தி சிரியன் ப்ரைட்


The Syrian Bride :: திசைகள்

பெரியோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணம். உள்ளூர் நாட்டாமைப் பெரியவர்களுக்குப் பயப்பட்டு நடக்கும் குடும்ப அமைப்பு. மனைவி என்பவள் வீட்டுக்குளே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன். திருமணத்துக்குப் பின் பெற்றோரை பார்க்க முடியாதபடி பறந்து போய்விடும் மகள். காதலை கண்டிக்கும் பெற்றோர். ஜாலியாக ஊர் சுற்றி வாழும் மகன். காதல் மணம் புரிந்ததால் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெரிய அண்ணன்.

கதையைப் பார்த்தால் தமிழ்ப் பட கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கிறது. முன்பின் பழக்கமில்லாதவருடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம். திருமணம் முடிந்தவுடன் அமெரிக்கா வாசம். கிராமத்துப் பழக்கவழக்கங்களுக்கு அடங்கி நடக்கும் குடும்பம் என்று இந்தியாவின் சகல அறிகுறிகளையும் கொண்ட படம்.

மேலும் சில ஒற்றுமைகளும் காணக் கிடைக்கிறது. சகோதரராக இருந்தாலும் பாகிஸ்தான் போன்ற பக்கத்து நாட்டுடன் பிரச்சினை. அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு பிரஜைகள் பலாபலனை அனுபவிப்பது. மக்களின் மனங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஈகோ பார்த்து, எங்கேயோ எப்பொழுதோ எதற்கோ போட்ட நியம் அனுஷ்டானங்களை கர்ம சிரத்தையாக உருவேற்று வேற்றுமைகள் தொடர்கிறது.

இதற்கு முன்பும் எல்லைப் பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக கோலன் ஹைட்ஸ் – இஸ்ரேல் – பாலஸ்தீன அனுபவங்களை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. வால் (Wall), செக்பாயிண்ட் (Checkpoint) விவரணப்படங்களும், போரில் அடிபட்ட செர்பிய மற்றும் போஸ்னிய வீரர் இருவரைப் பற்றிய நோ மேன்ஸ் லாண்ட் (No Man’s Land) இரண்டும் குறிப்பிடத்தக்கவை.

இஸ்ரேலிய உளவுத்துறை நிபுணனுக்கும் நாஜியின் பேரனுக்கும் இடையே உள்ள உறவை ‘வாக் ஆன் வாட்டர்’ (Walk on Water) விவரித்தது. தற்கொலைப் படையினர் இருவரின் உலகத்தை ‘பாரடைஸ் நௌ’ (Paradise Now) சொன்னது. இஸ்ரேலில் வளர்வதற்கும் பாலஸ்தீனிய குழந்தைகளுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வை ‘அனதர் ரோட் ஹோம்’ (Another Road Home) காட்டுகிறது. சிரியன் ப்ரைடில் ட்ரூஸ் இனத்தவரை விவரித்தது போல் ஹஸிதிம் (Hasidim) மக்களை ‘உஷ்பிசின்’ (Ushpizin) வெளிச்சம் பாய்ச்சியது.


திருமணத்துக்கு மணப்பெண் ‘மோனா‘ தயாராவதில் திரைப்படம் ஆரம்பிக்கிறது. சிகையலங்காரத்திற்கு செல்லும் காலையில் கோலன் ஹைட்ஸ் (Golan Heights) குறிப்புகள் கொடுக்கிறார் இயக்குநர். கட்டுப்பெட்டியான நகரம். ஆடு மேய்ப்பவர்களும், டீக்கடையில் பராக்கு பார்ப்பவர்களுமாக மந்தமாக விழித்துக் கொள்கிறது. அனைவருக்கும் அனைவரையும் தெரிந்திருக்கிறது. ட்ரூஸ் (Druze) இனத்தை சேர்ந்தவர்கள்.

முஜாஹிதீன்கள் இந்தியாவாலும் பாகிஸ்தானாலும் கைவிடப்பட்டவர்கள். ட்ரூஸ்களின் நிலையும் கிட்டத்தட்ட இப்படித்தான். கோலன் ஹைட்ஸை சிரியா (Syria) சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், இஸ்ரேல் வசம்தான் கோலன் ஹைட்ஸ் இருக்கிறது. கோலன் ஹைட்ஸில் இருக்கும் ட்ரூஸ் மக்களுக்கு சிரியாவுடன் இணையத்தான் விருப்பம். இஸ்லாமியப் பழக்கவழக்கங்களுக்கு நெருக்கமானவர்கள். ஊர்த்தலைவர் பேச்சை மீறாது நடப்பவர்கள்.

