DPA leads in Puthucherry local body elections:
புதுவை உள்ளாட்சி தேர்தல்:
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது.
பாண்டிச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 3 கட்டமாக நடந்த இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
புதுவையில் 2 மையங்களிலும், காரைக்காலில் 6 மையங்களிலும், ஏனாம், மாஹே ஆகிய இடங்களில் தலா 1 மையத்திலும் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. 5 நகராட்சி தலைவர் பதவிக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.
புதுவை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதேவி 6,000 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார். உழவர்கரை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலும், ஏனாமில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திராவும், மாஹ÷வில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் பர்வத்தும் முன்னணியில் உள்ளனர்.
காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர் பிரபாவதி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். புதுவை உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தேமுதிக, முக்கியமான காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் முன்னணி பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை நகராட்சி வார்டு தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக நான்கு வார்டுகளையும், அதிமுக மற்றும் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
உழவர்கரை நகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக இரண்டிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். இந்த நகராட்சியின் நான்கு வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










