BBCTamil.com
தலித்துகள் நிலத்தில் முன்னாள் முதல்வர் தங்கியிருந்த பங்களா: சர்ச்சை வலுக்கிறது
தமிழக தலைநகர் சென்னையை அடுத்த சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தங்கி வந்த சொகுசு பங்களாவின் ஒரு பகுதி, 1967 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது அவருடைய தோழி சசிகலாவின் ஆட்களால், இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தை தமிழக அரசு மீட்டு, மீண்டும் தலித்துகளுக்கே வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களும், அவர்களின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் பல்வேறுவகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் பற்றி சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, சிறுதாவூரில் தானும், தனது தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல என்றும், வாடைக்குத்தான் அந்த பங்களாவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.
சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், அந்த பங்களா தன் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த பங்களா கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பான சர்ச்சை ஏதேனும் இருந்தால், அதை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், ஜெயலலிதா கூறினார்.
இது தொடர்பாக தன் மீது அவதூறு பரப்பி, தன் மீது பழி போடவும், தனது நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் இதை தாம் சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டப்போவதாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட கருணாநிதி, சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவோ, சசிகலாவோ உரிமையாளர் இல்லை என்றால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்று கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக சிறுதாவூர் பங்களாவுக்கு உண்மையான உரிமையாளருக்கும், ஜெயலலிதா, சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? அந்த பங்களாவுக்கான வாடகையை யார் கொடுத்தது? என்று அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
கருணாநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தனக்குச் சம்பந்தம் இல்லாத சிறுதாவூர் பங்களா குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி, அவர் பெயரிலும் அவரது சொந்த, பந்தங்களின் பெயரிலும் இருக்கும் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளளர்.
சிறுதாவூர் பங்களாவுக்கான வாடகையை தாமே தமது சொந்த பணத்தில் கொடுத்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முழு உண்மைகளையும் வெளியில் கொண்டு வரும் பொருட்டு, தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் உள்ளிட்ட சில தலித் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம் அஇஅதிமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் இது தொடர்பில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
தமிழக அரசால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் இன்னாள் முதல்வரின் குடும்ப சொத்துகணக்கு எவ்வளவு என்கிற விவாதமாக திசைமாறிச் செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.