கடகடவென்று கதையில் புது பாத்திரங்கள் தோன்றுகிறார்கள். மணப்பெண்ணை தலைப்பில் கொண்டிருந்தாலும் மணப்பெண்ணின் அக்கா ‘அமல்‘தான் திரைப்படத்தின் நாயகி. அவளுக்கு இரு மகள்கள். மதக் கோட்பாடுகளின் படி உடை அணியாமல் முழுக்கால் சட்டையும் மேற்கத்திய ஆடைகளும் உடுப்பவள் அமல். தளைகளை விட்டு வெளியில் வந்து, மூச்சு விட்டுக்கொள்ள முயற்சிப்பவள்.

குடும்பத்தின் மூத்த மகன் ‘ஹதேம்‘ இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளாததால் ஊரை விட்டுத் தள்ளிவைக்கப் பட்டிருப்பவன். ருஷியாவில் இருந்து டாக்டர் மனைவியுடனும் துறுதுறு மகனுடனும், தங்கை மோனாவின் திருமணத்திற்காக வந்து கொண்டிருக்கிறான்.

இரண்டாமவன் ‘மர்வான்‘. இத்தாலியில் இருந்து ‘ஏற்றுமதி-இறக்குமதி’ செய்து வருகிறான். சிங்கப்பூர் குருவிகள் போன்ற வாழ்க்கையைக் கடத்துகிறான். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பெண்களுடன் நன்றாக வழிகிறான்.

குடும்பத் தலைவர் ‘ஹமேத்‘ சிரியாவின் மேல் கொண்ட பாசத்தினாலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேல் கொண்ட வெறுப்பினாலும் சிறைவாசம் முடிந்து பரோலில் இருப்பவர். குழம்பிய அப்பாவியாக, அமலின் கணவனாக மூத்த மாப்பிள்ளை ‘அமீன்‘ திருமண ஏற்பாட்டில் மும்முரமாக இருக்கிறார்.

மணநாளன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருகிறது. சிரியாவின் தலைவர் இறந்து விட அவரின் மகன் பதவியேற்பு வைபவம். இரண்டாவதாக அக்கா அமலுக்கு அன்றுதான் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிப்பதற்கான அட்மிஷன் கிடைத்த கடிதம் வருகிறது.

குழப்பமில்லாமல் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் அறிமுகமாகிறார்கள். சிரியாவில் நடக்கும் தலைமை மாற்றம், செய்திகளில் விவரிக்கப்படுகிறது. கோலன் ஹைட்ஸில் இருப்பவர்களும் பக்கத்து ஊரில் இருப்பவர்களும் இடையே வேலிக்கம்பிகள் போடப்பட்டு, பேசுவதற்குக் கூட மெகா·போன் துணை வேண்டியிருக்கிறது.

வேற்று மொழி பேசும் இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்; ஆனால், சொந்த மொழி பேசும் பக்கத்து ஊர்க்காரர்களுடன் ஊடாட ஒரு மைல் தடுப்புகள்; மின்கம்பி வேலிகள்.

சிரியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவினால், கோலன் ஹைட்ஸில் இருந்து சிரியாவுக்கு நுழைந்தபின், மோனாவினால் மீண்டும் தன் குடும்பத்தை பார்க்க முடியாது. தொலைக்கட்சியில் நடிக்கும் கணவனை சின்னத்திரையில் கண்டு களித்தது மட்டுமே பரிச்சயம். தெரியாத ஒருவனுடன் எப்படி குடித்தனம் செய்யப் போகிறோம் என்னும் கவலை, படம் முழுக்க மோனாவிடம் குடியிருக்கிறது. திருமணத்துக்காக இருபது வருடம் உறவாடியவர்கள் அனைவரும் தூரமாகி, தள்ளிப் போய் விடப் போவது சோகத்தை இன்னும் பெரிதாக்குகிறது.

‘திருமணம் என்பது தர்பூசணி போல. உள்ளுக்குள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தால்தான் தெரியும்’ என்று ஆறுதல் மொழிகிறார் ·போட்டோகிராபர்.

சாமுவல் பெக்கெட்டின் (Samuel Beckett) புகழ் பெற்ற நாடகமான ‘வெயிட்டிங் ஃபார் கொடாட்’ (Waiting for Godot)-ஐ சில இடங்களில் இந்தப் படத்தின் இயக்குநர் நினைவுபடுத்துகிறார். இருத்தலியத்தின் (Existentialism) சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லப்படும் அந்த நாடகத்தில் விளாடிமிரும் எஸ்ட்ராகனும் — கொடாட்டுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்பார்கள். சில சமயங்களில் பிணக்குகளுடனும், பல சமயங்களில் பேச்சுவார்த்தைகளுடனும்; எதற்காக கொடாட்டைப் பார்க்க வேண்டும் என்று அறியாமலே காலங்கடத்துவார்கள்.

