தேமுதிக கூட்டத்தில் அடிதடி; ஓட்டம் பிடித்த பெண்கள்
பழனியில் நடந்த தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் அடிதடி, ரகளை நடந்தது. இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
ஆர்.எப். சாலையில் உளள கல்யாண மண்டபத்தில் தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். பெண்களும் பெரும் திரளாக வந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் பேசினார். அப்போது பழனி தொகுதியில் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பி.கே.சுந்தரத்தின் ஆதரவாளர்கள் எழுந்து, கூட்டத்திற்கான நோட்டீஸில் சுந்தரத்தின் பெயர் போடாதது ஏன் என்று கேட்டு ரவிக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு ரவிக்குமார் பதில் சொன்னார். ஆனால் அதில் திருப்தி அடையாத சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுந்தரம் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால் அதற்குப் பலன் இல்லை.
இந்த வாக்குவாதம் பின்னர் அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இருக்கைகள், நாற்காலிகள் பறந்தன.
ஆயக்குடி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களை மாவட்ட தலைமை புறக்கணிக்கிறது. இதனால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக பிற கட்சிகளில்தான் இதுபோன்ற கலாட்டாக்கள் நடக்கும். இப்போது தேமுதிகவிலும் அது எட்டிப் பார்த்துள்ளது.










