Monthly Archives: பிப்ரவரி 2006

பாமகவின் தமிழ் செய்தித்தாள்

பாமக ‘தமிழ் ஓசை’ என்ற பெயரில் ஒரு செய்தித்தாளை வெளியிட இருக்கிறது; தொலைக்காட்சி சானல் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கிறது என்று கட்சித் தலைவர் GK மணி கூறினார்.

செய்தித்தாள் நடுநிலையுடன் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

(தகவல்: நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்)

சொல்றாங்க சொல்றாங்க

1. தமிழகத்திலும் புதுவையிலும் பாமக தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்திலும் புதுவையிலும் பாமக இப்பொழுது மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கும். – அன்புமணி

2. திமுகவுடன் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலோசனை நடத்தினேன். விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. – ராமதாஸ்

3. நாம் போகி கொண்டாடுகிறோம். அழுக்கைப் போக்கிவிட்டு பொங்கல் கொண்டாடுகிறோம். அதேபோல தரமற்ற ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். – கருணாநிதி

4. தமிழகத்தில் கட்சி வளர்ந்துள்ளது. எனவே அதிகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று திமுகவை வற்புறுத்துவோம். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன்

5. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழ் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (யாருக்காவது இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று தெரியுமா?)

தலீவர் சொன்னாருங்க….

கேள்வி: தற்போதைய ஆளுங்கட்சியை நீங்கள் கடுமையாக விமர்சிப்பதில்லையே? ஏன்?

பதில்: நான் அவர்களை விமர்சித்தால் அது மற்றவர்களுக்கு வாய்ப்பாகி விடாதா? அவர்கள் நன்றாகவே ஆட்சி நடத்தினாலும் நான் பாராட்டிவிட முடியாது.அவர்களை பாராட்டிவிட்டு நான் எப்படி எனக்கு ஓட்டு கேட்டு செல்லமுடியும்?

“புரட்சிகலைஞர்” விஜயகாந்த் பேட்டி (குமுதம்)

நாம்:
1.என்ன சொல்ல வர்றார்? இவரே விமர்சித்தால் யாருக்கு வாய்ப்பாகிவிடும்? இவர் என்ன 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறாரா?

2.அப்புறம் எதிர்கட்சியை ஏன் விமர்சிக்கிறார்?அவர்கள் ஆட்டோ அனுப்ப மாட்டார்கள் என்றா?

3.அப்புறம் எதுக்கு தனிக்கட்சி?அம்மா கட்சியில் சேரவேண்டியது தானே?

4.ஓகோ..அழைப்பு வரவில்லையோ? நாம் ஏற்கனவெ சொன்ன நாலு சீட்டை நினைத்துக்கொள்ளவும்.இவருக்கு, மனைவிக்கு, மச்சினனுக்கு மற்றும் ரசிகர் மன்ற தலைவருக்கு…

சொல்றாங்க சொல்றாங்க

1. ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். ரேஷன் பொருள்கள் வீடுதேடி வரும். மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் தொடங்கப்படும். – விஜயகாந்த்

2. ‘வந்தாரை வரவேற்கத் தயாராக இருக்கிறேன்’ என இதர அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருப்பது ‘இருட்டில் செல்பவன் பயந்து பாட்டுப்பாடிச் செல்வதுபோல இருக்கிறது.’ – வாசன்

3. சட்டத்தின்படிதான் வைகோ கைது செய்யப்பட்டார். காஞ்சி சங்கராச்சாரியார் எப்படிக் கைது செய்யப்பட்டாரோ அப்படித்தான் வைகோவும். சட்டத்தின் முன் நண்பர்கள், எதிரிகள் என்றெல்லாம் பாரபட்சம் இல்லாமல், எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை வைகோ கைது. – காளிமுத்து

4. முதல்வர் பதவிக்கு என்னை பத்திரிகைகள்தான் முன்னிறுத்துகின்றன. – மு.க.ஸ்டாலின்

5. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்று மார்ச் 6-ம் தேதி முடிவு செய்வோம். – பாஜகவின் வெங்கையா நாயுடு

(காமெடி நாளையும் தொடரும்)

Automatic Distillation of Structure (ADIOS)

Addicted to blogs…
Pausing for thought!

