Monthly Archives: ஜூலை 2006

Train, Sun, Big Dig, Wiki

கிழிமுறி உதிர் ஏடல்கள்

சன் டிவியில் ‘லஷ்மி’ ஆரம்பித்திருக்கிறது. ஹிந்தி சூப்பர்மேன் ‘கிர்ரிஷ்’ போல் மதங்கொண்ட யானையை நிறுத்தாமல், அறிவியல்பூர்வமாகக் கையாண்டதாக காண்பித்தார்கள். குஷ்புவை சின்னத்திரையில் ‘குங்குமம்’ சீரியல் மூலம் அறிமுகப்படுத்திய சுஜாதா விஜயகுமார் தயாரிப்பு. தற்போதைய வேலையை விட பெரிய வேலை கிடைத்தால், நிறைய சம்பளத்துக்கு ஜாகை மாறுவது போல் ‘செல்வி’ சீரியலை இயக்கி வந்த சுந்தர் கே விஜயன் இங்கே குதித்து விட்டார்.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் ஆரம்பம் விறுவிறுப்பாய் இருக்கும். புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆவார்கள். அவசரம் காட்டாத நிதானமாக படப்பிடிப்பு. தொழில் சிரத்தையோடு கூடிய பயம். புதுமுக எழுத்தாளராக தேவிபாலா இல்லாவிட்டாலும், டி.ஆர்.பி. ரேட்டிங் குதிரையில் முந்த வேண்டிய அவசியம்.

ரஜினி குதிரையைப் பற்றி சொன்னவுடன், எந்த ஒப்புமைக்கும் ரேக்ளா ரேஸ் நினைவுக்கு வருகிறது. ‘எனக்குப் பிடித்த பாடலில்’ ராஜப்பா வந்திருந்தார். முதல் பாடல்: ‘பொதுவாக என் மனசு தங்கம்

‘பிறந்த ஊருக்கு புகழைத் தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செஞ்சா’

துள்ளல்

சாந்தோம் பள்ளிக்கும் செயிண்ட் பீட்ஸ் பள்ளிக்கும், சென்னையில் எப்போதும் போட்டி நிலவும். பக்கத்து பேட்டை செயிண்ட் ஆண்டனி முதல் லேடி சிவசாமி வரை பாதுகாத்து வீட்டில் சேர்த்து விடுவதில் ஆரம்பித்து, ஷூட்டிங் நடப்பது வரை எதிரும் புதிரும் அக்னி நட்சத்திரங்கள். ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ ரஜினி அங்கிள் எடுத்தது எங்க ஏரியா என்றால், ‘படிக்காதவ’னின் ‘ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி’யில் வருவது செயிண்ட் பீட்ஸ். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் ரஜினியை முதுகில் குத்தியவர்கள் (ரஜினியின் தம்பி வீட்டோடு மாப்பிள்ளை ஆக சென்று விடுவார்) என்று சண்டைக்கு சென்றோம்.

இரவு வீட்டுக்குத் திரும்பும் இரயிலில் மீண்டும் ஏசி ரிப்பேர். இந்தியாவாக இருந்தால், ‘இது மட்டும் அமெரிக்காவாக இருந்தால்’ என்று புலம்பி தீர்த்திருக்கலாம். பாஸ்டனிலும் ஊழல் அதிகம். பாலம் கட்டுவதில் காசு பார்ப்பது போல் பில்லியன் டாலர் சாலை அமைப்பதில் சரிவர முடிக்காமல், கட்டி முடித்த சில வருடங்களுக்குள் மழைத் தண்ணீர் உள்புகுவதும், ஆங்காங்கே இடிந்து விழுவதுமாக லஞ்சத்தைக் காட்டிக் கொடுக்கிறது. விசாரணை கமிஷன் போட்டிருப்பதாக செய்தித்தாள் தலைப்பு. ‘நான் பொறுப்பில்லை’ என்று கவர்னருக்கு நிற்கும் இருவரும் பொதுவாக ஒருவரை நோக்கி குற்றஞ்சாட்டுகிறார்கள். அரசியல்வாதிகள் எங்கும் கூட்டுக் களவாணிகள் என்னும் அக்மார்க் நடுத்தர வர்க்க ஓட்டம் வருகிறது.

காசு வாங்கியும் குளிர்சாதனத்தை பழுது பார்க்காத கருமி ஊர். தூக்கம் வரவில்லை. மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனை, என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசி பகை வளர்த்து விரோதிகளை வளர்ப்பதுதான் நான் இணையத்தில் மறுமொழியாக செய்து வருகிறேனோ என்று இருவுள் வாயில் பயணத்தில் யோசித்து வந்தேன். அதன் பிறகு, வலையின் மூலம் புதிய நண்பர்களை சந்தித்தோம். அவர்களுடன் தானே மோதி வருகிறோம். நிஜ உலகத்தில் இருக்கின்ற பிற தொடர்புகளுக்கு எதுவும் பாதகமில்லையே என்று தேற்றிக் கொண்டேன்.

மாலன் முன்பொரு கட்டுரையில் என்னைக் குறித்து எழுதியிருந்தது போல், எந்த ஏடலுக்கும் ஒரு மாற்றுப் பார்வை வைத்துக் கொண்டு விவாதிக்கும் அன்பர் என்னும் பிம்பத்துக்குள் விழாமல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.

‘தேவர் மகனை’ மீண்டும் பார்க்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்கு நடக்கும் உரையாடலில், ‘போயிடறேன்பா’ என்று தப்பிக்க பார்க்கும் கமலைப் பார்த்து சிவாஜி, ‘அய்யா, விதைச்சவன் என்னிக்காவது மரம் வளர்ந்து பயனை அனுபவிக்கிறானா? எங்க பாட்டன் வெதைச்சத நான் பழமா சாப்பிடறேன்… இங்கே நெல் விளைவிச்சு, உன்னை லண்டனில் படிக்க வச்சதுக்கு எதுக்காக?’ என்பார்.

ரொம்ப யோசிக்காமல் தோன்றியதில் விக்கிப்பீடியா என்பது விதை. உடனடியாக பலன் கிடைக்காது. ஆனால், சிந்தாமல் சிதறாமல், பூத்துக் குலுங்கும் தோட்டம்.

தகவல் உதவி: சீரியலுக்கு வருகிறார் மீனா :: மு.மணி:


| |

Israel vs Lebanon with Hezobollah, Syria, Iran et al

இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு சோதனைச் சாவடி தேவைப்பட்டது. ஸ்பெயினில் நடந்த உரிமைப் போராட்டத்தில் ஜெர்மனியின் புஜபலத்தைக் காட்டி சோதித்து, இரண்டாம் உலகப் போருக்கு கால்கோளிட்டார். ஈரானுக்கும் தன்னுடைய இராணுவ மிடுக்கை பரிசோதிக்க ஆசை. ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் அப்பாவிகளைக் கொன்று தளவாடங்களை production environment-இல் விட்டுப் பார்த்திருக்கிறார்.

ஈரானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எதுவும் ஜி-8 மாநாட்டில் எடுக்கக் கூடாது; என்ன வழி என்று யோசித்தது ஈரான். அடியாள் ஹெசபொல்லாவை அழைத்து கண்ணீர்ப் புகை குண்டுகள் போல் இஸ்ரேலிய படைவீரர்களைக் கைப்பிடித்தது.

இஸ்ரேலில் இராணுவத்தில் சேருவது இந்தியாவைப் போல் விருப்பப் பாடம் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் போல் கட்டாயப் பாடம். வயதுக்கு வந்தவுடன் வாக்களிக்கிறார்களோ, இல்லையோ, இராணுவத்தில் பணிபுரிய வேண்டும். ஏழை உயிர்தானே… போனால் போகிறது என்று பொதுஜனம் விட்டேத்தியாய் விடாமல், செய்தித்தாள் படித்து விட்டு எல்லையில் இருவர் இறப்பு என்று புறந்தள்ளாமல், ‘நம்மில் ஒருவர்’ என்று ஒவ்வொரு இஸ்ரேலியும், நமக்கும் இந்த மாதிரி நிலை வந்திருக்கலாமே (வரலாமே) என்று எண்ணும் சமூகம்.

இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா குரல் கொடுக்கும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. லெபனானும், பாலஸ்தீனமும் தேர்தல் நடத்தும் சுதந்திர நாடுகளாக இருப்பது தான் அமெரிக்காவையும் அதன் தலைவர் புஷ்ஷின் ‘எங்கெங்கு காணினும் சுதந்திர நாடடா’ கொள்கையையும் அசைத்துப் பார்க்கும் என்றும் நம்புகிறது. ஈராக் போருக்கு கூறப்படும் காரணங்கள் இந்த இரட்டை நிலையினால் உலக அரங்கில் தவிடு பொடியாகியுள்ளது.

2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விலக்கியவுடன், ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட முடியவில்லை. சிரியாவின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்தது. லெபனானின் பிரதம மந்திரியே ஹெசபொல்லாவை ‘எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா, தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.

கோலன் ஹைட்ஸின் ஷாபா ஃபார்ம்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் தேர்தலில் வென்று அரியணை ஏறிய பிறகும், ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. இரகசியமாக பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாய், இஸ்ரேலுக்குள் கன்னம் போடுவது, குண்டு வெடிப்பது என்று ஹமாசும்; பாலஸ்தீனத்துக்கு நியாயமாக சேரவேண்டிய அவர்களின் வரிப்பணத்தைக் கொடுக்காமல் அடாவடி செய்வது, அன்றாடம் வேலை செய்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தினக்கூலியில் கைவைப்பது என்று இஸ்ரேலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இது நவீன போர்களின் காலம். ஈராக் போரில் சதாம் தலைமை இல்லாவிட்டாலும், அந்த நாட்டு இராணுவமே பொதுமக்களை பாதுகாக்க நினைத்தாலும், கெரில்லா போரில், அமெரிக்காத் தோற்றுப் போய் பல ஆண்டுகள் கடந்து விட்டது. (ஈராக் – அமெரிக்க போர் குறித்து இந்த வருட ஆரம்பத்தில் எழுதிய ரிப்போர்ட்)

கடவுளின் கட்சிக்கு கிட்டத்தட்ட 6,000 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை அழிப்பது இஸ்ரேலுக்குப் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், தப்பித்துப் போவது ஒரு சிலரேயானாலும், ஈராக்கை போல் புதிய போராளிகளை நியமிப்பது, குடும்பத்தை இழந்தவர்களுக்கு தூபம் போட்டு தீவிரவாதி ஆக்குவது, கொரில்லா யுத்தத்தைத் முன்னெடுத்து செல்வது போன்றவற்றை சளைக்காமல் தொடர்வார்கள்.

  • ஈரானின் தற்போதைய பிரதம மந்திரி Mahmoud Ahmadinejad-இன் ‘நாஸி அடக்குமுறையே கிடையாது. யூதர்கள் பம்மாத்து செய்கிறார்கள்’ என்று பொதுவில் பேசி, சிரியாவின் மூலமாக ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு – செய்யும் அரசியலையும்;
  • ஹமாஸ் வளர்வதால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கிப் போகும் சாத்தியக் கூற்றில், ரஷியாவை மீண்டும் ஆதிக்க சக்தியாக்கும் ப்யூடினின் திட்டத்தையும்;
  • மீசையில் மண் ஒட்டியதைத் தட்டிவிட இஸ்ரேல் தலைவர் Ehmud Olmert, ‘தானும் அடித்து ஆட வல்லவன்’ என்று நிரூபிக்கும் ஆண்மை பிரஸ்தாபிப்பையும்; சேர்த்துப் பார்க்காமல், ‘இஸ்ரேலின் தற்காப்பு/பயங்கரவாதம்’ என்று பொதுமையாக்க இயலாது.

    இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தொலைதூரப் பார்வை இருக்கிறதா, வெற்றி பெறுமா என்பதைத்தான் – ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் இரானும், நிரந்த்ரப் பகை பாராட்டும் சிரியாவும், விஷயமே தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கும் ஹிசபொல்லாவும் ஆராய வேண்டும். அமெரிக்காவைத் தாக்காத வரைக்கும் உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இரானிய் பிரதமருக்கும் இதே எண்ணம்தான். ஈரானை நேரடியாக பிறர் தாக்க முடியுமா, எப்படி தற்காத்துக் கொள்ள முடியும் என்று சோதனைச்சாலையாக லெபனானைப் பயன்படுத்துகிறார்.

    ஹெசபொல்லா என்னும் அண்டை வீட்டார் சொற்படி நடக்கும் முரட்டு குழந்தையைக் கட்டுப் படுத்த முடியாததால், லெபனான் தன்னுடைய வீட்டையே பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து கிலோபைட் குவித்துக் கொண்டே போகலாம். நான் ஒத்துப் போகும், லாஜிக் உடைய எண்ணப் பதிவுகளை படிக்க கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சாலச் சிறந்தது:

  • New conflicts in an old war in the Middle East – The Boston Globe
  • Guardian Unlimited | Special reports | On the brink of chaos
  • Guardian Unlimited | Special reports | The war gets wider and worse

    இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான பிரச்சினை குறித்து கீழ்க்கண்ட பதிவுகள் படிக்க கிடைத்தது:

    1. தமிழ் சசி

    2. ஸ்ரீகாந்த் மீனாக்ஷி

    3. முத்து (தமிழினி)

    4. வஜ்ரா ஷங்கர்

    இஸ்ரேலும் அதன் சுற்றுப்புறமும் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவுகள்:
    1. தி சிரியன் ப்ரைட் (திசைகள்)

    2. யாஸர் அராஃபத் (தமிழோவியம்)

    3. சண்டக்கோழி அமெரிக்கா :: Why We Fight (தமிழோவியம்)

    தொடர்பான தகவல்கள்:

