.

    இன்று விதி விலக்குகள் என்று ஒரு கக்கனையும் நல்லகண்ணுவையும் பார்ப்பது போல. சாகித்ய அகாடமி பரிசு அவருக்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு இல்லாமலேயே, வள்ளலார் கண்ட ஒருமைப் பாடு’ ஒரு நல்ல புத்தகம். திரும்பத் திரும்ப அச்சில் வரவேண்டிய புத்தகம்.

    இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ” விருது அளித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரானார். தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவரானார்.


    பிஏ கிருஷ்ணனின் அற்றைத் திங்கள்மிகையற்ற உரையும் அலுப்பற்ற அந்தியும் :: கே.என். செந்தில்

    பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது அதை பைண்ட் செய்தவருடைய கருணையால் கல்கி இதழின் கடைசிப் பக்கங்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றன. அந்தப் பக்கங்களில்தான் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதில் தொடங்கிய கிருஷ்ணனின் வாசிப்புப் பயணம் பிறகு எழுத்துப் பயணமாக வளர்ந்தது.

    கிருஷ்ணனின் குடும்பத்திற்குப் பல துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு முக்கியமான காரியத்திற்காக அவரது தாத்தாவைச் சந்தித்திருக்கிறார். அவரது இல்லத்தில் காமராசர் தங்கியிருக்கிறார். கிருஷ்ணனின் எழுத்து முயற்சியை ஆசிரியர் மூலம் அறிந்த ஜீவா அவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ஓஅந்த முயற்சியை ஜீவா படிக்கவில்லை என்று நினைக்கிறேன். படித்திருந்தால் அந்தப் பாராட்டும் கிடைக்காமலே போயிருக்கும்!ஔ என்றார் கிருஷ்ணன்.

    கிருஷ்ணனது உரையின் பெரும்பகுதி முன்னாள் அசாம் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவைப் பற்றியே இருந்தது (காலச்சுவடில் அவருக்கு ஒரு அஞ்சலியையும் எழுதியிருக்கிறார் கிருஷ்ணன்).


    சங்கேத அக்காதமி விருது

    பரிந்துரைகள் – 1
    யவனிகா ஸ்ரீராம் கௌபாய் விருது
    மு. ராமசாமி ஓமக்குச்சி விருது
    மாலதி மைத்ரி கொல்லிப்பாவை விருது
    கலாப்ரியா எம்.ஜி.ஆர். கவிஞர் விருது
    தேவதச்சன் சொல்லேருழவன் விருது
    பாலைநிலவன் காஸனோவா விருது
    அப்பாஸ் ‘உல்லாச புருஷ்’ விருது
    நா. முத்துக்குமார் ‘பற பற’ விருது
    தேவதேவன் இயற்கைத் திலகம் விருது
    க. பஞ்சாங்கம் ஸ்தீரி பார்ட் விருது
    காவ்யா சண்முகசுந்தரம் செம்பதிப்பர் விருது
    வெளிரங்கராஜன் தங்கமான ராசா விருது
    அ. மார்க்ஸ் ‘கௌரவம்’ பாரிஸ்டர் ரஜினிகாந்த் விருது
    மணா ஔவை விருது
    சூத்ரதாரி பாலசம்பந்தர் விருது
    மருதா பாலகுருசாமி
    ந. முருகேச பாண்டியன்
    மீரா அடிப்பொடி விருது

    பரிந்துரைகள் – 2
    க. மோகனரங்கன் முன்னுரை முனுசாமி விருது
    ந. முருகேச பாண்டியன் கருத்து கந்தசாமி விருது
    லஷ்மி மணிவண்ணன் பார் புகழும் மனிதர் விருது
    ஜெயமோகன் காவியக் கண்டன் விருது
    யுவன் சந்திரசேகர் கிருபானந்த வாரியார் விருது
    சுஜாதா இலக்கியக் கடத்தல் விருது


    கைமண் அளவு: என் வாசிப்பில் ஜெயமோகன் – 1

    காடு நாவலை வீட்டிற்கு எடுத்துவந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் (லங்காதகனம் கதையில் எந்த வேஷக்குறையும் இல்லாமல் ஆட வரும் ஆசானைப்போல)

    காடு என் ஆவலைத் தூண்டிய பிறகு வாசித்தது ரப்பர் நாவல். ஜெயமோகனின் முதல் நாவலான இது காடு போலவே குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியை (திருவட்டார், திர்பரப்பு, குலசேகரம்..) களமாகக் கொண்டது.

