Monthly Archives: பிப்ரவரி 2006

புதிய வாரிசு

டாக்டர் ராமதாஸ் மற்றொரு புதிய வாரிசை அறிமுகப்படுத்துகிறார். அவரது மகள் கவிதா இந்தத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடப்போவதாக விகடன் தெரிவிக்கிறது.

தமிழக அரசியலில் “மகளை” வாரிசாக களமிறக்கும் முதல் அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ் தான்.

மகன் டெல்லிக்கு, மகள் சென்னை கோட்டைக்கு

வைகோ விலகினால்…

செய்திகள் சொல்வது போல் ஒரு வேளை வைகோ அதிமுக கூட்டணிக்கு மாறிவிட்டால், திமுக கூட்டணிக்கு லாபம்தான்.

1. கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் நிரூபிக்கப்படாத கட்சி ம.தி.மு.க ஒன்று தான். இதுவரை தனித்தே போட்டியிட்டு தனது சட்டமன்ற அரசியல் பலத்தை சற்றும் காட்டியிருக்காத கட்சி அது ஒன்று தான். பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில் பலம் குறைந்ததும் அது தான்.

2. பா.ம.க, காங்கிரஸ் இரண்டையும் இன்னமும் தொகுதி ஒதுக்கி திருப்தி செய்ய முடியும். அக்கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உற்சாகத்துடன் உழைக்க வழி வகுக்கும்.

3. தி.மு.கவிற்கும் அதிகம் இடங்கள் கிடைக்கும்; தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

4. பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில், அ.தி.மு.கவுடன் மிகக் குறைந்த அளவு பொருந்துவது ம.தி.மு.க தான். அக்கட்சியின் இந்த கடைசி நிமிட முடிவு மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைக்கும். ஆதலால், ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் அதன் வெற்றி வாய்ப்புகள் குறையும்.

5. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ தான் சிறை சென்று வந்ததைப் பற்றி ரொம்பப் பேசி பிரசாரம் செய்ய முடியாது. அவரது ஒரு முக்கிய பலம் இதனால் குறையும்.

இவை தவிர, இது வைகோவின் எதிர்கால தி.மு.க சார்ந்த திட்டங்களை பாதிக்கும். தி.மு.கவின் எதிர்காலத் தலைமை பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் இதனால் கலையும் என்ற அளவில் கலைஞருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். மேலும், கடந்த சில நாட்களாக கருணாநிதி ‘தம்பி தன்னைக் கை விடமாட்டான்’ என்ற அளவில் பேசி வருவது, இந்த கூட்டணித் தாவலால் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறிப் பிரசாரம் செய்யவும் உதவும்.

வைகோ திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறார்?

இன்று அவசரமாகக் கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கருணாநிதி “திமுக கூட்டணியில் இருப்பதா என்பது வைகோ கையில் உள்ளது” என்று அறிவித்தார்.

பிப்ரவரி 15க்குள் ஒவ்வொரு கூட்டணிக் கட்சியையும் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரையில் மதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லையாம். பாமகவும் முஸ்லிம் லீகும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விட்டனர். கம்யூனிஸ்டுகள் ஞாயிறு (நாளை) அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். காங்கிரஸ் பிப்ரவரி 25 அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் வைகோவிடமிருந்து இதுவரையில் பதில் எதுவும் இல்லை.

திமுகவிலிருந்து துரைமுருகன் வைகோவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் வைகோ எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி வாயைத் திறக்கவில்லையாம். எனவே கருணாநிதி “அவர்கள் ஏதோ முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அப்படியானால் எங்கள் முடிவுப்படி நாங்கள் நடந்துகொள்வோம்” என்று கூறுகிறார்.

தினமணி
தி பிசினஸ் லைன்

இடம் பெயர்தல்

அழைப்பு வந்தால் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க பரிசீலனை – திருமாவளவன். இதில் முக்கியமாய் சொல்லியிருப்பது விஜயகாந்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்பது பற்றி. ஆக, இங்கும் இடம் பெயர் படலம் ஆரம்பிக்கலாம். [தினந்தந்தி]

திண்டிவனம் ராமமூர்த்தி தன் ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கி, அ.தி.மு.கவோடு இணையலாம். அவர் வருவதால் பெரியதாக அ.தி.மு.க. விற்கு பயனில்லை. ஆனால், தி.மு.க வோடு இருக்கும் காங்கிரஸில் உள்ளடி வேலைகள் நடக்கலாம்.

வை.கோ தன் பேச்சிலிருந்து எதையும் கண்டறிய முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே உறவினராய் இருந்தாலும், முறையான அழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆக, வை.கோவின் இடம் பெயர்தலுக்கான சூழலை அவரே உருவாக்கிவிடுவார்.

