“நான் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன்”: ஜெ.வை எதிர்க்கும் சீமான் சொல்கிறார்
நேற்று வரை டுட்டோரியல் மாணவர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்த தாடிக்காரர் மீது தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பி உள்ளது. ஆண்டிபட்டியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் சீமான்தான் அவர்.
பேச்சில் தன்னம்பிக்கை, பார்வையில் தெளிவு, முகத்தில் மலர்ச்சி. மொத்தத்தில் பலமிக்க ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கிறோமே என்ற பதற்றம் சிறிதும் இல்லாமல் மிக இயல்பாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரது பேச்சில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர் பேசும் முதல் வார்த்தை “கலைஞர் வாழ்க” என்பதுதான்.
சீமானுக்கு சொந்த ஊர் கம்பம். எம்.ஏ. பட்டதாரி (பொலிடிக்கல் சையன்ஸ்). படித்து வேலை இல்லாமல் இருந்தபோது டுட்டோரியல் ஆரம்பிக்கலாம் என்று ஐடியா வந்தது. இதையடுத்து கம்பம், பாளையம், சின்னமனூர், தேவராம் ஆகிய இடங்களில் டுட்டோரியல் ஆம்பித்தார். தறபோது கம்பத்திலும் சென்னையிலும் மட்டுமே நடத்தி வருகிறார்.
இவருடைய டுட்டோரியலில் டியூசன் சேர்ந்து தேர்வு எழுதிய யாரும் பெயில் ஆனது இல்லை என்பது இவரது முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு. டியூசனில் தொடர்ந்து வெற்றியையை மட்டுமே பார்த்து வரும் இவர், ஆண்டிபட்டி தேர்தலிலும் வெற்றி தான் கிடைக்கும் என்று நம்புகிறார்.
டுட்டோரியல் தவிர, வேளாண் பொருள்கள் ஏற்றுமதியும் செய்கிறார். பெண்கள் விடுதி ஐந்தும் நடத்தி வருகிறார்.
50 வயதானாலும் மிகவும் இளமையாகத் தெரிகிறார். 25 ஆண்டுகளாக திமுக உறுப்பினர். கஜினி முகமது போல இதற்கு முன் 12 முறை டிக்கெட் கேட்டு 13-வது முறையாக டிக்கெட் கிடைத்தது. அதுவும் மிக மிக விஐபி தொகுதியான ஆண்டிபட்டி கிடைத்துள்ளது.
தி.நகர் அல்லது கம்பத்துக்குத்தான் டிக்கெட் கேட்டிருந்தேன். தலைவர் ஆண்டிபட்டி கொடுத்தார். மகிழ்ச்சியோடு சரி என்றேன்.
ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கிறீர்கள். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டபோது,
“என்ன சார் அப்படி கேட்கிறீர்கள். நான் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன். ஜெயலலிதா தோற்றுக் கொண்டே இருக்கிறார்” இந்த வார்த்தைகள் அவரது உள்மனதில் இருந்தது வந்ததை உணர முடிந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக நாங்கள் கணக்கெடுத்து வருகிறோம். அதிமுகவுக்கு எத்தனை ஓட்டு, திமுகவுக்கு எத்தனை ஓட்டு, கட்சிகளை மீறி எனது சொந்தக்காரர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுத்துவிட்டோம். அந்த நம்பிக்கையில்தான் சொல்கிறேன். நான் ஜெயித்துக்கொண்டே இருக்கிறேன் என்றார் சீமான்.
அது என்ன சொந்தக்காரர்கள் கணக்கு? என்று வியப்புக் காட்டியபோது, ஆமாம் ஆண்டிபட்டியில் என் சொந்தக்காரர்கள் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேல் உள்ளார்.
மாமன், மச்சான் என 30 நாள்களுக்கும் 30 சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கப் போகிறேன். அதோடு மாணவர்கள் ஏராளமானோர் அத் தொகுதியில் உள்ளனர் என்றார் அவர்.
மனைவி ஜெயந்தி சீமான். 3 மகன்கள். முதல் மகன் மதன் பிடெக் படித்து தொழில்புரிகிறார். இரண்டாவது மகன் பாரத் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிக்கிறார். மூன்றாவது மகன் ஸ்ரீசி இப்போதுதான் முதல் வகுப்பு முடித்துள்ளார்.
– எஸ். ராமசாமி