    டார்த்தீனியம். இந்த கதையைப் படிக்கும் எவருமே பாதிப்படையாமல் இருக்கமுடியாது என்பது என் எண்ணம். மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழும் ஒரு சிறுக் குடும்பம் அந்த குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் ஒரு விடுபட இயலாத இச்சையின் (obsession) காரணமாக எப்படி சிதிலமடைந்து சின்னாபின்னமாகிறது என்பது தான் கரு.

    மிகவும் கவர்ந்த இன்னொரு கதை “பிரம்ம சங்க்யா” நம்பூதிரியைப் பற்றிய ஜகன் மித்யை என்ற சிறுகதை. நீட்சே, ஐன்ஸ்டீன், ஜடத்தையும் காலத்தையும் இணைக்கும் சமன்பாடுகள், சுழற்சித் தத்துவம் போன்ற விஷயங்கள் கதையில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றில் பயிற்சியில்லாதவர்கள் கூடப் ஆர்வத்தோடு வாசிக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை மாடன் மோட்சம். ஒருபக்கம் மதமாற்றங்களினாலும் இன்னொரு பக்கம் சமஸ்கிருதமயமாக்கலாலும் அடித்தட்டு மக்களின் சிறுதெய்வ வழிபாடு அழிந்து வருவதாகச் சித்தரிக்கும் கதை. ஜெயமோகன் ஒரு இந்துத்துவாதி அல்ல என்று நிறுவ முனைவோர் இன்றளவும் சுட்டிக்காட்டும் கதை இதுதான்.

    சுந்தர ராமசாமியின் சில கதைகளில் காணப்படும் அங்கதம் ஜெயமோகன் எழுத்தில் பொதுவாக காணமுடிவதில்லை. ஆனால் மடம் என்ற குறுநாவல் இதற்கு சற்று விதிவிலக்கு எனலாம். மாட்டு வைத்திய புத்தகம் ஒன்றைப் படித்து “ஞானம்” பெற்ற ஒரு பனையேறி சாமியாரைப் பற்றிய கதை. சாமியார் மிகப்பெரிய ஞானி என நம்பும் கனபாடிகள், சாமியார் மறைந்த பிறகு அவர் ஞானம் பெறக்காரணமான ஆதார நூல் எது என்றுத் தேடி அலைகிறார். சாமியாரின் பூர்வாசிரம மனைவியான கிழவிக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து அவளிடமிருந்து ஆதார நூல் பற்றிய ரகசியத்தை அறிய கனபாடிகள் முயல்வதும், அவருடைய கேள்விகளுக்கு கிழவியின் பதில்களும் (“என்னெளவ படிச்சானோ? எந்த அம்மெதாலி அறுத்தானோ?”) அந்த தேடலின் பின் உள்ள அபத்தத்தை வெளிப்படுத்துகின்றன. படுகை, லங்காதகனம், மண், கிளிக்காலம் போன்ற வேறு சில சிறுகதைகளும் மறக்கமுடியாதவை.

    ஜெயமோகன் (அவரே “ஆழிசூள் உலகு” நாவலின் விமரிசனத்தில் குரூஸ் சாக்ரடாஸ் என்ற எழுத்தாளருக்குச் சொன்னது போல்) அவரால் மட்டுமே எழுத சாத்தியமான தென் திருவிதாங்கூர் மக்களின் தனித்தன்மையுடைய வாழ்க்கை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றி நிறைய எழுதவேண்டும். (நினைவுக்கு வரும் சினிமா பாடல்: “அக்கம் பக்கம் பாரையா, சின்ன ராசா! ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா!”)

    “மற்றவர்களை தன்னைப் பற்றி இழிவாக எண்ணவைத்து அதில் சுகம் அடைபவர்கள் இருக்கிறார்கள். தான் உண்மையிலேயே இழிவானவன் அல்ல. அது ஒரு தோற்றம் மட்டுமே என்று ரகசியமாக அறிவதிலிருந்தே அந்த சுகம் வருகிறது”.

    நல்லவேளை வைரமுத்து, அப்துல் ரகுமான் போல ஜெயமோகன் தி.மு.க ஆதரவாளராக இல்லை. இருந்திருந்தால் கழக மேடைகளில் “தென்னாட்டு தாஸ்தாவெஸ்கி அண்ணன் ஜெயமோகன் அவர்களே!” என்ற விளியை நாம் கேட்கவேண்டியிருந்திருக்கும்.


    | |

    South Indian Film Chamber Elections

    தேர்தலில் நிற்கிறார் மும்தாஜ் – Sify.com

    தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தல் என்றால் சும்மாவா? அதில் அரசியல் இல்லாமலா இருக்கும்? அந்தத் தேர்தலில் நடிகைகள் மும்தாஜ், விந்தியா, ஸ்ரீப்ரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தல், ஜூலை 30ஆம் தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்குச் சரத்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 4 அன்று தொடங்கியது. முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது நாளான ஜூலை 5 அன்று செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நடிகைகள் மும்தாஜ், விந்தியா, ஸ்ரீப்ரியா, நடிகர்கள் முரளி, அலெக்ஸ் உட்பட 15 பேர், நடிகர் சங்கத்துக்கு வந்து மனு தாக்கல் செய்தனர்.

    நடிகைகள் சிம்ரன், மனோரமா, குஷ்பு ஆகியோரும் போட்டியிட உள்ளதாக பேசப்படுகிறது.

    Thalaiyangam | Kalachuvadu

    தலையங்கம் :: காலச்சுவடுமீண்டும் ஜூலை ’83

    இலங்கையில் ஏற்பட்டிருந்த தற்காலிக அமைதி தகர்ந்துவருகிறது. அமைதி என்பது போருக்கான தயாரிப்பு என்பதிலிருந்து போருக்கான ஒத்திகை என்ற கட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. இந்தக் குழப்ப நிலைக்கு இலங்கை அரசு, புலிகள் என இரு தரப்பினருமே காரணம் என்று பேச வைத்திருப்பதும்கூட இலங்கை அரசுக்கு வெற்றிதான். அப்பாவி மக்களின் சடலங்களைக் கொண்டு அங்கு ஆடப்படும் அரசியல் சதுரங்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது.

    கடந்த பத்தாண்டுகளில் மாறிவந்துள்ள சர்வதேச அரசியல் சூழலில், உலகின் மூலை முடுக்குகளும்கூட வல்லரசியத்தின் செயற்கைக்கோள் துழாவலுக்கு ஆளாகிவருகின்றன. இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் போலவே, சண்டைகளின் பின்னணியிலும் வேற்று முகங்களின் நிழல்கள் உள்ளன. இது இந்தியாவுக்குத் தெரியாத ரகசியமல்ல. இலங்கையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் இந்தியாவுக்குச் சொல்லப்பட்டேவருகின்றன. அமைதிப் படையை அனுப்பிய காலத்தில் இருந்தது போல வெளிப்படையான தலையீட்டுக்கு இந்தியா தயாராக இல்லை எனினும் வேறு விதங்களில் அது இலங்கையைக் கவனித்தேவருகிறது.

    ஈழத் தமிழ்ச் சமூகம் சர்வதேச அளவில் இப்போது மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். யுத்தத்தின் தாக்கத்தை எப்படித் தமிழர்கள் எல்லோரும் உணர்கிறார்களோ அப்படிப் புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் தடையைப் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் உணரத் தொடங்கியுள்ளார். உலகமய மாதலால் பெருகிவரும் நிறவெறி மனோபாவத்தால் ஏற்கனவே சிவில் சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகிவந்த அவர்கள், தற்போது அரசு இயந்திரங்களின் கண்காணிப்பு, விசாரணை முதலான தொந்தரவுகளையும் சந்தித்தாக வேண்டும்.

    ஆக, இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது உலகோடு பிணைக்கப்பட்டே இருக்கிறது. அது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பற்றிக் கூறவே வேண்டாம். இந்தப் பிரச்சினையை மிகவும் உணர்ச்சிகரமாக அணுகும் தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமின்றி மனிதாபிமானத்தோடு பார்க்கிற சாதாரணக் குடிமக்களும் இந்தப் பிரச்சினையில் அக்கறையோடுதான் உள்ளனர். இலங்கையில் வெடிக்கும் யுத்தம் இங்கே அகதிகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதனாலோ தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறது என்பதனாலோ மட்டுமல்ல, ஈழத் தமிழர் மீதான அக்கறைக்கு இன்னும் ஆழமான காரணங்கள் இங்கே இருக்கின்றன. மொழிக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பில் நாம் அந்தக் காரணங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். புவியியல் எல்லைகளைத் தாண்டி மொழி செயல்படும் விதத்தை அரசு எந்திரங்களால் புரிந்துகொள்ள முடியாது.