மிகத் தெளிவாக, இந்த மாத ‘உண்மை’ இதழில், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி வந்த ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொண்டு அதில் எப்படி எம்.ஜி.ஆரின் துப்பாக்கி சூடு, பெரியார் திடலில் நடக்க திட்டமிடப்பட்டதாக சொல்லியிருப்பதை இழுத்து, ஆர்.எம்.வீ க்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஒரு பிளவினை உண்டாக்க முயன்றிருக்கிறார். ஆர்.எம்.வீ இப்போது தி.மு.க பாசறையில் இருப்பதும், கீ.விரமணி அ.தி.மு.க அனுதாபியாக இருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களிடத்தில் ஆர்.எம்.வியினைப் பற்றிய ஒரு கசப்புணர்ச்சியினை தூண்ட இது வழிவகுக்கும்.

இந்த வார காமெடி, நடிகர் செந்தில் விகடனில் சொல்லியிருப்பது [ஏ கருணாநிதி!]

சொல்றாங்க சொல்றாங்க

1. திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதே அதிமுகவின் பலம். – காளிமுத்து

2. தேர்தல் வெற்றிக்காக ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி வைத்துக்கொண்டது போல, வரும் பேரவைத் தேர்தலில் மதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும். – மதிமுக கொபசெ நாஞ்சில் சம்பத்

3. காளிமுத்து உங்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கிறாரே, நீங்கள் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலாக: “இப்போது மவுனமாக இருப்பதே நல்லது” – வைகோ

4. தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 200 இடங்களில் போட்டியிடும். குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். – மாநிலத் தலைவர் இரா. ஆழ்வார்சாமி

5. பேயும் பூசாரியும்: கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை உணர்ந்து மக்கள் முடிவெடுத்தால்தான் பேய் பிடித்த நிலை மாறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். பேயை ஓட்ட வரும் பூசாரி வெற்றிபெற வேண்டுமானால் பேயின் பிடியில் சிக்கியுள்ளவர்கள், அந்தக் குணத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும். இப்போது தமிழ்நாட்டு மக்கள் பேய் குணத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பேய் பிடியில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளக் கூடிய துணிச்சலும் அறிவுத் திறனும் மக்களுக்கு இருந்தாக வேண்டும். அந்தத் தெளிவும் திறனும் இல்லாவிட்டால் என்னதான் அசகாய பூசாரி வந்தாலும் அவர்களால் அந்தப் பேயை விரட்ட முடியாது, பேய் நீங்காது என்றார் கருணாநிதி.

இரு சந்தேகங்கள்

இன்னும் 70, 80 நாள்கள் இருக்கின்றன.ஆனால் பணக்கார வீட்டுக் கல்யாணம் போல, இப்போதே களை கட்டத் துவங்கி விட்டது. தமிழகத்தில் நடக்கவிருக்கிற சட்ட மன்றத் தேர்தலைச் சொல்கிறேன்.

தேர்தலை ஆட்சியைத் தீர்மானிக்கிற ஓரு பரபரப்பான நிகழ்வாக, வெறும் வாக்குப் பதிவு செய்கிற ஓர் சடங்காக, இல்லாமல் அரசியலை இனம் கண்டு கொள்வதற்கான ஓர் வாய்ப்பாக அணுகிப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படும்.’செய்தி’ப் பத்திரிகைகள் தின்னத் தருகிற அவலை மட்டும் மென்று கொண்டிராமல், உள்நீரோட்டங்களை உற்றுப் பார்க்கிற ஒரு பயிற்சியாக மாற்றிக் கொண்டால் ஜனநாயகத்திற்கு நல்லது.

ஒருவகையில் இது சென்ற தேர்தலின் மறு பிரதி. (Action replay).

அந்தத் தேர்தலில் திமுக எழுப்பிய கேள்விகளில் முக்கியமான ஒரு கேள்வி: அதிமுக அணி வென்றால் யார் முதல்வர்? காரணம், ஜெயலலிதா மீதிருந்த ஊழல் வழக்குகள் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட இயலவில்லை. அவர் மூன்று தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் அவை, நிராகரிக்கப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக விளங்கியது.

இந்தத் தேர்தலிலும் மீண்டும் அந்தக் கேள்வி எழுகிறது.ஆனால் அந்தக் கேள்வி இப்போது திமுகவை நோக்கி வீசப்படுகிறது.திமுக அணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்? திமுக அணி வெற்றி பெற்றால் அமையப் போவது கூட்டணி ஆட்சியா, அல்லது திமுகவின் தனித்த ஆட்சியா என்ற கேள்வி சிலகாலம் உலவி வந்தது. கூட்டணி ஆட்சி இல்லை, தனித்த ஆட்சிதான் என்று திமுக திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.அதை உறுதி செய்து பா.ம.கவும், மதிமுகவும் அறிக்கைகள் வெளியிட்டு இருக்கின்றன.

