தலையங்கம் :: காலச்சுவடு – மீண்டும் ஜூலை ’83
இலங்கையில் ஏற்பட்டிருந்த தற்காலிக அமைதி தகர்ந்துவருகிறது. அமைதி என்பது போருக்கான தயாரிப்பு என்பதிலிருந்து போருக்கான ஒத்திகை என்ற கட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. இந்தக் குழப்ப நிலைக்கு இலங்கை அரசு, புலிகள் என இரு தரப்பினருமே காரணம் என்று பேச வைத்திருப்பதும்கூட இலங்கை அரசுக்கு வெற்றிதான். அப்பாவி மக்களின் சடலங்களைக் கொண்டு அங்கு ஆடப்படும் அரசியல் சதுரங்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது.
கடந்த பத்தாண்டுகளில் மாறிவந்துள்ள சர்வதேச அரசியல் சூழலில், உலகின் மூலை முடுக்குகளும்கூட வல்லரசியத்தின் செயற்கைக்கோள் துழாவலுக்கு ஆளாகிவருகின்றன. இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் போலவே, சண்டைகளின் பின்னணியிலும் வேற்று முகங்களின் நிழல்கள் உள்ளன. இது இந்தியாவுக்குத் தெரியாத ரகசியமல்ல. இலங்கையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் இந்தியாவுக்குச் சொல்லப்பட்டேவருகின்றன. அமைதிப் படையை அனுப்பிய காலத்தில் இருந்தது போல வெளிப்படையான தலையீட்டுக்கு இந்தியா தயாராக இல்லை எனினும் வேறு விதங்களில் அது இலங்கையைக் கவனித்தேவருகிறது.
ஈழத் தமிழ்ச் சமூகம் சர்வதேச அளவில் இப்போது மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். யுத்தத்தின் தாக்கத்தை எப்படித் தமிழர்கள் எல்லோரும் உணர்கிறார்களோ அப்படிப் புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் தடையைப் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் உணரத் தொடங்கியுள்ளார். உலகமய மாதலால் பெருகிவரும் நிறவெறி மனோபாவத்தால் ஏற்கனவே சிவில் சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகிவந்த அவர்கள், தற்போது அரசு இயந்திரங்களின் கண்காணிப்பு, விசாரணை முதலான தொந்தரவுகளையும் சந்தித்தாக வேண்டும்.
ஆக, இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது உலகோடு பிணைக்கப்பட்டே இருக்கிறது. அது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பற்றிக் கூறவே வேண்டாம். இந்தப் பிரச்சினையை மிகவும் உணர்ச்சிகரமாக அணுகும் தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமின்றி மனிதாபிமானத்தோடு பார்க்கிற சாதாரணக் குடிமக்களும் இந்தப் பிரச்சினையில் அக்கறையோடுதான் உள்ளனர். இலங்கையில் வெடிக்கும் யுத்தம் இங்கே அகதிகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதனாலோ தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறது என்பதனாலோ மட்டுமல்ல, ஈழத் தமிழர் மீதான அக்கறைக்கு இன்னும் ஆழமான காரணங்கள் இங்கே இருக்கின்றன. மொழிக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பில் நாம் அந்தக் காரணங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். புவியியல் எல்லைகளைத் தாண்டி மொழி செயல்படும் விதத்தை அரசு எந்திரங்களால் புரிந்துகொள்ள முடியாது.
“மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு” எனக் கூறிவந்த தமிழக முதலமைச்சர் இப்போது “இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூட்டணிக் கட்சிகளைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்கு வந்திருப்பது நல்ல அறிகுறி.
நார்வே குழுவினரும் இலங்கை அரசின் பிரதிநிதிகளும் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து மைய அரசின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிச் செல்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அவர்களையும் ‘தடை செய்யப்பட்டவர்க’ளாக பாவிப்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. பல்வேறு மேலை நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று உண்மை நிலையை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளும் வேளையில் இந்தியாவிலிருந்து அப்படியொரு குழுவை அனுப்பலாம் என்ற யோசனையும் நியாயமானதே. இவற்றைத் தமிழக அரசு மைய அரசிடம் வற்புறுத்த வேண்டும். அது மட்டுமின்றி இலங்கை அரசுக்கு இந்தியா செய்துவரும் நேரடியான, மறைமுகமான உதவிகள் இலங்கையின் யுத்த எந்திரத்துக்கு எண்ணெய் போடுவதாகவே இருக்கிறது என்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் மக்கள்மீதான இலங்கை அரசின் நடவடிக்கைகளில் யுத்தத்தின் தன்மையைவிட இனவாதத்தின் தன்மையே தூக்கலாகத் தெரிகிறது. பேசாலையில் தேவாலயத்துக்குள் நடத்தப்பட்ட படுகொலைகள், பள்ளிமுனை என்ற மீனவக் கிராமத்தை முற்றாக எரித்து ஆடப்பட்ட வெறியாட்டம் முதலானவற்றில் ராணுவப் போக்கைவிட இனவெறியே வெளிப்படப் பார்க்கிறோம். படையினரின் ரத்தத்தில் ஜூலை 83இன் நினைவுகள் துடித்துக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் யுக்தி ஒடுக்குமுறையாளர்களுக்குப் பழகிப்போன ஒன்று. இன்று அந்த யுக்திக்கு ஈழத் தமிழர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குற்றவாளிகளாக்கிக் கூண்டில் நிறுத்த ஒரு பெரும் கூட்டமே வேலை செய்கிறது.
ஈழப் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பதைத் தனியுடைமையாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு சிலரின் அரசியல் சாதுர்யமற்ற அணுகுமுறை மாநில, மத்திய அரசுகளின் நிலைபாடுகளைத் தீர்மானிப்பது எவருக்கும் நல்லதல்ல. மற்றவர்களைக் குறைகூறுவதன் மூலம் தம்மைத்தாமே முதுகில் தட்டிக்கொள்ளும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளைத் தாண்டி ஈழப் பிரச்சினை மீது அக்கறை கொண்டோ ர் தமது குரலைப் பதிவு செய்ய வேண்டிய நேரம் இது.










