கடந்த வாரம் தேர்தல் வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றி அலசினோம்.இந்த வாரம் அந்த வரிசையில் பா.ம.க.ஏற்கனவே பா.ம.க வை பற்றி தமிழ் சசி அருமையான ஒரு அலசலை வெளியிட்டுள்ளார். என் பார்வையில் சில விஷயங்கள்.
பா.ம.கவை பற்றி அதிகம் பாஸிடிவ் விஷயங்கள் மீடியாவில் பேசப்படுவதில்லை என்பது உண்மை. தினமலர் மாதிரியான “நடுநிலை” நாளேடுகள் பா.ம.க.வை பற்றி எழுதாதது ஆச்சரியம் இல்லை.ஆனால் தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியும் அவர்களுக்கு சாதகமாக எந்த செய்தியையும் சொல்வது இல்லை.பா.ம.க வளர்ந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம்.ஆனால் ராம்தாஸ் கலைஞரை சந்தித்தால் மட்டும் பெரிதாக சொல்லுவார்கள். கூட்டணி உடைய கூடாதாம்.
என்னதான் இது ஒரு சாதி கட்சி இல்லை என்று சொன்னாலும் இது பெரும்பாலும் ஒரு இனமக்களை நம்பித்தான் இருக்கிறது. வட மாவட்டங்களில் இவர்களுக்கு கண்டிப்பாக நிறைய செல்வாக்கு உள்ளது. ஏறத்தாழ முப்பது தொகுதிவரை வெற்றியை நிர்ணயிப்பது இவர்கள் கையில் உள்ளது. தனியாக நின்றால் அதிகப்பட்சம் பத்து தொகுதிகள் கூட இவர்களால் வெல்ல முடியும்.சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி மாவட்டத்திலும் இவர்களுக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது.ஆனால் ஒன்று. கருணாநிதியும் தி.மு.க.வும் தங்களுடைய சில கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவில்லையென்றால் அதே சமயம் பா.ம.க மற்ற சாதி மக்களையும் அங்கீகரித்து பதவிகளும் கொடுக்க முன்வந்தால் தி.மு.க. வின் அழிவு ஆரம்பாகிவிடும்.
இராமதாஸ் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் மக்கள் கேட்பது பாஸிடிவ் பாயிண்ட். இந்த விஷயம் தான் மற்ற சாதி கட்சிகளையும் பா.ம.க வையும் வித்தியாசப்படுத்துகிறது.எத்தனையோ சாதி சங்கங்கள் அரசியலில் கால்பதிக்க முயற்சி செய்தாலும் ராம்தாஸ் மட்டும் வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் இனமக்களுக்கு அவர்மேல் இருக்கும் மகத்தான நம்பிக்கை.இன்னொன்று மக்கள் அவ்வளவாக வசதி இல்லாதவர்களாக இருப்பது.இது எனது அவதானிப்புதான்.தவறாகவும் இருக்கலாம்.
கூட்டணி மாற இவர் எந்த காரணமும் கூறி தம் மக்களை சமாதானப்படுத்த தேவையில்லை.
மருத்துவர் ராமதாஸ் ஒரு சாதனையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கருணாநிதியை மடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ஏற்படுத்திய போதே அவர் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் தன் மகனை மந்திரியாக்கி வாரிசாக்கி விட்டதுதான். பணமும் நிறைய சேர்த்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் சொல்கிறார்கள்.அதுவெல்லாம் இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.
ஆனால் அவர்கள் கட்சிக்காரர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களுக்கும் பிரச்சனை இல்லை.
கருணாநிதி தமிழ் தமிழர் ஆகிய கோஷங்களை இப்பொது எழுப்புவதை குறைத்துக்கொண்டுவிட்டார்.அதை ராமதாஸ் எடுத்துக்கொண்டுவிட்டார். தமிழ் சமுதாயத்தில் இந்த கோஷத்திற்கு இன்னும் தேவை உள்ளது என்பது உண்மை.பல புதிய “அறிவியல்” கண்டுபிடிப்புகள் வந்தள்ள நிலையில் தற்போது தேவை கொஞ்சம் அதிகமாகி உள்ளது. தமிழ் , தமிழர் என்ற கொள்கை தங்கள் வளர்ச்சியை பாதிப்பதாக தி.மு.க. நினைக்க தொடங்கிவி்ட்டதாக தெரிகிறது. சன் டி.வி சம்பந்தமாக அவர்கள் செய்யும் செய்ய நேரும் காம்ப்ரமைஸ் கட்சியை பாதிக்க தொடங்கிவிட்டது.ஆனால் ராமதாஸ் மீடியாவுக்கு பயப்படுவதில்லை.அது பாஸிடிவ் விஷயம்தான்.
பா.ம.க.வை பத்திரிக்கைகள் படித்து சாதிக்கட்சி என்று விமரிசிக்கும் பலர் ஓட்டு போட வருவதில்லை.இதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கிறது.