திமுகவின் தனித்த ஆட்சிதான் என்றால், அதற்குத் தலைமை ஏற்கப் போவது யார்? கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதிமுகவும், அதன் ஆதரவாளர்களும் பிரசார மேடைகளிலும், சில இதழ்கள் மூலமாகவும் சந்தேக விதைகளைத் தூவி வருகின்றனர். முதல்வர் பொறுப்பின் சுமையைத் தாங்க அவரது வயது இடம் கொடுக்குமா?, உடல்நலம் இடமளிக்குமா என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தாலும் கருணாநிதி முதல் சில மாதங்கள்தான் முதல்வராக இருப்பார், பின் உடல்நிலையைக் காரணம் காட்டி, பொறுப்பை ஸ்டாலின் வசம் ஒப்படைத்து விடுவார் என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பி வருகிறார்கள். பொங்கலன்று நடந்த துக்ளக் இதழின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் சோ, இதை வெளிப்படையாகவே பேசினார். தங்களது இந்த வாதத்திற்குத் ஆதாரமாக, கடந்த சில ஆண்டுகளாகவே கருணாநிதி அஹிகம் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளாததையும், அவருக்குப் பதில் ஸ்டாலின் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து, கூட்டங்களில் பேசி வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. கடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது ‘இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்’ என்று கருணாநிதி சொல்லியதை அதிமுக அணி இப்போது நினைவுபடுத்துகிறது.

கட்சி சார்பு இல்லாத மக்களிடம் இந்த பிரசாரம் எடுபடும் என்று அதிமுக நம்புகிறது.அடுத்த முதல்வர் யார், ஜெயலலிதாவா? ஸ்டாலினா? என்பது தேர்தலில் விடைகாணப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாக அமையுமானால், அது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அதிமுக எண்ணுகிறது.

இந்த கணிப்பு சரியாக இருக்கலாம். அண்மையில் லயோலாக் கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், அடுத்த முதல்வராவதற்குத் தகுதி உள்ளவர் யார் என்ற கேள்விக்கு 87 சதவீதம் பேர் கருணாநிதிக்கும், 83 சதவீதம் பேர் ஜெயலலிதாவிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே உள்ள வித்தியாசமே மிகக் குறைவாக உள்ள நிலையில், ஸ்டாலினா ஜெயலலிதாவா என்ற கேள்விக்கு விடை எப்படி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இது போன்ற ஒரு சந்தேகம் கூட்டணிக் கட்சிகளின் அடி மனதிலும் இருக்கக் கூடும் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. எல்லாக் கட்சிகளும் அதிக இடம் கேட்போம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. இது வழக்கமான கோரிக்கைதான் என்றாலும் இந்த முறை அவற்றின் தொனியில் மாற்றம் தெரிகிறது. ‘எங்கள் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க இயலாது’ என்று காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.ஆட்சியில் அவை நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும், கர்நாடகத்தைப் போல பாதியில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது கடிவாளம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று அவை கருதலாம். கூட்டணி ஆட்சி என்பது ஓர் யதார்த்தமாக ஆகிவிட்ட சூழ்நிலையில், அவை இது போன்ற கனவுகளைக் கொண்டிருப்பது அசாதாரணமானது அல்ல.எல்லாக் கட்சிகளுக்குள்ளும், ‘கருணாநிதிக்குப் பின்?’ என்ற கிசுகிசுப்பு இருப்பதென்னவோ உண்மை.

