Webulagam : Tamil Nadu Budget 2006-07 salient features!
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்
2006-07 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தமிழக சட்டப் பேரவையில் இன்று சமர்ப்பித்தார்.
“தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
கரும்பொருள் யாதொன்று மில்”
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற பொருளுடைய குறளைக் கூறி நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
மதிப்பு கூட்டு வரி :
· 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மதிப்பு கூட்டு வரி நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் குறைவாக விற்பனை உள்ள சிறு வணிக நிறுவனங்களுக்கு விலக்கு.
வரி விலக்குகள் :
· பருப்பு, பயறு வகைகள், சமையல் எண்ணெய் மீதான வரி ரத்து. வருவாய் இழப்பு ரூ.110 கோடி.
· தேயிலை மீதான விற்பனை வரி 50 விழுக்காடு குறைப்பு.
· சிட்டா நூலிற்கு முழு வரி விலக்கு.
· எரி சாம்பலுக்கு விற்பனை வரி விலக்கு.
· தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட உரிமம் அளிக்கப்பட்ட மென்பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு.
· சாம்பிராணிக்கு மீண்டும் விற்பனை வரி விலக்கு.
· அத்தாட்சி செய்யப்படாத அடகு, அடமான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை செலுத்துவதில் இருந்து விலக்கு.
ஒட்டுமொத்த நிதிநிலை :
· 2006-07 – வருவாய் ரூ.38,731 கோடி.
· 2006-07 – செலவு ரூ.39,860 கோடி.
· வருவாய் பற்றாக்குறை ரூ.1,129 கோடி.
· நடப்பு நிதியாண்டின் கடன்களும், முன் பணங்களும் உள்ளிட்ட மூலதனச் செலவு ரூ.6,102 கோடி.
· ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.7,231 கோடி.
· 2005-06 ஆண்டு திருத்திய மதிப்பீடுகளின் படி ரூ.56,094 கோடி அளவிற்கு கடன் உள்ளது. இதற்கு ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.446 கோடி.
விவசாயிகள் நலன் :
· கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற கடன்கள் ரூ.6,866 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்ததால் நபார்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.1,668 கோடியில் இந்த நிதியாண்டில் ரூ.438 கோடி செலுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· கூட்டுறவு வங்கிகளுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்திற்காக இந்த ஆண்டில் மட்டும் ரூ.1,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் இருந்து கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு தற்பொழுதுள்ள 9 விழுக்காடு வட்டி விகிதம் 7 விழுக்காடாக குறைக்கப்படும். இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்.
· தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 95 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2005-06 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் தொடர்புடைய இனங்களுக்கு ரூ.854.41 கோடியாக இருந்த மொத்த ஒதுக்கீடு 2006-07 நிதியாண்டில் ரூ.977.98 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
· விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகர் இன்றி குறைந்த விலையில் நுகர்வோர் காய்கறிகளை பெறவும் உருவாக்கப்பட்ட 103 உழவர் சந்தைகளும் மீண்டும் திறம்பட செயல்படும்.
· விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விரயம் இன்றியும், உரிய விலை கிடைக்கும் வகையிலும் உலகத் தரம் வாய்ந்த சேகரிப்பு மையங்கள், குளிர்விக்கும் சாதனங்கள், தரம் பிரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் மின்னணு ஏல முறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 3 வணிக மையங்கள் (கூநசஅiயேட ஆயசமநவள) சென்னை, கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்படும்.
· கோவை மாட்டம் பல்லடத்தில் வெங்காயத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்திற்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சைப் பழங்களுக்கும் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனை கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
· தரிசு நிலங்களில் முந்திரி சாகுபடியை ஊக்குவித்து ஏற்றுமதியை அதிகப்படுத்த கடலூர், தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய முந்திரி விளை நில ஏற்றுமதி மண்டலத்தின் பணிகள், முந்திரி விவசாயிகளுக்கு மேலும் பயன்தரக்கூடிய வகையில் செம்மைப் படுத்தப்படும்.
· உயிரி எரிபொருள் (எத்தனால்) பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் உயிரி எரிபொருளை 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும்.
· ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும்.
· அரசு புறம்பபோக்கு தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேம்படுத்தி நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வழங்கப்படும்.
· அதே நேரத்தில் மொத்தமாக தரிசு நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயக் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்நிலங்களை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றித் தரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டால், அரசு செலவில் மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றி அவர்களிடமே திருப்பி அளிக்கப்படும்.
· விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு விவசாயத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள சலுகைகள் (தனி செய்தியாக அளிக்கப்பட்டுள்ளது).
கால்நடை வளர்ப்பு :
· கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் தமிழகம் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வகையில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பறவைகளினால் ஏற்படும் நோய் குறித்த ஆய்வுக் கூடம் அமைக்கப்படுவதுடன், நாகப்பட்டினம், கரூர், விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கால்நடை நோய்கள் குறித்த நுண்ணறிவுப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
பொது விநியோகத் திட்டம் :
· பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் 1950 கோடி உணவு மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை கடத்தி கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும்.
உள்துறை :
· காவலர்கள் குறை தீர்க்க 3வது காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.
· காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.23 கோடி மதிப்பீட்டில் சிறப்வு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வாங்கப்படும்.
· வாகன ஓட்டிகள் குடி போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், ஓட்டுநர் உரிமத்தையே ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீதித்துறை :
· உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கான தனியாக ஒரு கட்டடம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கட்டப்படும்.
· மண முறிவு வழக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்க, குடும்ப நல நீதிமன்றங்கள் ஒவ்வொன்றிலும் இரு முழு நேர ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்.
· சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்குத் தேவையான 350 பணியிடங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும்.
· நீதி நிர்வாகத்திற்காக இந்த நிதியாண்டில் ரூ.212.9 கோடி ஒதுக்கப்படும்.
பள்ளிக் கல்வி :
· அனைத்துப் பள்ளிகளிலும் இந்த ஆண்டிலேயே முதலாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக கற்பிப்பது தொடங்கும். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக 10 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
· அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய சுமார் 45,987 ஆசிரியர்களுக்கு 01.06.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கப்படும். இனி வரும் காலங்களிலும் ஆசிரியர் காலியிடப் பணியிடங்கள் காலமுறை ஊதிய அடிப்படையிலேயே நிரப்பப்படும்.
· தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டமும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.
· 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்துச் செல்லும் போதே மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள், வாழ்விடச் சான்றிதழ்கள், குடும்ப வருமானச் சான்றிதழ்கள் ஆகியன வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்.
· பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,438.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· மத்திய அரசு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள அனைவருக்கும் கல்வித் திட்டம் ரூ.723.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதற்காக மாநில அரசின் பங்காக ரூ.180.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி :
· பொது நுழைவுத் தேர்வை 2007-08 ஆம் ஆண்டு முதல் அகற்றிட கல்வியாளர்கள் கொண்ட குழு.
· அரசு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சுயநிதி அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் பாடப் பிரிவுகளையும் பொதுவகை கட்டணம் செலுத்தும் பாடப் பிரிவுகளாக மாற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
· அண்ணா பல்கலைக் கழகத்தைப் போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் திருச்சியிலும், கோவையிலும் நிறுவப்படும்.
· பின் தங்கிய பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காக கோவை மாவட்டம் வால்பாறையிலும், சேலம் மாவட்டம் மேட்டூரிலும் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
· மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள கல்வியியல் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
· ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
· சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் நிறுவப்படும்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் :
· வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிலும், வரும் ஆண்டிலும் 9,000 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதற்காக ரு.13.13 கோடி ஒதுக்கீடு.
· 235 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவச் சாதனங்களுக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்படும். 14 மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு 198 அவசர ஊர்திகள் வழங்கப்படும். 32 அரசு மருத்துவமனைகள் 24 மணி நேர அவசர மற்றும் சிசு கவனிப்பு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
· தமிழகத்தில் உள்ள 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் செமி ஆட்டோ அனலைசர் கருவிகள் ரூ.17 கோடி செலவில் வழங்கப்படும்.
· திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, வேலூர் அரசு மருத்துவமனைகளில் ரூ.23.95 கோடி செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கப்படும்.
· சென்னை பொது மருத்துவமனையில் ரூ.5.5 கோடி செலவில் அதி நவீன 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனர் அமைக்கப்படும்.
· மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு இணங்க விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம் :
· சென்னை தரமணியில் 2வது டைடல் பூங்கா அமைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.
· தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்வது குறித்து அரசிற்கு பரிந்துரைகள் அளிக்க இத்துறையின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலத் தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.
· முதற்கட்டமாக 30,000 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க இந்த நிதியாண்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· சிறு தொழில்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாடு :
· சாலை பராமரிப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.804 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்களுக்கான மூலதன ஒதுக்கீடுகளுக்கென ரூ.2,461 கோடி என்ற உயர் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· மதுரை மாநகரப் பகுதியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மதுரை ஆரச்சாலையின் 2வது கட்டப் பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
· திருப்பூர் நகரத்தின் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.70 கோடி மதிப்பீட்டில் அந்நகரத்தின் வட்டச்சாலை மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்படும்.
மின் சக்தி :
· இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,011 மெகா வாட்டாகும். இந்த ஆண்டில் 749 மெகா வாட் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டு மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 10,760 மெகா வாட்டாக உயரும்.
· ஊரகப் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதை உறதி செய்ய தமிழ்நாடு மின் வாரியம் இந்த நிதியாண்டில் ரூ.195.54 கோடி மதிப்பீட்டில் மின் பகிர்மான திட்டங்களை மேற்கொள்ளும்.
· ஊரகப் பகுதிகளில் 25 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 2,706 புதிய மின் பகிர்வு மின் அழுத்தமாற்றிகள் நிறுவப்படும். 24 துணை மின் நிலையங்களின் மின் அழுத்தமாற்றிகளின் திறன் அதிகரிக்கப்படும்.
· சுயநிதி திட்டத்தின் கீழ் சிறப்புத் தொகை கட்டி மின் இணைப்பு பெற்ற 2,40,000 விவசாய மின் இணைப்புகளுக்கும் இனி இலவச மின்சாரம் வழங்கப்படும்.
போக்குவரத்து :
· நடப்பாண்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும்.
· திருப்பெரும்புதூரில் ராஜீவ் காந்தி விமானவியல் உயர் கல்வி மற்றும் விமான ஓட்டிகள் பயிற்சிக் கழகம் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டம் | குடி நீர் வழங்கல்
சுனாமி சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் :
· சுனாமி சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கென இந்த ஆண்டில் மேலும் ரூ.100 கோடி செலவிடப்படும்.
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் :
· முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு மாதற்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.200ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.407.06 கோடி ஒதுக்கீடு.
· கடும் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும்.
· மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 நிலைகளைப் பெறக்கூடிய கண் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குவதுடன் அவர்களுடைய உயர் கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.
நெசவாளர் நலன் | மீனவர் நலன் | ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் | இலங்கைத் தமிழர்










