Monthly Archives: ஜூலை 2006

One Day Strike by Bank Employees

Dinamani.com – Headlines Page

வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

வங்கிப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் கொள்கையை எதிர்த்தும், வங்கிகளில் ஒரு லட்சம் காலி இடங்களில் ஊழியர்களை நியமிக்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.

வங்கிகளின் பணிகளை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்க ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கைத் தொடங்குவது, பணத்தை வங்கியில் செலுத்துவது, பணத்தை எடுப்பது, டிராப்ட் தருவது, கடன் வழங்குவது போன்ற பணிகளை வாடிக்கையாளர்களுக்காக தனியார் ஏஜென்சிகளே இனி மேற்கொள்ளும்.

இது வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு ஒப்பாகும். நிறுவனங்கள் மற்றும் அரசின் காசோலைகளை பணமாக மாற்றும் பணியை ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றுமுள்ள பொதுத்துறை வங்கிகள் செய்து வருகின்றன. இனிமேல் நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் என்ற தனியார் கம்பெனி இந்த பணியைச் செய்யும். இதனால் வங்கிகளில் பணியிடங்கள் குறையும் என்று இச்சங்கம் கூறியுள்ளது.

Free Electricity will be provided for free Color TVs

Dinamani.com – Headlines Page

குடிசைகளில் அரசு டி.வி.க்கு இலவச மின்சாரம்

இலவச கலர் டி.வி. பெறும் குடிசைவாசிகளுக்கு அதற்கான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கலைராஜன் (அதிமுக), குடிசைகளில் ஒரு பல்புக்கு மட்டும் இலவச மின்சாரம் தரப்படுவதால், இலவச கலர் டி.வி.க்கும் மின்சாரத்தை அரசு இலவசமாகத் தருமா என்று கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர், குடிசைவாசிகளுக்கு இலவச கலர் டி.வி. தரும்போது, ஒரு பல்பு மற்றும் டி.வி.க்கு இலவசமாக மின்சாரம் தரப்படும் என்று கூறினார்.

Name the Author & the Novel

புகழ் பெற்ற நாவகளின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

1. அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். மொத்தம் ஒரு ஓவர்தான் பாக்கியிருக்கிறது. எடுக்கவேண்டிய ரன்களோ பதினெட்டு. விக்கெட்டு ஒன்பது விழுந்து விட்டது. கடைசி ஓவர் போடப் போவது யார் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். திடீர் என்று பெவிலியனுக்குச் செய்தி போய் இம்ரான்கான் வருகிறான். எப்படி வாளாடி டீமில் இம்ரான்கான் வரமுடியும் என்று காப்டனைக் கேட்கிறான். அதற்கு அவன், அப்படித்தான் அது, இப்போது புதுசா ரூல் கொண்டு வந்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கடைசி ஓவரில் போடலாம் என்று வந்திருக்கிறது என்கிறான்.

2. ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோறு வயது நடந்து கொண்டிருந்தது.

தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அலைந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருந்தன. காலை நேரத்தில் அவை மண்சுவர்களை விட்டு மெதுவாகக் கீழிறங்கித் தலையைச் சிலுப்பியபடி தெருவின் நீண்ட தனிமையில் பயத்தோடு, கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தா. அவன் வீட்டு வேம்படியில் இருந்த எறும்புகள் நேற்றோடு முற்றாக வெளியேறிப் போய்விடன. எறும்புகளின் சரசரப்பு ஓசையும் அற்றுப் போனபிறகு மரத்தில் காற்று துளிர்ப்பது கூட ஒடுங்கி விட்டது. இலைகள் தலைகவிழ்ந்தது போல நிசப்தித்துவிட்டன. எறும்புகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை.

3. கணேசன் கண் விழித்ததும் அவன் முதலில் பார்த்த பொருள் ஒரு நட்சத்திரம். ஜன்னலுக்கு வெளியே வெகு தொலைவில் அற்புதமாய் மின்னிக் கொண்டிருக்கிற விஷயம்.

எழுந்தவுடன் நட்சத்திரம் பார்ப்பது நல்லதா, கெடுதலா? உள்ளங்கையைப் பரக்கத் தேய்த்துப் பார்ப்பது தான் கணேசனுடைய தினசரி வழக்கம். அப்படி பார்க்காத நாளெல்லாம் சிரமப்படுத்தும் என்பது தீர்மானம். ஆனால், இன்றைக்கென்னவோ எழுந்தவுடன் முதலில் பார்த்த பொருள் நட்சத்திரம்தான்.