இந்த தேர்தலில் அவர் தி.மு.க அணியில் தொடர்ந்து இருப்பார் என்றே நினைக்கிறேன்.ஏற்கனவே மூன்று எம்.எல்.ஏக்களை ஆளுங்கட்சி பிள்ளை பிடிப்பவர்களை போல் பிடித்துள்ள நிலையில் மருத்துவர் அய்யாவிற்கு வேறு வழியில்லை.
ஆனால் தி.மு.க வும் வடமாவட்டங்களில் கணிசமாக செல்வாக்கு பெற்றுள்ளதால் தொகுதி பங்கீட்டில் சில சலசலப்புகள் வரலாம்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் திருமாவையும் தோளில் போட்டுக்கொண்டு அலைகிறார் ராமதாஸ். தொகுதி பங்கீட்டின் போது அவரையும் கவனித்து கொண்டால் நல்லது.இந்த இணை மேல் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இவர்களுக்கு பிரச்சார மீடியா இல்லாதது ஒரு பெரிய குறை என்பேன் நான்.இணையத்தில் பிரச்சாரம் பண்ணுவது எல்லாம் வேஸ்ட்.ஒரு சாடிலைட் டிவி கண்டிப்பாக தேவை.
ஒருவேளை பெரிய திராவிட கட்சி இரண்டுக்கும் பெரும்பான்மை வராவிட்டால் பா.ம.க முக்கியத்துவம் பெரும்.கண்டிப்பாக கூட்டணி அமைச்சரவையை ராமதாஸ் டிமாண்ட் செய்வார்.அதில் நியாயமும் உண்டு.











முத்து! பா.ம.க. குறித்த தங்களது கருத்தில் விவாதத்துக்கு உரிய அம்சம் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள் கூறியிருப்பதுபோல், பா.ம.க. அவர்களது இன மக்களிடம் வலுவான – உறுதியான – நம்பிக்கையான அடித்தளத்தை அமைத்து விட்டது. மேலும் இராமதாசு தற்போது திருமாவளவனுடன் கூட்டு சேர்ந்து இயக்கம் நடத்துவது முரண்பாடாக தெரிந்தாலும் கூட, அவரது அரசியலுக்கு அது கைகொடுக்கும் எனத் தெரிகிறது. தன்னை யாரும் தலித் எதிரியாக பார்த்து விடக் கூடாது என்பது தாமதாசுவுடைய தந்திரமாக இருக்கலாம்.
என்னுடைய தேர்தல் பதிவு குறித்த அலசலிலும் நான் இடதுசாரிகளுக்கு அப்பாற்பட்டு பா.ம.க. தான் கடந்த ஐந்து வருடமும் ஏதாவது ஒரு தொடர்ச்சியான இயக்கத்தை நடத்தி வந்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். திமுக இதில் உரிமை கொண்டாட முடியாது. அந்த வகையில் பா.ம.க. ஓ.கே.
அதே சமயம் பா.ம.க. ஏதோ ஒரு வித்தியாசமான கட்சி என்று நாம் நினைத்தால் அதில் ஏமாந்து போவதுதான் நடக்கும். பா.ம.க. ஒரு கொள்கைப்பூர்வமான கட்சியாக இருந்திருந்தால் அவர்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதும், பா.ம.க.வின் தலைவர்களே கூட சில நேரங்களில் கட்சியில் இருந்து வெளியேறுவதும், தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ராமதாசு இன்னும் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை. இவர் வெற்றி பெறுவதும் தமிழ் மக்களுக்கு பலனலளிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை!
எனக்குத் தெரிந்து பா.ம.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் பலர் நிலவுடைமையாளர்களாக இருக்கிறார்கள். இவர்களது சிந்தனை எப்போதும் ஜனநாயகப்பூர்வமானதாக இருக்காது. தங்களது சுயநலன் அடிப்படையிலும், கட்டப்பஞ்சாயத்து போன்ற சிந்தனையிலும்தான் ஈடுபடும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக சரியான அரசியல் சூழலில் சரியான நிலைபாட்டை பா.ம.க. மேற்கொள்வது அதற்கு ஏதோ பலம் இருப்பது போல் ஒரு தோற்றம் கிடைக்கிறது. இந்த பலம் அவர்களது அரசியல் – இயக்க நடவடிக்கைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு அவர்கள் நடத்திய பல்வேறு ஆர்ப்பாட்டங்களை பாருங்கள் தொண்டர்கள் மிக சொற்பமாகவே காணப்படுவார்கள். சென்னை நகரில் பா.ம.க.விற்கு எந்தவிதமான அடித்தளமும் இல்லை. எனவே பா.ம.க. பலமானதா? என்ற கேள்விக்கு வன்னியர்கள் நிறைந்த பாண்டிச்சேரியில் மண்ணைக் கவ்வினார்களே அதுதான் அதற்கு பதிலாக இருக்க முடியும். தமிழகத்தில் இன்னும் அதற்கு சோதனைக்காலம் வரவில்லை? பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு திமுக பக்கம் இருப்பதே பா.ம.க.வுக்கு பலம். திருமாவளவன் கூறுவதுபோல் 3வது அணி என்று ஆரம்பித்தால் அந்தோ பரிதாபம்!