கடந்த தேர்தலில் கிடைத்த அனுபவம், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கிடைத்த அனுபவமும் கூட அவற்றின் சிந்தனைப் போக்கை மாற்றியிருக்கின்றன.கடந்த தேர்தலின் போது, காங்கிரஸ், பா.ம.க, இடதுசாரிகள் ஆகியவை அதிமுக அணியில் இருந்தன.மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதில் அவை பெரும் பங்காற்றின. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களால் ஜெயலலிதாவை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டமன்றத்தில் பேசுவது கூட பெரிய காரியமாகிவிட்டது.அதைப் போன்ற ஒரு நிலை திமுகவை ஆட்சியில் அமர்த்திய பின்னும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவை கருதியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா தனது காய்களை மிக நுட்பமாகவே நகர்த்தி வருகிறார். ஆளுங்கட்சியைச் சாடிப் பேசுவது என்பது எதிர்கட்சிகளுக்கு உரிய ஓர் வாய்ப்பு. அதுவும் தேர்தல் நேரத்தில் இந்தத் தாக்குதல் வேகமானதாக இருக்கும். ஆனால் கடந்த இரு மாதங்களாக எதிர்கட்சிகளை, குறிப்பாக திமுகவை, தற்காத்துக் கொள்ளும் (defensive) நிலையில் வைத்து வருகிறார்.ஆளும் கட்சியைச் சாடுவதை விட அவை தங்கள் நிலை குறித்த விளக்கங்களைத் தரும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கூட்டணிக் கட்சியிலிருந்து இந்தக் கட்சி வெளியேறிவிடும், அந்தக் கட்சி வெளியேறிவிடும் என்று ‘செய்திகள்’ கசிந்து கொண்டே இருந்தன.’கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்’, ‘இவையெல்லாம் உளவுத் துறை பரப்பும் வதந்தி’ ‘அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது’ ‘கூட்டணியைக் காப்பாற்ரும் பொறுப்புக் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு’ என்றெல்லாம் பல்வேறு சுருதிகளில் அறிக்கைகள் விட வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. என்றாலும் இப்போதும் அதைப் பதற்றத்தில் வைத்திருக்க, காளிமுத்துவை கட்சியின் அவைத் தலைவராக்கி, மதிமுகவை கூட்டணியிலிருந்து பிரித்துக் கொண்டு வரும் பணியை அவர் வசம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வெள்ள நிவாரணம், கடல்நீரைக் குடி நீராக்க்கும் திட்டம், இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு விவாதப் பொருளாக்கப்பட்டது தன்னைப் பழிவாங்குவதற்காக தனக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக ஜெயலலிதா முழங்கினார். கேபிள் டி.வியை அரசுடமையாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் மீது ஒரு விவாதத்தைக் கிளப்பினார்.அதிமுக மட்டுமன்றி விஜயகாந்தும் திமுகவை சாடி வருவதால் அவ்ருக்குப் பதில் சொல்லும் கட்டாயமும் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

திமுக இந்தத் தற்காப்பு வேலைகளில் கவனம் செலுத்தி வந்த போது, இன்னொரு புறம், எல்லாத் தரப்பினருக்கும் ஏராளமாக சலுகைகளை வாரி வழங்கி அறிவிப்புக்கள் வெளிவந்தன.எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து, எந்ததெந்தத் தரப்பினரை தங்கள் வசம் ஈர்க்க முயற்சிக்குமோ, அந்தத் தரப்பினரையெல்லாம் தன் வசம் கொண்டுவர அரசு முயன்றுவருகிறது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், சிறுபான்மை மக்கள் இவர்களது கோபத்தை சம்பாதித்துக் கொண்டதால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி காண முடியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இன்று அந்த அதிருப்தியை நீக்கும் விதத்தில் அறிவிப்புகள் வருகின்றன. இதைக் குறித்து எதிர்கட்சியினரால் ஏதும் சொல்லமுடியவில்லை. ‘தேர்தலுக்காக செய்யப்படும் அறிவிப்பு’ என்றுதான் விமர்சிக்கப்படுகிறது. அது ஊரறிந்த உண்மை. ‘சரி அப்படியே இருக்கட்டும், அதனால் என்ன?’ என்பதுதான் பரவலான எதிர்வினையாக இருக்கிறது. இது ஒருவகையான லஞ்சம் என்பதை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.அப்படி உணர்ந்தவர்களும், ‘யார்தான் லஞ்சம் வாங்கல?. லஞ்சத்தை ஒழிக்க முடியாது’ என்ற தத்துவம் பேசுகிறார்கள். 1996 தேர்தலில், ஜெயலலிதாவின் தோல்விக்கான காரணங்களில் லஞ்சத்திற்கு எதிரான மனோபாவம் ஒரு முக்கியக் காரண்மாக இருந்தது. இந்தப் பத்தாண்டுகளில் லஞ்சம் என்பது ஒரு விஷயமே அல்ல, என்ற நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்திருக்கிறது!

ஆனால் மக்களிடம் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் குறித்த ஒரு சந்தேகம் இருக்கிறது. அவரது அறிவிப்புக்கள் நடைமுறைக்கு வருமா, வந்தாலும் நீடித்து நிற்குமா, ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த சலுகைகளை மீண்டும் பறித்துக் கொண்டுவிடமாட்டார் என்பது என்ன நிச்சியம்? என்பதுதான் அந்த சந்தேகம்.

ஸ்டாலின் மீது ஆளும் கட்சி சந்தேகம் கிளப்பி வருவதைப் போல, இந்த சந்தேகம் பிரசாரத்தின் போது எதிர்கட்சிகளால் பெரிதுபடுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த சந்தேகத்தைப் போலவே இதுவும் நியாயமானது. அந்த சந்தேகம் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தோடு சம்பந்தம் கொண்டது என்றால், இந்த சந்தேகம், பல லட்சக்கணக்கான வாழ்க்கையோடு தொடர்புடையது.

இந்த இரு சந்தேகங்களுக்கு விடை அளிக்க இரண்டு கட்சிகளுமே கடமைப்பட்டுள்ளன. வெறும் விளக்கமாக இல்லாமல் தெளிவான உறுதி மொழியாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அமைய வேண்டும். இரண்டு அணிகளின் வெற்றி தோல்விகள் அதைப் பொறுத்தே அமையும்.