  • Guardian Unlimited | Special reports | What the papers said
  • Fighting on Two Fronts
  • Welcome to World War Three — or as the neocons call it, World War Four
  • Dar Al Hayat – When is Terrorism Not Considered as Terrorism (Ayoon Wa Azan) :: (லெபனான் சார்பு கருத்தாக்கம்)
  • Israel’s Invasion, Syria’s WarNew York Times
  • மத்திய கிழக்குப் பகுதியை நன்கு அறிந்த ஏழு வல்லுநர்களின் எண்ணக்கோர்வை
  • Watching, blogging … bombing

    கார்டியன் நாளிதழ் :: Interactive guides
    இஸ்ரேலின் சரித்திரம் | ஜூன் 2006: காஸா நுழைவு | அஹ்மத் யாஸின் | ஜெனின் போர் | இஸ்ரேலும் லெபனானும் | ஹெசபொல்லா – லெபனான் : தற்கால நிகழ்வுகள்

    சமீபத்திய நிகழ்வுகள் – வரிசைப்படி
    1999 | 2000 | 2001 (1) | 2001 (2) | 2002 (1) | 2002 (2) | 2002 (3) | 2002 (4), 2003 | 2004 | 2005


    | |

  • Sivaji Statue Opening Vizha

    சிவாஜி சிலைத் திறப்பு சன் தொலைக்காட்சியில் தொகுத்திருந்தார்கள். கவர்ந்த சில தருணங்கள்.

  • பங்குப் பெற்றோரின் பெரும்பாலானவர்களின் ஆடை வெள்ளை நிற சட்டை, வேட்டி. எங்கெங்கு காணினும் வெளுப்புதான்.
  • எல்லோரும் சோகமே உருவாய் குடிமுழுகிப் போனது போல் இருந்தார்கள். சாதனையாளரை கௌரவிக்கும் விழாவில் சந்தோஷமாகப் பட்டுப் புடைவையில் இருந்தவர் லதா ரஜினிகாந்த்.
  • சிவாஜியின் மனைவி கமலா மேடையேறாததற்கு பிரபு காரணம் சொன்னார். அண்ணன் இராம்குமார் முதல் வரிசையிலோ, அரங்கில் பேசாததற்கோ என்ன காரணம் என்று விளங்கவில்லை.
  • ‘சந்திரமுகி’யில் ஜோதிகா பேய் போல் கண்களை உருட்டுவதற்கு சிவாஜியின் நடிப்பு உதவியிருக்கிறது. பாரதியாக சிவாஜி கனவு காணும் ‘கை கொடுத்த தெய்வம்‘ படத்தின் ‘சிந்து நதியின் மிசை’ கை கொடுத்ததாக பி. வாசு சொல்லியிருக்கிறார். ஓவர் ஆக்சனுக்கு வஞ்சப் புகழ்ச்சி அணி.
  • பேச்சுக்களில் சாதாரணமாக கமல் தான் நிமிர்ந்து உட்கார வைப்பார். இன்று அது கேயெஸ் ரவிக்குமாருக்கு மட்டுமே சொந்தம். வெளிப்படையான எதார்த்தமான் பேச்சு. ‘படையப்பா’வில் ரிகர்சல் எடுக்கும்போது உரத்த உச்சரிப்பு அதிகமாகப் பட்டிருக்கிறது. நேரில் சொல்லவும் பயமாய் இருந்திருக்கிறது. டேக் எடுக்கப் போவதற்கு முன்

    ‘அண்ணே… ஒரு வாட்டி என் காதோடு வசனத்தை மட்டும் சொல்லிடுங்களேன்!’

    சொல்லி முடித்தவுடன்…

    ‘இதை விட அதிகமாய் ஒரு இன்ச் கூட வேணாங்க’

    என்று சொல்லி விட்டு, இடத்தை விட்டு ஓடி, கேமிராவிற்கு அருகில் சென்று ‘ஸ்டார்ட்’ சொல்லி மறைகிறார்.

    சிம்மக்குரலோனை இயக்குவது எவ்வளவு நகாசான வேலை என்பதையும், நடிப்பைக் கறக்கும் இயக்குநரின் சிரமத்தையும் அலாதியாய் சொன்னார்.

  • சிவாஜியிடம் இருந்து நேரந்தவறாமையையும், ‘இயக்குநர் சொல்வதை இம்மியளவும் மாறாமல் அப்படியே நடப்பதையும்’ கற்றுக் கொண்டதாக விஜய் பகிர்ந்தார்.
  • சிவாஜியின் வரலாற்றில் துவக்கமும் (பராசக்தி சக்சஸ்) கலைஞரால் தான்; சுபம் போட்டு முடிப்பதும் (மெரீனா சிலை) கலைஞரால் தான் என்றார் பாக்கியராஜ்.
  • தமிழன் ஒவ்வொருவரிடமும் நால்வரின், நாலு தமிழர்கள் மட்டுமே தாக்கமாக இருக்கும் என்றார் வைரமுத்து:

    1. கருணாநிதி;
    2. எம். ஜி. ஆர்.;
    3. சிவாஜி &
    4. கண்ணதாசன்.

    தனக்குப் பொருத்தமானதை ‘என் தாழ்மையான கருத்து’ என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை ‘உலகத்தின் கருத்து’ என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு.

  • கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா என்று பேசிய ஒவ்வொருவரும் ஐயப்பட வைத்தாலும், விஜயகாந்த் சிவாஜியைத் தவிர்த்து கருணாநிதி துதியோடுப் பேச்சை முடித்துக் கொண்டார்.
  • கருத்துக் கேட்ட பலரும் சிவாஜியின் பிடித்த படப்பட்டியல் கொடுத்தார்கள். இது எனக்கு டக்கென்று வந்த படங்களின் பெயர்கள்:

    * பலே பாண்டியா,
    * சபாஷ் மீனா,
    * தேவர் மகன்,
    * திருமலை ரகசியம்,
    * தூக்கு தூக்கி,
    * உத்தம புத்திரன்,
    * திருவிளையாடல்,
    * பராசக்தி,
    * திரும்பிப் பார்,
    * கப்பலோட்டிய தமிழன்,
    * விடுதலை

  • ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது. எழுதி வைத்துக் கொண்டு படிக்காமல், குட்டிக் கதை, சுவாரசியமான மேற்கோள்கள் என்று இயல்பாய், ஆளுமையோடு வெளிவந்தது. மேடையிலேயே விஜயகாந்த்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி, தன்னுடைய அரசியல் திறமையையும் ஓரளவு காட்டிக் கொண்டார். ‘அரசியல் ஒரு குதிரை; சினிமா ஒரு குதிரை’ என்று ஆரம்பித்து குதிரைப் பந்தயமாக வருணித்து அலுக்காதமாதிரி பேசினார்.
  • பாண்டிச்சேரியில் பெப்ரவரி 12 சிவாஜியின் சிலையைத் திறந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை.

    | |

  • Tamil Nadu Budget 2006-07

    Webulagam : Tamil Nadu Budget 2006-07 salient features!

    தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்
    2006-07 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தமிழக சட்டப் பேரவையில் இன்று சமர்ப்பித்தார்.

    “தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    கரும்பொருள் யாதொன்று மில்”

    தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற பொருளுடைய குறளைக் கூறி நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

    மதிப்பு கூட்டு வரி :

    · 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மதிப்பு கூட்டு வரி நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் குறைவாக விற்பனை உள்ள சிறு வணிக நிறுவனங்களுக்கு விலக்கு.

    வரி விலக்குகள் :

    · பருப்பு, பயறு வகைகள், சமையல் எண்ணெய் மீதான வரி ரத்து. வருவாய் இழப்பு ரூ.110 கோடி.

    · தேயிலை மீதான விற்பனை வரி 50 விழுக்காடு குறைப்பு.

    · சிட்டா நூலிற்கு முழு வரி விலக்கு.

    · எரி சாம்பலுக்கு விற்பனை வரி விலக்கு.

    · தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட உரிமம் அளிக்கப்பட்ட மென்பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு.

    · சாம்பிராணிக்கு மீண்டும் விற்பனை வரி விலக்கு.

    · அத்தாட்சி செய்யப்படாத அடகு, அடமான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை செலுத்துவதில் இருந்து விலக்கு.

    ஒட்டுமொத்த நிதிநிலை :

    · 2006-07 – வருவாய் ரூ.38,731 கோடி.
    · 2006-07 – செலவு ரூ.39,860 கோடி.
    · வருவாய் பற்றாக்குறை ரூ.1,129 கோடி.
    · நடப்பு நிதியாண்டின் கடன்களும், முன் பணங்களும் உள்ளிட்ட மூலதனச் செலவு ரூ.6,102 கோடி.
    · ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.7,231 கோடி.
    · 2005-06 ஆண்டு திருத்திய மதிப்பீடுகளின் படி ரூ.56,094 கோடி அளவிற்கு கடன் உள்ளது. இதற்கு ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.446 கோடி.

    விவசாயிகள் நலன் :
    · கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற கடன்கள் ரூ.6,866 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்ததால் நபார்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.1,668 கோடியில் இந்த நிதியாண்டில் ரூ.438 கோடி செலுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · கூட்டுறவு வங்கிகளுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்திற்காக இந்த ஆண்டில் மட்டும் ரூ.1,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் இருந்து கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு தற்பொழுதுள்ள 9 விழுக்காடு வட்டி விகிதம் 7 விழுக்காடாக குறைக்கப்படும். இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்.

    · தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 95 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2005-06 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் தொடர்புடைய இனங்களுக்கு ரூ.854.41 கோடியாக இருந்த மொத்த ஒதுக்கீடு 2006-07 நிதியாண்டில் ரூ.977.98 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    · விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகர் இன்றி குறைந்த விலையில் நுகர்வோர் காய்கறிகளை பெறவும் உருவாக்கப்பட்ட 103 உழவர் சந்தைகளும் மீண்டும் திறம்பட செயல்படும்.

    · விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விரயம் இன்றியும், உரிய விலை கிடைக்கும் வகையிலும் உலகத் தரம் வாய்ந்த சேகரிப்பு மையங்கள், குளிர்விக்கும் சாதனங்கள், தரம் பிரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் மின்னணு ஏல முறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 3 வணிக மையங்கள் (கூநசஅiயேட ஆயசமநவள) சென்னை, கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்படும்.

    · கோவை மாட்டம் பல்லடத்தில் வெங்காயத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்திற்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சைப் பழங்களுக்கும் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனை கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

    · தரிசு நிலங்களில் முந்திரி சாகுபடியை ஊக்குவித்து ஏற்றுமதியை அதிகப்படுத்த கடலூர், தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய முந்திரி விளை நில ஏற்றுமதி மண்டலத்தின் பணிகள், முந்திரி விவசாயிகளுக்கு மேலும் பயன்தரக்கூடிய வகையில் செம்மைப் படுத்தப்படும்.

    · உயிரி எரிபொருள் (எத்தனால்) பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் உயிரி எரிபொருளை 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும்.

    · ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும்.

    · அரசு புறம்பபோக்கு தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேம்படுத்தி நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வழங்கப்படும்.

    · அதே நேரத்தில் மொத்தமாக தரிசு நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயக் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்நிலங்களை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றித் தரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டால், அரசு செலவில் மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றி அவர்களிடமே திருப்பி அளிக்கப்படும்.

    · விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு விவசாயத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள சலுகைகள் (தனி செய்தியாக அளிக்கப்பட்டுள்ளது).

    கால்நடை வளர்ப்பு :
    · கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் தமிழகம் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வகையில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பறவைகளினால் ஏற்படும் நோய் குறித்த ஆய்வுக் கூடம் அமைக்கப்படுவதுடன், நாகப்பட்டினம், கரூர், விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கால்நடை நோய்கள் குறித்த நுண்ணறிவுப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

    பாசன மேம்பாடு

    பொது விநியோகத் திட்டம் :

    · பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் 1950 கோடி உணவு மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை கடத்தி கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும்.

    உள்துறை :

    · காவலர்கள் குறை தீர்க்க 3வது காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.

    · காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.23 கோடி மதிப்பீட்டில் சிறப்வு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வாங்கப்படும்.

    · வாகன ஓட்டிகள் குடி போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், ஓட்டுநர் உரிமத்தையே ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நீதித்துறை :
    · உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கான தனியாக ஒரு கட்டடம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கட்டப்படும்.

    · மண முறிவு வழக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்க, குடும்ப நல நீதிமன்றங்கள் ஒவ்வொன்றிலும் இரு முழு நேர ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்.

    · சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்குத் தேவையான 350 பணியிடங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும்.

    · நீதி நிர்வாகத்திற்காக இந்த நிதியாண்டில் ரூ.212.9 கோடி ஒதுக்கப்படும்.

    பள்ளிக் கல்வி :
    · அனைத்துப் பள்ளிகளிலும் இந்த ஆண்டிலேயே முதலாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக கற்பிப்பது தொடங்கும். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக 10 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

    · அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய சுமார் 45,987 ஆசிரியர்களுக்கு 01.06.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கப்படும். இனி வரும் காலங்களிலும் ஆசிரியர் காலியிடப் பணியிடங்கள் காலமுறை ஊதிய அடிப்படையிலேயே நிரப்பப்படும்.

    · தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டமும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.

    · 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்துச் செல்லும் போதே மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள், வாழ்விடச் சான்றிதழ்கள், குடும்ப வருமானச் சான்றிதழ்கள் ஆகியன வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

    · பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,438.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · மத்திய அரசு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள அனைவருக்கும் கல்வித் திட்டம் ரூ.723.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதற்காக மாநில அரசின் பங்காக ரூ.180.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    உயர் கல்வி :
    · பொது நுழைவுத் தேர்வை 2007-08 ஆம் ஆண்டு முதல் அகற்றிட கல்வியாளர்கள் கொண்ட குழு.

    · அரசு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சுயநிதி அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் பாடப் பிரிவுகளையும் பொதுவகை கட்டணம் செலுத்தும் பாடப் பிரிவுகளாக மாற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    · அண்ணா பல்கலைக் கழகத்தைப் போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் திருச்சியிலும், கோவையிலும் நிறுவப்படும்.