பெருமாள்முருகன்

நிராகரிப்பின் உந்துதல் – பெருமாள் முருகன்

விமர்சனத்திலோ ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலோ ஈடுபடுவது என் மனத்துக்கு உகந்த காரியமல்ல. தமிழ்ச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகவும் என் தொழில் நிமித்தம் கல்விப்புலம் சார்ந்தவனாக இருப்பதாலும் விமர்சனம், ஆய்வு ஆகியவற்றில் சிலவேளைகளில் ஈடுபடுகிறேன். வாசிப்பினால் உருவாகும் கருத்தொன்றை நிறுவுவதற்குத் தர்க்கங்களை உருவாக்குவது, அதற்கு ஆதாரமான சான்றுகளைப் பலவிதமாகத் தேடித் தொகுப்பது முதலிய செயல்கள் எனக்கு எரிச்சலையும் சலிப்பையும் உண்டாக்குகின்றன. நிறுவ வேண்டியிராமல் கருத்தொன்றை மனவெளியில் உலவவிட்டுத் திரிவதில் கிடைக்கும் சந்தோசம், நிறுவுவதில் இல்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சனங்கள், ஈடுபடுபவரின் புலமையை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றனவே தவிர, வாசகருக்கு என்ன விதத்தில் பயன்படுகின்றன என்னும் கேள்வி எனக்குள் தொடர்ந்து இருந்து வருகின்றது. படைப்பை நோக்கி ஈர்ப்பது, படைப்பு குறித்த பார்வை உருவாகத் தூண்டுவது, படைப்புக்குள் பொதிந்துள்ள நுட்பமான அரசியலை வெளிப்படுத்துவது ஆகியவை விமர்சனத்தின் நோக்கமாக இருக்கும்பட்சத்தில் வாசகருக்கு அவை பயன்படக்கூடும். ஆனால் இங்குப் படைப்பு இரண்டாம்பட்சமானதாகவும் படைப்பாளியின் சார்புகள் முதல் நிலையினவாகவும் கொள்ளப்பட்டு விமர்சனச் செயல்பாடுகள் நிகழ்கின்றன.

படைப்பாளியை ஏதாவது ஒரு குழுவுக்குள் வலுக்கட்டாயமாக நிறுத்தும் வேலையை விமர்சனங்கள் செய்கின்றன. படைப்பாளி, விமர்சகர்களைச் சார்ந்தோ இதழ்க் குழுவைச் சார்ந்தோ இயங்க வேண்டியவர் என்னும் பார்வை வலுவாக இங்கே இருக்கிறது. தம்மை அதிகார பீடமாகக் கட்டமைத்துக் கொள்ள முயல்பவர்கள் எல்லாவற்றையும் இரண்டாக பிரித்துவிட முயல்கிறார்கள்.

ஒன்று தம்மைச் சார்ந்தது; மற்றொன்று, தமக்கு எதிரானது. எதிரான ஒன்று பருண்மையாக இல்லாவிடினும் ஒன்றைக் கற்பிதம் செய்துகொள்வதன் மூலமாகத்தான் தாம் இயங்க முடியும் என்னும் பரிதாப நிலை பரவலாகக் காணப்படுகிறது. படைப்பாளிக்குச் சுயமான பார்வை உண்டு அல்லது சுயமான பார்வையை நோக்கிய செயல்பாடுகளே படைப்புகள் என்னும் நோக்கு, விமர்சனத்தின் அடிப்படையாக அமையவேயில்லை. படைப்பை மையமாக வைத்து படைப்பாளியைச் சுயசிந்தனை கொண்டவராகக் காணும் போக்கு நிச்சயமாக இங்கு இல்லை. ஆகவே படைப்பாளி தன்னை நிலைநிறுத்தப் படைப்பல்லாத செயல்களிலும் ஈடுபட நேர்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கிருக்கிறது.

விவாதங்களை உருவாக்கும் முயற்சிகளே எதிரான செயல்பாடுகளாக அறியப்படுவதை எப்படி விளங்கிக் கொள்வது?

இந்தச் சூழல்கள் பூதாகாரமாகப் பெருகி என் மனத்தைத் தாக்கும் போது எரிச்சலுற்று, இனிமேல் கட்டுரைகளே எழுதுவதில்லை என்னும் முடிவுக்குச் செல்கிறேன். செயல்படாமல் இருக்கவேண்டும் என்பதே நம் சூழலின் எதிர்பார்ப்பு. செயல்பாடுகளை முடக்கும் ஏராளமான வழிகளை நம் சமூகம் வைத்திருக்கிறது. முன் அனுமானங்கள் பலவற்றை உருவாக்கிக் கொள்கிறது. உள்நோக்கங்களைக் கற்பிக்கிறது. மிகச் சாதாரண விமர்சன வரி ஒன்றைச் சதியாகப் பெருக்கிக் காட்டிப் பதற்றம் உருவாகச் செய்கிறது. வரிகளைப் பிடித்துத் தொங்கும் மனோபாவம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எதையும் சொல்லாமலே நழுவிச் செல்லும் பாவனைகளே பலருக்கும் பிடித்திருக்கின்றன. எனக்கு இவற்றிலெல்லாம் உடன்பாடில்லை.