இந்தத் தேர்தலின் முடிவை நம்பிக்கை வெளிப்படுத்தப்போவதில்லை. சந்தேகங்களே தீர்மானிக்க இருக்கின்றன.

-மாலன்

சொல்றாங்க சொல்றாங்க

1. தேர்தல் அறிக்கையுடன்கூட மக்கள் சாசனம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கப்படும். – ராமதாஸ்

2. மதிமுகவுடன் கூட்டணி வருமா என்று கேட்கிறீர்கள். ஏற்கெனவே வந்த ஓர் அழைப்பால் வைகோ குழம்பியிருக்கிறார். நாங்களும் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. – பாஜகவின் இல.கணேசன்

3. ஓரிரு நாளில் புதிய கட்சி தொடங்கி, அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுவோம். – காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி

4. மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். – என்.வரதராஜன்

5. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மையக் குழுக் கூட்டத்தில் 90% பேர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

======

இதுவரையில் கிடைத்துள்ள செய்திகளின்படி பார்த்தால் கீழ்க்கண்ட கூட்டணிகள் ஏற்படும் என்று தோன்றுகிறது:

1. திமுக + பாமக + காங்கிரஸ் + கம்யூனிஸ்டுகள் + முஸ்லிம் லீக்
2. அதிமுக + மதிமுக + விடுதலைச் சிறுத்தைகள் + பாஜக + விஜயகாந்த்

சொல்றாங்க சொல்றாங்க

1. கவிஞர் வாலி – கருணாநிதி கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பாடியது:

‘கை’ உன் கை அருகில்
‘பம்பரம்’ உன் பை அருகில்
‘மாம்பழம்’ உன் மடியில்
‘செங்கொடிகள்’ உன் கையில்
வைகோ போவது வேறு கைக்கோ
அப்படி பத்திரிகைகள் எழுதுவது
வெறும் ‘சைக்கோ’

2. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் மதிமுக இன்னும் இன்னமும் இருக்கிறது. – வைகோ

3. எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. காந்தி கனவு கண்ட சுயராஜ்யம் இல்லை. ஆனால் வெளிநாட்டு கம்பெனிகள் வருவதற்குத் தடை நீக்கப்படுகிறது. அப்படி வந்தால் உள்ளூர் வியாபாரி எப்படி வாழ்வான்? – விஜயகாந்த் (மேலும் பல சுவையான தகவல்கள் நிரம்பிய செய்தி இது)

4. தமிழகத்தில் பாரதீய ஜனதா தனித்துப் போட்டியிடும். இது ஓராண்டுக்கு முன் எடுத்த முடிவு. – பொன்.ராதாகிருஷ்ணன்.

5. திமுக அணியில் ஏழு தொகுதிகளை முஸ்லிம் லீக் கேட்கும். தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன்.

6. வணிகர்களின் 27 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரவை ஆதரவு அளிக்கும். – தலைவர் த.வெள்ளையன் (எல்லாக் கட்சிகளுமே வாக்குறுதி அளித்தால் என்ன செய்வார்?)

சொல்றாங்க சொல்றாங்க

1. முதல்வர் உத்தரவிட்டால் ஆர்யமாலாவை மீட்ட காத்தவராயன் போல் பூட்டிய அறைக்குள் புகுந்து வைகோவைத் தூக்கி வருவேன். – காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் காளிமுத்து (தினமணி)

2. கருணாநிதி முரசொலியில் புதிய மகாபாரதம் எழுதியுள்ளார். அவர் கூற்றுப்படி செல்போனில் கர்ணன் (வைகோ) இந்த சகாதேவனிடத்தில் (காளிமுத்து) பேசியது உண்மைதான். கர்ணன் என்ன பேசினான் என்பதை வெளியிட்டால் போர்க்களத்தைவிட்டு இப்போதே துரியோதனன் (கருணாநிதி) ஓடிவிடுவான். – காளிமுத்து

3. நமக்கு எத்தனை இடங்கள் எனத் தெரியாது. சம அந்தஸ்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கின்றனர். அதனால்தான் இந்த இயக்கம் துளிர்கிறது. சில செய்திகளை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. நிதானமாக நான் காய்களை நகர்த்துகிறேன். இனி மதிமுகவுக்கு வசந்த காலம்தான். – வை.கோ (தினமணி)

4. ஆர்யமாலாவை சிறையெடுத்துச் சென்றதே காத்தவராயன்தான் என்பதுதான் உண்மை. வைகோவை சிறையில் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாகக் காளிமுத்து கூறியுள்ளார். இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு ஏமாறுகிறவராக வைகோ இருப்பாரா என்ன? – கருணாநிதி

