Incentive Suggestions for the Indian Farmer


Dinamani.com – Editorial Page

உழவுத்தொழில் மீட்சி பெற! :: அ. பிச்சை

“”உண்மையான இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது; நகரங்களில் அல்ல” என தேசப்பிதா காந்தியடிகள் ஆயிரம் முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ஆனால் இன்று கிராமியப் பொருளாதாரம் சிதைந்து வருகிறது. கிராமங்கள் உயிரற்ற சடலங்களாக மாறி வருகின்றன. பண்டித ஜவாஹர்லால் நேரு 15-08-1947 அன்று நிகழ்த்திய தனது சுதந்திர தின உரையில் “”இந்தியாவில் எதுவும் காத்திருக்கலாம்; ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது” (Everything else can wait in India; but not agriculture) எனப் பகிரங்கமாக அறிவித்தார். இதனை எல்லோரும் மறந்து விட்டார்கள் – ஆட்சியாளர்கள் உட்பட. 60 ஆண்டுகள் காத்திருந்த விவசாயிக்கு இன்னும் விமோசனம் ஏற்பட்டபாடில்லை.

படித்து, பட்டம் பெற்று, உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் உழவுத் தொழிலை ஏற்றுக் கொண்ட ஓர் இளைஞனைக் கேட்டேன். அவர் சொன்னார்:

விவசாயம் கொஞ்சமும் கட்டுபடி ஆகவில்லை; மழை இன்மையால் கிணறு வறண்டுவிட்டது; விவசாயக் கூலியும், செலவும் நாளும் கூடுகின்றன; விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைப்பதில்லை; கடன் வாங்க விரும்பாத நான், கடனுக்குள் மூழ்கி விட்டேன். என்னால் இனிமேலும் விவசாயத்தில் தாக்குப் பிடிக்க முடியாது; விவசாயக் கூலியாக வெளிநாடு போக வழி இருந்தால் சொல்லுங்கள்”

– என்றார். இவரது பேச்சுதான் கிராம விவசாயிகளின் எதார்த்த நிலையை உணர்த்தியது. இதுகேட்டு நான் மிகவும் அதிர்ந்து போனேன். ஆனாலும் கிராமத்து விவசாயிகளின் உண்மை நிலை இதுதான்.

இப்படிப்பட்ட இருண்ட சூழலில்தான், அரசின் சமீபகால அறிவிப்புகள், ஓரளவு நம்பிக்கை ஒளியைத் தருவதாக உள்ளன. அவை:

  • விவசாயக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
  • விவசாயத்திற்கு இலவச மின்சாரம்.
  • சில அத்தியாவசியப் பொருள்களுக்கு மானியம்.

    உண்மையில் தற்கொலைப் பாதையின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் துயரங்களுக்கு இவை முழுமையான விடியலைத் தராவிட்டாலும், சிறிது வெளிச்சத்தையாவது தரலாம்!

    இந்திய மூலதனச் சீரமைப்பு நிறுவனம் (Assets Reconstruction Company of India) என்ற ஓர் அமைப்பு ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது (ஆதாரம்: The New Indian Express, Dated 04-01-2006). அதன்படி பெரும்பாலும் நகர்ப்புறங்களில் வாழும் வசதி படைத்தவர்கள், இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளிலிருந்து, தொழில் கடன் பெற்று, அவற்றைத் திருப்பிக் கட்டாமல், வராக் கடன் என்று கணக்கிடப்பட்டிருக்கும் தொகை ரூ. 2,36,000 கோடியாம்! இதில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை: ரூ. 77,000 கோடி. தொழில் கடனைத் தள்ளுபடி செய்தது சரி என்றால், விவசாயக் கடன் தள்ளுபடியும் நியாயம்தானே!

    வளர்ந்த நாடுகளில் விவசாயத்திற்கு பெருமளவு மானியம் வழங்குகிறார்கள். அதன் மூலம் விவசாயம் பட்டுப்போகாமல் பாதுகாக்கிறார்கள். ஆங்கிலேய அரச குடும்பத்தினர் கூட இத்தகைய மானியத்தைப் பெறுகிறார்கள்! நமக்கு இது வியப்பாக இருக்கலாம்; ஆனால் இங்கிலாந்தில் இது விதி அல்லது நடைமுறை.

    பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் 2003 – 2004ஆம் ஆண்டில் பெற்ற மானியம்: 13 லட்சம் அமெரிக்க டாலர் (ஒரு டாலர் சுமார் 45 ரூபாய்). இளவரசர் சார்லஸ் பெற்றது: 4.8 லட்சம் டாலர். காரணம்: இருவரும் சொந்தத்தில் விவசாயப் பண்ணை வைத்திருக்கிறார்களாம்.

    டென்மார்க் இளவரசர் ஜோகிம் 2003-ல் பெற்ற விவசாய மானியம்: 2.2 லட்சம் டாலர். தெற்கு ஜெட்லாண்டில் அவரது பண்ணைக்குக் கிடைத்த மானியம் இது. இங்கிலாந்தின் பெரும் பணக்காரர் வெஸ்ட் மின்ஸ்டர் டியூக் 1200 பசுக்கள் வைத்து வளர்க்கிறாராம்! அதற்காக ஆண்டொன்றுக்கு அவர் பெறும் மானியம்: 5.5 லட்சம் டாலர். அதாவது நாள் ஒன்றுக்கு பசு ஒன்றுக்கு 1.3 டாலர் மானியம் வழங்கப்படுகிறது.

    அமெரிக்காவில் விவசாய மானியம் பெற்றவர்களில் தொழில் அதிபர்கள் டேவிட் ராக் பெல்லரும், டெட் டர்னரும் அடங்குவார்கள்! அரச பரம்பரையினர் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் இத்தகைய விவசாய மானியம் பெறுபவர்களே!

    அமெரிக்காவில் 25,000 பருத்தி விவசாயிகள் மானியம் பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் மொத்தமாக நாள் ஒன்றுக்குப் பெறுவது: 101 லட்சம் டாலர். ஜெர்மனியில் உள்ள 136 பால் பண்ணைக் கம்பெனிகளுக்கு 78 மில்லியன் டாலர் ஏற்றுமதி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஜப்பானில் உள்ள பசு ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 8 டாலர் மானியம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் 60 கோடி விவசாயக் குடும்பங்களில், பாதிக் குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு 1.5 டாலரில் (ரூ. 75) தான் தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்! இதனைப் பார்த்தால் ஏழை இந்தியனைவிட, ஜப்பானியப் பசுக்கள் அதிர்ஷ்டசாலிகளே!

    இந்நிலையில் இந்திய விவசாயிகளுக்கு இன்று வழங்கப்படும் மிகக் குறைந்த மானியத்தைக்கூட, நீக்க முயற்சிப்பது வேதனையிலும் வேதனை.

    வளர்ந்த நாடுகளில் சராசரி குடும்ப வருமானத்தைவிட, சராசரி விவசாயக் குடும்ப வருமானம் அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவிலோ தலைகீழ் மாற்றம். இந்திய தேசிய வருமானம் பற்றிய புள்ளிவிவரத்தில் கடைசியில் இருப்பவர்கள் விவசாயிகளே!

    வேளாண்மை வளர, விவசாயிகள் உயர வழிமுறைகள்:

  • வேளாண் நிலங்களை அரசு உழுபவனுக்கே உடமை ஆக்குவதற்கு, மோதல் இல்லாமல் முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நில உரிமையாளருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு முன்வர வேண்டும்.
  • தரமான விதைகளைக் குறைந்த விலையில் அல்லது மானியத்துடன் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
  • வங்கியில் பணிபுரிவோர் வீடு கட்டுவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கிய காலம் உண்டு. அதேபோல் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் அல்லது 4% வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
  • அரசுப் பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் Cost of Living Index – வாழ்க்கைச் செலவுக் குறையீட்டு எண் அடிப்படையில் ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படியை நிர்ணயம் செய்கிறார்கள். அதேபோல் விளைபொருள்களின் விலையை ஆண்டுதோறும் உற்பத்திச் செலவையும் நியாயமாகத் தர வேண்டிய லாபத்தையும் சேர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும். நுகர்வோருக்குக் குறைந்த விலையில் பொருள்களைத் தர வேண்டுமெனில், விலை வித்தியாசத்தை அரசு மானியமாக ஏற்க வேண்டும்.
  • விவசாயி வீட்டுப் பிள்ளைகளுக்குத் தகுதி அடிப்படையில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர் படிப்புக்கு இடம் கிடைத்தால், கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்.
  • நோய் வந்தால் வைத்தியம் செய்ய விவசாயிக்கு வசதியில்லை. ஆகவே அவனுக்குத் தரமான மருத்துவ வசதி இலவசமாக வழங்கும் வகையில், வட்டார அளவில் அரசு மருத்துவமனைகளின் தரமும், பணியின் தன்மையும், நிலையும் உயர்த்தப்பட வேண்டும்.
  • விவசாயக் குடும்பத்தின் தலைவன் 50 வயதுக்குள் இறந்து விட்டால், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பரிவுத்தொகை ரூ. 50,000 வழங்கப்பட வேண்டும்.

    சுருங்கச் சொன்னால் நாடு வேகமாக வளர்கிறது என்று சொல்லுகிறார்கள். அத்தகைய வளர்ச்சியின் பயன் கிராமப்புற விவசாயிகளுக்கும் போய்ச் சேருமாறு உறுதி செய்யப்பட வேண்டும்.

    “”ஒரு செயலைச் செய்யும்போது, தயக்கம் ஏற்பட்டால் அச் செயலால், இத் தேசத்தின் கடைநிலை மனிதனின் கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற கேள்வியைக் கேள். “ஆம்’ எனப் பதில் கிடைத்தால், அதைத் துணிந்து செய்” – என்றார் காந்திஜி.

    இன்று இத் தேசத்தில் வாழ்வின் கடைநிலையில் இருப்பவர்கள் விவசாயிகளே! ஆகவே மத்திய, மாநில அரசுகள் செய்கிற ஒவ்வொரு செயலாலும், திட்டத்தாலும் ஏழை விவசாயி ஏற்றம் பெறுவானா என எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.