புலருமுன் தெருவில் விளக்கணைத்து விட்டார்கள். அறைக்குள்ளே இருட்டு கனமாக அழுந்திக் கொண்டிருக்க நட்சத்திரம் சிரித்துக் கொண்டிருந்தது. வெகு தூரத்தில் சிவப்பாய், கனமாய், அழகாய் அந்தச் சுடர் மின்னிக் கொண்டிருந்தது. பிசுபிசுத்த இமைகளூடே ஒளிக்கதிரால் முத்தமிட்டது. இத்தனை அழகாய், அமைதியாய் சிரிக்கிற சுடர் கெடுதலைத் தருமா? கணேசன் விழிகளை அசைக்கிற பக்கமெல்லாம் அதுவும் நகர்ந்த்து. விழிகளைத் திறந்ததும் ஜன்னலுக்கப்பால் வெகு தொலைவில் போய் ஒட்டிக் கொண்டது.

“இதென்ன விளையாட்டு உனக்கு. சாவித்திரி மாதிரி?”

4. மெலிந்த மேகங்கள் தெருவிற்கு மேலே கடந்து போயின. அதற்கு எதிர்த்திசையில் கூட்டமாக விரைந்து பயணிப்பதாய் பிரமை கொடுத்த நட்சத்திரங்கள் நுட்பமாகத் துடித்தன. மண்ணிலிருந்து எதையோ கவர மாமரத்தின் புல்லுருவிக் கொடிகள் ஊசலாடித் தொங்கின. வேப்பம்பழத் தோல்களுக்குள்ளிருந்து வெளியேறியிருந்தன சிற்றெறும்புகள். வேம்பின் அடர்ந்த கிளைகளொன்றிலிருந்து பால் கசிகிறது கையறு நிலைக்கண்ணீர் போல. மரத்தின் இருட்டந்தரங்கத்தில், உச்சிப்பாதுகாப்பில் வழிகிறது. யாரும் அறிந்திருந்தால் அப்போதே அது மாரியம்மனாயிருக்கும். அடிமரத்தில் மஞ்சள் பாவாடை கட்டப்பெற்றிருக்கும். தொழ வந்திருக்கும் பெருங்கூட்டம். திண்ணைச் சுவருக்கும் ஓட்டிற்குமான இடைவெளியில் பெரியண்ணன் எப்போதோ கோந்து தயாரிப்பதற்காக, முருங்கைப் பிசினில் நீர் ஊற்றி ஊற வைத்திருந்த தகர டப்பாவிற்குள்ளிருந்து மீள முடியாமல் அமிழ்ந்தது பாச்சை. வேம்பையும் வீட்டுத் திண்ணை உத்தரத்தையும் பிணைந்திருந்த கம்பிக்கொடியில் உலர்ந்தது வேஷ்டி. தென்னங்கீற்றுகளில் நிழல்கள் வேஷ்டியில் விழுந்து விரல்களாக முறுக்கிக் கொள்கின்றன். பிசைந்து கொண்டு பிரிந்து கூடி நடுங்குகின்றன.

திண்ணையில் படுத்திருந்த பெரியண்ணனின் கால்களை மடியில் வைத்து அம்மா தடவிக் கொடுத்தாள். பெரியண்ணன் பேச இயலாதிருந்தான். கூர்ந்தொளிந்து துலங்கியது பார்வை. தாவித்தாவி அலைக்கழித பார்வை அம்மாவின் முகத்தில் நிலைத்தது ஏக்கமாக. கசங்கிக் கிழிந்து தொய்ந்த தளிரைப் போல உடல் முழுதும் முற்றும் சோர்ந்திருந்தது. அக்கா, அவன் தாகத்திற்கு குளுகோஸ் கரைத்த சுடுநீரை ஸ்பூனல் புகட்டினாள்.

5. எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. கலியாணப் பந்தலைப் பார்த்தால் சிரிப்பு. மணமகள் தலைகுனிந்து நாணத்திலும் அடக்கத்திலும் முழுகிப் போய் உட்கார்ந்திருக்கிறாள். அதைப் பார்த்தால் சிரிப்பு. அகல மார்பும் இடைச்சரிவும் வழவழத் தோலுமாக, மணமகன் அக்னியில் நெய்யை வார்க்கிறான். அதைப் பார்த்தால் சிரிப்பு. இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிழவர்களையும் நடு வயதுக்காரர்களையும் பார்த்தால் சிரிப்பு. இத்தனை இரைச்சல்களையும் கவனிக்காமல், சீவாளியைக் குழந்தைக் கடியாக் கவ்விக் கொண்டு, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக நாயனத்தை வீசி வளைத்துக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பார்த்தால் சிரிப்பு. எதற்கு ‘உம்’மென்று இந்த முகம்! இந்தக் கன்ன உப்பல்! நாயன் துவாரங்களை இத்தனை கண்ணும் கருத்துமாகத் தடவி, எந்த ஸ்வர சுத்தத்துக்கோ பயந்து கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தால்… கலியாணத்துக்குக் கூடியிருக்கிற இத்தனை சாயல்களை, பற்களை, நெற்றிகளை, கால்களை, சிரிப்புகளை, புருவந்தூக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்கிற பூசணி வெள்ளைகளை, தானே பேசுகிற குழந்தைகளை, வருடங்கள் கழிந்து சந்திக்கும் தாயாதிகளை – ஒன்றையும் பார்க்காமல் ஏன் இப்படி கண்ணை மூடி நாயனத்தில் வதை கொள்ள வேண்டும்?

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Chidambaram temple deekshidars to take important decision today

Chidambaram temple deekshidars to take important decision today

சிதம்பரம் நடராஜர் கோவில் சர்ச்சை: தீக்ஷிதர்கள் இன்று முக்கிய ஆலோசனை

சிதம்பரத்தில் உள்ள பிரபலமான நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாட, கோவிலை நிர்வகித்து வரும் தீக்ஷிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.

முதல்வரின் கருத்து தீக்ஷிதர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், நடராஜர் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாட சிதம்பரம் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவு நேற்றுடன் முடிந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தடையை நீடிக்கக் கூடாது என்று தமிழார்வலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் தீக்ஷிதர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாக அர்த்தஜாம சிவபுராண வழிபாட்டுக் குழு, தில்லை திருமறை கழகம், பவுர்ணமி வழிபாட்டுக் குழு, தில்லை காளி வார வழிபாட்டு மன்றம் ஆகியவை கிளம்பியுள்ளன.

இந்த அமைப்பினர் இன்று மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நடராஜர் கிருபா திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தள்ளனர். இதில் தீக்ஷிதர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பான அழைப்பிதழில்,

தமிழை மட்டுமே தாய் மொழியாகக் கொண்ட தீக்ஷிதர் சமுதாய பெருமக்கள், தமிழுக்கு விரோதிகள் போல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதையே காரணம் காட்டி, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள ஆலய வழிபாட்டு முறைகளை விமர்சனம் செய்து ஒரு கூட்டம் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

எனவே நடராஜ பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்

என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தீக்ஷிதர்கள் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழார்வலர்களிடையே எழுந்துள்ளது.

S Ve Sekar talks on ‘EVR Periyar Movie’ & Mylapore

Dinamani.com – TamilNadu Page

மனைவிக்கு நன்றி கூறி கன்னிப் பேச்சைத் தொடங்கினார் எஸ்.வி.சேகர்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசினார்.

பெரியார் படம்: சத்யராஜ் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ரூ. 95 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதல்வர், கதை வசனகர்த்தாவாக இருந்து திரைப்படத்துறை பற்றித் தெரிந்தவர். அந்த படத்தை ரூ. 70 லட்சம் செலவில் தயாரிக்க முடியும். ரூ. 95 லட்சம் நிதி உதவி கொடுப்பதால் படத்தின் உரிமையை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தனி நபருக்கு நிதி உதவி செய்வது சரியல்ல. இதுபோன்று மூதறிஞர் ராஜாஜி, ஆலய பிரவேசம் செய்ய போராடிய வைத்தியநாத அய்யர் ஆகியோரது வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்படுமா? என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மெட்ரோ ரயில் வேண்டாம்: சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயிலை விட மோனோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அதைச் செயல்படுத்த வேண்டும்.

மாநகராட்சி கழிப்பிடங்களில் ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கும் நிலையில் ரூ. 8 தேவைப்படுகிறது. ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, இலவச கழிப்பிடம் தேவை.

மயிலாப்பூர் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் “போர்’ மூலம் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். மந்தைவெளியில் புதிதாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்து விளம்பரப் படுத்தவேண்டும் என்றார் எஸ்.வி. சேகர்.

Indian Parliament’s New TV

Dinamani.com – Headlines Page

மக்களவைக்காக புதிய தொலைக்காட்சி

பொதுமக்களுக்கும், மக்களவைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காகவும், அவை நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் “மக்களவைச் சேனல்’ என்ற புதிய தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் திங்கள்கிழமை துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் இதன் ஒளிபரப்பு துவங்கியது.