5. எங்களுடைய பொது எதிரி அதிமுக. ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தேர்தலில் தோற்கடிப்பதையே ஒரே குறிக்கோளாக எடுத்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். – ராமதாஸ் (தினமணி)

6. தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். தொகுதிப் பங்கீடு பற்றியும் யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்தும் கூட்டணியின் தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். – ராமதாஸ் (தினமணி)

7. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். நூறு வாக்குறுதிகளாவது இருக்கும். இது ரூ. 40 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழக அரசின் நிதி நிலை ரூ. 26 ஆயிரம் கோடிதான். எப்படி இந்த அறிவிப்புகளை நிறைவேற்றப் போகிறார் என்று வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். – ராமதாஸ் (தினமணி)

பாஞ்சாலி – செல்ஃபோன் – கர்ணன்

அஸ்தினாபுரத்துக்கு அங்க தேச அதிபதி கர்ணன் விருந்தினனாக வந்தவன், மதிய உணவுக்குப் பிறகு, களைப்பு மிகுதியால் சற்று கண்ணயர்ந்து விடுகிறான்- அவன் காதோரம் சாய்ந்தும் -தோள் பட்டையில் படிந்தும் இருக்கிற “செல்போன்’’ சற்று சத்தமாகச் சிணுங்குகிறது.

தூக்கக் கலக்கத்திலேயே செல்போனில்; பேசும் விசையை அமுக்கி, கர்ணன் “அலோ’’ என்கிறான்.

மறுமுனையிலிருந்து ஒலி கேட்கிறது-

ஒலி :- நான் சகாதேவன் பேசுகிறேன்-

கர்ணன்:- எந்த சகாதேவன்? (வியப்புடன்) இ.ஆர்.சகாதேவனா? பூலித்தேவன் நாடகத்தில் பூலித்தேவனாக நடித்த சகாதேவன்தானே?

ஒலி :- இல்லையண்ணா- நான் பாண்ட வர்களில் ஒருவன்- நகுலனுக்கும் இளையவன் – சகாதேவன்; பாண்டுவின் கடைசி மகன் அண்ணா!

கர்ணன்:- அண்ணனா? நான் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்?

சகாதேவன்:- சத்தியமாக நான் உன் சகோதரன் தான் அண்ணா! அம்மா குந்தி தேவி உன்னைப் பார்க்க வந்தார் களே – உண்மையைச் சொல்லி யிருப்பார்களே! குந்தி தேவியின் பிள்ளையல்லவா நீ?

கர்ணன்:- அடடா; தாய் பிள்ளை- அம்மா மகன் சொந்த பந்தமெல்லாம் இப் போது நினைவுக்கு வருகிறதா? யுத்தம் என்றதும் என் தயவு தேவைப்படுகிறது- அன்றைக்கு என்னை சொந்த சகோதரனாக பாவித்து அங்கதேசாதிபதியாக வும் அமரச் செய்தவன்; என் நண்பன் துரியோதனன்! இப்போது அவனைப் பகைத்துக் கொள்ளச் சொல்லி அம்மாவும் தூது வரு கிறார்; நீயும் என் கையில் தாது பார்க்கிறாய்- எல்லாம் அந்தக் கண்ணன் செய்யும் சூது என்பது எனக்குத் தெரியும்….

சகாதேவன்:- கோபிக்காதேயண்ணா; உன்னைப் போன்ற உத்தமர்கள் துரியோத னன் அணியில் இருக்கக்கூடாது- எத்தனையோ கொடையளித்த கை உனது கை- இப்போது எங்க ளுக்கு அதுதான் `நம்பிக் கை’! அதை நீட்டு அண்ணா!

கர்ணன்:- சகாதேவா! போதும் உன் புகழாரம்! நீ தர்மன் மீது கொண்டுள்ள விசுவாசத்தின் அளவும் எனக்குத் தெரியும்!

சகாதேவன்:- தர்மண்ணாவை பேசச் சொல் லவா?…

கர்ணன்:- வேண்டாம், வேண்டாம்- உங்கள் ஐவருக்கும் சேர்த்துத்தான் அம்மா வந்து அழுது புலம்பிக் கெஞ்சிக் கூத்தாடி விட்டுப் போய்விட்டாரே! என் முடிவில் மாற்றமே இல்லை! நான் ஒரு தடவை சொன்னால்…. எத்தனை தடவை சொன்னதாக அர்த்தம் தெரியுமா?…

சகாதேவன்:- தெரியும் அண்ணா- ஒரு நிமிஷம் பாஞ்சாலி பேசணுமாம்-

கர்ணன்:- யார்?….

சகாதேவன்:- அதான்; திரௌபதி-

கர்ணன்:- அதெல்லாம் வேண்டாம்- என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை-

(அதற்குள் செல்போனில் பெண் குரல் கேட்கிறது -)

பாஞ்சாலி:- ஹலோ – நான்தான் பாஞ்சாலி பேசுகிறேன்….