ஏன் நம் சமூகம், பெரும் சதிகளை உணராமல் அவற்றை ஆதரவாகக் கண்டு ஆர்ப்பரிக்கின்றது? அவசியமான செயல்பாடுகளைச் சதியாகக் கருதிச் சதேகம் கொள்கின்றது? இந்தச் சமூகத்திற்குப் பிம்பங்கள் மீது அப்படி என்ன மாறாத பிரியம்? பிம்பங்களை உருவாக்குவதிலும் உருவாகிய பிம்பங்களைக் கவனமாகக் காப்பாற்றுவதிலும் எதற்காக இத்தனை அக்கறை? சின்ன விமர்சனத்தினால் தகர்ந்துவிடக்கூடியது ஒரு பிம்பம் எனில், அதனை எதற்காகப் பற்றியணைத்து வைத்திருக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை.

என் செயல்பாடுகள் மீது தொட்ர்ந்து அவநம்பிக்கையை உருவக்கிக் கொண்டே இருக்கிறது என் மனம். அது, போதாமையினால் தோன்றுகிறதா எதிர்பார்ப்பினால் உருவாகிறதா என்பதை என்ன்னால் கண்டுணர முடியவில்லை. ஆகவே நிராகரிப்பின் உந்துதல் என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாமா? தெரியவில்லை.

துயரம் துயர நிமித்தமும் – பெருமாள்முருகன்
காலச்சுவடு – ரூ. 75.

அனேக தமிழ் நூல்களில் காணக் கிடைக்காத பொருளடைவு (Index), பயன்பட்ட நூல்கள், குறிப்புகள் (Reference) மற்றும் வெளியீட்டு விவரங்கள் பயன்மிக்கவை. சுவாரசியத்தையும் கூட்டுகிறது.

பெருமாள் முருகன் 1966-இல் பிறந்தார். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர்.

இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார். அரசு கலைக்கல்லூரி ஒன்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவருடைய இரண்டு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல் முற்றம் (Current Show, 2004); கூளமாதாரி (Seasons of the Palm, 2004).


மனைவி – பி எழிலரசி
மகள் – இளம்பிறை
மகன் இளம்பரிதி

பெருமாள்முருகனின் ‘நீர் விளையாட்டு’ என்னும் சிறுகதை 2000ஆம் ஆண்டு கதா பரிசு பெற்றது.

நஞ்சுண்டன்: தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின் வீச்சோடு பெருமாள்முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டுச் சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த அக்கறையுடன் தன் கருத்துக்களை இக்கட்டுரைகளில் முருகன் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்துள்ளார். பெண் படைப்பாளிகள் மீது முருகனுக்குள்ள கரிசனையோடு அக்ராதியியலில் இவரது புலமையும் துல்லியமாக இத்தொகுப்பில் வெளிப்படுகிறது. தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முன் தீர்மானங்களின்றிப் பிறர் படைப்புகளை அணுகியுள்ள முருகன், பதற்றப்படாமல் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆசிரியரின் பிற நூல்கள்

  • ஏறுவெயில் – நாவல் : 1991
  • நிகழ் உறவு – கவிதை : 1992
  • நிழல் முற்றம் – நாவல் : 1993
  • திருசெங்கோடு – சிறுகதை : 1994
  • கூளமாதாரி – நாவல் : 2000
  • நீர் விளையாட்டு – சிறுகதை : 2000
  • கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் – கவிதை : 2000
  • ஆர் சண்முகசுந்தரத்தின் படைப்பளுமை – விமர்சனம் : 2000
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி : 2000
  • கொங்குச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் : 2001
  • தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் : 2002


    | |

  • சொல்றாங்க சொல்றாங்க

    1. வந்தாரை வரவேற்கக் காத்திருக்கிறேன் – ஜெயலலிதா

    2. நூறு தொகுதி தந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ மகேந்திரன்

    3. இது உங்கள் பாஷைப்படி கலியுகம். எங்கள் பாஷைப்படி ஜனநாயக யுகம். இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலிகளின் பசப்புகளுக்கும் இடம் இல்லை. அவை எடுபடாது. வெற்றி எங்களுக்குத்தான். – கலியுகக் கர்ணன் (வைகோ) சொல்வதாகக் கருணாநிதி கண்ட கனவு

    பாவம்; வைகோ பேசாமல் இருக்க அவருக்காக கருணாநிதியே பேசிவிடுகிறார். இப்படியே போனால் வைகோவுக்கு பதிலாக கருணாநிதியே தேர்தலில் நின்றுவிடுவார். “நான் ஜெயித்தால் என்ன, நீ ஜெயித்தால் என்ன? எல்லாமே ஒன்றுதானே தம்பி…”

    செல்லாத வாக்கு

    தலைப்பு நன்றாக வைத்துவிட்டேன். எழுத மேட்டர் கிடைக்கவில்லை. எனவே, வாரயிறுதிக்கான பட்டுவாடாக்கள்

  • தமிழகத் தேர்தலுக்காக (உருமாற்றிய) சில கிராஃபிக்ஸ்:

  • தமிழகமும் நட்சத்திரங்களும்:

  • கடந்த வார செய்திகளை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று சோதித்துக் கொள்ளுங்கள்: பிபிசி

    எனக்கு இரண்டே இரண்டுதான் சரியாகத் தெரிந்திருந்தது!