    · பின் தங்கிய பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காக கோவை மாவட்டம் வால்பாறையிலும், சேலம் மாவட்டம் மேட்டூரிலும் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

    · மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள கல்வியியல் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

    · ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

    · சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் நிறுவப்படும்.

    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் :
    · வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிலும், வரும் ஆண்டிலும் 9,000 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதற்காக ரு.13.13 கோடி ஒதுக்கீடு.

    · 235 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவச் சாதனங்களுக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்படும். 14 மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு 198 அவசர ஊர்திகள் வழங்கப்படும். 32 அரசு மருத்துவமனைகள் 24 மணி நேர அவசர மற்றும் சிசு கவனிப்பு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

    · தமிழகத்தில் உள்ள 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் செமி ஆட்டோ அனலைசர் கருவிகள் ரூ.17 கோடி செலவில் வழங்கப்படும்.

    · திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, வேலூர் அரசு மருத்துவமனைகளில் ரூ.23.95 கோடி செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கப்படும்.

    · சென்னை பொது மருத்துவமனையில் ரூ.5.5 கோடி செலவில் அதி நவீன 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனர் அமைக்கப்படும்.

    · மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு இணங்க விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

    தொழில் வளர்ச்சி

    தகவல் தொழில்நுட்பம் :
    · சென்னை தரமணியில் 2வது டைடல் பூங்கா அமைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    · தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்வது குறித்து அரசிற்கு பரிந்துரைகள் அளிக்க இத்துறையின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலத் தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.

    · முதற்கட்டமாக 30,000 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க இந்த நிதியாண்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · சிறு தொழில்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாடு :
    · சாலை பராமரிப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.804 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்களுக்கான மூலதன ஒதுக்கீடுகளுக்கென ரூ.2,461 கோடி என்ற உயர் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · மதுரை மாநகரப் பகுதியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மதுரை ஆரச்சாலையின் 2வது கட்டப் பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    · திருப்பூர் நகரத்தின் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.70 கோடி மதிப்பீட்டில் அந்நகரத்தின் வட்டச்சாலை மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்படும்.

    மின் சக்தி :
    · இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,011 மெகா வாட்டாகும். இந்த ஆண்டில் 749 மெகா வாட் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டு மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 10,760 மெகா வாட்டாக உயரும்.

    · ஊரகப் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதை உறதி செய்ய தமிழ்நாடு மின் வாரியம் இந்த நிதியாண்டில் ரூ.195.54 கோடி மதிப்பீட்டில் மின் பகிர்மான திட்டங்களை மேற்கொள்ளும்.

    · ஊரகப் பகுதிகளில் 25 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 2,706 புதிய மின் பகிர்வு மின் அழுத்தமாற்றிகள் நிறுவப்படும். 24 துணை மின் நிலையங்களின் மின் அழுத்தமாற்றிகளின் திறன் அதிகரிக்கப்படும்.

    · சுயநிதி திட்டத்தின் கீழ் சிறப்புத் தொகை கட்டி மின் இணைப்பு பெற்ற 2,40,000 விவசாய மின் இணைப்புகளுக்கும் இனி இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    போக்குவரத்து :

    · நடப்பாண்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    · திருப்பெரும்புதூரில் ராஜீவ் காந்தி விமானவியல் உயர் கல்வி மற்றும் விமான ஓட்டிகள் பயிற்சிக் கழகம் அமைக்கப்படும்.

    சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டம் | குடி நீர் வழங்கல்

    சுனாமி சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் :
    · சுனாமி சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கென இந்த ஆண்டில் மேலும் ரூ.100 கோடி செலவிடப்படும்.

    முதியோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் :
    · முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு மாதற்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.200ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.407.06 கோடி ஒதுக்கீடு.

    · கடும் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும்.

    · மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 நிலைகளைப் பெறக்கூடிய கண் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குவதுடன் அவர்களுடைய உயர் கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.

    நெசவாளர் நலன் | மீனவர் நலன் | ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் | இலங்கைத் தமிழர்

    DMK Govt.’s Whimsy Decisions

    Kalki Weekly Magazine’s Thalayangam

    சின்ன விஷயங்களும் பெரிய தலைவர்களும்…

    ‘‘சின்ன விஷயங்களைப் பெரிதாக்க வேண்டாம்; பெரிய விஷயங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்’’

    என்று முதல்வர் கருணாநிதி தமது சக அரசியல்வாதிகளை நோக்கிப் பேசியிருக்கிறார். மிக உயர்ந்த அறிவுரை இது. நாட்டில் கல்வியின்மை, வறுமை, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகளின்மை, பயங்கரவாதம், வன்முறை… என பெரிய பெரிய பிரச்னைகள் காத்திருக்க, அவற்றைப் புறக்கணித்துவிட்டு உப்பு பெறாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதென்பது நமது அரசியல் கலாசாரமாகவே மாறிவிட்டது.

    துரதிர்ஷ்டவசமாக, அறிவுரை சொல்லும் முதல்வரும் இந்தக் கலாசாரத்தில் சிக்கியிருக்கிறார். தமது அறிவுரையைத் தாமே கடைபிடிப்பதில் அவர் முனைப்புக் காட்டாததால்தான் இன்று சிவாஜி கணேசன் சிலை நிர்மாணம் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்றத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

    சென்னையில் நடிகர் திலகத்துக்குச் சிலை வைக்கத் தகுதியான இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை விடுத்து, சாலைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் ஏற்கெனவே நிறுவியுள்ள காந்தி சிலையின் தோற்றத்தைப் பாதிக்கும் விதமாகவும் சிவாஜி சிலைக்கு இடம் தேர்வாக, இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருக்கிறது. ‘வழக்கு விவகாரமெல்லாம் எதற்கு, இது சிறிய விஷயம்; சென்னையில் எத்தனையோ மாற்றிடங்கள் உண்டு’ என்று தமிழக அரசு உடனடியாக வேறு இடம் பார்த்திருக்கலாம். வழக்கு ரத்தாகியிருக்கும்; சர்ச்சை ஓய்ந்திருக்கும். ஆனால், அதற்குப் பதில் நீதிமன்றத்தில் மோதலுக்கு வழிவகை செய்துள்ளது தமிழக அரசு!