கர்ணன்:- நான் யாருடனும் பேசத் தயாராக இல்லை…

பாஞ்சாலி:- அய்வருக்கும் தேவி அழியாத பத்தினியென்றால்; நீங்கள் பேச மறுப்பது நியாயம்- நான் உண்மை யில் மானசீகமாக கர்ணனாகிய தங்களுக்கும் மனைவியாக எண்ணி இருப்பவள்- நீங்கள் விரும்பாவிட் hலும் நான் அப்படி விரும்பியவள்-

கர்ணன்:- என்ன புதிர் போடுகிறாய் பாஞ்சாலி?

பாஞ்சாலி:- நடந்ததைச் சொல்லிவிடுகிறேன்; கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள்-

கர்ணன்:- எல்லாம் விபரீதமாகத் தெரிகிறது- உம்; சொல்லும்மா!….

பாஞ்சாலி:- பாண்டவர்களுடன் வன வாசம் செய்து வன வனாந்திரங்களைக் கடந்து சென்றபோது- தஞ்சை மண்டலத்தில் “விழுந்த மாவடி” என்ற ஊரில் ஒரு பெரிய மாமரம்! மரத்தடியில் ஒரு முனிவர் கடுந் தவம் செய்து கொண்டிருக்கிறார் – அந்த மாமரத்தில் ஒரே ஒரு குண்டு மாம்பழம் – அதை அருந்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உடனே என் கணவர்களில் ஒருவரான அர்ச்சுனன் அம்பு எய்து அந்த மாம்பழத்தைக் கீழே விழச் செய்தார். சப்தம் கேட்டு தவமிருந்த முனிவர் விழித்துக் கொண்டு “ஆகா! நான் எப்போதும் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு அந்த மாம்பழத்தைச் சாப்பிடக் காத்திருக் கிறேன்; அதற்குள் அதை அடித்துக் கீழே வீழ்த்திவிட்டீர்கள் – இதோ பிடியுங்கள் சாபம்! அந்த மாங்கனி விழுந்தது போல் உங்கள் தலைகளும் வெட்டுண்டு கீழே விழட்டும்!” என்று சாபமளித்துக் கூக்குரலிட்டார்! நாங்கள் பயந்து நடுங்கி, பரந்தாமனை வேண்டி அழைத்து உயிர் பிச்சை கேட் டோம். – பரந்தாமன் சொன்னார் -“நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் ஒளித்து வைத்திருக்கும் ஓர் உண்மையைச் சொன்னால் அந்த மாங்கனி ஒவ்வொரு உண்மைக்குமாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து சென்று – மாமரக் கிளையில் ஒட்டிக் கொள்ளும். அப்படிச் செய்துவிட்டால் முனிவர் சாபத்தை யும் திரும்பப் பெற்றுக் கொள்வார்” என்று கூறினார். உடனே தர்மர், அவர் மனத்தில் மறைத்திருந்த ஓர் உண்மையைச் சொல்லவே, “மாங்கனி”- கொஞ்ச தூரம் மேலே உயர்ந்தது – இப்படி பாண்டவர் ஐவரும் ஆளுக்கொரு உண்மையைச் சொன்னவுடன், அந்தப் பழம், மரக்கிளைக்கு அருகே போய் நின்றுவிட்டது. கிளையில் அது ஒட்டிக் கொள்வதற்கு ஓர் உண்மைதான் பாக்கி!

கர்ணன் :- அந்த உண்மையை யார் சொல்ல வேண்டும்?

பாஞ்சாலி:- நான்தான் சொல்ல வேண்டும் – நான் மறைத்திருந்த உண்மை யென்று ஒன்றைச் சொல்லியும் கூட; மாங்கனி மரக் கிளையில் போய் ஒட்டவில்லை. அப்படியே நின்றது நின்றபடி இருந்தது – அப்போது பரந்தாமன் கிருஷ்ணன் கோபத்துடன் என்னை நோக்கி; “பாஞ்சாலீ! எதையோ மறைத்துப் பொய் கூறுகிறாய் – நீ அந்த உண்மையைச் சொல்லாவிட்டால்; உங்கள் அனைவரது தலைகளுக் கும் ஆபத்து” என்று மிரட்டினார்.

அப்போது மிகவும் பயந்துபோன நான் உண்மையாகவே உண்மை யைச் சொல்லி விட்டேன்… மாங்கனியும் மரத்தில் போய் ஒட்டிக் கொண்டது – மகாமுனி சாபத்திலிருந்து நாங்களும் உயிர் பிழைத்தோம்… கர்ண பிரபூ; அப்படி நான் மறைத்திருந்த அந்த உண்மை என்ன தெரியுமா?