இது குறித்து மக்களவைத்தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியதாவது:

இத் தொலைக்காட்சி மூலம் மக்களவை ஒரு புதிய அத்யாயத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் அவையின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும். உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இத்தொலைக்காட்சி வெற்றி பெறும்

என்றார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கப்பட்ட 24 மணிநேர தொலைக்காட்சி இது.

  • உங்கள் எம்பி-யை தெரிந்து கொள்ளுங்கள்,
  • அவைத்தலைவரின் விமர்சனம்,
  • இந்த வாரப்பிரச்சினை,
  • கிராமத்துக்குரல் மற்றும்
  • தேசிய பாரம்பரியம்,
  • கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள்
    இதில் ஒளிபரப்பாக உள்ளன.
  • Mine is a Dravidian Party – Vijayaganth

    Former DMK mla joins Vijaykanth’s party

    எங்கள் கட்சி திராவிட கட்சி: விஜய்காந்த்

    நான் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்ததில்லை, சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைத்ததில்லை, கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததில்லை. இவையெல்லாம் என்னைத் தேடி வந்தவை

    என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஏஜி.சம்பத் தலைமையில் மாவட்ட பாமக முன்னாள் தலைவர் குரு ஜெயக்குமார், மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கடசிகளை சேர்ந்த 1,000 பேர் தேமுதிகவில் இணைந்தனர்.

    புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய விஜயகாந்த் பேசியதாவது:

    திமுக தலைவர் கருணாநிதி நம்மை திராவிட கட்சியில்லை என்று சொல்லியிருக்கிறார். நாம் வளர்ந்து வரும் கட்சி. நம்மை அவர் விமர்சனம் செய்திருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அந்த அளவுக்கு நாம் வளர்ந்திருகிறோம்.

    இது 3வது தலைமுறை. நாம் திராவிட கட்சியா, இல்லையா என்பதை மக்கள் உணர்த்துவார்கள். நாம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இல்லை.

    திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு கன்னடம் உள்பட 7 மொழி பேசுபவர்கள் சேர்ந்தது. இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் தான். நம்மைப் பார்த்து இப்படி ஒரு கருத்தை அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மீது நான் ஒரு மரியாதை வைத்திருக்கிறேன்.

    தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி தவிர மற்ற அனைத்துமே தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது தான். இதில் ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் என்ன இருக்கிறது என்று கேட்டேன்.

    இதை சொன்னதற்காகவும், ஏஜி சம்பத் நமது கட்சியில் இணையப் போவதை உளவுப்பிரிவு போலீஸ் மூலம் தெரிந்து கொண்டும் தான் என்னை விமர்சித்திருக்கிறார்.

    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வரியில்லாத பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். வரி எப்படி போடாமல் இருக்க முடியம். பெட்ரோல், டீசல் விலை உயராது என்று சொல்லிக் கொண்டே உயர்த்துவது இல்லையா, அதுபோல வரியையும் நிச்சயம் போடுவார்கள்.

    சட்டசபை தேர்தலில் 8.5 சதவீதம் ஒட்டு பெற்றிருக்கிறோம். அதனால் நம்மை வளர விட்டு விடாதீர்கள் என்று கூறி வருகிறார்கள். எல்லோரும் தனியாக நில்லுங்கள். உங்களது சக்தியை காட்டிவிட்டு கூட்டு வையுங்கள்.

    என்னுடைய மண்டபத்தை இடிப்பதாக பயம் காட்டுகிறார்கள். தாராளமாக இடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். போனால் போகிறது, இன்னொரு முறை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் கட்சியை மட்டும் அழிக்க விடமாட்டேன்.

    ஒரு குழியில் சிறுவன் விழுந்துவிட்டான், அவனை காப்பாற்ற 2 நாட்களாக போராடினார்கள் என்று அவனை மீட்டவர்களை பாராட்டுகிறார்களே. அந்த குழியை மூடாதவர்களை கைது செய்தார்களா?

    நான் சினிமாவுக்கு வில்லனாகத்தான் வந்தேன். கதாநாயகனாக வருவேன் என்று நினைக்கவில்லை. சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைக்கவில்லை. நடிகர் சங்க கடனை அடைப்பேன் என்று நினைக்கவில்லை. கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. அதெல்லாம் என்னைத் தேடி வந்தது.

    நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படும். நமது தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டில் அறிவித்ததே நமக்கு கிடைத்த வெற்றி தான். ஏன் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய கியாஸ் அடுப்பு பற்றி பட்ஜெட்டில் கூறவில்லை.

    எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தான் மக்களுக்கு நேரடியாக நன்மைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்.

