இளையபெருமாள்


தலித் தலைவர் இளையபெருமாள் காலமானார்

முதுபெரும் தலித் தலைவர் இளையபெருமாள் செப்டம்பர் 9 அன்று காலமானார். அவருக்கு வயது 82. ஜூன் 26, 1924-இல் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவிலில் பிறந்தார். அவர் தலித் மக்களுக்காக ஆற்றிய தொண்டிற்காகவும், குறிப்பிட்ட சில பகுதிகளிலாவது அவர்களுக்கிருந்த இழிநிலையினை ஒழித்ததற்காகவும் அவர் நன்றியுடன் நினைவுகூறப்படுவார் என்று சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.

பள்ளியில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக வேறொரு பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், ‘பறையர்களின் பானை’ என்று எழுதியிருக்கும் குடத்தைத் தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும்போது பள்ளி முதல்வரிடம் மாட்டிக் கொண்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால், மாணவர்களுக்கு இருந்து இரு டம்ளர் முறை நீக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் 1945-ல் சேர்ந்தார். 1946-ல் இராணுவத்தை விட்டு காட்டுமன்னார்கோவில் திரும்பினார்.

பண்ணையாரிடம் வேலைக்கு இருந்த தலித், உடல்நிலை பாதிப்பினால் இரு நாள் வேலைக்கு செல்லவில்லை. வேலைக்கு வராததால் அவரை படுகாயமுறுபடி சித்திரவதை செய்து அடித்திருந்தான் மிராசு. காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிகைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான தலித்துகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். உள்ளூர் பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதத்தை குறியீடாகப் பெற்றுத் தரும்வரை ஓயவில்லை.

நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளிகளுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், இடைநிலை சாதியினர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்ட்ஙகள் நடத்தியிருக்கிறார். உசுப்பிவிடப்பட்ட மேல்ஜாதி ஹிந்துக்களால் போலிக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறை வாசம் கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின் அவரின் சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

1969ல் இந்திரா காந்தி அரசால் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வுக்குழுவிற்கு தலைமைதாங்கி அகில இந்திய அளவில் தலித் மக்களின் நிலை குறித்து சிறப்பானதொரு அறிக்கையினை (‘Untouchability: Economic and Educational Development of Scheduled Castes’) சமர்ப்பித்தார்.

தலித் மக்கள் நிலை மேம்பட வேண்டுமானால், மற்றச் சாதியினரால் கொடுமைப்படுத்தப்படும் இடங்களில் அவர்களுக்கென்ற தனி குடியிருப்பு பகுதிகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், அப்பகுதிகள் பொருளாதார ரீதியாக மேம்பட மத்திய மாநில அரசுகள் தனியே நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான சில ஆலோசனைகளை இளையபெருமாள் குழு முன்வைத்திருந்தது.

ஆனால், 1977ல் அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரையை அமலாக்க முன்வந்த அரசுகள், இன்றுவரை இளையபெருமாளின் பரிந்துரைகளை பரிசீலிக்கவில்லை.

மதுபானக் கடைகளை திமுக அரசு 1970-ல் திறந்தது. காங்கிரஸும் மதுவிலக்குக் கொள்கையை திமுக-விடம் வலியுறுத்தாதால், கட்சியை விட்டு விலகினார். காமராஜரின் அழைப்பில் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். முதன்முறையாக 1952-ல் சிதம்பரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1979-இல் பதவியேற்றார்.

காஙகிரசில் தலைவராக ஆகியும் கூட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, முககியமாக தலித் நிலைமை குறித்து அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை என்ற வருத்தத்தில் கட்சியைவிட்டு வெளியேறி இந்திய மனித உரிமைக் கட்சியை துவக்கினார்.

இளையபெருமாளுடன் இராணுவத்தில் பணிபுரிந்த வடமலை என்பவர் 1946-இல் மீசை வளர்த்ததற்காக, மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்கு வடமலை மேல் நடத்தப்பட்ட கொடுமை நீடித்தது. ஊருக்குள் நுழையும் தலித்துகள் மீசை வைக்கக் கூடாது; செருப்பு அணியக்கூடாது; புதிய ஆடைகள் கட்டிக் கொள்ளக்கூடாது என்னும் சட்டம் அப்பொழுது வன்னியரால் அமலில் இருந்தது. தலித் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்பதையும் அறிந்த இளையபெருமாள் புளியாங்குடி போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிள்ளையார்தாங்கல் என்னும் புதிய கிராமத்தில் தலித்துகளைக் குடியேற வைத்தார். வன்னியர்களிடமிருந்து நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுத் தந்தார்.

ஒரு கட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசை இனி எந்த இழி தொழிலுக்கும் தலித்துக்களை வன்னியர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்தார். ஆனல் அந்தக் கூட்டணி நீடிக்கவில்லை.ஒப்பந்தமும் பெரிய அளவில் அமலாகவில்லை.

நந்தனார் மேல்நிலைப்பள்ளியை, பெண்கள் கல்லூரியாக மேம்படுத்த நினைத்ததும் இன்னும் நிறைவேறவில்லை.

வெகுகாலத்திற்கு முன்னரே மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு முக்கிய அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொண்டு தலித் மக்கள் நிலையை மேம்படுத்தும் முயற்சியல் இளையபெருமாள் போன்றோர் தோல்வியுற்றதாலேயே இன்று தனி அடையாள, மோதல் அரசியலுக்கு தலித்துக்கள் மத்தயில் ஆதரவு இருகிறது என்று கூறுகிறார்கள் நோக்கர்கள்.

ஆதாரம்/தகவல்: பிபிசி தமிழ் | The Pioneer > Agenda – Dalit diary / Ravi Kumar

8 responses to “இளையபெருமாள்

  1. Unknown's avatar எம்.கே.குமார்

    தலித் மேம்பாட்டுக்கென இவ்வளவு உழைத்த அந்த பெரியவரின் எண்ணங்களையும் முயற்சிகளையும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

    திரு.காமராஜரே திரும்பி அவரைக் கட்சிக்கு அழைத்திருக்கிறார் என்னும்போது அவரது அரசியல் நேர்மை புரிகிறது.

    அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.

    எம்.கே.குமார்

  2. பதிவுக்கு நன்றி!

  3. Pl. let me know whether Mr. Thirumavalavan has gone to pay his homage to his political Guru.

  4. இந்த பதிவை தவறவிட்டுருக்கிறேன். ஆனால் திண்ணையில் படித்து பின் இங்கு வந்தேன். நன்றி!

  5. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

    ராம்கி… அஞ்சலி செலுத்தியதாக அறிக்கையை படித்த ஞாபகம். எங்கு என்று மறந்து போனேன்.

  6. Unknown's avatar மு. சுந்தரமூர்த்தி

    பாலா,
    இந்த கட்டுரையை ‘திண்ணை’யில் படித்தேன். திரு. இளையபெருமாள் அவர்களைப் பற்றி பல தகவல்களை அறியத் தந்ததற்கு நன்றி.

  7. விக்கியில் சேர்த்ததற்கு நன்றி சந்தோஷ். ஒழுங்காகக் கற்றுக் கொண்டு நானும் சீக்கிரமே சேகரிக்கப் பழகுகிறேன்.

    நன்றி சுந்தரமூர்த்தி.

Thangamanihttp://bhaarathi.net/ntmani/ -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.