    கோயில்களில் பூர்ண கும்ப மரியாதை செய்வது, பரிவட்டம் கட்டுவது போன்றவை கர்ண பரம்பரையாக விளங்கி வரும் சின்னச் சின்ன பழக்க வழக்கங்கள். உபயதாரர் அல்லது கட்டளைதாரர், நன்கொடையாளர் போன்றவர்களுக்குச் செய்யப்படும் இந்தப் பாரம்பரிய மரியாதையை வர்க்க பேதத்தின் அடையாளமாகக் கருதி, அதனைத் தடை செய்தது அரசு. இந்தச் சின்ன விஷயத்தில் அரசு தலையிட்டதால்தான் இதுவும் பெரிய விவகாரமாகி அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. சில தினங்களில், முதல்வர் பின்வாங்கி,

    ‘‘மடாதிபதிகள், ஆதீனங்களுக்குப் பூர்ணகும்ப விஷயத்தில் விதி விலக்கு’’

    என்றும் அறிவிக்கச் செய்திருக்கிறார். இதுபோன்ற மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த விஷயங்களில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமற்றது என்பதுடன் நேர விரயமும்கூட. ஆனால், இங்கே அரசியல் ஆதாயம் கருதி சின்ன விஷயத்துக்குப் ‘பெரிய’ மாயத் தோற்றம் பூசப்படுகிறது.

    உண்மையிலேயே கவனம் பெற வேண்டிய மிகப்பெரிய விஷயமோ, மிக அற்பமான விஷயம் போல அலட்சியத்துக்கு உள்ளாகி மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. என்.எல்.ஸி. பங்குகள் விற்பனை குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் தி.மு.க. அமைச்சர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. இதனை ஒப்புக்கொண்ட டி.ஆர்.பாலு, ‘‘கூட்டத்தின் முடிவை ஏற்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்று பேசியுள்ளார். இந்தப் பெரிய விஷயத்தில் தி.மு.க. தலைவரும் அக்கட்சியின் மத்திய அமைச்சர்களும் கவனம் செலுத்தத் தவறியதால் ஏகப்பட்ட கிளர்ச்சி, குழப்பம். இறுதியில் தி.மு.க. தலைவர் மத்திய அரசை அச்சுறுத்த, பிரதமர்தான் அவமானத்தையும் தலைகுனிவையும் சந்திக்க வேண்டி வந்தது.

    ‘சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று முதல்வர் கூறியதன் பின்னணியையே எடுத்துக் கொண்டாலும், சட்டசபையில் ஆளுங்கட்சி முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் எதிரெதிராக அமர்வது மரபு. அவ்வாறே எதிர்கட்சித் தலைவர்களும் ஆளுங்கட்சி அமைச்சர்களும். திடீரென்று இருக்கைகள் இடம் மாற்றப்படுகின்றன. எதிர்கட்சியினர் பலர் முதல்வரைப் பார்க்க முடியாது. ஆளுங்கட்சியினர் பலர் எதிர்கட்சித் தலைவரைக் காண முடியாது. ‘‘இதில் உள் நோக்கம் இல்லை; சின்ன விஷயம். அவைத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம்’’ என்று முதல்வர் வாதாடுகிறார். முதல்வர் கூறுவதுபோல் சின்ன விஷயமாயின்

    ‘மரபுகளை மீறி இடமாற்றம் செய்வானேன்…? அம்மாற்றத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட இடமளிப்பானேன்?’

    என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது!

    Ullatchi Therthalum, Avasara Sattamum!

    Aaraamthinai.com

    உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்! :: கேடிஸ்ரீ

    மறுபடியும் ஒரு தேர்தலை சந்திக்கவிருக்கிறது தமிழகம். வரும் அக்டோபர் மாதத்துடன் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி தமிழக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை அக்டோபர் மாதத்திற்குள் முடித்துவிடுவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இத்தேர்தலை மனதில் கொண்டு தமிழக முக்கியக் கட்சிகள், பல்வேறு மட்டங்களில் அதிரடியான மாற்றங்களை தங்கள் கட்சிக்குள் செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றும் விதத்தில் தங்களுக்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது.

    முன்னதாக முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளையும், செயலர்களையும் அதிரடியாக மாற்றியமைத்து வர எண்ணியது. இதன் விளைவாக அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது செய்து வருகிறார். ஒருபுறம் இதுவரை ஒதுங்கியிருந்த பலருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி அதிர்ச்சி அளித்திருக்கிறார் என்றால் மறுபுறம் முந்தைய அ.தி.மு.க அரசின் அமைச்சராக இருந்த பாண்டுரங்கன், தென் செனனை மாவட்டத் தலைவராக இருந்த ஆதிராஜாராம் போன்றவர்களை அப்பதவியிலிருந்து நீக்கி அதிர்ச்சி அளித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு முக்கிய பொறுப்பு அளித்து அவரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதிரடி நடவடிக்கைகளும், களையெடுப்பும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

    கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கணிசமான அளவிற்கு இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியப் பிறகு நடைபெறவிருக்கும் முதல் உள்ளாட்சி தேர்தல் இது. இத்தேர்தலில் எப்படியாவது அதிகளவில் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார். சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்கால் நகராட்சியை கைப்பற்றியது அக்கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தங்கள் கூட்டணியை அப்படியே தொடர முடிவு செய்துள்ளன. ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை போன்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அ.திமு.கவுடனான தங்களது கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று அறிவித்துள்ளன.

    இந்நிலையில் கடந்த வாரம் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலாவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல்

    மேயர் அல்லது துணை மேயர்களின் செயல்பாடுகள் திருப்தியில்லாதபட்சத்தில் அவர்கள் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கும் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.

    இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டம் மூலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மேயரோ அல்லது நகராட்சித் தலைவரோ வீற்றிருக்கும் மன்றத்தில் அவரது கட்சியை சேராத அதிக மன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தால் அந்த மேயரோ அல்லது தலைவரோ அந்த கூட்டத்தை சுமூகமாக நடத்தி செல்வதில் மிகவும் சிரமத்திற்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.மேலும் அங்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கிற போது இந்த அவசர சட்டம் வரவேற்கபடுகிற ஒன்று.

    ஆனால் கட்சி சார்பில்லாமல் அந்தந்த ஊர்களில் – அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் நேரிடையாக தலைவராக இனி வருவதை இந்த வகையான சட்டம் தடுக்கும் என்பது இதில் உள்ள பாதகமான அம்சம் எனலாம். இதனால் எல்லா இடங்களிலும் கட்சிகளின் ஆதிக்கம் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

    தமிழகத்தில் 500க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை பஞ்சாயத்துக்கள் 561ஐ தற்போது பேரூராட்சிகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கிராப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை பாட்டாளிகட்சி தலைவர் ராமராஸ் வரவேற்றாலும், ஒரு கட்சியின் சார்பில் தேந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து விடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க அப்படி வாக்களிக்கும் மன்ற உறுப்பினரின் பதவியைப் பறிக்க வகை செய்ய வேண்டும் என்றும் யோசனை ஒன்றை அரசுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிமாற தடைச் சட்டம் உள்ளதுபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி மாறுவதைத் தடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்றும், மற்றும் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இல்லாமல் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை அ.தி.மு.க பொதுசெயலரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா கடுமையாக விமரிசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அவசர அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான காரணம் என்ள என்றும், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பே இச்சட்டம் கொண்டு வருவதன் நோக்கம் என்ன? என்றும் வினா எழுப்பிய அவர், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டு வரவில்ல என்று ஆளும் தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் உருவாக்கப்படவில்லை என்றும் குறை கூறியுள்ளார்.