கர்ணன் :- என்ன அது? சொன்னால்தானே தெரியும்…

பாஞ்சாலி:- பஞ்ச பாண்டவர் ஐந்து பேரே அன்னியில் எனக்கு ஆறாவதாகக் கர்ணன் மீதும் காதல் உண்டு என்பதே அந்த உண்மை…

கர்ணன் :- ஓ! அந்த ஊர்ப் பெயர் (முகத்தை “விழுந்தெழுந்த மாவடி” வெறுப்புடன் என்றிருந்து; சுருக்கமாக சுளித்துக் “விழுந்த மாவடி” என்று ஆன கொண்டு) கதை இது தானா? சபாஷ்! நல்ல கதை! நல்ல உண்மை!

பாஞ்சாலி:- இப்போதும் கேட்கிறேன் – உண்மை ஜெயிக்குமா?

கர்ணன் :- உண்மை ஜெயிக்கும் – அதற்கு உதாரணத்தை இங்கேயே இப்போதே கண்டிருக்கிறோம் – ஆனால் பாஞ்சாலியின் ஆசை ஜெயிக்காது – ஜெயிக்கவே ஜெயிக்காது!

பாஞ்சாலி:- சரி; என் ஆசை ஜெயிக்க வேண் டாம் – இந்தப் பாரதப் போரிலா வது, நீங்கள், எங்கள் பக்கம் வந்து உதவலாமே! ஏனென்றால் வென் றிடப் போவது நாங்கள்தான்…

கர்ணன் :- பாஞ்சாலியின் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன் – ஆனால் ஒன்று வெற்றியினால் மட்டும் ஒருவரின் பெயரும், புகழும் நிலைத்திருப்பதில்லை – மகா பாரத யுத்தம் நடை பெற்று முடிந்து – குருட்சேத்திரத்தில் பெருக் கெடுக்கப்போகும் குருதிப் புனலில் இரு தரப்பினரும் மிதந்து – இந்தப் போராட்டம் பற்றிய கதை மட்டும் வாழ்கிறபோது; மனைவியை பணயம் வைத்து சூதாடியவன் தர்மன் என்பதும் – சாவு சதிராடும் போர்க்களத்தில் கூட கொடை கொடுத்த வள்ளல் கர்ணன் என்பதும் அழியாத அத்தியாயங்களாக இருக்கும்…

(பேசிக் கொண்டே கர்ணன் செல்போனை நிறுத்திவிடுகிறான் – பாஞ்சாலியும் – அவளது ஐந்து கணவர்களும் “அலோ” – “அலோ” என்றவாறு செல்போனை அழுத்திப் பார்த்து – பயனின்றி உதட்டைப் பிதுக்கியவாறு நிற்கின்றனர்)

(மீண்டும் “செல்போன்” ஒலிக்கிறது – பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஆவலுடன் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி செல்போனைத் தங்கள் காதுகளில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள்)

(செல்போனில் கர்ணனின் குரல் கேட்கிறது)

கர்ணன் :- ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன் – பாஞ்சாலியும் பாண்டவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள் – அன்று ‘பாரதப் போர்’ நடந்ததை இப்போது நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள் – அந்தப் போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் ஜெயித்து விட்டீர்கள் – அது வேறு யுகம் – திரேதா யுகமோ, துவாபர யுகமோ ஏதோ ஒரு யுகம்; இது உங்கள் பாஷைப் படி ‘கலியுகம்’! – எங்கள் கருத்துப்படி ஜனநாயக யுகம்! இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலியின் பசப்புகளுக்கும் இடமில்லை – அவை எடுபடாது – வெற்றி எங்களுக்குத்தான் என்பதை உங்கள் “ஆரூடப்புலி” சகா தேவனிடம் சொல்லி அதையும்… கணித்து வைக்கச் சொல்லுங்கள் – அவன் ‘தூது’ தோற்றுவிட்ட தற்காக என் ஆழ்ந்த அனு தாபத்தை அவனுக்குத் தெரி வியுங்கள்…

(அது கேட்டு பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஒரே குரலில் “ஆ” என்று அலறுகிறார்கள்)

(கர்ணன் ‘கலகல’வென சிரிக்கிறான்)

உடன்பிறப்பே, அந்தச் சிரிப்பொலியில் நானும் கண் விழித்துக் கொண்டேன். கண்டது பாரதக் கதையின் அடிப்படையிலான கனவு என்றுணர்ந்த துடன் அந்தக் கனவின் முடிவு, களிப்பூட்டுவதாக அமைந்ததால்; அதனை உனக்கும் சொன்னேன். நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது!

அன்புள்ள,

மு.க.

நன்றி: முரசொலி : – கலைஞரின் உடன்பிறப்புக்குக் கடிதம்

http://www.murasoli.in/2006/kaditham/2k60211k.htm