  • இங்கிலாந்து நிகழ்வுகளுக்கான இந்த வாரக் கேள்விகளும் ரெடி: நான் பெற்ற மதிப்பெண் – அதே ரெண்டு.

  • ஊழலில் திளைத்த நாடுகளை சிறு குறிப்பாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.

  • முதலாம் வகுப்பு படிக்கும், ஆறு வயதுப் பையன் ‘கதை நேர’த்துக்காக எல்லாரும் சீட்டு பிடிக்கும் அமளி துமளி நடுவே, பள்ளிக்கூட தோழியின் இடுப்பைத் தொட்டது ‘பாலியல் துன்புறுத்தலா’? அல்லது ‘விளையாட்டு சிறுவனின் அறியா செய்கையா’?

  • ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்தது இது: பாத்ரூமில ஃப்ரென்ச் கிஸ் அடிக்க சில மாணவர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் ஒருவன் தன் ஆண்குறியை சிறுவனின் வாயில் நுழைக்கப் பார்த்திருக்கிறான். பாதித்தவர்கள் சில நாள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். பாதிக்கப் பட்டவன் வேறு பள்ளியை நாடுகிறான். (இப்பொழுது மீண்டும் முந்தைய கேள்வியையும் சம்பவத்தையும் படிக்கலாம்).

    | |

  • Prabhu Rajadurai

    சென்ற தேர்தலின் போது நண்பர் பகிர்ந்து கொண்டது. வக்கீலுக்கு என் நன்றிகள்.

    வேட்பாளர் தகுதி, வேடிக்கைக்காகவா? – பிரபு ராஜதுரை

    பத்திரிக்கையாளர் மாலன் தேர்தல் விவாதங்களுக்காகவே வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி மாநிலவாரியாக தேர்தல் நிலவரங்களை அலசி வருகிறார். மாலனின் வாசகர்கள் அவரது கணிப்புகளை நினைவில் வைத்திருப்பார்களோ இல்லையோ, மைசூர் மகாராஜா உரிமை கொண்டாடும் மாளிகைகளையும், சோனியாவுக்கு இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் இருக்கும் வீட்டினையும் மறக்க மாட்டார்கள். பொதுவாகவே இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு தேர்தல் காலத்தில் மெல்லுவதற்கு அவலுக்கு பஞ்சமிருக்காதெனினும், இந்தத் தேர்தலில் இன்னும் பல கைப்பிடிகளாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்திருக்கிறது. தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரின் தினப்படி வருமானத்திலிருந்து, பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடி வந்திருப்பவரின் மாதச் சம்பளம் வரை கூச்சமில்லாமல் விசாரிப்பவர்களுக்கே இப்படி வெட்ட வெளிச்சமாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் பண விபரத்தினை திறந்து வைத்திருப்பது உதவும் என நான் எண்ணினேன். ஆனால், ‘எண்ணங்கள்’ பத்ரி பங்குச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடுவதில்லையா? அது போலவே இது மிகவும் தேவையானது’ என்கிறார். என்றாலும் எனக்கென்னவோ தினந்தோறும் பத்திரிக்கைகளில் இவற்றை தொடர்ந்து படிக்கையில், ஒரு தனிமனிதனின் வங்கிக் கணக்கை இப்படி வலியத் திறந்து பார்ப்பதில், பார்ப்பவருக்கு ஒரு குரூர சந்தோஷமும், பார்க்கப்படுபவருக்கு பல தர்மசங்கடங்களும் இருப்பதாக தோன்றியது. என் எண்ணம் நியாயமானதா? அதற்கு இந்தச் சடங்கின் பின்புலத்தையும் சற்று ஆராய்தல் நலம்.

    ஒரு கொலை
    ‘வேட்பாளர், தனது சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்க்கான விதை, 1995ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் அவளைக் கொல்வதும் அசாதாரமாணதல்ல. ஆனால் கொலையாளி சுஷில் சர்மா காங்கிரஸில் பெரும் புள்ளி. சர்மாவும் அவரது மனைவியான நைனா சாஹ்னியும் தில்லி அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர்கள். நைனாவின் உடலை உணவு விடுதி தந்தூரில் வைத்து எரிக்க முயன்றதால் ‘தந்தூர் வழக்கு’ என்று பிரபலமடைந்த இவ்வழக்கில் சமீபத்தில்தான் தண்டனை வழங்கப்பட்டது.

    நைனா கொலை, அரசியல் குற்றவாளிகளுக்கான புகலிடமாக மாறிவிட்டதாக பெரிய அளவில் விவாதத்தினை எழுப்பியது. இதனை தொடர்ந்து வலியுறுத்திய ஊடகங்கள், இரண்டு ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்த வோரா குழும அறிக்கையை (Vohra Committee Report) மக்களுக்கு நினைவுபடுத்தின.

    மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், அதுவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே கருதப்பட்டு வந்த மாபியா கும்பல்கள், தங்கள் வீச்சினை, எந்த அளவுக்கு இந்திய அதிகார மட்டத்தில் ஊடுறுவியிருக்கிறது எனபதை அரசுக்கு உணர்த்தியது. எனவே அரசு, மத்திய அரசில் உள்துறை செயலாளராக பணியாற்றிய என்.என்.வோரா என்பவர் தலைமையில் ஒரு குழுமம் அமைத்து

    ‘மாபியா கும்பல்களின் செயல்பாடுகள் அவற்றிற்கிடையேயான தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்து, மேலும் தொடர்ந்து செய்தியினை திரட்ட நிரந்தரமான ஒரு அமைப்பு ஏற்படுத்துவதற்கான அறிவுரைகளை தெரிவிக்கும்படியும்’

    அக்குழுமத்தை பணித்தது. பல்வேறு அரசு அமைப்புகளிடமும் விபரங்களைப் பெற்ற வோரா மூன்றே மாதத்தில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அனைத்து உளவு, காவல் மற்றும் அமலாக்க துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வோரா தனது அறிக்கையில் எவ்வாறு இந்தியாவின் அனைத்து அதிகார மட்டத்திலும் பல்வேறு குற்றவாளிக் கும்பல்களின் ஆளுமை படர்ந்து கிரிமினல்கள் ஏறக்குறைய இங்கு ஒரு இணை அரசே நடத்திக் கொண்டிருப்பதாக பல பக்கங்களில் போட்டுக் கிழித்துவிட்டார். இந்த அறிக்கையின் கடுமையை உணர்ந்த அரசு அதை வெளியிடாமல் கிடப்பில் போட்டது.

    நைனா கொலை வழக்கினால் வோரா அறிக்கை (வோரா அறிக்கை என்று கூறுவதே பொருத்தம். ஏனெனில் அறிக்கையின் தீவிரம் கருதி அவர் மட்டுமே தயாரித்து உறுப்பினர்கள் யாருடைய கையெழுத்தும் இன்றி உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்) வெளியிடப்பட வேண்டும் என்ற வாதம் வலுத்தது. நடந்த கொலையினால் தனது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை ஓரளவுக்கு துடைக்கும் வண்ணம் பிரதமர் நரசிம்ஹராவ் வோரா அறிக்கையினை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கைக்கு பின்புலமான குறிப்புகளை வெளியிட அரசு மறுத்து விட்டது.

    ஆயினும் வோரா அறிக்கையின் சாராம்சமே மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்த தக்கதாக இருந்தது. பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பெரிய விவாதம் நடைபெற்றது. அப்போது கிளம்பியதுதான், ‘அரசியலில் கிரிமினல்கள் ஊடுருவிவிட்டனர். எனவே கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை. இவ்வாறு தோன்றிய பொதுக்கருத்தினை மனதில் கொண்டு சட்ட மாறுதல்களை பரிந்துரைக்கும் சட்ட ஆணையமும் (Law Commission) கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வண்ணம் சட்ட மாறுதலை அரசின் முன் வைத்தது. தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள விரும்பாத அரசு பரிந்துரையை வழக்கம் போல கண்டு கொள்ளவில்லை.

    ஒரு வழக்கு
    மக்களாட்சி சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ குழு 1999ம் வருடம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவினை தாக்கல் செய்தது. வோரா அறிக்கை சுட்டிக் காட்டிய தீமைகளை இந்தியாவில் இருந்து ஒழிக்கும் வண்ணம் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தேர்தல் நடைமுறை விதிகளில் (Conduct of Election Rules’1961) மாறுதல் செய்யப்பட அரசுக்கு ஆணையிட வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம். வழக்கினை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் ‘சட்டமியற்றுவது சட்டமன்றங்களின் வேலை. எனவே இவ்வாறு மாறுதல் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் ஆணையிட முடியாது என்று கூறியது. ஆனாலும் ‘சரியான நபர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களிடம் இருந்து அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள், சொத்து விபரங்கள், கல்வித்தகுதி, அவரது கட்சியின் தகுதிகள் பற்றிய விபரங்களை கோர வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவு கட்சிமாறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க மத்திய அரசு இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. இதே வகையில் பியூசிஎல் (PUCL) அமைப்பும் ஒரு பேராணை மனுவினை (Writ Petition) நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, இரண்டும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் வழக்கில் தன்னை சேர்த்துக் கொண்டு தில்லி உயர்நீதிமன்ற உத்தரவினை நீக்கக் கோரி வாதிட்டது. அனைவரையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிறு மாறுதல்களுடன் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே 2003ம் வருடம் மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வேட்பாளர்கள் தங்களது, தங்களது கணவன்/மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களின் (dependents) சொத்து விபரங்கள், அரசு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள், கல்வித் தகுதி, நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள் கிய விபரங்களைத் பொதுவில் தர வேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டது.

