Daily Archives: ஏப்ரல் 15, 2006

Dalit Writer Ravikumar Interview – Dinamani.com

எழுத்திலிருந்து முழு நேர அரசியலுக்கு – பொன். தனசேகரன்

மக்கள் சிவில் உரிமைக் கழகம் மூலமும் தலித் இயக்கம் மூலமும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் கருத்துலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகக் கருதப்பட்ட ரவிக்குமார் (45) விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

“திருமாவளவன்தான் என்னை வற்புறுத்தி போட்டியிடச் செய்துள்ளார். அவர் போட்டியிட இருந்த தொகுதியை எனக்கு அளித்துப் போட்டியிடச் செய்ததை எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்” என்கிறார் ரவிக்குமார்.

கொள்ளிடம் அருகே மாங்கணம்பட்டு என்ற ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பட்டதாரி.

  • கண்காணிப்பின் அரசியல்,
  • கட்டிலில் கிடக்கும் மரணம்,
  • மால்கம் எக்ஸ்,
  • கடக்க முடியாத நிழல்,
  • கொதிப்பு உயர்ந்து வரும்,
  • வன்முறை ஜனநாயகம்,
  • தலித் என்ற தனித்துவம்,
  • பணிய மறுக்கும் பண்பாடு…
    என்று இவரது நூல்களின் பட்டியல் தொடரும். கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம், பத்திரிகைகள் என இவரது எழுத்துலகம் விரிந்தது. தமிழ்நாட்டில் 10-வது நிதிக் குழுவின் துணைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

    விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டவர் அவர். “முழுநேர அரசியலில் இறங்க முடிவெடுத்தது சரியான முடிவு. தேர்தலில் போட்டியிடுவதற்காக எனது சிண்டிகேட் வங்கிப் பணியை விடவில்லை” என்கிறார் ரவிக்குமார்.

    “எழுத்தாளராக இருந்து சுதந்திரமாகச் செயல்பட முடிந்த அளவுக்கு கட்சி அமைப்பில் உங்களால் செயல்பட முடியுமா” என்று கேட்டதற்கு,”எந்த ஒரு சுதந்திரமும் ஒரு வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது. எழுத்தாளரின் படைப்பாக்கமும் கற்பனையும் அரசியலில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும், எழுத்துச் சுதந்திரத்துக்கும் அரசியல் இயக்கத்தில் செயல்படுவதற்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதவில்லை” என்கிறார் அவர்.

    “தேர்தல் அரசியலின் வரையறைகளை உணர்ந்தே இருக்கிறோம். ஜாதி ஒழிப்பு என்பது எங்களது இறுதி இலக்கு. தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்சி வேட்பாளர்கள், சட்டமன்றத்தில் தலித் மக்களின் உரிமைக் குரலை பிரதிபலிப்பதில்லை. தலித் இயக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், அம்மக்களுக்கான உயிர்நாடிப் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்ப முடியும். எனவேதான் சமூக இயக்க தளத்திலிருந்து அரசியல் தளத்தை நோக்கி நகர்ந்துள்ளோம்” என்பது ரவிக்குமாரின் கருத்து.

    காட்டுமன்னார் கோவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்தொகுதியை மாதிரி தொகுதியாக்கிக்காட்டுவேன் என்று கூறுவதுடன் அதற்காக வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களையும் விளக்குகிறார் ரவிக்குமார். எழுத்துக் களத்தில் தனது தனி முத்திரையைப் பதித்த ரவிக்குமார், தேர்தல் அரசியலில் எப்படி இயங்கப் போகிறார் என்பதை இனிமேல் பார்க்க வேண்டும்.

  • Subramaniam Swamy’s Election Manifesto – Dinamani

    தைரியமான தேர்தல் அறிக்கைதினமணி

    பெரும்பாலான மக்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கு மாற்று கருத்து கூறும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. ஆனால் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கட்சித் தேர்தல் அறிக்கையில் தைரியமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

    ரேஷன் கடைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு மாற்றாக அவர் முன்வைத்துள்ள திட்டம் சிறப்பான திட்டம்தான் என்றாலும் அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

    தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்ற நெஞ்சை நிமிர்த்தி கூறியுள்ளார்.

    கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்தான் நாடாளுமன்ற தோல்விக்கு காரணம் என்று கருதி முதல்வர் ஜெயலலிதா அதை கைவிட்டதோடு பாஜக ஜனதாகூட அதற்கு பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

    ஓட்டுக்காக ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு சிறுபான்மையினரை தாஜா செய்ய முயற்சியில் ஈடுபட்டிருக்க இவரோ சிறுபான்மையினர் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தேவையற்ற அளவுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக குறை கூறியுள்ளார்.

    எல்லாவற்றுக்கும் மேலாக ஜயேந்திரர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. அந்த வழக்கை ஜோடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். ஜயேந்திரர் கைது விவகாரம் குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரே கட்சி ஜனதா கட்சி மட்டுமே.

    அவர் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சி கூட தேர்தல் அறிக்கையில் ஜயேந்திரர் கைது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று அடித்துச் சொல்லியுள்ளார்.

    தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் இருந்து வித்தியாசமான கருத்துகளை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியசுவாமி.