இன்று அவசரமாகக் கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கருணாநிதி “திமுக கூட்டணியில் இருப்பதா என்பது வைகோ கையில் உள்ளது” என்று அறிவித்தார்.
பிப்ரவரி 15க்குள் ஒவ்வொரு கூட்டணிக் கட்சியையும் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரையில் மதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லையாம். பாமகவும் முஸ்லிம் லீகும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விட்டனர். கம்யூனிஸ்டுகள் ஞாயிறு (நாளை) அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். காங்கிரஸ் பிப்ரவரி 25 அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் வைகோவிடமிருந்து இதுவரையில் பதில் எதுவும் இல்லை.
திமுகவிலிருந்து துரைமுருகன் வைகோவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் வைகோ எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி வாயைத் திறக்கவில்லையாம். எனவே கருணாநிதி “அவர்கள் ஏதோ முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அப்படியானால் எங்கள் முடிவுப்படி நாங்கள் நடந்துகொள்வோம்” என்று கூறுகிறார்.