    ஒரு தீர்ப்பு
    தன்னைப் பற்றிய விபரங்களை ஒரு வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல் இல்லை என்பதால், இதன் காரணங்களையும், நோக்கங்களையும் நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் தேட வேண்டியிருக்கிறது.

    எந்த எந்த விபரங்களை தேர்தல் ஆணையம் வேட்பாளரிடம் இருந்து கோர வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே வரையறுத்தது. முதன்மையானதும் முக்கியமானதுமான விபரம் அந்த வேட்பாளர் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள். இதைப் பொறுத்து யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஒரு வேட்பாளர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அவர் தகுதி இழக்க மாட்டார். ஆனால், அதன் விபரங்களையாவது வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை வோரா அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. மேலும் குற்றவியல் வழக்குகளை தெரிவிக்க கட்டாயப்படுத்துவதால், ஒரு வேட்பாளருக்கு இழப்பு (legal injury) ஏதுமில்லை. ஏனெனில், நமது நாட்டில் குற்றவியல் வழக்குகளின் விபரங்கள் பொது ஆவணங்கள். யார் வேண்டுமானாலும், தகுந்த காரணம் இருப்பின் வழக்கு விபரங்களைப் பெறலாம். வழக்குகளும் அனைவரின் பார்வைக்கு திறந்த நீதிமன்றங்களில்தான் நடக்கின்றது. எனவே, இவற்றில் ரகசிய காப்புறுதி ஏதும் இல்லை.

    அதைப் போலவே கடைசியும் அதிக முக்கியமல்லாததுமான விபரம், வேட்பாளரின் கல்வித் தகுதி பற்றியது. நாடாளுவதற்கு கல்வித் தகுதி பெரிய தகுதியில்லையெனினும், இதனாலும் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், வேட்பாளரின் கல்வி பற்றிய விபரங்களையும் யாரும் சட்டபூர்வமான முறையில் பெற முடியும். எனவே இதைப் பொறுத்தவரையும் ரகசியம் ஏதுமில்லை. எம்ஜிஆரும் கருணாநிதியும் ஏன் ஜெயலலிதாவும் பள்ளிக்கூடத்தோடு சரி என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், இவர்களது அறிவு, பட்டம் பல பெற்ற யாருடைய அறிவுக்கும் குறைந்ததல்ல என்பது வேறு விஷயம்.

    அடுத்தது, வேட்பாளர், அவரது மனைவி/கணவர் மற்றும் சார்ந்திருப்போர் ஏதேனும் அரசிடமோ அல்லது பொது நிறுவனங்களிடமோ ஏதேனும் கடன் பட்டிருந்தால் அதைப் பற்றிய விபரங்கள். இந்த விபரங்களிலும் ஏதேனும் ரகசியம் இல்லை. தாங்கள் விரும்பினால் பொது நிறுவனங்கள் தங்களிடம் கடன்பட்டவர்கள் பற்றிய விபரங்களை பொதுவில் தெரிவிக்கலாம். வாக்காளர்கள் வேட்பாளர்களைப் பற்றிய ஒரு கருத்து கொள்வதற்கு இந்த விபரம் அவசியம்.

    மேற்சொன்ன மூன்று விபரங்களையும் அந்த விபரங்கள் மீதான வேட்பாளரின் கருத்தையும் இணைத்து அனைத்து தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொதுப் பார்வைக்கு வைக்கலாம். வேட்பாளரின் கருத்து அவசியம் என்று நான் கூறுவது, ஒரு வேட்பாளர் தான் பட்ட கடன் மற்றும் தன் மீது உள்ள குற்ற வழக்குகள் பற்றிய தனது நியாயத்தையும் எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு. காவலர்கள் பொய் வழக்கு தொடுப்பது ஒன்றும் புதிதல்லவே!

    ஆனால், பிரச்னைக்குறியதாக நான் கருதுவது வேட்பாளர்களின் சொத்து விபரங்கள். ஒருவருக்கு சொந்தமான கட்டிடம், நிலம் போன்ற அசையா சொத்துகள் குறித்த விபரங்கள் பொது ஆவணமாக கிடைக்கும். இதில் பெரிய சிக்கல் இல்லை. ஒருவரின் பங்குப் பத்திரம் குறித்த விபரங்களும் தேவையானவை எனக் கூறலாம். எனெனில் ஒரு வேட்பாளருக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான உரிமை மற்றும் ஆர்வத்தை (interest) வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். (அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பீல்ட் மந்திரியானவுடன் தனது பங்குகள் அனைத்தையும் விற்றார் என அறிகிறேன்)