    “மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு” எனக் கூறிவந்த தமிழக முதலமைச்சர் இப்போது “இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூட்டணிக் கட்சிகளைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்கு வந்திருப்பது நல்ல அறிகுறி.

    நார்வே குழுவினரும் இலங்கை அரசின் பிரதிநிதிகளும் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து மைய அரசின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிச் செல்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அவர்களையும் ‘தடை செய்யப்பட்டவர்க’ளாக பாவிப்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. பல்வேறு மேலை நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று உண்மை நிலையை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளும் வேளையில் இந்தியாவிலிருந்து அப்படியொரு குழுவை அனுப்பலாம் என்ற யோசனையும் நியாயமானதே. இவற்றைத் தமிழக அரசு மைய அரசிடம் வற்புறுத்த வேண்டும். அது மட்டுமின்றி இலங்கை அரசுக்கு இந்தியா செய்துவரும் நேரடியான, மறைமுகமான உதவிகள் இலங்கையின் யுத்த எந்திரத்துக்கு எண்ணெய் போடுவதாகவே இருக்கிறது என்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

    தமிழ் மக்கள்மீதான இலங்கை அரசின் நடவடிக்கைகளில் யுத்தத்தின் தன்மையைவிட இனவாதத்தின் தன்மையே தூக்கலாகத் தெரிகிறது. பேசாலையில் தேவாலயத்துக்குள் நடத்தப்பட்ட படுகொலைகள், பள்ளிமுனை என்ற மீனவக் கிராமத்தை முற்றாக எரித்து ஆடப்பட்ட வெறியாட்டம் முதலானவற்றில் ராணுவப் போக்கைவிட இனவெறியே வெளிப்படப் பார்க்கிறோம். படையினரின் ரத்தத்தில் ஜூலை 83இன் நினைவுகள் துடித்துக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் யுக்தி ஒடுக்குமுறையாளர்களுக்குப் பழகிப்போன ஒன்று. இன்று அந்த யுக்திக்கு ஈழத் தமிழர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குற்றவாளிகளாக்கிக் கூண்டில் நிறுத்த ஒரு பெரும் கூட்டமே வேலை செய்கிறது.

    ஈழப் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பதைத் தனியுடைமையாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு சிலரின் அரசியல் சாதுர்யமற்ற அணுகுமுறை மாநில, மத்திய அரசுகளின் நிலைபாடுகளைத் தீர்மானிப்பது எவருக்கும் நல்லதல்ல. மற்றவர்களைக் குறைகூறுவதன் மூலம் தம்மைத்தாமே முதுகில் தட்டிக்கொள்ளும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளைத் தாண்டி ஈழப் பிரச்சினை மீது அக்கறை கொண்டோ ர் தமது குரலைப் பதிவு செய்ய வேண்டிய நேரம் இது.

    Close to Home – FDA & Pharmaceuticals

    மருந்து வாங்கப் போனேன்
    கொற்றவை வாங்கி வந்தேன்

    என்பது போல் முக்கிய தகவல்களையும் தொடர்புள்ள உப விளைவுகளையும், உள் நுழைய முடியா மொழியில், நுணுக்கி நுணுக்கி, பெரிய துண்டு சீட்டு கொடுப்பவர்களையும்; அந்த விவரங்களைப் புரிந்து கொள்ளாமல் வழக்குத் தொடுப்பவர்களையும் நக்கலடிக்கும் கருத்துப்படம்.

    Close to Home

    நன்றி: Close to Home


    | |

    Chechen politician seeking independence through terrorism

    ஷமீல் பஸயேவ் (Shamil Basayev) மரணம்
    ஜனவரி 14, 1965 – ஜூலை 10, 2006

    செசன்யா விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த, ருசியாவின் ஒஸாமா பின் லாடென் என் வர்ணிக்கப்பட்ட, பெஸ்லான் குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டது முதல் பல செயல் திட்டங்களை ஒருங்கிணைத்த ஷமில் மரணமடைந்தார். ஒரு தீவிரவாதி (அல்லது போராளி) down.

    தொடர்புள்ள செய்திக் கோர்வைகள்:

  • லண்டன் டைம்ஸ்
  • ஜீ செய்திகள்
  • பிபிசி
  • கார்டியன் (லண்டன்)
  • ரஷியாவின் ப்ராவ்தா

    | |