    நாம் வளர்ந்து கொண்டே இருந்தால் தான் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் பயந்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றார் விஜய்காந்த்.

    Terror training camps in Theni forest?

    Terror training camps in Theni forest?

    தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி?

    கோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோ சங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5 போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டு முகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள், கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்து கோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம் போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    கைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மத கல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.

    ஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:
    பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.

    இந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானை கொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெரிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

    இப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

    Govt. will look into Chidambaram temple Issue – TN CM

    Webulagam : Govt. will look into Chidambaram temple Issue – TN CM!

    சிதம்பரம் கோயிலில் திருவாசகம் : கருணாநிதி பதில்

    சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட தமிழ் பக்தி பாக்களை இசைக்க சட்ட ரீதியாக என்ன தடை உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

    தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாட முடியவில்லை. தமிழுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையை தடுத்த நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி,

    “சிதம்பரத்தை பொறுத்தவரை அங்குள்ள தீட்சிதர்கள் ஆதிக்கத்தில்தான் நடராஜர் இருப்பதாகவும், அதை மீறி யாரும் எதையும் செய்ய முடியாது என்று ஐதீக கருத்து அழுத்தம் திருத்தமாக இருப்பதாகக் கூறி தேவாரம் பாடிய ஒரு தமிழரை வெளியேற்றியுள்ளார்கள்.

    அந்த சட்டப் பிரச்சனை என்ன என்பதை மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை பற்றி ஆராய்ந்து ஆவன செய்யப்படும்.

    இந்து ஆலயச் சுவர்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு உண்மையான தமிழர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களுக்கு கொந்தளிப்புதான் ஏற்படும். தமிழ் இவ்வளவு இலக்காரமாகப் போய்விட்டதா? தமிழ் உணர்வு அடிப்படையில் இந்த அரசின் சார்பாக இனி எந்த ஆலயத்திலும் தமிழிலும் அர்ச்சனை என்று எழுதப்படமாட்டாது. ஏற்கனவே எழுதப்பட்டிருந்தாலும் அவை அழிக்கப்படும்”

    என்று கூறினார்.

    Siruthavoor Encroachment by Jayalalitha

    BBCTamil.com

    தலித்துகள் நிலத்தில் முன்னாள் முதல்வர் தங்கியிருந்த பங்களா: சர்ச்சை வலுக்கிறது

    தமிழக தலைநகர் சென்னையை அடுத்த சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தங்கி வந்த சொகுசு பங்களாவின் ஒரு பகுதி, 1967 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.

    ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது அவருடைய தோழி சசிகலாவின் ஆட்களால், இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தை தமிழக அரசு மீட்டு, மீண்டும் தலித்துகளுக்கே வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களும், அவர்களின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் பல்வேறுவகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் பற்றி சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி அறிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, சிறுதாவூரில் தானும், தனது தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல என்றும், வாடைக்குத்தான் அந்த பங்களாவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

    சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், அந்த பங்களா தன் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த பங்களா கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பான சர்ச்சை ஏதேனும் இருந்தால், அதை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், ஜெயலலிதா கூறினார்.

    இது தொடர்பாக தன் மீது அவதூறு பரப்பி, தன் மீது பழி போடவும், தனது நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் இதை தாம் சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டப்போவதாகவும் அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட கருணாநிதி, சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவோ, சசிகலாவோ உரிமையாளர் இல்லை என்றால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

    குறிப்பாக சிறுதாவூர் பங்களாவுக்கு உண்மையான உரிமையாளருக்கும், ஜெயலலிதா, சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? அந்த பங்களாவுக்கான வாடகையை யார் கொடுத்தது? என்று அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

    கருணாநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தனக்குச் சம்பந்தம் இல்லாத சிறுதாவூர் பங்களா குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி, அவர் பெயரிலும் அவரது சொந்த, பந்தங்களின் பெயரிலும் இருக்கும் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளளர்.

    சிறுதாவூர் பங்களாவுக்கான வாடகையை தாமே தமது சொந்த பணத்தில் கொடுத்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முழு உண்மைகளையும் வெளியில் கொண்டு வரும் பொருட்டு, தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    புதிய தமிழகம் உள்ளிட்ட சில தலித் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம் அஇஅதிமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் இது தொடர்பில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

    தமிழக அரசால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் இன்னாள் முதல்வரின் குடும்ப சொத்துகணக்கு எவ்வளவு என்கிற விவாதமாக திசைமாறிச் செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.