    ஆனால், சிக்கல் வேட்பாளர் தன்னிடமுள்ள நகை, ரொக்கம், மற்றும் வங்கியிலுள்ள சேமிப்பு இவற்றை வெளியிடுவதில் இருப்பதாக எண்ணுகிறேன். பொதுவாகவே எவ்வளவு நெருங்கிய நண்பர்களாயினும் நாம் ஒருவருக்கொருவர் வங்கியில் எவ்வளவு தொகை வைத்திருக்கிறோம் என்று கூறிக் கொள்ள விரும்புவதில்லை. ஏன், மனைவியிடமே வங்கியிலுள்ள தொகையை கூறுவதில் ஆபத்து இருக்கிறது:-) சேரியமாகக் கூறினால், மும்பை போன்ற மாபியா ஆளுமைக்குட்பட்ட நகரங்களில் பலர் தங்களது பொருளாதார நிலமையை ரகசியமாக வைத்திருப்பது அவசியமானது. தமிழகம் போல இங்கு லாட்டரியில் பரிசு விழுந்தவர்களை விளம்பரப்படுத்துவது இல்லை. காரணம் கூறவேண்டியதில்லை. மும்பை மட்டுமல்லாமல் எங்குமே, வங்கிகளும் ஒருவரின் சேமிப்பில் உள்ள தொகையை தகுந்த நீதிமன்ற ஆணையில்லாமல் வெளிப்படுத்த சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே ஒருவரிடம் உள்ள அசையும் சொத்துகள் பொது ஆவணம் அல்ல. அந்த விபரங்களை ஒரு தனி மனிதர் தன்னிடமே வைத்திருக்க அவருக்கு உரிமை இருக்கிறது.

    அவ்வாறெனில், ஒரு வேட்பாளர் ஏன் தனது சொத்து விபரங்களை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்மானித்தது என்பதை ஆராய்வது அவசியம். நான் ‘அசையும் சொத்து விபரங்கள் அளிப்பது தர்மசங்கடமான விஷயம்’ என்ற கோணத்திலேயே தீர்ப்பினை அணுகினாலும், ‘நீதிபதிகள் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரத்தை அளிக்க வேண்டிய கடமையோடு வேட்பாளர்களின் சொத்து விபரங்களை சேர்த்து குழம்பி விட்டனர்’ என்றே கருதுகிறேன். எனெனில் ‘அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்ற நடத்தை விதியினை நீதிபதிகள் தங்கள் தீர்ப்புக்கு காரணமாக மேற்கோள் காட்டுகின்றனர். ‘சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஊழியர்களே’ என்று ஏற்கனவே நரசிம்ஹராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதையும் நினைவு கூறுகின்றனர். ஆனால் இங்கு சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர் வேட்பாளர். தேர்தலில் வென்றவர் இல்லை. தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவரை தனது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கக் கூறுவதில் நியாயம் உண்டு.

    ஆனால் அந்த விபரங்களை விட பொது ஆவணமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

    நீதிபதிகள் மேலும் ‘அமெரிக்காவில் செனட் தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் சொத்து விபரங்களை அளிக்கும் வழக்கம் உள்ளதாக எவ்வித மேற்கோள்களும் இல்லாமல் குறிப்பிடுகின்றனர். நான் தேடியவரையில் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அனைத்து வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் நிதி வரவு-செலவுகளை வெளியிடுகின்றனர். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே சொத்து விபரம் முழுவதும் அளிக்கின்றனர். எது எவ்வாறு எனினும், சொத்து விபரம் அளிப்பதன் நோக்கம் என்ன?

    வழக்குரைஞர்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் வலியுறுத்திய காரணங்கள், தீர்ப்பிலிருந்து நான் பார்த்த வரையில் ‘வாக்காளர்களின் அறிந்து கொள்ளும் உரிமை’ மற்றும் ‘வேட்பாளர்களின் பின்புலம் மற்றும் செயல்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதால் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது’ என்பதுதான். (right to know) இதனோடு ‘வேட்பாளரைப் பற்றி முழுமையாக ஒரு வாக்காளர் தெரிந்து கொள்வதால், சரியான ஒரு முடிவெடுத்து தனது வாக்கினை தகுதியான நபர்களுக்கு அளிக்க முடியும்’ என்பதனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொதுப்படையான காரணங்கள்தான் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றனவே தவிர ஒரு வேட்பாளரின் சொத்து விபரத்தை தெரிந்து கொள்வதற்கான நேரிடையான காரணம் இல்லை.

