ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை (தினமணி)
ஓர் ஊரில் ஒரு காய்கறி வியாபாரி, பழ வியாபாரி, மண்பானை வியாபாரி, கண்ணாடி வியாபாரி, ஒட்டகத்தை வாடகைக்கு விடும் ஒருவர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஊருக்கு நன்மை செய்வதாகக் கூறி கூட்டு அமைத்தனர். அதாவது தில்லிக்கு சென்று மலிவி விலையில் பொருள்களை வாங்கி அவற்றை மக்களுக்குக் குறைந்த விலையில் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றனர்.
தில்லிக்குச் சென்று பொருள்களையெல்லாம் வாங்கி, அவற்றை ஒரு கயிற்றில் கட்டினர். ஒட்டகத்தின் ஒரு பக்கத்தில் காய்கறிகளையும் பழங்களையும் தொங்கவிட்டனர். மற்றொரு பக்கத்தில் மண்பாண்டங்களையும் கண்ணாடிப் பொருள்களையும் தொங்கவிட்டனர். ஒட்டகம் முன்னால் செல்ல இவர்கள் அதைத் தொடர்ந்து சென்றார்கள். சிறிது நேரத்தில் வியாபாரிகள் களைத்துப் பின்தங்கிவிட்டனர். ஒட்டகத்தை வாடகைக்கு விடுபவர் ஒட்டகத்துடன் முன்னே சென்றுவிட்டார்.
ஒட்டகம் சற்று திரும்பிப் பார்த்தது. அதன் கண்முன்னே தெரிந்த காய்கறிகளையும் பழங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று தீர்த்துவிட்டது. பின்னால் வந்துகொண்டிருந்த வியாபாரிகளின் பார்வையில் வழியில் ஆங்காங்கே விழுந்து கிடந்த காய்கறித் துண்டுகளும் பழத்துண்டுகளும் தென்பட்டன. உடனே வேகமாக ஓடிவந்து ஒட்டகக்காரரைப் பார்த்து “இது நியாயமா? நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?” என சப்தம் போட்டனர்.
ஒட்டக உரிமையாளருக்கு அது தெரியாமலில்லை. ஆனால் தீனிச் செலவு மிச்சம் என்று, காய்கறிகளையும் பழங்களையும் ஒட்டகம் தின்பதற்கு விட்டுவிட்டார். அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒட்டகம் சற்று நகரவே ஒரு பெரிய சப்தம் கேட்டது. ஒட்டகத்தின் ஒரு பக்கத்திலிருந்து காய்கறிகளும் பழங்களும் காலியாகிவிட்டதால் மறுபக்கம் இருந்த கண்ணாடிப் பொருள்களும் மண்பாண்டங்களும் பாரம் தாங்காமல் விழுந்து உடைந்துவிட்டன. அதுதான் அந்த சப்தத்துக்குக் காரணம்.
ஊர் மக்களிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சில நாள்களுக்குப் பிறகு அந்த வியாபாரிகள் மீண்டும் ஒன்றுகூடி, சென்னை சந்தையில் மலிவு விலையில் பொருள்களை வாங்கித் தருகிறோம் என்று கூறி முன்பணம் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் இப்போது அவர்களிடம் ஏமாறத் தயாராக இல்லை.
அந்த ஊர் மக்களைப் போலவே தமிழக மக்களும் தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்தது யார் என்பதையும் நம்பிக்கைகு உரியவர் யார் என்பதையும் அறிவார்கள். எனவேதான் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழக மக்களும் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.