கொடாட்டை கடவுள் என்னும் குறியீடாகப் பார்க்கலாம். எல்லா சக்தியும் வாய்த்தவர். இருக்கிறாரா என்று தெரியாது. ஆனால், வரப்போவதாக தூதர்கள் சொல்லிச் செல்வார்கள். இருவரும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நாளையும் எதற்காக இந்த காத்திருப்பு வைபவம் என்பதை உணராமலேயே, கடனே என்று கழித்திருப்பார்கள்.

நாயகி மோனாவுக்கும் இதே நிலைமைதான். இஸ்ரேலின் புதிய நடைமுறையினால், கோலன் ஹைட்ஸை விட்டு வெளியேறுபவர்களுக்கு குடியேறல் முத்திரை குத்தி அனுப்புமாறு மேலதிகாரியிடமிருந்து புத்தம்புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. நேற்று வரை முத்திரை குத்தாமல் அனுப்பித்தவர்கள், இன்று மட்டும் எப்படி ‘சிரியாவின் பகுதியான கோலன் ஹைட்ஸில் இருந்து, சிரியாவுக்குள்ளேயே நுழைபவர்களுக்கு’ இஸ்ரேலிய இலச்சினை பொறிக்கலாம் என்று அந்தப் பக்கம் சிரியா அதிகாரிகள் வெகுண்டெழுகிறார்கள்.

இருதலைக் கொள்ளியாக, திருமணம் நடக்குமா என்று தெரியாத அலங்கரிக்கப்பட்ட மணப்பெண். மேலதிகாரிகளைக் கூப்பிட்டு பார்த்தால் இரு பக்கமும் பதில் கிடையாது. வியாழன் மாலை ஆனதால் எல்லாரும் வாரயிறுதியைக் கழிக்க சீக்கிரமே கிளம்பிவிட்டார்கள். எதற்காக இந்தப் புது முத்திரை சட்டம் என்றும் விளங்கவில்லை. நியதிகள் இயற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எதற்கு என்றுதான் தெரியவில்லை.

குடும்பத்துக்குள்ளும் விரிசல்கள். மனைவியின் ஆசைகளை புரிந்து கொண்டாலும், ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்று அஞ்சி அஞ்சி வாழும் அமீன். மேலும், தன்னுடைய மகளின் காதலன் இஸ்ரேலிய ஆதரவாளனாக இருப்பானோ என்னும் பயம். காதலுக்காக குடும்பத்தைப் பிரிந்த ஹதேம் மீது பாசம் நிறைய இருந்தாலும், வெளிப்படையாக சொல்ல முடியாத அப்பா. உள்ளுணர்வு எல்லாருக்கும் சரியாகத்தான் இருக்கிறது. அதை வெளியே திறந்து விடுவதில்தான் தயக்கம் கலந்த அச்சம்.

சாதாரண மனிதர்களால்தான் சட்டங்கள் திருத்தப்படுகிறது. ஆதிகாலத்து விதிகளை சிறிது சிறிதாகத்தான் அழித்து மீற முடியும். அனைவரும் உதவத்தான் பகைகளை ஒதுக்கத்தான் நினைக்கிறோம். Whitener போட்டு முத்திரையை அழித்துவிடுமாறு சிரியா அதிகாரி சொல்கிறார்.

குடும்பத்துக்குள் இருந்த பனிமூட்டங்கள், இறுக்கங்களும் காலப்போக்கில் தளர்கிறது. காதலித்து வேற்று தேசத்தவளை மணந்த பெரிய மகனை, ஆதுரமாக அணைக்கிறார் அப்பா.

ருஷிய மொழி, ஹீப்ரூ, அரேபிக் என்று பல மொழிகள் புழங்கினாலும், மணங்கள் இணைந்தால் திருமணங்களும் குடும்பங்களும் நாடுகளும் அல்லாடுவது நிற்கும் என்பது கதையின் குறியீடாகிறது.

படத்தின் முடிவில் மங்களம் போடுவதற்கு வசதியாக, மணம் முடிக்கிறாள். அது நமது நம்பிக்கை. ஆனால், அவள் இன்னும் தன்னுடைய நாயகனுக்காக காத்துக் கொண்டுதான் இருப்பது போல்தான் தோன்றுகிறது. இஸ்ரேலிய அதிகாரி வெள்ளை மசியைப் பூசியது போல் நாமும் ஆங்காங்கே தார் கொண்டு நிறைய அழித்தால் உலகமே மணம் வீசும்.

ஐ.எம்.டி.பி. | திசைகள்


|

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.