    ஆனால் நீதிபதிகள் கூறும் ஒரே காரணம், ‘சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குடிமகன் அவர்கள் தவறான வழியில் நடந்து அதிகமான பொருளீட்டியவர்களா என்று அறிவது அவசியம். இந்த விபரத்தை வேட்பாளரின் சொத்து விபரத்தை கோருவதன் மூலம் எளிதில் பெறலாம்’ என்பதுதான். மேலும் ஒரு இடத்தில் நீதிபதிகள் கூறும் மற்றொரு காரணம், ‘ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதிகமான அளவில் (tons of black money) கறுப்புப் பணத்தினை திரட்ட முடிகிறது. இவ்வாறு சொத்து விபரங்களை அவர்கள் அளிக்கக் கூறுவதன் மூலம், வாக்காளர் இவ்வாறு கறுப்புப் பணம் திரட்டியவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்று சிந்திக்க முடியும்’

    இரண்டாவதாக நீதிபதிகள் கூறியது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்கள் ஏற்கனவே அரசு ஊழியர்கள் என்பதால் சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர்கள். ஆனால், ஏன் முதன் முறையாக தேர்தலில் நிற்பவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே இவ்வாறு கோர வேண்டும்? தவறான முறையில் பொருளீட்டியிருந்தால், அதை கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணமாகவே வைத்திருக்க வாய்ப்பு அதிகம். அதை யாரும் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில் அது தங்களை ஒரு குற்ற வழக்கில் உட்படுத்தும் செயல் என்பதை அறிவர். பிரச்னை, தேர்தலில் நின்று பார்ப்போமே என்று முன்வரும் நபர்களுத்தான். வெற்றியும் கிடைக்காமல், அவரது சட்டைப் பையில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதிலிருந்து அவர் மனைவி அணிந்திருக்கும் தாலியிலிருப்பது தங்கமா இல்லையா என்பதை ஊர் முழுவது தெரிந்து போவதில் பலருக்கும் தர்மசங்கடம் இருக்கும் என்று நான் அனுமானிக்கிறேன். நல்ல முறையிலும் பெரும் பொருளீட்டலாம். அதை திறந்து வைப்பது பொறாமைக் கண்களை ஒரு நபர் மீது செலுத்தாதா?

    தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மத்திய விஜிலன்ஸ் ஆணையர் (CVC) போன்ற அமைப்புகளிடம் வருடம்தோறும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க செய்வதும் அவற்றை ரகசிய ஆவணங்களாக வைத்திருந்து ‘ஒரு உறுப்பினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக’ ஆணையர் கருதுகையில் குற்ற வழக்கிற்கு பரிந்துரைப்பதும் ஊழலுக்கு எதிரான போதிய நடவடிக்கையாக இருக்கும்.

    அரசியல்வாதிகளுக்கு எதிரான பொதுக்கருத்து நிலவுகிறது. உச்ச நீதிமன்றமும் அதற்கு இசைந்து தீர்ப்பு கூறியிருக்கிறது. இது நியாயமென்றால்….உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அலுவலர்கள் மற்றவர்களும் தங்கள் சொத்து விபரத்தினை பொதுவில் வைப்பதும் நியாயமே. அப்படி யாராவது வேண்டி ஒரு பேராணை மனுவினை தாக்கல் செய்தால் ‘பத்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவன் போல’ சிலர் நெளிய வேண்டி வரும்.

    மும்பை
    16/04/04

    (முடிவினை வைத்து முதலுக்கு சென்ற ஒரு ஆய்வு. எனது சார்பு நிலை இதில் இருக்கலாம். முடிவினை நீங்களே எடுக்கும் வண்ணம் இருபுற வாதங்களையும் தெரிவித்துள்ளேன்)


    | |

    சொல்றாங்க சொல்றாங்க

    1. அடுத்த முதல்வர் கருணாநிதிதான் – அன்புமணி ராமதாஸ்

    2. நான் எப்பொழுதும் கட்சிக்கும் அம்மாவுக்கும் விசுவாசமாக இருப்பேன். எனக்கு எந்தப் பதவியை வேண்டுமானாலும் கொடுப்பதும் பறிப்பதும் அம்மாவின் இஷ்டம் – நிதியமைச்சர் பொன்னையன்

    3. விஜயகாந்த் 148 படங்களில் நடித்துக் கிடைத்த பணத்துக்கெல்லாம் ஒழுங்காக வருமான வரி ஆண்டுக்கு ஆண்டு கட்டிவருகிறார். திமுக தலைவர்கள் தங்கள் சொத்துகளுக்கு/வருமானத்துக்கு வருமான வரி கட்டியுள்ளனரா? – விஜயகாந்த் கட்சி அலுவலகத்திலிருந்து

    4. கூட்டணிக்குத் தயார் – பாஜகவின் (மொட்டை அடித்திருக்கும்) வெங்கையா நாயுடு. இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் தனித்துப் போட்டியிடுவோம் என்றார்கள்.

    (பத்திரிகை படித்ததிலிருந்து – approximate-ஆக. கட்/பேஸ்ட் செய்யமுடியாமல் தினமணி ஆன்லைன் இன்று கொஞ்சம் இடிக்கிறது…)