சி.பி.எம்.மிற்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டதுமே கட்சி அலுவலகத்துக்கு வந்தார் அம்மாசை அம்மாள். வயதான அந்த மூதாட்டி தனது சுருக்குப் பையிலிருந்த பணத்தை எண்ணி, தோழர்களிடம் நீட்டினார்.
“இதிலே அய்யாயின் ரூவா (ரூ.5000) இருக்கு. இதைத்தான் வேட்பாளரோட டெப்பாசிட் தொகையா கட்டோணும்”
என்றார். நெகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டனர் தோழர்கள். வெள்ளைக்காரர்கள் ஆட்சியை எதிர்த்து போராடி தூக்கிலிடப்பட்ட மில்தொழிலாளர்களில் ஒருவரான சின்னையனின் மனைவிதான் அம்மாசை அம்மாள். தன் கணவர் இருந்த செங்கொடி இயக்கத்தின் மீது உள்ள பற்று மாறாமல், தன் சேமிப்பை கொண்டு வந்து கொடுத்தார். சி.பி.எம். வேட்பாளர் கோவிந்தசாமியும் அந்த சுருக்குப் பை பணத்தைத்தான் டெபாசிட்டாக கட்டினார்.
சி.பி.ஐ. ஆறுமுகமும் அ.தி.மு.க பிரேமாவும் அவினாசி தனி தொகுதியில் மோதுகிறார்கள். பிரேமா வேலை பார்ப்பது சி.பி.ஐ.யைச் சேர்ந்த கருமாபாளையம் பழனிச்சாமியின் பனியன் கம்பெனியில்தான். தொகுதியில் உள்ள அ.தி.மு.க பொறுப்பாளர்கள் பலரும் இப்படி மாற்றுக்கட்சியினரின் கம்பெனிகளில்தான் பணியாற்றுகிறார்கள். கட்சி விசுவாசத்தைவிட முதலாளி விசுவாசம்தான் நல்லது என கணக்குப் போடும் அ.தி.மு.கவினர், தங்கள் முதலாளிகளை சந்தித்து,
“”உங்க கூட்டணிக்குத்தான் ஆதரவு”
என்று சொல்லி வருகிறார்கள்.
திண்டிவனத்தில் வேட்பு மனு செய்ய தன் படை பரிவாரங்களோடு அமைச்சர் சி.வி.சண்முகம் ஊர்வலமாகப் போன போது… டாக்டர் ராமதாஸ் வீட்டருகே கூடியிருந்த பா.ம.க.வினர் செருப்புகளை மந்திரி மீது வீசினர். முகம் சிவந்த மந்திரி
“செருப்பு வீசினதா வெளில சொல்லாதீங்க. கல்வீசினதா… பத்திரிகைகளுக்கு செய்தி கொடுங்க”
என ர.ர.க்களைக் கேட்டுக் கொண்டார்.
விருத்தாசலம் தொகுதி மாத்தூர் பகுதிகளில் தன் கணவருக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பிரேமலதா விஜயகாந்த் அங்கு வயல் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை அழைத்து யாருக்கு ஒட்டுப் போடுவீர்கள் எனக் கேட்க… “மாம்பழத்துக்கு” என்றார்கள் அவர்கள். இதில் எரிச்சலான பிரேமலதா
“என் இப்படி ஜாதிவெறி பிடிச்சி அலையுறீங்க, திருந்தவே மாட்டீங்களா?”
என்றார் கோபமாக. அந்தப் பெண்களோ எப்படி இப்படி கேவலமா பேசலாம்? என பிலுபிலுவென பிடித்துக் கொள்ள… அங்கிருந்து காரில் எஸ்கேப் ஆகிவிட்டார் பிரேமலதா.