    எது எப்படியிருந்தாலும் இந்த அவசர சட்டத்தின் மூலம் பலன் அடையக்கூடிய கட்சிகள் தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான் என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த இரு கட்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் நிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில்தான் போட்டியிட முடியும்.

    Sheepy Fox Intelligence

    ஆடும் நரியும் – ஊன்விலைஞருடன்

    PBF - The Perry Bible Fellowship - a comic strip by Nicholas Gurewitch

    எனக்குத் தோன்றியவை:

  • வாக்காளர்களும் வேட்பாளரும் – அரசியல் தலைவருடன்
  • கால்பந்து ரசிகர்களும் ஜிதானே & மாடேராசியும் – சூதாட்டக்காரருடன்
  • பக்தர்களும் ஆறுமுகச்சாமிகளும் – வலைப்பதிவாளருடன்
  • செய்திகளும் நானும் – CERT-IN (Indian Computer Emergency Response Team) உடன்
  • ரசிகர்களும் கமலும் – கந்துவட்டிக்காரர்களுடன்
  • பொதுமக்களும் தீவிரவாதிகளும் – அண்டை நாடுகளுடன்

    உங்களுக்குத் தோன்றிய பொருத்தங்களும் தலைப்புகளும் கசாப்புக்கடைக்காரனுடன் வரவேற்கப்படுகின்றன

    நன்றி: PBF comic strip | PBF – The Perry Bible Fellowship – Nicholas Gurewitch


    | |

  • Six Word Stories

    ஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:

    ‘For sale: baby shoes, never used.’

    சுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.

    என்னுடைய முயற்சிகள் சில:

  • வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.
  • தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.
  • “என்ன வேண்டும்?” ‘புகழ்’ “ஏன்?” ‘அதுதான் தெரியவில்லை.’
  • கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.
  • சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.
  • ரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.
  • குண்டுவெடிப்பு – 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு?

    Shamash Says… : “The Hemingway Challenge வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:

  • “Forgive me!” “What for?” “Never mind.” – John Updike
  • Eyeballed me, killed him. Slight exaggeration.– Irvine Welsh
  • Satan- Jehovah- fifteen rounds. A draw. – Norman Mailer
  • I saw. I conquered. Couldn’t come. – David Lodge
  • Oh, that? It’s nothing. Not contagious.- Augusten Burroughs
  • She gave. He took. He forgot – Tobias Wolff.

    வந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்


    | |

  • Blog Imsai Arasan

    இம்சை அரசன் Web 2.0 இந்திய தகவல் தொடர்புத் துறை

    தமிழோவியத்திற்கு நன்றி.

    மத்திய விஜிலன்ஸ் துறை (சி.வி.சி.) வாயிற்காவலன்: “மன்னா, நமது ஒற்றன் வந்திருக்கிறான்.”

    இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சுயாநிதிகாரன்: “உங்களின் ஒற்றன் எப்போதுமே தாமதமாகத்தான் வந்து சேர்கிறார். கூகிளை யானைக் காலில் கட்டி இழுக்க வைத்து மண்டியிட வைத்த சீனாவும், தனக்கென புது இராஜபாட்டையை உருவாக்கிய ஜெர்மானியும், இணையத்தைக் கட்டுப்படுத்திய பிறகு நெட்ஸ்கேப் ஆமை போல் 56 கேபிபிஎஸ் நடை பயின்று வந்து சேர்கிறார் !”

    இம்சை அரசன் Web 2.0 மன்னாதி மன்னர் தன்தலையாட்டி சிங்குச்சா: “அவன் மைக்ரோசா·ப்ட் போன்றவன். ஆப்பிள், சன் என்று பெரும்புள்ளிகள் எதை செய்தாலும் சிறப்பாக சுட்டு, அதை நமக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் மைரோசா·ப்ட். இவனோ, சீனா, சவூதி அரேபியா, ஜெர்மனி என்று எவர் அரண் போட்டாலும், நமக்கேற்றவாறு spyware செய்பவன்.”

    சுயாநிதி: “சி.வி.சி. காரரே, ஒற்றரை உள்ளே அனுப்பும்.”

    சி.பி.ஐ. ஒற்றன்: “பஞ்சாப் சிங்கம், சீக்கியர்களின் தங்கம், கேம்ப்ரிட்ஜ் கலங்கிய, ஆக்ஸ்·போர்ட் அரவணைத்த, ராஜ்ய சபை நாயகன், இம்சை அரசன், Web 2.0, மன்னாதி மன்னர், தன்தலையாட்டி சிங்குக்கு வணக்கங்கள்.”

    வெப் 2.0 மன்னர்: (மிரட்சியுடன்) “சென்ற முறை நான் நியமித்த சி.பி.ஐ. தலைவர் என்ன ஆனார்?”

    சுயாநிதி: “அவன் ‘ரகு’ வம்ச இணையத் தளத்திற்கு திரைப்படங்களின் உருக்கவர் பெடி அச்சுகளைத் தருவதற்கு தடை விதித்ததால், உங்களைக் கேட்காமல் நிலக்கரி அமைச்சகத்துக்கு அவனை மாற்றி விட்டேன்!”

    வெப் 2.0 மன்னர்: “என்னை மாற்றாத வரைக்கும் சரி சுயாநிதி! மூக்குப் பொடி மாதிரி என்னவோ சொல்கிறீரே? அது என்ன?”

    சி.பி.ஐ. ஒற்றன்: “மத்திய சென்னை மாணிக்கம், ரகு வலையின் இளவல், தொலைத்தொடர்பு காத்தோன், தகவல் மீட்டோன், அமைச்சருள் அதிசயம், அண்ணன் சுயாநிதி அவர்கள் – ‘கேமிரா ப்ரிண்ட்’டைத்தான் தேமதுர திராவிடத் திருநாட்டின், ‘ரகு வெப் 2.0’ மொழியில், அப்படி சொல்கிறார் மன்னவா!”

    மத்திய தகவல்துறை (சி.ஐ.சி.) வாயிற்காவலன்: “மன்னரே, தங்களை உடனடியாக அழைத்து வர அரசியார் கட்டளையிட்டார்.”

    வெப் 2.0 மன்னர்: “அச்சச்சோ! மார்க்கசீயத்து, காம்மனீசியத்து குறுநில மன்னர்களிடம் இருந்து கப்பம் கட்டுவதற்கு புதிதாக என்ன மிரட்டல்கள் வந்திருக்கிறதோ? போய் பார்த்து விட்டு வருகிறேன்”

    (மன்னர் மின்னலென மறைகிறார்.)

    சுயாநிதி: “சொல்லுமய்யா சி.பி.ஐ. என்ன புதிய விஷயம்?”

    சி.பி.ஐ. ஒற்றன்: “பாதுகாப்புத் துறைக்கு வேண்டிய தகவல்களுடன் வந்திருக்கிறேன். நமது நாட்டில் நான்கு மண்டபங்கள் இருக்கிறது.”

    (திரை மரைவில் இருந்து ‘முன்னேற்ற கழக லெனின்’, சுருக்கமாக ‘முக லெனின்’ வெளிப்படுகிறார்.)

