சொல்றாங்க சொல்றாங்க


1. முதல்வர் உத்தரவிட்டால் ஆர்யமாலாவை மீட்ட காத்தவராயன் போல் பூட்டிய அறைக்குள் புகுந்து வைகோவைத் தூக்கி வருவேன். – காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் காளிமுத்து (தினமணி)

2. கருணாநிதி முரசொலியில் புதிய மகாபாரதம் எழுதியுள்ளார். அவர் கூற்றுப்படி செல்போனில் கர்ணன் (வைகோ) இந்த சகாதேவனிடத்தில் (காளிமுத்து) பேசியது உண்மைதான். கர்ணன் என்ன பேசினான் என்பதை வெளியிட்டால் போர்க்களத்தைவிட்டு இப்போதே துரியோதனன் (கருணாநிதி) ஓடிவிடுவான். – காளிமுத்து

3. நமக்கு எத்தனை இடங்கள் எனத் தெரியாது. சம அந்தஸ்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கின்றனர். அதனால்தான் இந்த இயக்கம் துளிர்கிறது. சில செய்திகளை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. நிதானமாக நான் காய்களை நகர்த்துகிறேன். இனி மதிமுகவுக்கு வசந்த காலம்தான். – வை.கோ (தினமணி)

4. ஆர்யமாலாவை சிறையெடுத்துச் சென்றதே காத்தவராயன்தான் என்பதுதான் உண்மை. வைகோவை சிறையில் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாகக் காளிமுத்து கூறியுள்ளார். இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு ஏமாறுகிறவராக வைகோ இருப்பாரா என்ன? – கருணாநிதி

5. எங்களுடைய பொது எதிரி அதிமுக. ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தேர்தலில் தோற்கடிப்பதையே ஒரே குறிக்கோளாக எடுத்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். – ராமதாஸ் (தினமணி)

6. தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். தொகுதிப் பங்கீடு பற்றியும் யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்தும் கூட்டணியின் தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். – ராமதாஸ் (தினமணி)

7. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். நூறு வாக்குறுதிகளாவது இருக்கும். இது ரூ. 40 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழக அரசின் நிதி நிலை ரூ. 26 ஆயிரம் கோடிதான். எப்படி இந்த அறிவிப்புகளை நிறைவேற்றப் போகிறார் என்று வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். – ராமதாஸ் (தினமணி)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.