    முக லெனின்: “சென்ற ஆட்சியில் நான் நகரத் தந்தையாக இருந்த போது கட்டியதுதான் இந்த நான்கு மண்டபங்களும். சொல்லப் போனால், இன்னொன்று, பாதி முடிந்த தருவாயில் அப்படியே இருக்கிறது. நான் மீண்டும் நகரத்…”

    சி.பி.ஐ. ஒற்றன்: “என்னது இது? ஒற்றனுக்கே ஒற்றனா? இவர் எப்படி தடாலடியாக குதித்தார்?”

    சுயாநிதி: “மண்டபம் என்றால் அவர் வந்து விடுவார். அவர் ஹார்ம்லெஸ்… நீங்க கண்டினியூ பண்ணுங்க.”

    சி.பி.ஐ.: “அந்த மண்டபங்களில், மக்கள் கூடிக் கூடி பேசிக் கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அரசியாரின் ஆதிக்கத்தையும் ‘ரகு வெப்2.0’ செய்யும் சென்ஸார்ஷிப்பையும் பட்டியல் இடுவதைத் தவிர வேறு வேலை இல்லாமல் அலைகிறார்கள்.”

    சுயாநிதி: “யோவ்… நான் தான் தற்காலத் தமிழில் வூடு கட்டுவேன் என்றால், நீயும் ஏன் பன்னித் தமிழுக்கு மாறி விட்டாய்! இந்த மண்டபம் மேட்டரை அர்ஜுன் சிங்கிடம் சொல்லி விடுகிறேன். மண்டபத்தில் இட ஒதுக்கீடு என்று தாக்கீது கொண்டு வந்து விடுவார். அதன் பிறகு மண்டபம் முன்பு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் பார்த்துக் கொள்வார்.”

    சி.பி.ஐ.: “அது அவ்வளவு சுளுவான முறையில் முடிக்க முடியாது. சிலர் சொந்த வீட்டிலேயே சந்திப்புகளைத் தொடரலாம்.”

    சுயாநிதி: “நான் அன்றே சொல்லி இருக்கிறேன் எல்லாமும் ஒன்றாக ஆக்குவதுதான் நம் குறிக்கோள் என்பதால் நான்கு மண்டபத்தையும் இடித்து விட்டு ‘ரகு வெப்’-இன் அரசாணி அரட்டை அரங்கத்திலேயே இனி கூட்டங்களை நடத்த சொல்லலாம்.”

    (திரை)


    (அடுத்த நாள் அரசவை கூடுகிறது.)

    வெப் 2.0 மன்னர்: “நேற்று சி.பி.ஐ. என்ன சொன்னார்?”

    சுயாநிதி: “வழமையான பதிவுதான் மன்னவா. ஆராய்ச்சி மணி இல்லாததால் ஊரில் ஆராய்ச்சியாளர்கள் அதிகரித்து விட்டார்களாம். மீண்டும் குற்றங்குறையை நேரடியாக அறிய, நான்கு மண்டபத்திலும் மணிக்கூண்டு கட்டி, பொறியில் சிக்கும் எலிகளைப் போல் புலம்புபவர்களை அமுக்கிப் பிடிக்க வேண்டும்.”

    வெப் 2.0 மன்னர்: “என்னவோ நடக்கட்டும்.”

    சுயாநிதி: “யாரங்கே… உடனடியாகப் எலிப்பொறிகளைப் போன்ற மணி-மனிதப்பொறிகளைக் கட்ட டெண்டர் விடுக.”

    (திரை)


    (இரண்டு மாதம் கழித்து)

    சுயாநிதி: “மனிதப் பொறிகளை வைப்பதை விட எலிகளை மண்டபத்தில் உலாவ விட்டாலே போதுமானது என்று திட்ட கமிஷன் ஆய்வறிக்கை சொல்கிறது மன்னா!”

    வெப் 2.0 மன்னர்: “அப்படியா? பிறகு ஏன் சென்ற மாதம் நான்கு மண்டபங்களைக் காவல் காக்கவும், மனிதப் பொறி அமைக்கவும், கூட்டங்களை வேவு பார்க்கவும் – மூன்று புதிய துறைகள் அமைக்கப்பட்டது?”

    சுயாநிதி: “அவை இந்த அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதற்கு முன் நியமிக்கப் பட்டது மன்னா.”

    வெப் 2.0 மன்னர்: “இப்பொழுது அவை என்ன ஆகும்?”

    சுயாநிதி: “திட்டக் குழு அடுத்த ஆய்வறிக்கையை தயார் செய்யும் வரை ‘எப்படி செயல்படும்’ என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது மன்னவா.”

    வெப் 2.0 மன்னர்: “மண்டபங்களின் உள் கட்டமைப்பை சீர்குலைக்க நிதி அமைச்சரிடம் பெற்ற நிதி எவ்விதம் செலவழிக்கப்பட்டது?”

    சுயாநிதி: “ஒற்றறிய ஆட்களை நியமித்தோம். முதல் மாத சம்பளத்துடன் மண்டபத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டு நம்மை வேவு பார்த்து அவர்களிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களே மன்னா”

    வெப் 2.0 மன்னர் தலை சுற்றி கீழே விழுகிறார். செய்தி எட்டியதும், அரசி கோனிகா சாந்தி பதைபதைத்து ஆசையுடன் சிம்ரன் போல் துள்ளி வருகிறார்

    கோனிகா சாந்தி: “சுயாநிதி… உம் சேவையை யாம் மெச்சினோம். பக்கத்து நாட்டு அரசன் உள்நாட்டு கலகத்தை விளைவிக்க குதிரை லாயங்களிலும் நெல் மணிக் கூடாரங்களிலும் தீ வைத்ததை மண்டபகப்படியாரிடம் இருந்து திசை திருப்ப சொன்னோம். அதன் மேல் சென்று மண்டபத்தையே காலி செய்ய வைத்த உம் தீரத்தையும் மதி நுட்பத்தையும் மெச்சினோம். அதற்கு பிரதி உபகாரமாக புதிதாக உம்மால் அமைக்கப்பட்ட மூன்று இலாகாக்களுக்கும் உம்மையே மந்திரி ஆக்குகிறோம்.”

    சுயாநிதி: “இன்னொரு வரம் வேண்டுமே அரசியாரே?”

    கோனிகா சாந்தி: “மண்டபத்தில் பேசுவதைத்தான் ஒட்டுக் கேட்க லாயக்கில்லை. இங்கு மட்டும் நன்றாகக் கேட்பீரே? கேளுங்கள்!”

    சுயாநிதி வாயசைக்க ‘பலாநிதி காரன்’ பின்னணியில் குரல் கொடுக்கிறார்: “நான்கு மண்டபத்திற்கு செல்லும் வழியில், அகலபாட்டை நிறுவி, காசு வசூலிக்க ‘ரகு வம்ச’த்திற்கு மட்டும் அனுமதி தர வேண்டும்.”

    (திரை)


    | |

    Another bad implementation of technology 

    Another bad implementation of technology Posted by Picasa